பூபாளம் கீதம் 28 ஒரு பார்வை.

 

சிறகு இரவி.
#
முதலிலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன். எதிலும் நிறைகளைக் காண்பது எனும் புத்தாண்டு முடிவை எடுத்திருக்கிறேன். அதை என் சுபாவம் பொறுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

கஞ்சிவரம் புடவை போல சரிகை பார்டர் வைத்து வந்து கொண்டிருந்த பூபாளம், இம்முறை முழு ஓவியத்துடன் வியாபித்து இருக்கிறது. என்ன ஒரு அழகு. ஒரு இலக்கிய இதழின் அந்தஸ்த்து அட்டையில் இருந்து ஆரம்பிக்கிறது. இம்முறை நாடகச் சிறப்பிதழ். மனோகர் நாடக ஜோடனைகள் போல அட்டையிலேயே விஸ்வரூப தரிசனம் காட்டி விட்டது பூபாளம். சபாஷ்!
நாடகத்தை ஒட்டியே தலையங்கம் என்பது கூட பெருமைக்குரிய விசயம் தான்.எடுத்தது கண்டனர்! இற்றது கேட்டனர் என்பதான கம்பன் வரிகளை ஒட்டி தலையங்கம்! பேஷ்.
நாடகத்தை ஒட்டியே நெய்யப்பட்ட ஹரி வல்லபனின் கவிதை ஒரு அமானுஷ்ய சிறுகதைக்கான வித்தை என்னுள் ஊன்றுகிறது. கவிதை தாக்கத்தையோ தர்க்கத்தையோ ஏற்படுத்துவது இயல்பு. இன்னொரு கற்பனையை விதைக்கச் செய்யும் போது அது உலக மேடைக்கு இட்டுச் செல்கிறது. பலே!

சஞ்சயனின் கவிதையில் இருக்கும் இருண்மை இன்னொரு ஒளிக்கீற்று. ஆறடி உயரம் அரை அடி செம்பில் அடங்கும் அந்திமம் மனப்பிசைவு.

கோமல் சுவாமிநாதனின் சொற்சிலம்பம் ரசிக்க வைக்கிறது. கடந்த வரியை மீட்டெடுத்து வாசிக்கச் சொல்கிறது. ‘அறிவு சார்ந்த அராஜகமும் நம் ஆளுமையை குத்துகின்ற அவமானமும்’ வாரே வாவ்! சொல்லாத புதைபொருளை சொல்லும் வரிகள்.
ராஜாமணியின் கட்டுரை பல சரித்திரத் தகவல்களை உள்ளடக்கியதாக தெரிகிறது. மொழி உருவாகாத காலத்தில் உடல் மொழியில் பேசிய ஆதி மனிதன் முதல் நாடகக்காரன் என்பது நல்ல சிந்தனை. உண்மையும் கூட!

கௌரி சங்கரின் நாடகம் கல்கியின் எள்ளலை சரியான விகிதத்தில் வசனங்களாக மாற்றி இருக்கிறது. இன்றைய மறுபிறப்பு; பூர்வ ஜென்மம் என்பதையெல்லாம் போகிற போக்கில் பகடி செய்கிறார் கல்கி. அதை அப்படியே பாத்திரங்களின் வாய் மொழியாக மாற்றிய கௌரிக்கு ஒரு கோப்பை கொத்ஸூ!

சுபாவத்திலேயே ஒரு விடயத்தைப் பற்றி எழுதப் பணித்தால் அதைப் பற்றி அறிந்து கொள்ள, பல புத்தகங்களைப் புரடி தகவல்களைச் சேகரிக்கும் பண்புடையவர் திரு. ஜெயராமன் பாஸ்கரன். நாடகம் டு சினிமா எனும்போது சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி தான்! சில தகவல்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. பல நாடகங்கள் திரைப்படமாகவும் வந்து வெற்றி பெற்றன என்பது போல, திரையில் கோலோச்சினாலும் நாடக மேடையை விடாத நட்சத்திரங்கள் எனும் தகவலும் புருவத்தை உயர்த்துகின்றன. இக்கட்டுரை மூலம் பிக் ‘பாஸ்’கரன் ஆகிவிட்டார் எழுத்தாளர்.

