ஜனவரி 20 அன்று சியேட்டிலில் நடைபெற்ற பொங்கல்தின பட்டிமன்றத்தில் குவிகம் சுந்தராஜன் தலைமையில் நடைபெற்றது . 

 

தலைப்பு : சமூக ஊடகம் வாழ்வைச் சிக்கலாக்குகிறதா? சிறப்பாக்குகிறதா? 

இதன் பொறுப்பாளரும் பேச்சாளருமான திரு குரு பிரசாத் அவர்களின் கருத்து: 

 

“பலருக்கும் முதல் மேடை இருந்தும், அனைவரும் மிகச்சிறப்பாக பேசினீர்கள். நிகழ்வு அமைப்பாக இருந்தது, எல்லோரும் குறிந்த நேரத்தில் முடித்தது நன்றாக இருந்தது. பலரும் இரசித்து கேட்டதை பார்க்க முடிந்தது.  இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய ரெண்டன் மக்களுக்கு மிக்க நன்றி. நிகழ்வை ஒருங்கிணைத்த இரண்டு வித்யாவிற்கும், பூர்ணிமாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரு சுந்தரராஜன் அவர்களுகக்கு  மிகுந்த நன்றி, எளிமையாக எல்லோருடனும் பழகி எல்லோரையும் இயல்பாக்கி, அருமையான முன்னுரை, அனைவரும் ஏற்கும் வண்ணம் முடிவுரையும் வழங்கியது அவரின் அனுபவத்தையும் ஆழ்ந்த புலமையும் மிளிரச்செய்தது. மிக்க நன்றி! மனமார்ந்த நன்றிகள்.
பரத்ராம் அடிக்கடி சொல்வது வருடத்திற்கு ஒன்றின்று பட்டிமன்றங்களாவது தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதே. நிச்சயம் முயற்சி எடுப்போம், நாமும் இன்னும் நிறைய பயிற்சிகள் எடுத்து இன்னும் இந்த வடிவத்தில் நம்மை வளப்படுத்தி மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.”
இதற்கு குவிகம் சுந்தரராஜனின் பதில்: 
“எல்லோரையும் விட நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக நான் உணர்கிறேன் .
சங்கீதாவின் தெளிவான பேச்சு! ப்ரியாவின் கலக்கல் பேச்சு! மலர்விழியின் அமைதியான நதி  போன்ற பேச்சு! பரத் ராமின் கருத்தாழம் நிறைந்த பேச்சு !  குருவின் குறளோடு நல்ல குரலில் கவிதை போன்ற அருவிப்பேச்சு!  கணேசனின் சரவெடிப் பேச்சு  ( சென்னை கூவம் மறக்கமுடியாதது) 
நாம் எழுவரும்  சேர்ந்து  ஒரு அழகான நிகழ்ச்சியைக் கொடுத்தோம் என்ற திருப்தி கேட்டவர் முகங்களில் தெளிவாகத் தெரிந்தது! 
இதைவிட சிறந்த பாராட்டு வேறென்ன இருக்க முடியும்? ” 

——————————————————————————————————————————————————

இந்திரநீலன் சுரேஷ் அவர்கள் எழுதிய நிலவும் மலரும் சிறுகதை தொகுப்பு புத்தக வெளியீடு , பிப்ரவரி 11 , 2024 கோகலே சாஸ்திரி ஹால் , மைலாப்பூர் 


#
இன்னுமொரு நூல்! இன்னுமொரு விழா! வித்தியாசப்பட்டது பேச்சாளர் வரிசை! இந்திய தூதராக இருந்து ஓய்வு பெற்ற திரு. ராகவன், நூலாசிரியரின் ஆசிரியரும் கூட! அடுத்து அவரை படைப்பாளியாக்கிய கீழாம்பூர் எனும் ஆசிரியர். நூல் குறித்த உரையாற்ற வந்தவர் முன்னாள் கல்கி ஆசிரியர். கடைசியாக பேச வந்த பிரபலம் சுஜாதாவின் அடிதொட்டு வித்தியாசப்பட்ட பட்டுக்கோட்டை பிரபாகர் எனும் உங்கள் ஜூனியர் ஆசிரியர். வகுப்பறையாக மாறி விடுமோ எனும் அச்சம் எட்டிப் பார்க்க, நெறியாள்கை சந்திரமோகன், விசிலை வாயில் வைத்தபடியே கண்காணித்தார். கால அளவு மீறினால் , ஜனாதிபதி உத்தரவு போல எழுந்து நின்று சமிக்ஞை காட்டினார்.

கீழாம்பூர் : உலகின் முதல் சிறுகதையை எழுதியவர் பரமசிவன். முதல் ஓவியம் வரைந்தவர் பார்வதி தேவி!

