an elderly lady having cancer in Indiaஐம்பத்து ஆறு வயதான கீதாஞ்சலி சிறுதொழில் ஆரம்பிப்போருக்குச் செயல்திட்டங்களைத் தீட்டி ஆலோசிக்கும் நிபுணர். நல்ல சம்பாத்தியம். வருமானத்தைப் பெரிதாக நினைக்கவில்லை. தானாகச் செயல்படக் கூடியவள்.

கீதாஞ்சலி தன் கணவர் கிருஷ்ணா, மகன் ஆகாஷ் தன்னைப் பார்க்க வராததை வருத்தத்துடன் பகிர்ந்தார்.  இருமாதத்திற்குக் காத்திருந்தார். பின்னர் வெளிப்படுத்தினாள். தம்பி, அக்காக்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

கீதாஞ்சலியின் புற்றுநோய் வீரியம் அடைந்திருந்தது. மருத்துவர் அவளுடைய இறுதிக் கட்டம் எனக் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டிருந்தார். தன் தேவைகளைப் பார்த்துக்கொள்ள அவளுக்கு இயலவில்லை. வலியைத் தாங்க முடியாமல் அழுவதைக் கிருஷ்ணா, ஆகாஷ் இருவரால் தாங்க முடியவில்லை. உதவி செய்து அலுத்துப்போய், அருவருப்பை மருத்துவரிடம் பகிர, அவர் புரிந்து கொண்டார். மரணவலி தணிப்புச் சிகிச்சையை (palliative care) பற்றி விவரித்தார்.

கீதாஞ்சலி போன்றவர்களுக்கு அவர்கள் இருக்கும் நிலையத்திற்குச் சென்று சிலமணி நேரம் பார்த்துக் கொள்வதான ப்ராஜெக்ட்டை நான் நடத்திக் கொண்டிருந்தேன். வாரத்தில் ஓரிரு நாட்கள் நான் அங்குத் தொண்டு செய்துவந்தேன்.  கீதாஞ்சலியின் வீட்டிற்குப் பல முறை சென்றிருந்தேன். எரிச்சல் காண்பிப்பது மட்டும் இல்லாமல் கிருஷ்ணா, ஆகாஷ் உதவியும் செய்வதில்லை. கீதாஞ்சலி இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அவளை எங்கள் நிலையத்தில் சேர்க்கப் பரிந்துரைத்தேன். சேர்க்கப்பட்டாயிற்று.

கிருஷ்ணா வங்கியில் பணத்தைக் கட்டிவிட்டு அதிலிருந்து கீதாஞ்சலியின் செலவுகளுக்கான ஏற்பாடுகள் செய்தார். இத்துடன் தன் கடமை முடிந்தது என்றார் கிருஷ்ணா. அவரும் மகன் ஆகாஷும் திரும்பி வரவில்லை. இதனால்தான் கீதாஞ்சலி இரண்டு மாதங்களாகக் கிருஷ்ணா, ஆகாஷ் தன்னைப் பார்க்க வராததை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டாள்.

பொதுவாக, இவ்வாறு பல வருடங்களுக்கு நோயாளி ஒருவரைப் பார்த்துக் கொள்வதாக நேரலாம். அவர்கள் தேவைகள், நிலைமையை மட்டுமே மையமாக இருப்பதால், தன் தேவைகளை இரண்டாம் பட்சமாக வைக்க நேரிடும். இதனால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட, நாளடைவில் பார்த்துக் கொள்வோர் சோர்வடையக் கூடும் (Burnout Stress). தங்களுக்கு மீண்டும் மீண்டும் புத்துணர்வு தருவதற்கு ஏதோவொரு வழி அமைத்துக்  கொள்வோருக்கு இப்படி நேராது. இங்குக் கணவர், மகன் அவ்வாறு செய்யவில்லை.

தன்னுடைய நிலையை ஒரளவு அறிந்திருந்தாள் கீதாஞ்சலி. ஆயுள் முடிவு பற்றி மருத்துவர் அவளிடம் பேசியிருந்தார்.

