ஏன் என்ற கேள்வி (தொடர்ச்சி)

DD Podhigai to telecast Tamil version of 'Swaraj – Bharat ke Swatantrata  Sangram ki Samagra Gatha' – Navjeevan Express

“சார்! ஒரு கேள்வி. குவிஸ் பற்றி இவ்வளவு சொல்லிக் கொண்டே போகிறீர்களே .. அதுல உங்களுக்கு அவ்வளோ ஆசையா?” என்றால் என் பதில் பெரிய “ஆமாம்”

அதனாலதான் எண்பதுகளிலிருந்து இரண்டாயிரம் வரை , கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளில் கல்வி நிறுவனங்கள்  மேடை மீடியா எல்லாம் சேர்த்து ஐநூறுக்கும் மேற்பட்ட குவிஸ் நிகழ்ச்சிகள் நடத்தியிருப்பேன்.

எனது பரந்துபட்ட “சப்ஜெக்ட் “ ஆர்வத்திற்கு தீனி போட்டவை இந்த குவிஸ் நிகழ்வுகள். நான் நடத்திய வினாடி வினாக்கள் தொகுப்பில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் இருந்தன. அதாவது “ஸ்பெஷல் குவிஸ்”. அவை பல துறைகள் சார்ந்தவை. சில உதாரணங்கள் காட்டுகிறேன்.

திருக்குறள், கம்பராமாயணம், சங்க நூல்கள், மகாகவி பாரதியார்  வள்ளலார் பாடல்கள், தமிழிசைப்  பாடல்கள், திரைப்பாடல்கள் ஆகிய இலக்கியத் தலைப்புகளிலும், பகவான் இராமகிருஷ்ணர் , சுவாமி விவேகானந்தர் ,பகவான் ரமணர், ஆதி சங்கரர், இராமானுஜர்  போன்ற ஆன்மீகத் தலைவர்கள் பற்றியும், மகாத்மா காந்தி ,நேதாஜி , வவேசு ஐயர் ,மகான் அரவிந்தர் போன்ற தேசத் தலைவர்கள் பற்றியும் ,ஜெய் ஹிந்த் சண்பகராமன் போன்ற புரட்சியாளர்கள் பற்றியும், நோபல் பரிசு பெற்ற தாகூர், சர். சி. வி. ராமன் போன்றோர் பற்றியும், கணித மேதை ராமானுஜம் பற்றியும் , இசை மேதை டி. என். ராஜரத்தினம் பிள்ளை போன்றோர் பற்றியும் , இன்னும் பல பிரபலங்கள் பற்றியும் சிறப்பு குவிஸ் நிகழத்தியிருக்கிறேன் .

நூற்றாண்டு விழா, பொன்விழா,  ஆண்டுவிழா காணும் பல நிறுவனங்களில் அவற்றின் வரலாறு பற்றி குவிஸ் நடத்தியிருக்கிறேன். தகவல் பரிமாற்றத்தில் இது ஓர் உற்சாகமான வடிவம். பலரும் பங்கேற்று மகிழ்வது. சாதனையாளர்களைப் பாராட்டும் விதமாக இது அமைந்தது. திரும்பிப் பார்த்தால் ,அந்த காலகட்டத்தில் என்னுடைய பொது மேடைகளை நிரம்ப ஆக்கிரமித்தது குவிஸ் என்றே சொல்லலாம். ஆம்  ஒவ்வொரு அனுபவமும் வித்தியாசமானது. என் வாசிப்பையும் அதிகமாக்கியது.

குவிஸ் நிகழ்ச்சியில் மதிப்பெண் வாங்குவது ஒரு கலை என்றால், அதைக் கொடுப்பதும் ஒரு கலைதான். சில நேரங்களில் பங்கேற்கும் “டீம்”களில் உள்ள  “மாணவர்கள்” பாதி விடை மட்டும் சரியாகவும் மீதி தவறாகவும் சொல்லிவிட்டு பாதி மதிப்பெண்கள் கொடுக்கலாமே என வாதிடுவர் . அந்த நேரங்களில் எனக்கு “திருவிளையாடல்” திரைப்பட நாகேஷ் (தருமி ) பேசும் டயலாக் தான் நினைவுக்குவரும்.

சென்னை பாரதீய வித்யா பவனில் ஒருமுறை “The Man who became Mahatma”  என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் இண்டர் காலேஜியேட் குவிஸ்: விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. மொத்தம் ஆறு கல்லூரிகள் இறுதிச் சுற்றில் பங்கேற்றுக் கொண்டு இருக்கின்றார்கள் .

ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே உள்ள சென்னையின் பிரபல பெண்கள் கல்லூரி “லீடிங்கில்” இருந்தது. அதற்கு இணையாக அரசு பெண்கள் கல்லூரி மதிப்பெண்கள் பெற்று சம இடத்தில் இருந்தது. எனவே அவர்களுக்கு ஒரு “முடிச்சு அவிழ்க்கும்” ( Tie Breaker ) கேள்வியைக் கேட்டேன்.