கல்கி ரமணன்: எதையும் சொல்ல மாட்டேன். புத்தகம் வாங்கிப் படியுங்கள் என்று சிறுகதை இலக்கண உரையைத் தந்தவர், படைப்பாளியை எழுத விடும் பின்புலப் பெண்கள் பற்றிச் சிலாகித்தது அருமை.

சிறப்பு விருந்தினர் அய்யா ராகவன் தன் மாணாக்கன் திறமையை கொண்டாடி புளகாங்கிதமானார்.
பட்டுக் கோட்டை இதில் உள்ள கதைகளை சொல்லத் தடை என்று தன் மூன்றாவது சிறுகதையான ‘பார்வை’ பற்றி பேசினார். மனிதர் கண்ணோட்டம் சார்ந்த உளவியல் அதன் அடிநாதம்.
ஏற்புரை இந்திரநீலன் சுரேஷ். பலருக்கு நன்றி சொல்லியே உரையை முடித்துக் கொண்டார். உடை வாளை எடுக்கவே இல்லை. முதலில் வரவேற்புரையை வழங்கிய திருமதி லலிதா சுரேஷ், திருத்த தமிழில் மெருகூட்டினார்.

ஆறுக்கு ஆரம்பித்து எட்டுக்கு முடியும் கூட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும். அரங்கில் பல முகங்கள் ரசிகை, ரசிகர்கள். அவர்களது மகிழ்ச்சி மற்றோரையும் தொற்றிக் கொண்டு, பெருந்தொற்றாக ஆனது. இம்மாதிரி பெருந்தொற்றுகள் நல்லவை!

கலைமகளின் தேஜஸ்  – சிறகு இரவி

—————————————————————————————————————————————————–

நூல்கள் வெளியீட்டு விழா

சிறகு இரவி

குவிகம் பதிப்பகம், மாதாமாதம் ஏதோவொரு நிகழ்வை நேரடியாக நடத்தி வருகிறது. இம்மாத கடைசி சனிக்கிழமை அன்று, இரு நூல்கள் வெளியீட்டு விழா! ஆய்வெல்லாம் இல்லை. அதன் உள்ளடக்கத்தைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களோடு, ஒரு அறிமுக விழா. இதை இந்தியாவின், உலகின், பல மூலைகளிலிருந்து, பல தமிழ் ஆர்வலர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அகன்ற திரையில் தெரிந்தது.

பல ஆண்டுகளாக இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தி வந்த மாத இறுதி கூட்டங்களில், ஒரு கட்டத்தில் குவிகம் அமைப்பு, தன்னையும் சேர்த்து கொண்டு நடத்த ஆரம்பித்தது. நிகழ்வின் ஒரு பாதி இ. சி. அமைப்பு அமைத்துத் தருவது. பின் பாதி குவிகத்தின் கொள்முதல். மரபு, சங்கம், கவிதை, நாடகம், நூல் வெளியீடு என பல்சுவை நிகழ்வுகளை குவிகம் கொண்டாட முற்பட்டபோது, இ. சி. அமைப்பின் காரணகர்த்தா திரு. ப. லட்சுமணன், மூப்பு காரணமாக தொடர முடியாத நிலையில், முழுப் பொறுப்பையும் தன் தோள்களில் ஏற்றிக் கொண்டு குவிகம் பவனி வர ஆரம்பித்தது. ஆனாலும், ஒவ்வொரு மாதமும் ஒரு நிகழ்வு எனும் போது, நாக்கு தள்ளி விடும். ஆனாலும், அதன் நுரையேதும் தெரியாதபடி, குவிகம் கிருபா செவ்வனே நடத்தி வருவது வியப்புற்குரியது.

புலனம் வழியாக வார ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டங்கள். இம்மாதிரி நேரடி கூட்டம் ஒன்று என்று, அள்ள அள்ளக் குறையாத ஆர்வத்துடன் பயணிக்கிறது குவிகம். இதில் குவிகம் பதிப்பக வேலைகள் வேறு. இன்னொருவர் செய்திருந்தால், இந்நேரம், வேண்டேன் இம்மாதிரி இன்னொரு பிறவி என்று ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பார். கிருபா இதற்கெல்லாம் சளைக்காமல், எப்போதும் தோள் கொடுக்கும் அனுமன் ராஜாமணி; எக்காலத்திலும் கரை ஏற்ற தயாராக இருக்கும் குகன் நாணு என்று, நட்பு கைகள் எத்தி விட, குவிக பல்லக்கு தடையின்றி பவனி வருவதில் ஆச்சர்யமில்லை.

