கண்ணதாசனின் பாடல் வரிகள் சுசீலாவின் தேன் குரலில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் கசிந்துகொண்டிருந்தது. பாடல் வரிகளா, இசையா, குரலின் குழைவா, பாடல் நயமா எனப் பிரித்துப் பார்த்துவிட முடியாத ஒரு இனிய அனுபவம் அது! இந்தப் பாடல் நம்முள் கடத்தும் அந்த உணர்வு – இலக்கிய நயத்துடன் காதல் படுத்தும் பாடு – மறுக்க முடியாதது.
காதல் என்பது என்ன? சின்ன வயதில் அது ஒரு ‘கெட்ட’ வார்த்தை. அதைச் சொன்னாலே கட்டையைத் தூக்கிக்கொண்டு ஓடிவரும் பெரியவர்கள்! அன்றைய சமூக நிலவரம் அப்படி!
நமது இலக்கியங்களில் காதல் மிகச் சிறப்பாகக் குறிப்படப்படுகின்றது. சங்க இலக்கியங்கள் முதல், சினிமாப் பாடல்கள் வரை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையில் சில சுவாரஸ்யமான காதல் கவிதைகள், பாடல்களைப் பார்க்கலாம்.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, காதலை
1. (இனக்கவர்ச்சி அடிப்படையில்) ஆண் பெண் இருவரிடையே ஏற்படும் அன்பு; நேசம். Love (between man and woman).
2. (ஒன்றின் மேல்) ஆழ்ந்த பற்று; பிடிப்பு; விருப்பம் – (அவர் இசையின் மேல் கொண்ட காதல்..)
என்று விவரிக்கின்றது.
சங்க காலம் காட்டும் வீரமும், காதலும் வியக்கத்தக்கவை. கிடைத்திருக்கும் 2381 சங்கப் பாடல்களில், 1862 அகப் பாடல்கள்! சங்க காலத்தில் வீரத்தைவிட, காதலே மிகுதியாகப் பாடப்பட்டுள்ளது – வாளின் கூர்மையை விட, மாந்தரின் வேல் விழிகளின் கூர்மை அதிக வீச்சு நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும்!
‘அகம்’ என்பது என்ன? ‘அகநானூறு’ புத்தகத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா சொல்வதைப் பார்ப்போம்:
“என் மனம் இப்போது இவளோடு;
நான், எனது என்பதே இல்லை;
இருமனமும் ஒருமனமே ஆக,
இரண்டு உடலும் ஓர் உடலாய்த்
தனிமையில் இணைந்து பெற்ற
பேரின்ப வெள்ளம் என்மனம் எல்லாம்”
“அவளுக்கும் அப்படியே! ஆனால் அது எப்படி என்று சொல்லச் சொன்னால், சொல்லத்தான் தெரியவில்லை. இந்தப் பேரின்ப வெள்ளமே (இவ்வாறு இருந்ததெனப் புலப்படுத்த மாட்டாது அகத்தே நுகர்ந்து இன்புறுதலின்) ‘அகம்’ எனப்படும்.
அகத்திணை தூய அன்புக் காதலைப் பாடுகிறது. காதலர்களுக்கு, அவர்கள் அன்பாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டியதின் அவசியத்தை அறுவுறுத்தும் பாடல்கள் அவை. தம் வாழ்வுக்கு உரிய துணையை அன்பினால் தேர்ந்தெடுத்துக்கொள்வது குற்றமில்லை. அதுவே கற்பும் ஆகும் என காதலர்களின் உறவினருக்கும் உணர்த்துவது அகம். தங்கையின் காதலைக் கண்டு வெகுண்டெழும் அண்ணன்மார், அன்பினால் மனம் மாறுவதைக் குறிப்பிடுகிறது இந்தப் பாடல்:
“ அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
ஒருபகல் எல்லாம் உருத்தெழுந்தாறி
இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை” – (கலி 39)
தலைவி தன் காதலின் பெருமையைச் சொல்லும் குறுந்தொகைப் பாடல், அன்றைய காதலரின் தீவிரத்தைச் சொல்வதாய் அமைந்துள்ளது.
“நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆரள வின்றே; சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”
காதல் வயப்பட்டவர்களின் கற்பனை எல்லையற்றது. காதல் படுத்தும் பாடு பற்றி எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வதைப் பார்க்கலாம்..
