காமத்துப்பாலில் வள்ளுவர் காட்டும் காதல்
இன்று உலகமெங்கும் ‘காதலர் நாள்’ கொண்டாடும் வழக்கம் காணப்படுகின்றது. ஆனால், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, திருக்குறள் என்னும் ஒப்பற்ற நூலைப் படைத்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், அரு நெறியாம் அறம் கூறும் நூலிலும், காதல் சிறப்புரைக்கும் காமத்துப்பாலை இலக்கிய நயத்துடன் எழுதி, காதலைக் கொண்டாடி இருக்கிறார்!
காமத்துப்பாலில், காமம் என்ற சொல்லின் மூலம், மனிதரின் அக உணர்வுகளில் மிக நுட்பமான காதல் உணர்வின் இருவேறு நிலைகளையும் அவர் குறிப்பிடுகிறார் என்பதைத் திருக்குறளில் உள்ள அகச்சான்றுகள் மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.
மலரினும் மெல்லிது காமம் என்று கூறும் வள்ளுவரே, காமக் கடும்புனல், காமக் கணிச்சி(கோடரி) என்றெல்லாம் பல குறள்களில் குறிப்பிடவும் செய்கிறார்.
ஏனெனில், இளம் பருவத்தினரிடையே ஏற்படும் உணர்வு, மனதுக்கு இனிய காதலாக, மலரினும் மெல்லியதாகத் தோன்றினாலும், அரும்பாகி, போதாகி, மலர்ந்து, மணம் வீசி, உச்ச நிலை அடையும் போது, அது வெள்ளத்தின் வேகத்தையும், கோடரியின் கூர்மையையும் பெற்று விடுகிறது அல்லவா!
அத்தகைய காதல் எனும் பேருணர்வை மிகவும் நுணுகி ஆராய்ந்து, அதன் பல்வேறு நிலைகளான பிரிவு, ஏக்கம், ஊடல், கூடல் போன்றவற்றை விளக்க, காமத்துப்பாலைக் களவியல், கற்பியல் என்று இரு பிரிவுகளாக, நுண்மான் நுழைபுலத்துடன் பிரித்து எழுதியுள்ளார் பொய்யாமொழிப் புலவர்.
அதனால்தான், தாக்கணங்கு குறித்துத் தகையணங்கு உறுத்தலில் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து, நாணுத்துறவு உரைத்து, பிரிவாற்றாமை பேசி, குறிப்பறிவுறுத்தி, புலவி நுணுக்கம் புலப்படுத்தி, ஊடல் சிறப்பையும், கூடல் சிறப்பையும் கூறி முடிக்கிறார் குறளாசான்!
பொதுவாக, இருபத்தைந்து அதிகாரங்களில் தனித்தனியாகக் காதலின் பல்வேறு நிலைகளை வள்ளுவர் விளக்குவது போலத் தோன்றினாலும், ஆழ்ந்து நோக்கும் போது மட்டுமே, அதில் ஓர் தொடர்ச்சி இருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆம்! அதிகாரங்களின் வரிசை அழகான ஒரு காதல் கதையாகவே நம் கண்முன் விரிகிறது! நாயகனும், நாயகியும் ஒருவரை ஒருவர் சந்திப்பதில் இருந்து தொடங்குகிறது இந்த இனிய காதல் கதை.
இளைஞன் ஒருவன் எதிரே வரும் ஏந்திழையாளைக் காணும்போது, அவளும் இவனை நோக்குகிறாள்; அந்தக் காந்தப் பார்வை, கட்டழகுத் தோற்றத்தாலேயே தாக்கும் ஆற்றலுள்ள தேவதை ஒருத்தி, மேலும் படை கொண்டு வந்து தாக்குவதைப் போல இருக்கிறது.
அவள் தேவதையா, அழகு மயிலா, இல்லை கனத்த காதணிகளணிந்த கன்னிப் பெண்தானா என்று குழம்புகின்றான்.
பின் அவளது கூரிய விழிகளைக் கண்டு, கூற்றுவனின் தூதாக வந்த குமரியே இவள் என்று தெளிவு பெறுகிறான்!
