
வளையும் பெண்களும் காதலும்!
“வளையோசை கல கலவென” – இளையராஜாவின் இசையில் எஸ்பிபி யும், லதா மங்கேஷ்கரும் பாடிக்கொண்டிருந்தனர். இந்தக் கைவளைக்குத்தான் எத்தனை ஓசைகள்! பெண் குழந்தை பிறந்தது முதல், ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு ஓசை எழுப்பும் கைவளை! சங்க காலம் முதல் இன்று வரை வளையல்கள் சொல்லும் செய்திகள் ஏராளம்!
வளையல் – உலோகம், கண்ணாடி, சங்கு, சுட்டமண் இவற்றால் ஆன வளையம் போன்ற ஆபரணம். பொதுவாகப் பெண்கள் முன்கையில் அணியும் ஆபரணம் இது. ஐந்து வகை மங்கலப் பொருட்களில் வளையலும் ஒன்றாகக் கருதப் படுகிறது. அரக்கினாற் செய்யப்பட்ட வளையல்களுக்கு ‘முடுகு’ எனப் பெயர்.
சங்க காலத்தில் ஆண்கள் வீரவளையாக அணிந்தவை ‘தொடி’ என்றும், ‘குறுந் தொடி’ எனவும் குறிப்பிடப்படுகின்றன. பெண்கள் தம் தலைவனுக்குத் தேர்ந்தெடுக்கும் தொடி, “ஆய் தொடி’ எனப்படும்!
பெண்கள், சங்கு வளையல்களையும் (அரம்போழ் அவ்வளைப் பொலிந்த முன்கை), வெள்ளி வளையல்களையும் (மாசில் வெள்ளிச் சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கை), இறை வளை, இலங்கு வளை, நுண்கோல் அவிர் தொடி, திருந்திழை எனப் பல வளையல்களையும் அணிந்ததற்கான குறிப்புகள் அகத்தில் காணக் கிடைக்கின்றன.
சிவன் வளையல் வணிகராக மாறி தாருகாவனத்து பெண்களின் சாபத்தைப் போக்கினார் என்று திருவிளையாடல் புராணத்தில் “வளையல் விற்ற படலத்தில்’ வளையல்களை விற்கும் காட்சி இடம்பெறுகிறது.
வேளாண்மை பணியில் ஈடுபட்ட பெண்கள் வயலில் விளைந்த குவளை, ஆம்பல், வள்ளி ஆகிய பூச்செடிகளின் தண்டுகளை வளைத்து தமக்கு வளையல்களாகச் செய்து அணிவதாக புறநானூறு (பாடல் – 325) கூறுகிறது.
நெடுநல்வாடை ஆகியவற்றிலும் சங்கு வளையல்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியாகிய பாண்டிமாதேவி தனது கைகளில் தங்க வளையல்கள் அணியிருந்ததோடு வலம்புரி சங்கு வளையும் அணிந்திருந்தார் என்பதை “பொலற்கொடி தின்ற மயிர்வார் முன்கை – வலம்புரி வளையோடு கடிகை நூல் யாத்து’ (நெடுநல் – 141) என நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.
சங்கினை அறுத்து வளையல் செய்யப்பட்டது பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சங்குகள் சிறிய அரம் போன்ற கருவியால் அறுக்கப்பட்டு வளையல்களாக செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் சங்க புலவர்களில் ஒருவரான நக்கீரர் வரலாற்றில், “அங்கங் குலைய அரிவாளில் நெய்பூசி பங்கப்பட விரண்டு கால்பரப்பி-சங்கதனை கீர்கீர் என அறுக்கும் கீரன்” என்றும் ‘சங்கறுப்பது எங்குலம் சங்கரனாருக்கு ஏது குலம்’ என்ற சொற்போர் நடந்ததையும் நாம் அறிவோம்!
காவிரிபூம்பட்டினத்தில் ஒரு வீதியில் சங்க வளையல்களை அறுக்கும் தொழில் நடைபெற்றதை சிலம்பு, மணிமேகலை ஆகிய இலக்கியங்களில் அறிய முடிகிறது.
ஆடிப்பூரம் நாளில்தான் ஆண்டாள் நாச்சியாரும் அவதரித்தார். ஆண்டாள் தனது 27 வது பாசுரத்தில், கோவிந்தனைப் பாடிப் பறையைப் பெற்றபின்னர் கோபியர் பெறும் பரிசுகளுடன், ‘சூடகமே – தோள்வளையே தோடே செவிப்பூவே, பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்’… என்று மகிழ்ச்சியுடன் கூறுவதைக் காணலாம். (சூடகம் – வளை)
ரத்தின வளையலில் மாணிக்கம், முத்து, வைரம், பவழம் போன்றவையும் பதிந்து இருந்ததாக தஞ்சை பெரிய கோயிலில் காணப்படும் ராஜராஜ சோழன் கல்வெட்டு கூறுகிறது.
