*பகுதி 6*
*குலசேகர ஆழ்வார்*Kulasekhara Alvar - Wikipediaநாலாயிர திவ்ய பிரபந்தத்தின் அங்கமான குலசேகர ஆழ்வாரின்Kannadasan | by artist venkatesan | Venkatesan Purushothaman | Flickr அருளிச்செயல் *பெருமாள் திருமொழி* என்று வழங்கப் படுகிறது.குலசேகரர் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இங்கு:

குலசேகரர், சேரநாட்டு ( தற்போதைய கேரளம் ) அரச பரம்பரையில் தோன்றியவர். திருமாலிடம், குறிப்பாக ஸ்ரீராமனிடம் மிகுந்த அபிமானம் கொண்டவர்.
ஒருமுறை ராமாயண சொற்பொழிவை கேட்கும் பொழுது , அரக்கர்கள் பெரும்படையுடன் ராமனுடன் போர் புரிய வந்தனர் என்பதை கேட்டவுடன், ஏற்கனவே நடந்த கதையில் வரும் நிகழ்ச்சி என்பதையும் மறந்து, உணர்ச்சி வசப்பட்டு, தன் படையுடன் ராமருக்கு துணையாக செல்ல முற்பட்டார். பிறகு ராமர் வென்றுவிட்டார் என்று சொற்பொழிவாளர் சொன்ன பிறகுதான் தன் நிலை அடைந்தார்.
ஒரு கட்டத்தில் அரச பதவியை துறந்து, திருமால் சேவையில் காலத்தை கழித்தவர்.

பெருமாள் திருமொழியில் பத்தாம் திருமொழியான தில்லை திருச்சித்திரக்கூட ராமானுபவம் பற்றிய 11 பாசுரங்களில், ராமன் அவதாரம் செய்தது தொடங்கி உத்தரகாண்டம் வரை ( லவ குசர்கள் இடம் பெறுவது மற்றும் ஸ்ரீராமன் இப்பூவுலகை விடுத்து தன் நித்திய இருப்பிடமான பரமபதத்திற்கு செல்லும் வரை ) முழு ராமாயணமே இடம் பெறுகிறது.

ராமாவதாரத்தின் மேன்மையை சிறப்பாக அனுபவித்து பாடியவர் குலசேகர ஆழ்வார் .

ஒரு கட்டத்தில், குலசேகர ஆழ்வார் பற்றிய விவரங்களை நிறுத்திக் கொண்டு , எடுத்த தலைப்பிற்குண்டான‌ விஷயத்திற்கு வர வேண்டும் என்பதால், மனதில்லாமல், ஆழ்வார் பற்றிய வேறு விவரங்களை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இதுவரை எழுதியது கண்ணதாசனை மட்டும் அறிந்து ஆழ்வாரை அதிகமாக அறியாதவர்களுக்கான ஓர் எளிய அறிமுகமாக எழுதியது.‌

எடுத்துக்கொண்ட தலைப்பிற்கான விஷயமாக நான் குறிப்பிடப் போவது குலசேகர ஆழ்வார் எட்டாம் திருமொழி – *ராமனுக்கான தாலேலோ* .

எனக்குத் தெரிந்த வரை 12 ஆழ்வார்களில்‌ பெருமாளுக்கு தாலாட்டு பாடியவர்கள் இருவர் மட்டுமே. ராமருக்கு பாடியவர் குலசேகர ஆழ்வார்.‌ கண்ணனுக்கு பாடியவர் பெரியாழ்வார்.‌ ( இக்கட்டுரையின் முந்தைய பகுதியிலும், அதன் தொடர்பான ஆடியோவிலும் குறிப்பிட்டு இருந்தேன் – அடுத்த பகுதியிலும் பெரியாழ்வார் வருவார் என்று. இதோ வந்துவிட்டார்.‌ )

*தால்* என்ற சொல்லுக்கு நாக்கு என்று அர்த்தம் . தாலாட்டு என்பது தால் + ஆட்டு அதாவது நாக்கை ஆட்டி, அசைத்து பாடுவது என்பது பொருள். தாலேலோ, ஆராரோ ஆரிரரோ, லொல்லொலாயீ…….
ஒலலொளலாயி என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள. நாக்கு என்ன ஆட்டம் ஆடுகிறது என்று தெரியும். ( சொல்லிப்பார்த்து, ஆம், நாக்கு ஆடுகிறது என்று தலையையும் ஆட்டிவிட்டீர்கள். சரிதானே? ).