அவளது மதர்த்த மார்புகளை மறைக்க முயலும் மேலாடை, மதம் கொண்ட களிற்றின் மத்தகத்தின் மேலிடப்பட்ட முகப்படாம் போலத் தோன்றுகிறது அவனுக்கு.
பிறகென்ன? வலிய பகைவர்களையும் வெல்லும் அவனது வல்லமை, அவளது மான் விழிகளின் முன்பு மண்டியிடுகின்றது!
உடனே, இரக்கம் மீதூற, இளங்கன்னியும் அவன் மீது காதல் கொண்டு கனிவுடன் நோக்குகிறாள். முதலில், நோய் தந்த பார்வையே இப்போது அந்நோய்க்கு அருமருந்தாக அமைகிறது!
அவள் கடைக்கண்ணால் அவனைக் காணும் அழகு அவள் காதல் உணர்வை கரைந்துரைக்கிறது; பின் நாணம் மேலிட, அவன் நோக்கும் போது நிலம் நோக்கி, அவன் நோக்காது இருக்கையில் தான் நோக்கிப் புன்னகை பூக்கிறாள்.
கண்ணோடு கண் கலந்த பின்பு, வாய்ச்சொற்கள் அவர்களிடையே வாய்ப்பிழந்து போய்விடுகின்றன!
பிறர் முன்பு ஏதும் பேசாமல் பொதுப்பார்வை பார்க்கும் அவர்களது நடிப்பில், ஊரார் ஏமாந்து போவதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
ஆனால் தனிமையில், காதலியைப் பல விதமாகப் பாராட்டு மழையால் தாலாட்டுகிறான் காதலன். அனிச்ச மலரினும் மென்மையான அவளது பட்டுப் பாதங்களுக்கு அனிச்ச இதழும், அன்னத்தின் இறகும் கூட, நெருஞ்சி முள் போல உறுத்தக் கூடியன என்கிறான்.
அவளது மணம் கமழும் உடல் தளிர் போலவும், பற்கள் முத்துப் போலவும், கண்கள் வேல் போலவும், தோள்கள் மூங்கில் போலவும், இடை ஒடிந்து விடுவது போலவும் விளங்குகின்றன என்று வியந்து கூறுகிறான். குவளை மலர்கள் உன் கண்ணழகு கண்டு நாணிக் குனிந்து நிலம் நோக்கும் என்று கூறுகிறான்.
மேலும், வானில் சுற்றும் விண்மீன்கள் உன் முகம் கண்டு, களங்கம் இல்லாத நிலவொன்று மண்ணில் தெரிகிறதே, நாம் இருக்க வேண்டிய இடம் மண்ணுலகா அல்லது விண்ணுலகா என்று மயங்கித் திரிகின்றன என்று மகிழ்ந்துரைக்கின்றான்!
பூவுலகில், புகழுரைக்கு மயங்காத பூவையரும் உண்டோ! மயக்க நிலையில், இதழ் முத்தம் பரிமாறி, ஈருயிர் ஓருயிர் ஆனதாக எண்ணுகிறார்கள் இளங்காதலர்கள். பாலொடு கலந்த தேன் இவள் பனியிதழ் அமுதெனப் பாராட்டுகிறான் தலைவன்.
காதலுக்குத்தான் கண்ணில்லை என்பார்கள்; ஆனால், காதலர்களுக்குக் கண்கள் இருக்கின்றனவே! காதலன், தன் காதல் கண்மணி எப்போதும் கண்ணுக்குள்ளேயே இருப்பதால், தன் கண்ணின் கருமணியை வேறிடம் போகக் கூறுகிறான்.
காதலி, தன் கண்களில் எப்போதும் குடியிருக்கும் காதலன், இருவிழிகள் இமைத்தாலும் இடர் உறா வண்ணம் நுண்மை உடையவன் என்று பெருமிதமாகக் கூறி, மை எழுதினால் அவன் மறையக் கூடும் என்றஞ்சி, மை தீட்ட மறுக்கிறாள்; நெஞ்சிலும் அவன் நிறைந்திருப்பதால், சூடான உணவுண்டால் அவனுக்குச் சுடும் என்றஞ்சி ஆறிய உணவையே அள்ளி உண்கிறாள்.
காதல் நோய் முற்றி, தனிமை நோய் தாளாது, மடலேறி விடலாமா என மயங்கும் காதலன், காதல் எனும் காட்டாற்று வெள்ளம் தன்னிடம் இருந்த நாணம், நல்லாண்மை ஆகிய தோணிகளை எல்லாம் அடித்துக் கொண்டு போகிறதே என்று அரற்றுகிறான்.
கடல் போன்ற காம உணர்வையும் தாங்கிக் கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்மையை விடப் பெருந்தக்கது யாதுளது என்று எண்ணி வியக்கிறான்.
காதலர்களுக்கு மட்டுமா கண்கள் உள்ளன? ஊராருக்கும் அவை உள்ளனவே; அவற்றோடு ஊரையே அடித்து உலையில் போடும் நரம்பில்லா நாக்கும் இருக்கிறதே! ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்கும் அந்த நாக்கு சும்மா இருக்குமா? இந்தக் காதலர்களைப் பற்றியும் ஏதேதோ பேசிப் பரப்புகிறது.
ஆனால், ஊரார் பேசும் அலரை எருவாகக் கொண்டு, அதைக் கேட்டுத் தாய் கூறும் கடுஞ்சொற்களை நீராகக் கொண்டு, அவர்களின் காதற் பயிர் அழகாக வளர்வதை அவர்கள் அறியவில்லை, பாவம்!
மேலும், ஒரு நாள் காதலர்கள் சந்தித்துக் கொண்டாலும், திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல, அது பல நாட்கள் ஊரிலே பேசிப் பரப்பப்படுகிறது.
அதனால் காதலி, தாம் வேண்டும் அலரை ஊரார் பேசுகிறார்கள்; இனித் தான் விரும்பும் உடன்போக்கைக் காதலன் அளிப்பான் என்று ஆர்வம் கொள்கிறாள்.
ஆனால், பொருள் சேர்க்க எண்ணிய காதலன், தான் மட்டும் தனியே வெளியூர் செல்ல விரும்புகிறான். அதைத் தலைவியிடம் அவன் கூறுகையில், அவள் முதலில் சினம் கொள்கிறாள்; “பிரியேன் என்று சொல்வதானால் என்னிடம் கூறு; போவேன் என்று கூறுவதானால், நீ திரும்பி வரும் வரை யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் கூறு” என்ற சீறுகிறாள்.
ஆயினும் தலைவன் அவளிடம் கெஞ்சிப் பேசி, ஒப்புதல் பெற்றுப் போய் விடுகிறான். இங்கு பிரிவாற்றாமையில் வாடுகிறாள் பெண் பாவை. வாடிய அவளது வளைக்கரம் மெலிந்து, வளையல்கள் கழன்று விழுவதைக் கண்டு, பிரிந்து சென்ற தலைவனை இந்த ஊர் தூற்றுமே என அஞ்சுகிறாள் அந்த அஞ்சுகம்.
மேலும், நெருங்கினால் மட்டுமே நெருப்புச் சுடும்; இந்தக் காதல் நோய் விலகினாலும் சுடுகிறதே என வேதனையுறுகிறாள்.
பிரிவால் வாடும் உயிர் காவடித் தண்டாக, ஒருபுறம் காமமும், மறுபுறம் நாணமும் கூடிக் குறைவதால், தான் வாடி வதங்குகிறோமே என்று அந்த வஞ்சி வருந்துகின்றாள். ‘ஒன்று காமத்தை விட்டு விடு, இல்லையேல் நாணத்தை விட்டு விடு; இரண்டையும் தாங்க என்னால் இயலவில்லை’ என்று தன் நெஞ்சிடமே இறைஞ்சுகிறாள் அந்த இளநங்கை.
ஆயினும், நாணம் எனும் தாள் பூட்டிய, நிறை எனும் மனக் கதவினைக் காமம் எனும் கோடரி அடிக்கடிப் பிளந்து உட்புகுந்து அவளை அலைக்கழிக்கிறது.
காதல் இன்பம் கடல் போலப் பெரிதென மகிழ்ந்தது போய், பிரிவுத் துன்பம் கடலினும் பெரிதாகப் பிடித்தாட்டுகிறதே என்று பீழை கொள்கிறாள் பேதை.