“ What are the three vows Mohandas gave to his mother before leaving for England ?”

பத்து விநாடிகளுக்குள் இதற்கான விடை தரப்படவேண்டும். விரைவாகச் சொல்ல வேண்டும் என்று முந்திய அரசு பெண்கள் கல்லூரி மாணவியர் அவசரத்தில், அவர்களுக்கு இயல்பாக வரும் தமிழில் பதில் சொல்லிவிட்டனர்.

“ புலால் உண்ண மாட்டேன்; குடிக்க மாட்டேன்; பிற பெண்களை தாயாகவோ அல்லது சகோதரியாகவோ மட்டுமே பார்ப்பேன்” என்று உரத்துச் சொல்லிவிட்டனர்.

அதுதான் சரியான விடை. இந்த மதிப்பெண்கள் கூடியவுடன் அவர்களே வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.

இரண்டாம் இடத்தைப் பெற்ற இங்க்லிஷ் மீடியம் கல்லூரிப் பெண்கள் இதை எதிர்த்தனர். “ அவர்கள் விடையை தமிழில் சொன்னார்கள்; ஆங்கிலத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் எப்படி தமிழில் பதில் சொல்லலாம் ..எனவே அவர்களுக்கு மார்க் கொடுத்திருக்கக் கூடாது. என்றனர்.

ஒரு குவிஸ் மாஸ்டராக நான்தான் தீர்ப்பு சொல்லவேண்டும் .

“ காந்தி ஜி கொடுத்தது மூன்று சத்தியங்கள். சத்தியத்துக்கு மொழி கிடையாது. எந்த மொழியிலும் அதுவே உண்மை. மேலும் இந்த நிகழ்ச்சியில் நாங்கள் சரியான விடைகளுக்கே மதிப்பெண் கொடுத்தோம். மொழித் திறமைக்கு அல்ல. ஆங்கிலத்தில் சொல்லவில்லை என்றாலும் ,இங்கே அனைவரும் அறிந்த தமிழில்தான் சொன்னார்கள். ஆமாம் ! அந்த விடை சரிதானே! இல்லை விடையில் ஏதேனும் தவறு இருந்ததா?”

என் பதிலைக் கேட்டு அவர்கள் ஒப்புக் கொண்டு சென்றார்கள்.

எனது தொலைக்காட்சி குவிஸ் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கேள்விக்கு விடை “திருடன்” . அணிகள் எதுவும் சரியான விடை அளிக்கவில்லை என நான் யாருக்கும் மதிப்பெண் அளிக்கவில்லை.

ஒரு அணியினர் “ சார்! நாங்கள் சரியான விடைதான் சொன்னோம்” என வாதிட்டனர்। “நாங்கள் கைதி என்றோம். அதுவும் திருடனைக் குறிப்பதுதானே “ என்றனர்.

“ இரண்டும் ஒன்றல்ல; பிடிபடாத வரையில் எந்தத் திருடனும் கைதி அல்ல;” என்று விளக்கியவுடன் ,ஒத்துக்கொண்டனர். தன்னுடைய விடைகளில் குவிஸ் மாஸ்டருக்கு எப்போதும் தெளிவும் கவனமும் வேண்டும். இல்லையென்றால் குவிஸ் கேலிக் கூத்து ஆகிவிடும்.

ஒருமுறை திருச்சியில் “சுவாமி விவேகானந்தர்” பற்றி ஸ்பெஷல் குவிஸ். கல்லூரிகளுக்கானது. ஐந்து கல்லூரிகள் பங்கு பெறுகின்றன.காலை நிகழ்ச்சி.  அங்கு போன பிறகு, அதே அமைப்பு, பள்ளிகளுக்காகவும் இதே போன்ற நிகழ்ச்சியை மாலையில் நடத்தித்தர வேண்டினர். ஆனால் எனக்கு மாலையே சென்னை திரும்ப வேண்டும் , இயலாது என்று சொன்னபின்னும் அவர்கள் மிகவும் வேண்டினர்.

நேரமில்லாதது மட்டுமல்ல; மேலும் சில இடர்ப்பாடுகள் உண்டு. காலையில் கேட்ட கேள்விகளையே மாலையிலும் கேட்கமுடியாது. எனவே புதிய கேள்விகள் தயாரிக்கவேண்டும். அதற்கான ரெஃபரென்ஸ் நூல்களும் திருச்சியில் நான் தங்கியுள்ள விடுதியில் கிடைப்பது கடினம். எனினும் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ,பள்ளிப் பிள்ளைகளுக்கும் எப்படியாவது குவிஸ் நடத்திவிட்ட வேண்டும் எனும் ஆர்வம் எனக்கும் இருந்தது. யோசித்தேன். விடை கிடைத்தது.