குழந்தையை தூங்க செய்வதற்கான தாலாட்டுப் பாடல்களில் இசையே பிரதானம் என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பாடல்கள், பொதுவாக சிறு குழந்தைகளுக்காக பாடப்படுவன என்பதால், வார்த்தைகளுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லைதான். இருப்பினும், தாலாட்டு பாடுபவர்கள் அந்த இசையை குழந்தைக்கு கொடுத்துவிட்டு தங்கள் மனதிலுள்ள சுகம், துக்கம், பக்தி, காதல் எல்லாவற்றையும் அந்தப் பாடல்களின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்பது ஒரு வியப்பான விஷயம்தான்.

பாலகிருஷ்ணனின் குறும்புகள் சேட்டைகள் எல்லாம் நாம் அறிந்ததே . அந்த குட்டி கிருஷ்ணனுக்கு தாலாட்டு பாடுவது என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே .
ஆனால் ராமனின் நிலை அப்படியல்ல. கம்பர் எழுதிய ராமாயணத்தை எடுத்துக்கொண்டால் ராமன் முதலிய நால்வர்கள் பிறந்த விவரத்தை சொல்லிவிட்டு, பிறகு வசிஷ்டரிடம் கல்வி கற்றல், பிறகு படை பயிற்சி , பிறகு விசுவாமித்திரருடன் கானகம் செல்லுதல் என்று அப்படியே போய் விடுகிறது.
பால ராமனின் குறும்புகள், விளையாட்டுகள் என்பதாக எதுவுமே சொல்லப்படவில்லை. கம்பராமாயணத்தில் ராமர் தாலாட்டுக்கு இடமே இல்லை.

அப்படி இருக்க குலசேகர ஆழ்வார் இராமனுக்கு தாலேலோ பாடியது விசேஷம்தானே?!

குலசேகர ஆழ்வாருக்கு முன்னவரான பெரியாழ்வார் பாடிய கண்ணன் தாலாட்டு பாடல்களை பற்றி சில வரிகள் முதலில்.

பெரியாழ்வார் திருமொழியில் முதல் பத்து – நான்காம் திருமொழியில் பத்து பாடல்களும் கண்ணனுக்கான திருத்தாலாட்டு.
கண்ணன் பிறந்தவுடன் அவன் அவதார சிறப்பை சொல்லி பாதாதி கேசம் ( திருவடி முதல் திருமுடி வரை ) வர்ணித்த பிறகு
ஆழ்வாருக்கு தோன்றுகிறது, கண்ணன் தூங்கும் நேரம் வந்துவிட்டது என்று. உடனே தன்னை யசோதை ஸ்தானத்தில் நிறுத்தி, தாலாட்டுப்பாடுகிறார் .

முதல் பாடலில் ,
மாணிக்கமும், வைரமும் இடையே வைத்துக் கட்டி ,
பத்தரை மாற்று பொன்னால் செய்த தொட்டிலை ,
உனக்கு பிரம்மா அனுப்பி வைத்தான் ,
வாமனச்சிறுவனாகி பின் உலகை அளந்தவனே,
தாலேலோ என்று பாடுகிறார்..

பாசுரம்‌ :

*மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி*
*ஆணிப் பொன்னால் செய்த* *வண்ணச் சிறுத்தொட்டில்*
*பேணி உனக்குப்*
*பிரமன் விடுதந்தான்*
*மாணிக் குறளனே தாலேலோ*
*வையம் அளந்தானே தாலேலோ*

( விடுதந்தான் = அனுப்பி வைத்தான் )

அடுத்தடுத்த பாடல்களில், ஒவ்வொருவரும் என்ன அனுப்பி தந்தார்கள் என்பதை பட்டியலிட்டு கூறி, அழாதே அழாதே ( அழேல் அழேல் ) என்று கண்ணனை தாலாட்டுகிறார்.‌

