Picture Created by Bing Image Creator
நிம்மதியே யில்லாமல் தவிக்கின்றே னன்னையே
குற்றமென்ன செய்தேனென நிற்கின்றேன் குழப்பமொடு
இம்மையி லெண்ணத்தில் சொல்லினில் செயலினில்
தப்பொன்றும் நினைக்கலையே தவறொன்றும் செய்யலியே
அம்மாபின் னேனிந்த தண்டனை வேதனை
பதில்தேடி யுனைநாடி யூரூரா யலைகின்றேன்
எம்பெருமா னடியாரும் குறிபார்த்துச் சொன்னாரே
முன் ஜென்ம கர்மாவின் வினைப்பயன் தானென்று..!
குற்றங்கள் செய்பவரும் தவறுணர்ந்து திருந்திடவே
கொடுக்கின்ற வொருவாய்ப் பல்லவா தண்டனை
குற்றமென்ன சொல்லாமல் தண்டனை தரலாமா
மனிதரும் மனந்திருந்தி வாழ்ந்திடவும் வாய்ப்பெங்கே
பூர்வஜென்ம கர்மாக்கள் யாருக்கும் நினைவில்லை
தெரியாத தவறுக்கு இவருக்கு தண்டனையா?
இப்பிறவியின் பாவபலன் இப்பிறவியில் கொடுத்துவிடு
மறுபிறவி மனிதரையே நிம்மதியாய் வாழவிடு..!