ஊர் உறங்கும் நள்ளிரவிலும், காமக் கடலில் நீந்திக் கரை காண இயலாமல் கடுந்துயரில் உழல்கிறாள் அந்தக் கன்னி.
அன்று தன் காதலரைக் காட்டி, காதல் மது ஊட்டிய கண்களே, இன்று பிரிந்து சென்றவனைக் காண வேண்டுமென்று பேரழுகை அழுவது ஏனோ என்று ஏங்குகிறாள்.
இந்த ஏக்கத்தால் அவளது அழகும், நாணமும் அகன்று, மேனியில் பசலையும், மீதூறும் காதலும் கூடுகின்றன.
முன்பு காதலனுடன் பெற்ற இன்பத்தை நினைத்தவுடனே மகிழ்ச்சி தருவதால், கள்ளை விடக் காமம் இனியது என்று எண்ணுகிறாள் அந்த ஏந்திழை.
ஒருமுறை காதலிக்குத் தும்மல் வருவது போலத் தோன்றி அடங்கி விடுகிறது; அதனால் காதலர் நினைப்பவர் போலிருந்து, நினைக்காமல் விட்டாரோ என்று நெடுமூச்சு வாங்குகிறாள் அந்த நீள்விழியாள்.
ஒருநாள் உறக்கத்தில், காதலர் தூது அனுப்பியது போலக் கனவு காண்கிறாள் காதலி. காதல் நோய்க்கு மருந்து போல வந்த கனவுக்கு விருந்தாக யாது செய்வேன் என்ற வியப்படைகிறாள்.
மங்கும் மாலைப்பொழுதைப் பார்த்து, ‘என்னைப் போல் ஒளியிழந்து தோன்றுகிறாயே, உன் காதலனும் என் காதலனைப் போல இரக்கமற்றவன்தானா’ என்று மயங்குகிறாள் அந்த மாது.
ஆயர் ஊதும் இனிய குழலோசை கூட, தீயெனச் சுடும் மாலைப் பொழுதின் வருகையைக் கூறி, அந்த வஞ்சியின் உயிரைக் கொல்வது போல வாட்டுகின்றது.
காதலன் பிரிந்த நாட்களைக் கணக்கிட, சுவரில் தீட்டிய கோடுகளைத் தொட்டு எண்ணி எண்ணி அவளது விரல்களும் தேய்ந்து விட்டன; அவன் பிரிவை எண்ணி எண்ணி அழுததால் விழிகளும் தம் அழகை இழந்து விட்டன.
இவ்வாறு ஒருநாள் பொழுது ஏழு நாட்கள் போல மெல்லக் கழிய, திடுமென ஒரு நாள் திருநாள் ஆக, காதலன் பொருள் ஈட்டி வருகிறான்; அந்தச் செருக்குடன் அவளை மணம் பேசி முடிக்கிறான்.
உயிர் கலந்த காதலர் இருவரும் கணவன், மனைவியாக உடல் கலக்கும் இனிய வேளையும் உதயம் ஆகிறது.
தலைவனைத் தனிமையில் பார்க்கையில் அவனிடம் ஊடல் கொள்வேனா, தழுவி மகிழ்வேனா, கூடல் கொள்வேனா என்று தனக்குள் தவிக்கிறாள் தளிர் மேனியாள்.
பள்ளியறையில், பக்கத்தில் காதல் மனைவியை வைத்துக் கொண்டு, பயண விவரங்களைப் பகிர முயல்கிறான் அந்தப் பைத்தியக்காரன். தன் தவிப்பை வாய் விட்டுச் சொல்ல நாணம் விடாததால், அறை பறைக் கண்ணால் அவள் உள்ளக் குறிப்பை உணர்த்துகிறாள் தலைவனுக்கு; அவனும் குறிப்புணர்கிறான்.
அழகிய மணிமாலையில் மணிகள் கோர்த்த நூல் அவ்வப்போது லேசாகத் தெரிவது போல, அரும்புக்குள் மணம் அடங்கி இருப்பது போல, அவள் பார்வைக்குள்ளும், புன்னகைக்குள்ளும் பதுங்கி இருக்கும் ஆவலை அறிந்து கொள்கிறான் தலைவன். தானும் ஆவலுடன் அவளைத் தழுவ முனைகிறான்.