பித்தம் தலைக்கேறும்
பேச்சுக்கள் மாறி வரும்
நித்தம் ஒரு கவிதை
நெஞ்சினிலே ஊறி வரும்!
நித்திரையி லாமலே
நேசக் கனவு வரும்
சித்திரமி லாமலே
சிரிப்பு எதிரில் வரும்!
கைத்திறன்னி லாமலே
கவின்மிகு கலைகள் வரும்
வைத்தியி லாமலே
வந்தநோய் தீர்ந்துவிடும்!
திருவள்ளுவரும் காமத்துப்பாலில் கற்பனைகளை சேர்த்து, காதலன், காதலி, தோழி ஆகியோர் பேசுவதுபோல அமைத்து, காதலைப் பேசுகிறார்.
காதலியின் கண்கள் குவளை மலர்களைவிட அழகாம்; இந்தக் குவளை மலர்கள், தன் காதலியின் கண்களை ஒருமுறை பார்த்தால் போதும், உடனே தோற்று நாணத்தில் தலை கவிழ்ந்துவிடுமாம்!
“காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கணொவ்வேம் என்று.”. (குறள் 1116).
வானின் நிலாவிற்கும், தன் காதலியின் முகத்திற்கும் வேற்றுமையறியாமல், வானத்தில் அங்குமிங்கும் அலைகின்றனவாம் நட்சத்திரங்கள்! எப்படி. கற்பனை?
“மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்.”. (குறள் 1117).
குயில் பாட்டில் பாரதி காட்டும் காதல் காலத்தால் அழியாதது!
“காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்….”
மிகச் சாதாரணமாக அழகோ, இன்பமோ, பயனோ இல்லாதவைகள் கூட காதலர்களுக்கு அழகாகவும், அணுக்கமாகவும் தெரியும் என்பதைப் பாரதி,
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நிந்தன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா”
என்ற வரிகளில் உணர்வுபூர்வமாகச் சொல்கிறார்.
மேலும் சொல்கிறார் பாரதி,
“ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்”
“காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத் தீரே !
அஃதன்றோ இவ்வுலகத் தலைலை யின்பம்!”
“காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்.”
பாரதி பாடிய காதல் பாடல்களில் கண்ணனைக் காதலியாகவோ (கண்ணம்மா), காதலனாகவோ பாவித்துப் பாடியவையே அதிகம். “தெய்வீகக் காதல் கனிவில் பாரதியின் பாடல்கள் ஆண்டாள், பெரியாழ்வார் பாசுரங்கள் அளவு உச்சியைத் தொடவில்லை என்றாலும், பாரதியின் பாடல் சிறப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது” என்கிறார் வ.வெ.சு. அய்யர்.
காற்று வெளியிடைக் கண்ணம்மா, வீணையடி நீ எனக்கு, தீர்த்தக் கரையினிலே, உன்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா போன்ற பாரதியின் பாடல்கள் திரைப்படங்களில் காதல் காட்சிகளாய் ஒளிர்ந்தவை!
“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்கிறார் பாரதிதாசன்!
பக்தி என்பது காதலின் ஓர் உன்னத வெளிப்பாடாகும். அன்பினால் இறைவனை அடையத் துடிக்கும் ஆன்மா தன்னைப் பெண்ணாகவும் இறைவனைத் தலைவனாகவும் கொண்டு அன்பு செலுத்தும் நிலை நாயக – நாயகி பாவம் எனப்படும். நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாயக-நாயகி பாவத்தில் பல பாடல்களைப் பாடியுள்ளார்கள்.
‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ என்கிறார் திருஞான சம்பந்தர்!
“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னே அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள்
தலைப்பட் டாள்நங்கை தலைவன் தாளே”
என்பது நாவுக்கரசர் தேவாரம். நாயகியின் தாய் சொல்வதுபோல் அமைந்த பாடல் – மகளின் சிவபக்தியைக் காதலாகக் காட்டும் தேவாரப் பாடல்.
ஆண்டாளின் பக்தி, கண்ணன் மீதான காதலாய் வெளிப்படுவது திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி!
“கற்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?
திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பு, ஒசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்ரேன் சொல், ஆழிவெண்சங்கே!”
கண்ணனின் பவளம் போன்ற சிவந்த உதடுகள், கற்பூரம் போல மணக்குமோ? தாமரை மலர் போல மணம் வீசுமோ? தித்திப்புடன் இருக்குமோ சொல்? வெண்சங்கே என்பதில் உள்ள கவிதை நயமும், பக்தியும் ஆண்டாளின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன!