சிவபெருமான் அனுப்பி தந்த திருவாபரணங்கள்,
இந்திரன் அனுப்பிய சதங்கை, தேவர்கள் அனுப்பிய வலம்புரி சங்கு மற்றும் நகைகள்,
குபேரன் அனுப்பிய பஞ்சாயுதம் என்ற திருவாபரணம் மற்றும் பிற ஆபரணங்கள்,
வருணன் அனுப்பிய முத்தாரம், மகாலட்சுமி அனுப்பிய துளசி மாலை மற்றும் கற்பக மரத்தினுடைய பூக்களால் தொடுத்த திருவாசிகை, பூமாதேவி அனுப்பிய பொன்னால் செய்த உடைவாள் மற்றும் நகைகள்,
துர்க்கை அனுப்பித்தந்த வாசனை பொடிகள், கண் மை மற்றும் செந்தூரப்பொடி

என்று எல்லாவற்றையும் சொல்லி, கண்ணனை , அழாதே என்று கூறி தாலாட்டுகிறார் பெரியாழ்வார். பொங்கும் பரிவு.

இப்போது குலசேகர ஆழ்வார் இராமனுக்கு பாடிய தாலாட்டு பாடல் பற்றி பார்ப்போம்.

குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில், எட்டாம் திருமொழி முழுவதும் தாலாட்டு பாடல்கள்.
அதில் முதல் பாசுரம் மிகவும் பிரசித்தம் :

*மன்னுபுகழ் கோசலை தன்* *மணிவயிறு வாய்த்தவனே!*

*தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்!*

*செம்பொன் சேர்*
*கன்னி நன் மா மதில் புடை சூழ்* *கணபுரத்து என் கருமணியே!*

*என்னுடைய இன்னமுதே!* *இராகவனே! தாலேலோ!*

பொருள் :

நிலைத்த புகழுடைய கோசலையின் அழகிய வயிற்றிலே பிள்ளையாக வந்து அவதரித்தவனே, தென்னிலங்கைக்கு தலைவனான ராவணனுடைய பத்து தலைகளையும் சிதறி ஓடும்படி செய்தவனே,
செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய், அழகான பெரிய திருமதிலாலே நாற்புறமும் சூழப்பட்டதாய் உள்ள திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற நீல மணி போன்ற எம்பெருமானே,
எனக்கு இனிய அமுதாய் இருப்பவனே ,
உனக்கு தாலாட்டு .

மற்ற பாடல்களில் ராமனின் வடிவழகையும் பராக்கிரமத்தையும் மற்றும் ராமாயண நிகழ்வுகளையும் சொல்லி ராமனுக்கு தாலாட்டு பாடுகிறார் ஆழ்வார்.

இதில் சிறப்பு என்னவென்றால் ராமனுக்கு தாலாட்டு பாடுவதற்காக அவர் முன்னிறுத்திய பெருமாள்
திருக்கண்ணபுரம் பெருமாள். ( கணபுரத்து என் கருமணியே ). அங்கே மூலவர் நீலமேகப் பெருமாள், உற்சவர் சௌரிராஜன் . நீலமேக சியாமளன் கண்ணன் தான். பெயரிலேயே கண்ணனை தாங்கி இருக்கும் திருக்கண்ணபுரம் என்ற திவ்ய தேசமும் பஞ்சகிருஷ்ண ஷேத்ரங்களில் ஒன்றாகும். இப்படி இருக்க, அங்கிருக்கும் பெருமானையும் ராமனாகவே பார்க்கிறார் ஆழ்வார். ராமனிடம் அவ்வளவு ஈடுபாடு.

சரி , ஆழ்வார்களின் தாலாட்டுகளிலிருந்து சற்று நகர்ந்து கண்ணதாசனை பார்ப்போம். அவரின் நிறைய திரைப்பாடல்கள் தாலாட்டை தாங்கி வந்திருக்கின்றன அவற்றையெல்லாம் ‘ தாலாட்டு ‘ என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு விவரமான கட்டுரையில் குறிப்பிட்டு உங்களில் சிலருடன் பகிர்ந்திருக்கிறேன்.
ஒரு மாற்றத்திற்காக இந்த கட்டுரையில் கண்ணதாசன் அவர்களின் எந்த ஒரு திரைப்பாடலையும் குறிப்பிடாமல், அவருடைய தனிப்பாடல் ஒன்றை குறிப்பிடப் போகிறேன். ஆனால், அந்த தனிப்பாடல் எந்த ஒரு திரைப்பாடலுக்கும் குறைவாக இல்லாமல் மிகவும் பிரபலமான ஒன்று. நீங்கள் நினைத்தது சரிதான். அதே பாடல் தான்.‌
*ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்* எனத்துவங்கும் பாடல்தான்.