புத்தகம் போடுவதற்குத்தான் செலவில்லை என்றால், அதை எழுதிய எழுத்தாளருக்கும் மேடை அமைத்துக் கொடுத்து, நூலை வெளியிடும் பொறுப்பையும், குவிகமே ஏற்றுக் கொள்கிறது. தேனீர் கூட குவிகம் செலவு தான். நூலாசிரியர் ஆசைப்பட்டால் இனிப்பும் காரமும் கொண்டு வரலாம். யாராவது இம்மாதிரி பதிப்பகம் உண்டா என்று விசாரித்து, இல்லை! இதுபோல் இல்லை! என்று நிறுவினால், கின்னஸ் சான்றிதழுக்குக் கூட சிபார்சு செய்யலாம். முயற்சி இருந்தால் வானம் கூட தொட்டு விடும் தூரம் தான்!

இன்றைய நிகழ்வு, நான் விரும்பி, இரவு நேரப் பயணம் இருப்பதைத் தெரிந்து கொண்டே சென்றதற்கு ஒரே காரணம்: எழுதிய நூலாசிரியர்கள் என்பால் அன்பு கொண்ட நண்பர்கள். அவர்களின் சாதனையை நான் பார்க்காவிட்டால், கேட்கா விட்டால், அதை விட பெரிய குற்றம் கிடையாது.

கிருபானந்தன் ஆரம்பித்து வைக்க, அவரை தொடர்ந்து ஆர்க்கே வெளியிட விருட்சம் மவுலி பெற்றுக் கொண்ட புத்தகம் தாயம்மா. நூலாசிரியர் நாடக மேடையில் பல முறை விருதுகளைப் பெற்ற திரு கௌரிசங்கர். பதினைந்து சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் கொண்ட, இருநூறு பக்கங்களை தொட முயற்சிக்கும் புத்தகம். கதைகள், பெரும்பாலும் குவிகம் மின்னிதழில் வெளிவந்தவை. ஊறுகாயாக பூபாளம், விருட்சம், சிறகு என்று சிற்றிதழ்களில் வெளிவந்தவையும் உண்டு. பந்திக்கு பாயசம் என்பது போல கல்கி,, விகடன் என்று வணிக இதழ்களிலும் நாற்று நட்டு இருக்கிறார் கௌரி. சில வருடங்களுக்கு முன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘ நான் நான்கைந்து கதைகள் தான் எழுதி இருக்கிறேன் ‘ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அவருக்கு கொம்பு சீவி வாடி வாசலை நோக்கி ஓட வைத்ததில் பூபாளத்திற்கும் விருட்சத்திற்கும் சிறகுக்கும் கூட பங்கு உண்டு. முகநூல் ஒரு தஞ்சாவூர் மாப்பிள்ளைத் திண்ணை என்றால், மின்னிதழ்கள் கல்யாண அரங்கின் வரவேற்பு கூடம். எல்லோருக்கும் பன்னீர் சந்தனம் என படைப்பாளிகளுக்கு வரவேற்பு தடபுடல். அதில் தன் நம்பிக்கை பெருகி, இன்னமும் வாசித்து, மெருகேற்றி, அவர்கள் கொட்டும் படைப்புகள் அள்ளி முடியாதவை. நான்கைந்து கதைகள் மட்டுமே எழுதிய கௌரிசங்கர், இன்று பதினாறு கதைகள் கொண்ட நூலை வெளியிடுவதற்கு சிற்றிதழ்களும் மின்னிதழ்களும் மட்டுமே காரணம் என்று அவர் உளமார நன்றி கூறியது ஏற்புரையின் ஹைலைட்.

ஆர்க்கேயின் அறிமுக உரை, புத்தகத்தின் பல சுவாரஸ்ய கட்டங்களை விளக்கி, படிக்கும் ஆர்வத்தை தூண்டியது என்றால் மிகையில்லை. உண்மையில் ஆர்க்கே ஒரு கவிஞர். அதனால் குறிப்புகள் இருந்தும், சில வாக்கியங்களை இருமுறை ஒலிக்க விட்டது, அவை மீதான அழுத்தம் கொணர என்று புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த பேசவிருந்தவர், நேரத்தை நினைவூட்ட, அவரும் சுருக்கமாக முடித்துக் கொண்டார். நெறியாள்கையை மேடையில் பேசுபவர்களே ஒருவருக்கு ஒருவர் கையிலெடுப்பது ஆரோக்கிய இலக்கியம்.

இரண்டாவது நூல் எஸ். எல். நாணு முகநூலில் எழுதிய பல பதிவுகளின் தொகுப்பு. அதை ரக வாரியாக பிரித்து ரசனையுடன் கோர்த்திருந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அறிமுக உரையை வழங்கிய டாக்டர் பாஸ்கர் அனைவரின் நண்பர். உதவி என்றால் தன் மருத்துவ அறிவை கட்டணமில்லாமல் வழங்குபவர். இதில் தமிழ் டாக்டர் அதாவது முனைவர் போல, நாணுவின் புத்தகத்தைப் பற்றி விலா வரியாக விமர்சித்து- பாராட்டு எனக் கொள்க – ஒவ்வொன்றையும் நுணுக்கமாக விளக்கி, நடுவில் திஜாவைப் பற்றிய அவரது காதலையும் மேற்கோள் மூலம் காட்டி பேசியது, பல எதிர்கால உரைகளுக்கு பாடமாக இருக்கக் கூடும்.