ஒவ்வொரு நிர்வாகத்தின் அணுகுமுறைகள் மாறுபடலாம். எங்களிடம், பிரதான மருத்துவருடன் ஒருங்கிணைந்து செயல்படும் மற்ற மருத்துவர், செவிலியர், சோஷியல் வர்கர், பாதிரியார், இயன் மருத்துவர் (Physiotherapist), தொழில் சிகிச்சையாளர் (Occupational Therapist) எல்லோரும் கலந்து உரையாடிய பின்னரே நோயாளியிடம் பகிர்ந்து கொள்வோம். ஒவ்வொருவரின் பங்கேற்பு விதவிதமாக இருந்தாலும் ஒருங்கிணைந்து செயல் படவேண்டும் என்பதற்காக இப்படி.

என்னுடைய அனுபவத்தை மனதில் கொண்டு, கீதாஞ்சலி என் க்ளையன்ட் ஆனார். அவளின் நிலைமையை முழுதும் அறிய, கூடவே கிருஷ்ணா, ஆகாஷ் மற்றும் சகோதர சகோதரிகளைப் பற்றியும் புரிந்து கொள்ளப் பல செஷன்கள் ஆயின. கீதாஞ்சலியின் ஆயுள் முடிவடைகிறது என்பதால் உறவுக்காரர்கள் நண்பர்கள் பலர் வந்து போனார்கள்.

கூடப் பிறந்தவர்கள் வரும்போதெல்லாம் வாதம் விவாதங்கள். பேசிக் கொள்ளும் பொருள் அறைக்கு வெளியே கேட்கும்.

இதன் பிரதிபலிப்பு அடுத்தடுத்த நாட்களுக்குக் கீதாஞ்சலி கோபத்தை எங்கள் மீது வெளிப்படுத்தினார். இதை ஸெஷனில் எடுத்துக் கொண்டேன். தன் இயலாமையை மருந்துகளாலோ, வேறுவழியிலோ இங்குச் சரி செய்யவில்லை என்ற ஆதங்கம் வெளியானது.

இதன் அடிப்படை உண்மைகளை அறிய, உடலில் நேர்ந்த இன்னல்களை, மற்றும்  இவள் உடலில் அவற்றின் ஆக்கிரமிப்பைப் பரிசோதனைத் தாள்களைக் காட்டி விவரித்தேன். நலனின் நிதர்சனத்தை அளித்ததால் மெதுவாகக் கோபம் விடப்பட்டது.

மரண தறுவாயில், இதுவரை பகிராத பல பாரங்கள் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தால், தவிப்பு தரும்.  கீதாஞ்சலி போன்றவர்களுக்கு வாழ்வின் எல்லையை அடைவது கடினமாகும். கீதாஞ்சலியின் பாரங்கள் துயரத்தைத் தர, லேசாக மனதைத் திறந்தாள். தன் கூடப்பிறந்தவர்களின் சலிப்பைப் பற்றிப் பேசப்பேச, மனதில் பாரம் இறங்குவதாகக் கூறினார். சம்பவங்களைப் பகிரச் சொன்னேன். இவள்தான் மூத்த பெண், மற்றவர்களின் வளர்ப்பில் பங்கு இருந்தது.

அவர்கள் வரும்போதெல்லாம் தங்களுக்குப் பணம் எத்தனை ஒதுக்கீடு செய்கிறார் என்று கேட்பது அழுத்தம் தருவதாகக் கூறினார். தான் சம்பாதித்த சொத்து ஏராளமாக இருப்பதால், கடந்த காலத்தில் அவள் பல உதவி செய்திருந்தாலும், இனிமேல் உயிர் போன பின்பும் பணத்தைத் தர வேண்டும் என நிபந்தனை இட்டார்கள் என்றாள். தனக்காக இல்லாமல் தன் பணத்திற்காக வருவது வருத்தம் என்றாள்.