*கிருஷ்ணகானம்* என்ற தனித் தொகுப்பில் கண்ணதாசன் எட்டு பாடல்களை எழுத அத்தனைக்கும் பிரமாதமாக இசையமைத்துக் கொடுத்த எம் எஸ் விஸ்வநாதன் அந்த எட்டு பாடல்களையும் வெவ்வேறு பாடகர்களை விட்டு பாட வைத்திருப்பார். அதில் இந்த ‘ஆயர்பாடி மாளிகையில்’ பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் பாடி இருப்பார்.
இன்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

இந்தப் பாடல் அனேகமாக அனைவரும் அறிந்ததே.‌ மிகவும் எளிய தமிழில் புனையப்பட்ட பாடல் என்பதால் அதற்கு விளக்கமும் தேவையில்லை.
ஆயினும் ஓரிரு நயங்களை மட்டும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

*ஆயர்பாடி மாளிகையில்*
*தாய் மடியில் கன்றினைப்போல்*
*மாயக்கண்ணன் தூங்குகின்றான்*
*தாலேலோ*

கண்ணன் தூங்குகிறான் , சரி. எப்படி தூங்குகிறான் என்பதற்கு ஏதாவது உவமை சொல்ல தேடுகிறார் கவிஞர்.
நம் குழந்தையை நாம் எப்படி கொண்டாடுவோம் ?
மிக உயர்ந்த பொருட்களுடன் இணைத்து, கண்ணே , மணியே, கற்கண்டே, பொன்னே, என்றெல்லாம் சொல்லுவோம். ஆயர்பாடி மக்களுக்கு மாடு களையும் கன்றுகளையும் தவிர வேறு பெரிய செல்வம் ஏதுமில்லை.‌. அவர்கள் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்தவை அவை.‌
அதனால்தான் கவிஞர் சொல்கிறார் –
*தாய் மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகிறான்* என்று.‌ ஆயர்பாடியை எடுத்துக் கொண்ட பின் மாடு கன்றுகளை விட்டு விட முடியுமா ?
இன்றும் , சில இல்லங்களில் குழந்தையை ” கன்னுக்குட்டி” என்று கொஞ்சும் வழக்கம் உள்ளது.

அடுத்த நயமாக, கடைசி சரணத்தை குறிப்பிட விரும்புகிறேன்.
குழந்தையையோ, கடவுளையோ தூங்க செய்வதற்காக பாடுவது *தாலாட்டு*.
அதுவே, துயிலெழுப்ப வேண்டும் என்றால் *திருப்பள்ளி எழுச்சி* . ஒரே பாடலில் இரண்டையும் கொண்டு வந்தது நம் கண்ணதாசன் மட்டுமே.

கண்ணனை தாலாட்டு பாடி தூங்க செய்த பின், கவிஞருக்கு தோன்றுகிறது –
அடடா , கண்ணன் இவ்விதம் தூங்கிக் கொண்டிருந்தால் இந்த உலகமே தூங்கி விடுமே , உலகத்தை இயங்க செய்வதற்கு கண்ணனை துயிலெழுப்ப வேண்டுமே என நினைக்கிறார் . உடனே பிறக்கிறது வரிகள்.

*கண்ணனவன் தூங்கிவிட்டால்* *காசினியே தூங்கிவிடும்* *அன்னையரே துயிலெழுப்ப* *வாரீரோ*

*அவன் பொன்னழகைப்* *பார்ப்பதற்க்கும்*
*போதை முத்தம்*
*பெறுவதற்க்கும்*
*கன்னியரே கோபியரே*
*வாரீரோ*
*கன்னியரே கோபியரே* *வாரீரோ*

கண்ணனுக்கும் ராமனுக்கும் தாலாட்டு பாடிய ஆழ்வார்களின் பாசுரங்கள் தந்த உந்துதலில் தான் கண்ணதாசனின் *ஆயர்பாடி மாளிகையில்* தாலாட்டு பாடல் பிறந்தது என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆயினும், ஆழ்வார்களின் தாலாட்டு பாசுரங்களை கேட்கும்பொழுது, கண்ணதாசனின் ‘ஆயர்பாடி மாளிகையில்’ பாடலை நினைக்காமல் இருக்க முடியுமா?
என்னால் முடியாது . அதன் விளைவே, *ஆழ்வார்களும் கண்ணதாசனும்* தொகுதியில் இந்தப் பகுதி.