ஏற்புரைகளுக்கான நேரம். நெகிழ்ந்து பேசினார் கௌரி சங்கர். வடிவமைத்த நூலின் அட்டை, தன் மகன் ஒரே நாளில் செய்து கொடுத்தது என்று, வாரிசையும் முன்னிறுத்த மறக்கவில்லை அவர். எப்படி ஆரம்பித்தேன். இப்படி முடிவில்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று அவர் விளக்கியபோது, கைகள் பிணைப்பை உதறி தட்ட யத்தனித்தன. சொல்ல பல விடயங்கள் இருந்தாலும், நேரம் கருதி அவர் தன் உரையை தணிக்கையுடன் முடித்துக் கொண்டார்.

நாணுவின் ஏற்புரை ரத்தினச் சுருக்கம். சிலர் ரத்தினம் பட்டணம் பொடியாக இழுப்பர். இழுக்க இழுக்க இன்பம் என்று நினைப்பர். நாணு அப்படியில்லை. எதையும் விட்டு விடாமல், அனைத்தையும் அகத்தியன் கமண்டலத்தில் அடக்கவும் திறமை வேண்டும். இவரும் நாடகம் எழுதுபவர். தன் நாடகங்களை நூலாக வெளியிட்டிருக்கிறார். அவைகளை கதைகளாக மாற்றும் எண்ணமும் உண்டு. இன்னும் பல நூல்களை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

வழமையாக செயலில் தீவிரம் காட்டும் கிருபானந்தன் பொறுப்பு கருதி சில வார்த்தைகளை சொல்ல வேண்டிய கட்டாயம். அதையும் அவர் சுருக்கமாக மனதில் பதியும்படி பேசியது சாலவும் நன்று.

ஆரம்பத்தில் வெங்கடேஸ்வரா போளிக் கடையில் இருந்து வந்த உருளை போண்டாவும் பால் இனிப்பும், நிகழ்வு பாலும் பருப்புமாக நிகழப் போவதற்கு கட்டியம் கூறியது.

கூட்டம் முப்பத்தி ஒன்பது பேர். தேனீர் கொடுத்தவர் வாசல் ஓரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்தார். அவரையும் சேர்த்தால் இன்று இனியவை நாற்பது தான்!

————————————————————————————————————————————–

சக்கர-யாகம் நூல் வெளியீட்டு விழா – ராஜாமணி 

குவிகம் பதிப்பகத்தின் மற்றொரு சிறப்பான வெளியீடு ‘ சக்கர- யாகம் ‘ என்ற நூல். .
எழுத்தாளர் திரு .பென்னேசன் தனது ஆசானான சனத்குமார் என்ற சாதனையாளரின் வாழ்க்கையும் , அவர் சாதித்ததையும் அந்த சாதனையின் பயணத்தையும் வெகு சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

நூலின் வெளியீட்டு விழா ஜனவரி 30 ம் தேதி 2024 அன்று நட்சத்திர ஹோட்டல் அக்கார்டில் (Hotel Accord) சிறப்பாக நடைபெற்றது . நூலை திரு. நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட திரு கோமதிநாயகம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். வாழ்த்துரை வழங்கியவர்கள் திரைப்பட இயக்குனர்கள் திரு .வசந்த சாய், சமுத்திரக்கனி.

பார்வையாளர்களில் இருந்து பேச அழைக்கப்பட்டவர் நடிகர் டெல்லி கணேஷ் . குவிகம் பதிப்பகத்தின் சார்பாக ராஜாமணி வரவேற்புரை. சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சாதனையாளர் சனத்குமாரோடு நல்ல தொடர்பும் ,மதிப்பும், நெருக்கமான நட்பும் இருப்பது தெரிய வந்தது.

சரி !
இனி யார் இந்த சாதனையாளர் சனத்குமார்.?
அவர் செய்த சாதனை தான் என்ன ?
கொஞ்சம் பார்ப்போமா!

சனத்குமாரின் முன்னோர்கள் ஆந்திராவின் கோல் கொண்டா பகுதியில் வாணிபம் செய்து வந்த அந்தணர்கள். செல்வந்தர்கள்.

பல்வேறு ராஜ்ஜிய காரணங்களால் ( கொலை ,கொள்ளை, சூரையாடல் )அங்கிருந்த அந்தணர்கள் 1820 வாக்கில் புலம் பெயர்ந்து தென்னாட்டின் பல பகுதிகளிலும் போய் குடியேறினார் .அப்படி கிருஷ்ணகிரிக்கு வந்தவர்கள்தான் சனத்குமாரின் முன்னோர்கள்.