இதைத் தொடர்ந்து பகிர, இந்த வருத்தத்தின் மற்றொரு முகத்தைக் கண்டாள். அவர்களுக்குப் பிரதானம், பணம், அதைக் குவித்து வைப்பது மட்டுமே. இந்த முகச்சாயலுக்கு தானும் உடந்தையாக இருந்தோம் எனத் தெரிந்தது. வாழ்நாள் முழுவதும் வந்து கேட்கும்போது ஏன் எதற்காக எனக் கேள்வி எழுப்பாமல் தந்தாள். பழக்கமானது. தராதது அவர்களுக்கு வருத்தம். கீதாஞ்சலியும் தன் உறவுகளைப் பணத்தால் கட்டி வைத்தோம் என்ற தெளிவு பெற்றாள்.‌

இவை ஒரு பக்கம் இருக்க, தன் நிலையை யாரிடமும் சொல்லாமல் இப்போது பகிர்ந்து கொள்வது வீட்டு விஷயத்தை வெளியுலகிற்குக் காட்டுவதைப் போல என்றாள். கீதாஞ்சலியை இதைப் பற்றி ஆராயச் செய்தேன். நாட்கள் ஓடியது. தான் பகிர்ந்து கொள்வது வம்பு பேசுவதற்கு இல்லை என்றும், யாரையும் குறைகூறித் தாழ்த்துவதற்காகவும் இல்லை எனப் புரிந்தது. தன் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதால் கீதாஞ்சலி பெற்ற தெளிவை வரைபடமாகக் காட்டினேன்.

சுதாரித்துக் கொண்டாள். மேற்கொண்டு நாட்கள் குறைய, மீதி நாட்களில் கீதாஞ்சலிக்குத் தெம்பு தருவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை பாடல், பிரார்த்தனை, வேதம். மூன்றையும் ஸெஷனில் உபயோகித்து வந்தேன்.

மனம் லேசானதும் கிருஷ்ணா ஆகாஷ் வராததைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள்.‌  தனக்குப் புற்றுநோய் வந்ததிலிருந்து கிருஷ்ணா வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேட ஆரம்பித்தாராம்.‌ தாம்பத்திய உறவில் கடுகளவே புரிதல்,  நெருக்கம் இல்லை.‌

காரணம் கீதாஞ்சலியின் அம்மா. தன் தம்பியை இவளுக்கு மணமுடிக்க ஆசைப் பட்டாள். மாமா மறுத்து விட்டதும் இதைப் பற்றி எல்லோரிடமும் கொச்சையாகப் பேசியதால் வரன் அமையவில்லை. கிருஷ்ணாவுடன் திருமணம் நடந்த பிறகு அம்மா கிருஷ்ணாவைத் தன் தம்பியுடன் ஒப்பிட்டு உதாசீனப் படுத்தியதில் கீதாஞ்சலி- கிருஷ்ணா உறவில் இடைவெளி தோன்றியது.‌

என் சார்பில் கிருஷ்ணாவைச் சந்தித்தேன். மனைவியின் நிலை அறிந்ததும் விடுதலை பெற்றது போல் உணர்வதால் பார்க்கத் தோன்றவில்லை என்றார். ஒரு சந்தர்ப்பத்தில் மாமியார் மிகவும் உதாசீனம் செய்ததைத் தாள முடியாமல் மது அருந்தியபோது, தன்நிலை துறந்து கீதாஞ்சலியை வற்புறுத்தியதில் ஆகாஷின் பிரசவம் நேர்ந்தது.

ஒரே வீட்டில் வசித்தார்கள், கணவன்-மனைவியாக அல்ல. தான் ஆறுதலாக இருக்க இயலாது என்றார். கடைசி வரை வரவில்லை.

ஆகாஷ் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டிலிருந்தான். பெற்றோரின் விரிசலை விவரித்து, மன அழுத்தம் உணருவதாகக் கூறினான். வீட்டில் எப்போதும் ஒரு மரண அமைதி நிலை, நிம்மதியை இழந்ததாகக் கூறினான்.