ஜெ. ரகுநாதனின் பட்டர் பிஸ்கெட் ஒரு ஏழைச் சிறுவனின் பசியை, வலியை கடைசி வரி வரை சகஜமாக சொல்லி, பொளேர் என்று பொடனியில் அறைவது போல முடிகிறது. நவீன நாடக வடிவத்தில் பிரச்சார தொனி இல்லை என்பது கூட ஒரு பெருமை தான்!
இளங்கோ குமணனின் அனுபவங்கள்; நாணுவின் நாடக மேடை சங்கடங்கள்; இந்திர நீலனின் லண்டன் தியேட்டர்; தருமராஜனின் தோல் பாவைக் கூத்து; சுய எள்ளலுடன் எழுதியிருக்கும் அழகியசிங்கரின் நாடக முயற்சி; பி.ஆர். கிரிஜாவின் பள்ளி நாடக அனுபவங்கள்; பென்னேஸ்வரனின் நாடகம் குறித்த நேர்காணல்; டிவிஆரின் அம்மாவின் அன்பு : தத்தெடுத்தது அன்னை; அடிப்படையில் பிள்ளையே அனாதை, எனும் முடிவு அசைத்துப் போடுகிறது.
மொத்தத்தில் இந்த இதழ் வனப்புகளுடன் கூடிய ஒரு மேடைச் சித்திரம்.

 

நாகேந்திர பாரதி

நமது நண்பர்கள் ஆர்க்கே , ஹரிஹரன் , மதிவந்தி , சுரேஷ் – நால்வர் குழு சேர்ந்து தயாரித்து வழங்கியுள்ள இந்த டிசம்பர் மாத பூபாளம் நாடகச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது . வழக்கம் போல் முதலில் பக்கங்களைப் புரட்டி இப்பத்திரிக்கையைப் பருந்துப் பார்வை பார்த்த போதே , இது தமிழ் இலக்கிய உலகிற்கு இந்த நால்வர் அணி செய்துள்ள ஒரு சிறந்த சேவை என்பது பளிச்செனத் தெரிந்தது .

ஒவ்வொரு கட்டுரையிலும் தெரியும் ஆராய்ச்சியும் உழைப்பும் இந்தச் சிறப்பிதழை நாடக அன்னைக்கு இவர்கள் சூட்டி உள்ள மணி மகுடமாக என்றும் நிலைத்து நிற்கும் . அத்தனையும் நீங்கள் படித்து மனதில் பதிய வைக்க வேண்டிய ஆராய்ச்சிக் கருவூலங்கள் . உதாரணத்திற்கு ஒன்று

நண்பர் ராமேஸ்வரம் ராஜாமணி அவர்கள் படைத்துள்ள ‘ நாடகக் கலை ‘ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை . மனித சமுதாயம் நாடோடிகளாகத் திரிந்த காலத்தில் இருந்து தொடங்கி , படிப்படியாக உலகின் பல பாகங்களிலும் நாடகக் கலை தோன்றி வளர்ந்த முறையை அவர் அந்தந்தக் காலம் , மொழி , சமூகம் , அரசியல் போன்றவை ஏற்படுத்திய தாக்கங்களோடு சேர்த்து நமக்கு விளக்கும் விதத்தில் அவரது ஆழ்ந்த ஆராய்ச்சியும் அகன்ற அறிவுத்திறனும் வெளிப்படுகின்றன .

இறுதியாக நாடகக் கலை இன்னும் சிறக்க , மேலை நாட்டு வெற்றிகரமான முறைகளையும் , அவர் நேரில் பார்த்த டென்மார்க் , சுவீடன் நாட்டு நாடக முறைகளையும் கோடி காட்டி முடிக்கிறார் . எடுப்பு , தொடுப்பு , முடிப்பு என்று எல்லாமே சிறப்பாகவும் , குறுகத் தணித்த குறளாகவும் அமைந்துள்ளது இந்தக் கட்டுரையின் தனித்துவம் .

இதே போன்று நாடகம் பற்றிய ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கோணத்தில் நாடகக் கலையை அணுகி ஆராய்ந்துள்ளது ‘ கூறியது கூறாமல் ‘ பார்த்துக் கொண்ட ஆசிரியர் குழுவின் அருமைத் திறமை .