இரண்டு வயதில் கடுமையான போலியோ காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இடது கை ,இடதுகால் முழுக்க செயலிழந்து விட்டது . தவறான சிகிச்சையின் காரணமாக இடது கால் செயலிழந்து விட்டதால் மாற்றுத்திறனாளி ஆனவர் .

பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை மற்ற குழந்தைகளை போல விளையாடவும் முடியவில்லை ஆனாலும் வீட்டில் இருந்தபடியே கல்வி அறிவு பெற்றுள்ளார் .

இவருக்கு 20 வயதாகும் பொழுது திடீரென்று தான் படிக்கவில்லையே என்ற கவலையும், கலக்கமும் ஏற்பட்டதன் விளைவாக நேரடியாக மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதலாம் என்பதை அறிந்து ,அதற்காக படித்து தேர்வாவதற்கு தேவையான அளவிற்கு மதிப்பெண்கள் பெற்று மெட்ரிகுலேஷன் தேர்வு பெற்றார்.

இந்த இடத்தில் ஒன்றை முக்கியமாக சொல்ல வேண்டும். மதுரையில் தான் தேர்வு மையம் .தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த அடிப்படை வசதியும் ஏற்பாடு செய்யப்படவில்லை . படிகளையெல்லாம் ஏறித்தான் தேர்வு எழுதி இருக்கிறார். சாய்வு நாற்காலி கூட இல்லை.

இதே போல பிற்காலத்தில் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலை தொடங்குவதற்காக சென்னை வந்து கிண்டியில் அரசு அதிகாரியை சந்திக்க வந்த பொழுதும் மின் தூக்கி வசதி இல்லாத ஆறு மாடி கட்டிடத்தில் ஆறாவது மாடியில் இருந்த அதிகாரியை பார்ப்பதற்கு மூன்று மணி நேரம் கஷ்டப்பட்டு படியேறி சென்று பார்த்திருக்கிறார் . அப்படி இவர் தொடங்கிய பிளாஸ்டிக் தொழில் கூட அரசின் மாசு கட்டுப்பாட்டு தடை சட்டத்தால் மூட வேண்டியது ஆகிவிட்டது.

குமார் &குமார் தட்டச்சு நிலையம்

தந்தையார் பணி ஓய்வுக்குப் பிறகு வாங்கி வந்த இரண்டு டைப்ரைட்டரில் இவரே தட்டச்சு பயிற்சி பெற்று தேர்வெழுதி, தட்டச்சு ஆசிரியருக்கும் தகுதி தேர்வு எழுதி ஒரு தட்டச்சு நிலையம் நடத்தும் தகுதியை பெற்றார் .இவர் நடத்தி வந்த தட்டச்சு பயிற்சி கூடத்தில் கண்டிப்பும்,, கட்டுப்பாடும் அதிகம். ஆண்களுக்கு தனி நேரஒதுக்கீடு , பெண்களுக்கு தனி பயிற்சி நேரம். இந்த தட்டச்சு பயிற்சி கூடத்தில் தான் எழுத்தாளர் பெனனேசன் தட்டச்சு பயிற்சி பெறுவதற்கு சேருகிறார். ஆசான் சனத்குமரோடு அறிமுகமும் நட்பும் ஏற்படுகிறது . அது இன்று வரை தொடர்கிறது.

அடுத்ததாக கிரிக்கெட் விளையாட்டின் மீது இருந்த தீவிரமான ஆர்வத்தால் சனத்குமார் கிருஷ்ணகிரியில் ஒரு கிரிக்கெட் கிளப் ஆரம்பித்து பலரையும் விளையாட ஊக்குவித்திருக்கிறார் .

இசையில் ஆர்வமும் ஞானமும் இருந்ததால் ( பிரண்ட்ஸ் ஆர்கெஸ்ட்ரா) நண்பர்கள் இசைக் குழு ஆரம்பித்து பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். பென்னேசனுக்கு தாள வாத்தியங்களை கற்றுக்கொள்ள செய்து குழுவில் இணைத்துக் கொண்டுள்ளார் .

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இவருக்கு பெட்ரோல் வழங்கும் நிலையம் நடத்த அனுமதி அளித்தது .ஆனால் வணிக நோக்கமும் ,வியாபார தந்திரங்களும் இவருக்கு ஒத்து வராததால், குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக அந்த உரிமையை மிகக் குறுகிய காலத்திலேயே நிறுவனத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டார் .

கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிறிய வீட்டில் ” கேம்பிரிட்ஜ் துவக்கப்பள்ளியை ஆரம்பித்தார் . இரண்டு ஆசிரியைகள் ஒரு ஆயா , 46 குழந்தைகள் . இந்தப் பள்ளியை தொடங்கிய காலகட்டத்தில் சக்கர நாற்காலியில் நடமாடத் தொடங்கி இருந்தார் .சக்கரங்கள் அவருக்கு கால்கள் ஆகின . சக்கரங்கள் அவருடைய கல்வி இயக்கத்தை சுழல விட்டன.

கிருஷ்ணகிரி கட்டிக்காணாப் பள்ளி பகுதியில் கேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி என்ற பெயரில் மிகப் பெரும் கல்வி நிறுவனமாக உருவெடுத்தது.

இந்தப் பள்ளியில் தினமும் மாணவர்கள் கட்டாயம் காய்கறி உணவும், ஒரு பழமும் கொண்டு வர வேண்டும். இதை ஆசிரியர்கள் சோதித்து தான் அனுப்புவார்கள் .
ஆசிரியர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சிகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகினறன.
வெகு காலத்திற்கு முன்பே டிஜிட்டல் லேப் திறக்கப்பட்டு, டிஜிட்டல் மூலமாக அதாவது காணொளி மூலமாக பாடங்களை சொல்லிக் கொடுக்கும் முறை தொடங்கப்பட்டது. இவர் மீது மிகுந்த மதிப்பும், அன்பும், நட்பும் கொண்டிருந்த மறைந்த இயக்குனர் திலகம் கே பாலச்சந்தர் தான் அந்த பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைத்தார் .

சென்ற ஆண்டு ஐஐடி அதன் இயக்குனர் டாக்டர் காமகோடி அவர்களை தொடர்பு கொண்டு அவர் உதவியுடன் ” கருவி பொறியியல் ஆய்வகம்” முதன்முறையாக (டிவைஸ் இன்ஜினியரிங் லேப்ரடரி) தொடங்கப்பட்டது .

இது கிராமத்தில் நடந்தேறும் புரட்சியாக மாறியது . இது சென்னை ஐஐடியின் “கற்கக் கற்பித்தல்” (teach to learn) குழுவினரின் ஆதரவுடன் தொடங்கப்பட்டது.

இஸ்ரோவின் தலைவர் திரு கஸ்தூரி ரங்கன் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் இஸ்ரோவில் இருந்து பல விஞ்ஞானிகள் இந்த பள்ளிக்கு வந்து மாணவருடன் கலந்துரையாடி இருக்கிறார்கள் . மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் பள்ளிக்குச் சென்று மாணவர்களோடு உரையாடி ஊக்கமளித்திருக்கிறார்

இயற்கை வேளாண்மை பற்றி மாணவர்களுக்கு அடிப்படை புரிதல் தேவை என்று முடிவெடுத்து, இயற்கை வேளாண்மைக்கான நிலங்களைப் பெற்று, பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இயற்கை வேளாண்மை செய்முறையாக செய்யும் நிலையை ஏற்படுத்தினார

பென்னேசனின் மூலம் திரு அப்துல் கலாம் அவர்கள் இந்தப் பள்ளிக்கு வந்திருக்கிறார் . அந்த வேளாண்மையத்தை திறந்து வைத்தவரும் அவர்தான். அந்த சிறப்பு கூட்டத்தில் அருகில் இருந்த அரசு பள்ளி மாணவர்கள் அனைவரையும் சரத்குமார் வர வைத்திருக்கிறார் .அது மட்டுமல்ல உள்ளூர் அதிகாரிகள் யாருக்கும் அழைப்பு கிடையாது. மேடையில் தலைமை ஏற்பது, நிகழ்ச்சியை முழுவதுமாக நடத்துவது எல்லாமே மாணவர்கள் தான்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு மாணவர்களோடு உரையாட விரும்பியதால் , தான் செல்ல வேண்டிய அடுத்த நிகழ்ச்சியை அதிகாரிகள் நினைவூட்டியும், கலாம் அவர்கள் அங்கு கூடுதல் நேரம் தங்கி மாணவர்களோடு உரையாடி மகிழ்ந்திருக்கிறார் .

“ஆனந்தமயி” என்ற பெயரில் மூத்தோர் குடில் ஒன்றை நடத்துகிறார் . அதனுடைய செயல்பாடும் வித்தியாசமாகவும் சிறப்பாக இருப்பதாகவும் அங்கே இருப்பவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.

பல வெளிநாட்டு கல்வி அமைச்சர்களும் சனத்குமாரை கௌரவ விருந்தினராக அழைத்து ஆலோசனை பெறுகிறார்கள். இந்தியாவிலும்பல கல்வி நிலையங்கள் இயற்கை வேளாண்மையை கல்வியில் எப்படி சேர்க்கலாம் என்பதற்கு இவரிடம் ஆலோசனை பெற்று வருகிறார்கள் .