அம்மாவை இங்குச் சேர்த்த பிறகு குற்ற உணர்வு வாட்டுகிறது என்றான். அம்மாவாக அவள் தந்த ஆதரவைப் பகிரச் செய்தேன். இருவரும் இரு துருவங்களாக இருந்ததில் பாசம் இல்லை.

கீதாஞ்சலிக்கோ தான் கர்பமான விதத்தால் ஆகாஷுடன் மேலோட்டமாக உறவு நிலவியது. அவனுடைய தவிப்பைப் புரிந்தாலும் எதுவும் செய்யத் தோன்றவில்லை என்றாள். கிருஷ்ணா இவனைப் பார்க்கும் போதெல்லாம் தன் தவறு நடமாடிக் கொண்டிருக்கிறது என எண்ணி விலகி இருந்தான். தந்தைப் பாசமும் பூஜ்யம். ஆகமொத்தம் ஆகாஷ் நிராகரிக்கப்பட்ட குழந்தை.

விறுவிறுப்பாக ஸெஷன்களை ஆரம்பித்தேன். பெற்றோர் இருவரும் இவனை நிராகரிக்க, இவனும் அதையே பின்பற்றியதை ஆகாஷ் பகிர்ந்த நிகழ்வுகள் மூலமாகப் புரியச் செய்தேன்.

இது சுயவிழிப்புணர்வு ஏற்படுத்தியது. ஆகாஷ் தன் நிலையை மாற்றத் தயாராக வழிகளை அமைப்பது ஸெஷன்களின் நோக்கமானது. மாற்றத்தின் ஒரு கட்டமாக தன் அம்மாவைச் சந்திக்க முடிவெடுத்தான்.

ஆகாஷின் முழு நலனைக் கருதி, அவன் திறன்களை வரிசைப்படுத்தி, ஓட்டப் பந்தய சாகசங்களை மேம்படுத்தத் திட்டமிட்டோம். NCCயில் பங்கேற்க, அந்த மாஸ்டர் அவனுக்கு ஒரு உதாரணப் புருஷனாக இருந்தார்.

மகன் தன் வயதிற்குப் பக்குவத்தைக் காட்டியதில் கீதாஞ்சலி தன் தாய்மையை இழந்த நிலையை உணர்ந்தாள். கணவர் தவறு செய்ததை மகன்மீது காட்டியதின் வீரியத்தை கண்டுகொண்டாள்.

ஆகாஷ் உதாசீனப் படுத்தல், நிராகரிப்பு என்றதை விட்டதும் தன்னைப் பற்றி பெருமையாக இருப்பதாகக் கூறினான். பலருக்கு உதவும் கரங்களாக இருந்தான்.

தாய் மகன் சந்திப்பில் அமைதி, இதம் காண, சில புத்தகங்களைப் படிக்கப் பரிந்துரைத்தேன். ஆகாஷ் ஆங்கிலம் மட்டும் படிப்பதால் அவனுக்குத் திச் நாத் ஹன், ரிச்சர்ட் பாக், மிட்ச் ஆல்போம், ஜிட்டு, எனப் பலரை அறிமுகப்படுத்தினேன். தமிழ்க் கவிதைகள், சிறுகதை, கட்டுரைகளைக் கீதாஞ்சலி படித்தாள். மூன்று வாரங்களுக்குக் கடினமாக முயன்று மெதுவாக அவளால் செய்ய முடிந்தது.

விளைவாகக் கீதாஞ்சலிக்கு நம்பிக்கை பிறந்தது. அவள் மதத்தின் பாதிரியாரிடம் பல மணி நேரங்கள் பேசி, பகிர, கடவுளை நம்ப ஆரம்பித்தாள். மரணம் நிதர்சனம் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டாள்.

கீதாஞ்சலியின் உடல் நிலை பின்னடைவு கண்டது. இந்த நேரத்தில் ஆகாஷ் வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு வந்தது. அவனை ஊக்குவித்துப் படிக்கப் போகச் சொன்னாள். ஒப்புக் கொண்டான். கீதாஞ்சலியின் கடைசிக் காரியங்களை முடித்த பின்னரே வெளிநாடு சென்றான் ஆகாஷ்.