ஒரே நேரத்தில் பள்ளிகள் கல்லூரிகள் ஆகிய இரண்டு  “குரூப்” களுக்கும் காலையிலேயே குவிஸ் நடத்தத் தீர்மானித்தேன். பெரிதான அந்த ஹாலில் ஒரு புறம் பள்ளி அணிகள் எதிர்ப்புறம் கல்லூரி அணிகள். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் நான் கேள்விகள் கேட்டு வருவேன். சுற்றின் முடிவில் மதிப்பெண்களை மட்டும் தனித்தனியாக குறித்துக் கொள்ள இரண்டு “ஸ்கோரர்”களை நியமித்தேன்.

நிகழ்ச்சிக்கு கொஞ்சம் சுவை சேர்க்க ஒரு குறும்பு செய்தேன். பள்ளிகளுக்கான கேள்விகளுக்கு எந்த அணியும் விடை சொல்லவில்லை என்றால் அது கல்லூரி அணிகளுக்குக் கொடுக்கப்படும். அதில் சரியான விடையை சொன்னால் அந்த அணிக்கு பாதி மதிப்பெண்கள் கொடுக்கப்படும். அதே நேரத்தில் கல்லூரிகள் தவறவிட்ட விடையை பள்ளி அணி சொன்னால் ,அந்த அணிக்கு முழு மதிப்பெண்ணுடன் கூட ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.

இன்னொரு நிகழ்ச்சி “நகைச்சுவை குவிஸ்” அதில் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று , ஒவ்வொரு அணிக்கும் முதலில் நூறு மதிப்பெண்கள் கொடுத்துவிட்டோம். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஐந்து மதிப்பெண்கள் கழிக்கப்படும். இறுதியில் யாரிடம் குறைவான மதிப்பெண்கள் மீதம் இருக்கிறதோ அந்த அணியே “வின்னர்” என அறிவிக்கப்படுவர். இதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

குழந்தைகளுக்கான குவிஸ் ஒருமுறை நடத்திய போது , சரியான விடைகளுக்கு மதிப்பெண்கள் கொடுக்காமல், ஒவ்வொரு முறையும் ஒரு “சாக்லேட் கொடுத்தோம். குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும் அதை வரவேற்றனர்.

அக்காலத்தில் ஒரு சுதந்திர நாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக ஓடும் பஸ்ஸில் இருந்து வானொலி நேரடியாக ஒரு குவிஸ் நடத்தியது. இன்று இது சர்வ சாதாரணம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே அது மிகப் பெரிய முன்னெடுப்பு. சென்னை வானொலி தயாரித்த இந்த முதல் நேரலை குவிஸ்ஸில் நான் தான் குவிஸ் மாஸ்டர். தயாரித்தவர் என் இனிய நண்பர் டாக்டர் சேயோன். இவை போன்ற எத்தனை நிகழ்ச்சிகள்! சொல்லிக்கொண்டே போகலாம்.

புதிய சாட்டிலைட் சேனல்கள் ஆரம்பித்த பிறகு அவற்றிலும் சில குவிஸ் நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொடுத்தேன். அவற்றில் மதிப்பெண் தொகுப்பாளர்களாக இயங்கிய இருவர் பின்னாளில் திரைக் கதாநாயகிகளாக ஆனவர்கள் ( மோகினி, சங்கீதா ) என்பதும் ஒரு சுவையான தகவல் .

தற்காலிகமாக குவிஸ் நிகழ்வுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மேலே போகலாம்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் இலக்கிய விழாக்கள் , கவியரங்கம், பட்டிமன்றம் , சொற்பொழிவு என நான் அக்காலங்களில் மிகவும் “பிஸி” யாக இருப்பேன்.

கோவையில் ஒரு ஞாயிறு மாலை இலக்கிய நிகழ்ச்சி. சென்னையிலிருந்து நான் காலையில்  கோவை எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறினேன் . காலை ஆறு மணிக்குப் புறப்படும் வண்டி மதியம் ஒண்ணரை மணிக்குப் போய்ச் சேரும். செம போரடிக்குமே என நினைத்து உள்ளே ஏறும் முன் ஒரு இந்தியா டு டே தமிழ் வாங்கிக்கொண்டு போனேன். ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். வாசிப்பில் மூழ்கிவிட்டேன்.

“சார்” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் டி டி ஆர் .

“ டிக்கெட் ஏற்கனவே செக் பண்ணிட்டீங்களே “

“அது இல்ல சார் .. ஏ காபின்ல ஒரு சுவாமிஜி டிராவல் பண்ணறார். உங்களப் பாக்கணுமாம். வரச் சொன்னார் “ என்றார்.

இதழை மூடி வைத்துவிட்டு எழுந்தேன். யார் அந்த சுவாமி ஜி?

(தொடரும்)