பொதுவாக ஏதாவது ஒரு துறை சார்ந்த சாதனையாளர்கள் தனிப்பட்ட முறையில் நம்மையும் சாதிப்பதற்கு ஒரு உந்து சக்தியாக இருப்பார்கள் .ஆனால் சனத்குமார் அவர்களின் செயல்பாடும், சாதனைகளும், நமக்கும் ஒரு ஈர்ப்பையும் ,வியப்பையும், உற்சாகத்தையும் தருகிறது. இவரால் ஏற்படும் ஈர்ப்பு ,சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற விரிந்த பார்வையை நமக்கு கொடுக்கும். இவருடைய பள்ளியையும் ,ஆனந்தமயி மூத்தோர் குடிலையும் பார்ப்பதற்கு எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

நிச்சயமாக ஒருமுறை சென்று பார்த்து ஒரு புதிய அனுபவத்தை பெற்று வரலாம்.

இப்படிப்பட்ட ஒரு சிறந்த சாதனையாளரின் ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடிய வாழ்க்கையை பென்னேசன் அவர்கள் எழுத்தில் பதிவு செய்து” சக்கர-யாகம் “என்ற பெயரில் நூலாக கொண்டு வந்தது பாராட்டுக்குரியது . அவருக்கு நமது வாழ்த்துக்கள். அதேபோல இப்படிப்பட்ட ஒரு சிறந்த சாதனை மனிதரின் வாழ்க்கையை நூலாக குவிகம் பதிப்பகம் கொண்டு வந்தது குவிகம் பதிப்பகத்திற்கு ஒரு பெருமை சேர்க்கும் செயலாகும்.

நிச்சயமாக அனைவரும் இந்த நூலை கட்டாயம் படித்துப் பார்க்க வேண்டும்.

இனி இந்த விழாவைப் பற்றி சிறகு ரவி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா? 

சமீப காலமாக நட்சத்திர ஓட்டல்களில் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடப்பதை நான் அதிகம் பார்க்கிறேன். உண்மையில் இம்மாதிரி அனுபவங்களை எனக்கு முதலில் அளித்தவர் என் எழுத்தாள நண்பர் டாக்டர் ஜெ.பாஸ்கரன். வருடத்திற்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் வெளியிடுவார். அதை நண்பர்களோடு கோலாகலமாக ஸ்டார் ஓட்டல்களில் நடத்துவார். சின்ன மேடையில் பெரும் பிரபலங்கள் பங்கேற்று பேசுவார்கள். துல்லியமாக திட்டமிட்டு நடத்தப்படும் விழாக்களை, எனக்கு அறிமுகம் செய்தது பி.ஜெ. தான். இன்று அம்மாதிரி ஒரு அனுபவம் கிடைத்தது.

உளவு துறையில் பார்த்த மைய அரசு வேலையை ராஜினாமா செய்து, நாடகம், எழுத்து, இதழ், தமிழ் பத்திரிக்கைக்கு நிருபர் என்று தன் பாதையை மாற்றிக் கொண்ட யதார்த்தா பென்னேஸ்வரனின் புதிய கட்டுரை நூல் வெளியீட்டு விழா, அக்கார்ட் எனும் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. பார்க்க எளிமையாக இருக்கும் பென்னேசனுக்கு இவ்வளவு ஆளுமைகளைத் தெரியுமா என்று வியப்பில் ஆழ்ந்த பார்வையாளர்கள். அதற்கு கிரியா ஊக்கி அவர் எழுதிய புத்தகத்தின் நாயகன் திரு. சனத்குமார்.

வந்த பிரபலங்களை பற்றி சொன்னால் உங்களுக்குப் புரியும். மாறாத அன்புடன் வந்த இயக்குனர் வசந்த், மரியாதை குறையாமல் வந்து, கடைசி வரை இருந்த சமுத்திரக்கனி, இருபது வருட பழக்கத்தால் தன்னை இணைத்துக் கொண்ட கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், ஆங்கில மொழி கற்பித்தல் திட்ட வடிவமைப்பாளர் திரு. கோமதிநாதன், தலைமைக்கு சரிகைப் பட்டாக திரு. நல்லி குப்புசாமி செட்டியார்.

நூலைப் பற்றி பேச யாருக்கும் தோணவில்லை. எதிரில் சாதனை நாயகன் இருக்கும்போது வேறு யாரைப் பற்றி பேச முடியும். அப்படி என்ன சாதனை நிகழ்த்தி விட்டார் திரு. சனத்? கிருஷ்ணகிரி அருகில் காவேரிப்பட்டினத்தில் ஆனந்தமயி எனும் பள்ளியை நடத்துகிறார். அங்கு கல்வியோடு யோகாவும், உடற்பயிற்சியும் இயற்கை விவசாயமும் கற்றுத் தரப்படுகிறது. சக்கர நாற்காலியில் நகர்ந்து கொண்டே, பல நல்ல விடயங்களைச் செய்யும் இவருடைய மனம், பெரும் பலம் கொண்டது.