கம்ப ராமாயணத்தில் உள்ளதை விட வேறு சிறந்த காதல் ஒன்றும் உள்ளதா?
‘அண்ணனும் நோக்கினான் அண்ணலும் நோக்கினாள்’ என்ற ஒரு ஒரு வரியில் முதற் பார்வையிலேயே மலரும் காதலைச் சொல்லிவிடுகிறார் கம்பர்!
“பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாள்-கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார். (கம்பராமாயணம்)
பார்த்த அந்த ஒரு கணத்தில், இருவரின் இதயமும் இடம் மாறிவிடுகின்ற காதல் கம்பன் வர்ணிக்கும் காதல்! சீதை ராமனை எண்ணி உருகுவதும் ராமன் சீதையை எண்ணி மருகுவதும் கம்பர் பாடல்களில் மிகச் சிறப்பாக வெளிப்படும்!
வனம் போகிறேன் என்ற இராமனிடம், ‘நின் பிரிவினும் சுடுமோ அப்பெருங்காடு?’ ‘எற்றுறந்தபின் இன்பமே கொலாம்?’ என்று கேட்கின்ற சீதையின் காதல் அளவிடற்கரியது.
திரைப்படப் பாடல்களில் காதல், இலக்கியச் சுவையுடன் சொல்லப் பட்டன – அது ஒரு பொற்காலம். பாபநாசம் சிவன் தொடங்கி, உடுமலையார், கவி.கா.மு.ஷெரிப், சுரதா, ஆலங்குடி சோமு, கு.மா.பாலசுப்பிரமணியம், மருதகாசி, பட்டுக்கோட்டையார், தஞ்சை ராமையதாஸ், மாயவநாதன் ….கண்ணதாசன், வாலி என நீளும் கவிஞர் பட்டியலில் கண்ணதாசனுக்குத் தனியொரு இடம் உண்டு!
குறுந்தொகைப் பாடல்:
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
என்ற பாடல் காட்டுகின்ற காட்சியைத் தன் பாடல் வரிகளில் கண்ணதாசன் சொல்வதைப் பாருங்கள்!
‘நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ!”
அதே பாடலில் திருக்குறளையும் காட்டிவிடுகிறார்…
குறள் : யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும். (1094).
“உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே…”. கண்ணதாசன்.
காதல் கொண்ட பெண்ணின் மனதை இப்படிச் சொல்கிறார் கவிஞர்:
“கண் கொண்டது மயக்கம், இரு
கால் கொண்டது தயக்கம்
மனம் கொண்டது தயக்கம், இனி
வருமோ இல்லையோ உறக்கம்…
(வா என்றது உருவம், நீ
போ என்றது நாணம்…)
காதலால் தூக்கம் இன்றி விழித்திருக்கும் பெண் பாடுவதைக் கேளுங்கள்!
“ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை…”
..
..
இரவில் உலவும் திருடன்
அவன் என்றார்
திருடாது ஒரு நாளும்
காதல் இல்லையென்றேன்
எனையே அவன் பால் கொடுத்தேன்
என் இறைவன் திருடவில்லை. “. – கண்ணதாசன்.
“மழை மேகமே என் தீபமே என் காதல் தெய்வமே
மறு வாழ்விலும் உன்னோடு நான் ஒன்றாக வேண்டுமே
நான் என்பதும் நீ என்பதும் ஒரு ராகமல்லவா
நாமொன்று சேர்ந்து வாழும்போது வார்த்தை வேண்டுமா…” கண்ணதாசன்.
மேகத்தைத் தூது விடும் காதலன் (ஓடும் மேகங்களே), காதல் தோல்வி, விரக்தியில் இறைவனை நிந்திக்கும் காதலன் (கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்)… சொல்லிக்கொண்டே போகலாம்!
ஒரு பாடல் தூண்டிவிட்ட நினைவலைகள், ஒரு காதல் குறித்த கட்டுரையாக மலர்ந்து விட்டது! இன்றைய ஒரு புதுக் கவிதையுடன் முடிக்கலாம் என்று தோன்றுகின்றது:
“அழகானவர்களை
பிடிக்கிறது என்பதை விட
பிடித்தவர்கள் தான்
அழகாய் தெரிகிறார்கள்
என்பதே உண்மை…”