உலக நாடகக் கலை இந்த முயற்சிக்காக இவர்களை நிச்சயம் வாழ்த்தும் . என்னைப் பொறுத்தமட்டில் இந்த எழுத்தாளர்களை , இதழ் ஆசிரியர்களை எல்லாம் வாழ்த்துவதை விட வணங்குவதே எனக்குப் பெருமை என்று தோன்றுகிறது . நன்றி . .

 

வளவதுரையன்  அவர்களின் சங்கு இதழ் பற்றி நாகேந்திர பாரதி 

ஆசான் வளவதுரையன் அவர்களின் ‘ஜனவரி -மார்ச் 2024’ சங்கு இதழில் வழக்கம் போல் சிறப்பான கதைகள், கவிதைகள், கட்டுரைகள்.

குறிப்பாக சுப்ரபாரதி மணியன் அவர்கள் எழுதியுள்ள புத்தக மதிப்புரை . ‘ ஹரணி சிறுகதைகள்- மனிதர்கள் நடைபாதையில் இருக்கிறார்கள் ‘ பற்றிய மதிப்புரை மிகவும் கவர்ந்தது. மனித நேயம் மிக்க பலர் நம்முடன் இன்னும் இருக்கிறாரக்ள் என்பதை அடையாளம் காட்டும் விதமாக ஆசிரியர் ஹரணி அவர்கள் காண்பிக்கிற பல மனிதர்களைப் பற்றிச் சுருக்கமாகவும் சுவையாகவும் இந்தக் கட்டுரையில் எடுத்துக் காட்டுகிறார் சுப்ரபாரதி மணியன் அவர்கள்.

உறவினர்கள் சடங்கு செய்து வைக்காத ஒருத்திக்கு வந்து உதவி செய்யும் அக்கா போன்ற ஒரு பெண்,
குடும்பத்திற்காகவே உழைத்தாலும் , அவர்களால் உதாசீனப்படுத்தப்படும் ஒரு திருநங்கை,
லஞ்சமற்ற வாழ்க்கை வாழ குடும்பத்தையே எதிர்த்துப் போராடும் ஒரு கணவன்,
வீட்டில் வசிக்கும் கடவுளாக வீட்டிற்காகவே உழைக்கும் குடும்பத்தலைவர் ,
என்று இன்னும் பல நல்ல மனிதர்களை எடுத்துக்கொண்டு எழுதுவது ஹரணி அவர்களுக்கு மிக இயல்பாக வருகிறது என்று சொல்கிறார்.

கல்லூரி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ஹரணி அவர்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதற்காக இந்தக் கதைகளில் உலவ விடும் நாராயணன் என்ற கதாபாத்திரம், நல்லதே நடக்க வேண்டும் என்று விரும்பும் நல்ல உறவாக இருப்பதை எடுத்துக் காட்டும் மதிப்புரையாளர் ;இந்த நோக்கம் மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளதாக’ச் சொல்லி முடிக்கிறார்.

உண்மைதான். மாறி வரும் மனித சமுதாயத்தில் இது போன்ற நேர்மறை உள்ள கதைகளைப் படிக்கும் மக்களுக்கும் அந்த நேர்மறை எண்ணம் கடத்தப்பட்டு நிச்சயம் சமுதாயத்திற்கு பயன் அளிக்கும் தான் .

இந்தச் ‘ சங்கு ‘ இதழில் உள்ள படைப்புகளும் அவ்வாறே நேர்மறை எண்ணம் மிகுந்தவைகளாக இருப்பதும் ஆசிரியர் வளவதுரையன் ஐயா அவர்களின் இந்தப் பத்திரிகைப் பணியின் நோக்கத்தை எடுத்துரைக்கின்றன.

‘குறையெனின் கடிவோம், நிறையெனின் புகழ்வோம். இறையெனினும் அஞ்சோம் , மறையோம் , அயரோம் ‘ என்ற நோக்கம் இதழின் அட்டையிலே பொறிக்கப் பட்டு இருப்பது ஐயா அவர்களின் சான்றாண்மைக்குச் சான்று. வணக்கத்துடன் வாழ்த்துகள் .