திருத்தமான ஆங்கிலத்தில் பேசிய திரு.கோமதிநாதன், நடுவில் அட்சர சுத்தமாக பாரதியின் பாடல்களையும் சொன்னது காக்டெய்ல். எனக்கு ஆங்கிலம்னாலே அலர்ஜி என்று சொன்ன சமுத்திரக்கனி கூட, பாரதிக்கு தலை நிமிர்ந்தார்.

கனி தன் பேச்சில் கனிவைத் தர வேறு எதுவும் சேர்க்கவில்லை. சனத் சாரைப் பார்த்தபின் எதிர்மறை எண்ணங்களே தோன்றாது எனும் அளவிற்கு அழுத்த சான்றிதழ் அவரிடமிருந்து.

இயக்குனர் வசந்த் திருமூலரையும் திருக்குறளையும் மேற்கோள் காட்டி அதன் படி வாழும் மனிதர் சனத்குமார் என்று சொன்னது மிகையில்லை என்று கேட்டவருக்கு தோன்றியது தான் ஹைலைட். எல்லோரும் உளமார பேசும் போது, நம்பகத்தன்மை வந்து விடும். வந்து விட்டது.

கீழாம்பூர் தன் பாணியில் சனத்குமார் உடனான பழக்கத்தைச் சொன்னார். ஒரு முறை ஆனந்தமயிக்கு போனால் போதும், உங்கள் வாழ்க்கை நேர்மறையாக மாறிவிடும் என்பது அவரது ஆணித்தரமான கணிப்பு.

பென்னேஸ்வரனுடன் தில்லியில் பல காலம் பழகியவர் நடிகர் டெல்லி கணேஷ். அவருக்கு அழைப்பு போகவில்லை. ஆனாலும் கேட்டு பெற்று வந்து விட்டார். அவருடைய யதார்த்த பேச்சு யதார்த்தாவையே அசைத்து விட்டது.

வரவேற்புரை வழங்கிய குவிகம் பதிப்பக ராஜாமணி, இணைப்புரை வழங்கிய சந்திரமோகன் என எல்லோரும் கால அளவை நிர்ணயம் செய்து கொண்டு பேசியது வெகு அருமை.

நல்லியின் பேச்சில் ஒரு வெகுளித்தனம் இருக்கும். சில குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு வந்து, அதன் தொடர்பாக தன் அனுபவங்களையும் அவர் சேர்த்துக் கொண்டது அக்கார வடிசில்.

பென்னேஸ்வரனின் ஏற்புரை செமை காமெடி. மனிதர் இவ்வளவு சிரிக்க சிரிக்க பேசுவாரா என்று ஆச்சர்யம். தன்முனை பகடியாக அவர் சொன்ன தகவல்கள் விலா கிள்ளல்.

இரண்டைர மணி நேரம் நடைபெற்ற விழாவில் ஒரு தடங்கல் இல்லை மின்சாரத்தைத் தவிர. முன்னதாக நடைபெற்ற சிற்றுண்டி விருந்தில், ஆங்கிலமும் தமிழுமாக பால் அல்வாவும் பிரட் பட்டர் ஜாமும் உளுந்து போண்டாவும் இருந்தது எதையோ சொல்ல வருகிறது. தொடர்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கட்டும் என்பதா அது?

 

குவிகம் நிகழ்வுகள்:

21.01.24  குவிகம் சிவசங்கரி சிறுகதைத்தேர்வு -1 ; சிவசங்கரி அவர்களும் பங்குகொண்ட நிகழ்வு

 

 

27.01.24   குவிகம்   இலக்கியவாசல் நிகழ்வு 2– புத்தக அறிமுகம் –எஸ். கெளரிசங்கரின் “தாயம்மா” மற்றும் எஸ். எல் நாணுவின் “இலக்கில்லா கிறுக்கல்கள்”

 

28.01.24 – சிறப்புரை – ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள்  தலைப்பு: ” எங்கெங்கு காணினும் ”

04.02.24

திரு ஜே ரகுநாதன் வழங்கிய ” தேவனின் பார்வையில்  சென்னை -1930-1940 ”  என்ற உரையின் காணொளியைக் காணலாம் இங்கே :

 

08.02.24

காந்தி தொடர் சொற்பொழிவின் முதல் வாரம் : வழங்கியவர் முனைவர் பிரேமா அண்ணாமலை அவர்கள் . தலைப்பு ” அன்னை கஸ்தூரிபாவின் சத்திய வாழ்க்கை ”

அதன் காணொளி இங்கே :

11.02.24

நாணு  – ராஜாமணி நேர்காணல்

 

 

வ வே சு அவர்கள்  வழங்கும் மகாகவியின் மந்திரச் சொற்கள்: