புத்தகம் :  The Teacher I’ll Never Ever Forget ( English)

தொகுப்பு : Shubha Sagar ( Compiled & Edited)

விலை :  ரூபாய் 599 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல நாடுகளில் தன்  பணி வாழ்வை முடித்துக்கொண்டு பெங்களூரின் ஒயிட்ஃபீல்ட் அருகே அழகாக அமைதியாக, அமைந்திருக்கும் வெர்ட்சுவோசோ என்னும் ஓய்வு பெற்றவர்களின்  வசதியான சரணாலயத்தில் ( Virtuoso Retirement Community)  நிறைவாக வசிக்கும் என் அண்ணன் வாசுதேவன் மற்றும் அண்ணி மோகனாவுடன் சில நாட்களை மகிழ்ச்சியாக கழிக்க சென்றிருந்தேன்.

மூத்தோர் தங்கும் இடம். அனைத்து வசதிகளும், வேளா வேளைக்கு அருமையான, சுவையான சாப்பாடும் உண்டு. ஆனால், அங்கே என்னை மிகவும் கவர்ந்தது, அங்கே நடு நாயகமாக அமைந்திருந்த சின்னஞ்சிறு வாசகசாலைதான். வெகு சிலரே அங்கே வந்து அமர்ந்ததைக் கவனித்தேன். அதுவும் தினசரி செய்தித்தாளை வாசிக்கவே வந்தனர். அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆங்கிலப் புத்தகங்களை சொற்ப கைகளே தொட்டுப் பார்த்தன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வாசகசாலையில் நுழைந்ததால், சொல்லொணாத பரபரப்பை அடைந்தேன். அங்கே என் கண்ணில் பட்டதுதான் “தி டீச்சர் ஐ வில் நெவர் எவர் ஃபர்கெட்” என்ற  சுபா சாகர் என்பவர் தொகுத்திருக்கும் இந்த சின்னஞ்சிறு புத்தகம்.

இந்த புத்தகத்தின் தலைப்பும் அது பேச எடுத்துக் கொண்ட பொருளுமே என் மனதை உடனே கவர்ந்து விட்டது.  “மறக்க முடியாத ஆசிரியர்கள்” என்றதும் நான் படித்த அமராவதி நகர் சைனிக் பள்ளியைச் சேர்ந்த தமிழாசிரியர் மு. செல்வராசன் மற்றும் கணித ஆசிரியர் வெங்கடேசமூர்த்தி போன்றோரும், பிட்ஸ் பிலானியில் எனக்கு ஆதர்சமாக வந்தமைந்த பேராசிரியர்  எஸ் எஸ் ரங்கநாதன் அவர்களும் என் மனக்கண் முன் வந்து போயினர். நன்றிப் பெருக்கு மேலிட புத்தகத்தில் முழுவதுமாக இறங்கி விட்டேன்.

எடுத்தவுடன் நான் பார்த்த வரிகள் :

   “As the sun rises and spreads its radiance,

     I think of all my teachers and their guidance,

     Who let the light within me glow and shine,

    Transforming me into a human being, so fine !”

பரவசமூட்டும் வரிகளல்லவா இவை !

மொத்தம்  45 சிறு கட்டுரைகள்.  45 வித்தியாசமான மனிதர்கள் (சிலர் தொழில் முறை எழுத்தாளர்கள் ;  மற்றும் பலரோ பல தொழில்களில் விற்பன்னர்கள் ) தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த அற்புதமான ஆசிரியர்களைப் பற்றியும்  அவர்களுடன் ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றியும், ஆழமான தாக்கத்தைப் பற்றியும் நினைவு கூர்ந்துள்ளார்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம். ஆசிரியர்கள் என்றால், இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மட்டுமல்ல. இதைத் தவிர வாழ்க்கையில் வெவ்வேறு நிலைகளிலும் சந்தர்ப்பங்களிலும் விலைமதிப்பில்லாத பாடங்களைக் கற்றுக் கொடுத்த மனிதர்கள் அனைவரையுமே நல்லாசிரியர்களாக கணக்கில் எடுத்துக் கொள்கிறது இந்நூல்.

இந்நூலைப் படிக்கும்போது இதே போல நாமும் ஒரு நூலைத் தொகுத்தால் என்ன என்று என்னை எண்ண வைக்கிறது.

நீங்களும் படித்து மகிழலாமே !