உடனே தலைவி ஊடல் கொண்டு, “பெண்கள் பலரும் தம் விழிகளால் தழுவி மகிழும் தன்மையால், உன் பரந்த மார்பு பரத்தமைப் பண்பினது.. அதனால் நான் அதைத் தழுவ மாட்டேன்” என்கிறாள்.
அந்நேரம் பார்த்துத்தானா அவனுக்குத் தும்மல் வர வேண்டும்? அவன் தும்மியதும், “நான் அருகில் இருக்கையில், யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்?” என்ற கேட்டு மேலும் சினம் காட்டினாள்.
அப்போது மீண்டும் ஒரு தும்மல் உணர்வு வந்து தொலைக்க, அச்சத்துடன் அதை அடக்குகிறான் தலைவன். அதையும் கவனித்து விட்ட தலைவி, “உம்மை வேறொருத்தி நினைப்பதை மறைப்பதற்காகத் தும்மலை அடக்குகிறீர்களோ?” என்று ஆர்ப்பரிக்கிறாள்.
உடனே பதறிப் போய், தலைவியின் தாள் பணிந்து, தாழ்மையாகப் பேசி அவளது ஊடலைத் தணிக்க முனைகிறான் தலைவன். அதற்கும், ‘பிற பெண்களிடமும் இப்படித்தான் ஊடலைத் தணிப்பது உம் வழக்கமோ?’ என்று பிணங்குகிறாள்.
‘ஏதடா வம்பாகப் போகுதே’ என்று ஏங்கிய தலைவன், எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து, அவள் மேனி அழகை விழிகளால் மேயத் தொடங்குகிறான், ‘இப்போது என்ன பேசுவாய்?’ என்று மனதுள் எண்ணியவாறு.
அவ்வளவு எளிதில் அடங்குபவளா தலைவி? ‘எவளோடு என் அழகை மனதுள் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?’ என்று ஏகடியம் பேசுகிறாள்.
உடனே தலைவன் சற்றுச் சலிப்புடன், “தலைவி, ஊடல் என்பது உணவுக்கு உப்புப் போல அளவுடன் இருக்க வேண்டும்; அளவுக்கும் மீறினால் உணவே கெட்டு விடும்” என்கிறான்.
அதற்குத் தலைவி, “முதிராத ஊடல் கருக்காய் போன்றது, முதிர்ந்த ஊடல் மிகவும் பழுத்த கனி போன்றது என்பார்களே” என்று முறுவலுடன் மொழிகிறாள்.
‘ஊடலில் தோற்றவரே கூடலில் வெல்வார்’ என்பதை அறிந்த தலைவன், ‘தானே ஊடலில் தோற்றதாக இருக்கட்டும்’ என்று கூறி, அவளைத் தழுவிக் கொள்கிறான்.
பிறகென்ன, காற்றும் நுழைய இடமின்றி அவர்கள் கட்டியணைத்துக் காமம் துய்க்கிறார்கள். கட்டழகு கண்டு, கனிமொழி கேட்டு, மலரிதழ் உண்டு, மாந்தளிர் மேனி மணம் முகர்ந்து, மெய்யோடு மெய் உற்று, அறிதோறும் அறியாமை புலப்படும் அடங்காத பேரின்பக் கடலில் அவர்கள் ஆழ்ந்து நீந்துகிறார்கள். ஊடுதல் காதலுக்கு இன்பம்; அந்த ஊடலுக்குக் கூடுதலே இன்பம் என்று கூடி மகிழ்கிறார்கள்.
இவ்வாறு இனிதே நிறைவுறுகிறது காமத்துப்பாலில் வள்ளுவர் காட்டும் காதல். மலருக்குள் இருக்கும் மதுவைத் தேடிப் பருகும் தேனீக்கள் போல, காமத்துப்பால் குறளுக்குள் இருக்கும் கதையின் சுவையை நாம் கூடி நுகர்ந்து மகிழ்வோம்!
![]()