கி. பி. 9-10 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த அராபிய யாத்திரிகர்கள் மூலம் கண்ணாடி வளையல்கள் தென் இந்தியாவிற்குள் புகுந்தன. பல வண்ணங்களால் செய்யப்பட்டிருந்த கண்ணாடி வளையல்களின் அழகைக் கண்டு நம்நாட்டு மகளிரும் இவற்றை விரும்பி அணிய ஆரம்பித்தனர். அரக்கு, சிவப்பு, பச்சை, நிலம் எனப் பல வண்ணங்களில் கண்ணாடி வளையல்கள் அணியப்ப்பட்டன.
தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருந்த ஆபரனம் வளையல்! பெண்கள் அனை வரும் தம் கைகளில் வளையல்கள் அணிகின்றனர். தற்செயலாகத் தம் கைவளையல்கள் உடைவதைக்கூட அமங்கலமாகக் கருதுகின்றனர். பெண்கள் பிள்ளை பேற்றின்போது, ‘வளைகாப்பு’ நிகழ்ச்சி நடத்தி முன் கை முதல் முழங்கை வரை வளையல் அணிவித்து மகிழ்கின்றனர். கிராமப் புறங்களில் ஆடிப் பெருக்கு, பெண்கள் தாங்கள் சுமங்கலிகளாக இருக்க வேண்டி வழிபடும் வரலட்சுமி விரதம், கேதாரிகௌரி விரதம் போன்ற நோன்புகளின்போதும் வளையல்களை வைத்து வழிபடுகின்றனர்.
அந்தக் காலத்தில் வீட்டிற்கே வந்து, பென்களுக்கு வளையல்கள் அடுக்கிவிடும் ‘வளையல் செட்டிகள்’ உண்டு. பெரிய கண்ணாடி மூடி போட்ட மரப் பெட்டிகளில் பல வண்ணங்களில், பல கைகள் அளவிற்கு அட்டையில் செய்யப்பட்ட உருளைகளில் வளையல்களைக் கொண்டுவந்து வியாபாரம் செய்வார்கள்.
படகோட்டி படத்தில் எம் ஜி ஆர் இப்படி ஒரு வேடமிட்டு, ‘கல்யாணப் பொண்ணு’ பாடலைப் பாடி ஆடுவார். வாலியின் வளையல் பாட்டு பலவகை வளையல்களயும் (வங்கி வளையல், தங்க வளையல், சங்கு வளையல், முத்து வளையல்), அதன் பயன்களையும் வேடிக்கையாக எழுதியிருப்பார். ‘பொண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தால் மூணாகச் செய்யும் வளையல்’, ‘சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால், ஒத்தாசை செய்யும் வளையல்’, ’மாமியாரை மாமனாரை சாமியாரா மாத்திவிட மந்திரிச்சுத் தந்த வளையல்’ – எம் எஸ் வி யின் அருமையான இசையில் வித்தியாசமான பாடல்!
சங்க காலப் பாடல்களில் மாலையில் அரசன் உலா வருவதும், பெண்கள் அவன் மீது காதல் கொள்வதும் மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வுகள். முத்தொள்ளாயிரம் போன்ற சங்க நூல்களில் இந்த நிகழ்வுகளைக் காணலாம். காதலுற்ற பெண், அவனை எண்ணி, உடல் மெலிந்து, கை வளையலெல்லாம் கழன்று விழுந்து விடுகின்றனவாம்!
கம்பர் தனது தனிப்பாடல் ஒன்றில், மாத்தத்தன் வீதியிலே வந்து, பெரிய கொள்ளை செய்துவிடுகிறான். திருடக் கொடுத்தப் பெண்,
“இருந்தவளைப் போனவளை என்னை அவளைப் பொருந்த வளை பறித்துப் போனான் -“
என்று பாடுகிறாள். அங்கிருந்தவள், இங்கிருந்தவள், என்னைப் பொருந்த, சப்தமில்லாமல், வளை பறித்துப் போனான் என்று பாடுகிறாளாம். பாடல் முழுவதும் வளையோசை கல கலவென ஒலிக்கிறது!
இந்தப் பாடலின் தாக்கத்தில், கவிஞர் கண்ணதாசன் அருமையான் ஒரு காதல் பாடலை எழுதியுள்ளார்.
“சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவள
நான் ஏற்றுக்கொள்வேன் வளையிட்டு….”
காதலனுக்கு பதில் உரைக்கும் காதலி,
“வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக்கொள்வாய் வளையிட்டு
பூக்குவளைக் கண்கள் கொண்டவளை
புதுப் பூப் போல் பூப் போல் தொட்டு..”
பாடலில் எத்தனை வளைகள்! விருப்பத்துக்கு ‘வளை’ந்து கொடுத்தல் இதுதானோ! தேன், காய் போல், ‘வளை’யில் கவிஞர் தன் கவி மனதை வெளிப்படுத்திய அருமையான பாடல் இது!
‘வளை’ என்ற ஒற்றைச் சொல் கிளறிய எண்ணங்கள், சங்க காலம் தொடங்கி கண்ணதாசன் வரை நீள்கிறது – அது தமிழின் இனிமையான மரபு!!
