“காதல் அடைதல் உயிரியற்கை—அது
கட்டில் அகப்படும் தன்மையதோ?”
என்று கேட்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.
“காதல் ஒருவனைக் கைபிடித்தே—அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து”
எனப் பாடுகிறார் பாரதியார்.
தக்க வயது வந்த தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்டு விடுவது தவிர்க்க இயலாததாகும். இது சங்க காலம் தொட்டே நிகழ்ந்து வருவதாகும். தலைவனும் தலைவியும் பெயர் சுட்டப்படாமல் மொழியப்படும் இக்காதலை அகத்திணை என்று சங்க இலக்கியம் வரையறை செய்துள்ளது.
தொல்காப்பியம் அகத்திணையை ஏழு பிரிவுகளாக வகுத்துள்ளது. கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், பெருந்திணை என்பன ஏழு அகத்திணைகளாகும். இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை என்பன முறையே ஒருதலைக்காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. ஏனைய ஐந்தும் அந்தந்த நிலங்களுக்குப் பொருந்துவதாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குறிஞ்சி [புணர்தல்], பாலை [பிரிதல்], முல்லை [இருத்தல்] மருதம் [ஊடல்], நெய்தல் [இரங்கல்] என்பன வரையறுக்கப்பட்ட திணை நிலங்களும் உரிப்பொருள்களாகும். இவற்றுள் காதல் கொண்ட தலைவன் வினைமேற் சென்று இருக்கையில் அவனை நினைந்து தலைவி காத்திருத்தலாகும். இதை முல்லைப்பாட்டு என்னும் பத்துப்பாட்டு நூல் நன்கு விளக்குகிறது.
பத்துப் பாட்டு நூல்களில் முல்லைப்பாட்டு மிகவும் சிறியதாகும். நேரிசை ஆசிரியப் பாவால் இயற்றப்பட்ட 108 அடிகளை இந்நூல் கொண்டுள்ளது.
இந்நூலினை இயற்றியவர் காவிரிப்பூம்பட்டினத்து பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் என்பவர் ஆவார்.
அகத்திணை ஒழுக்கங்களில் ஒன்றான ‘முல்லை’ பற்றிக் கூற வந்ததால் இது “முல்லைப்பாட்டு” என வழங்கப்படுகிறது. தலைவன் வினைமேற் செல்ல அவன் மீண்டும் வரும்வரையில் பொறுமையோடு இருக்கும் தலைவியின் நிலையே ‘முல்லை’ என மொழியப்படுகிறது. அகத்திணையான முல்லை பற்றிக் கூற வந்தாலும் நப்பூதனார் அகத்தையும், புறத்தையும் ஒருங்கே இணைத்தே இந்நூலைப் பாடி உள்ளார். தற்காலத் திரைப்படங்களில் வருவது போலக் காட்சி மாற்றங்கள் வருவது இந்நூலுக்கே உரிய ஒரு சிறப்பாகும்.
“நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு” என்று இந்நூல் தொடங்குகிறது. உலகம் எனும் மங்கலச் சொல்லை வைத்துத் திருமுருகாற்றுப்படை, பெரியபுராணம், திருக்குறள் போல இந்நூலும் தொடங்குவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். முதலில் நப்பூதனார் மாலைப் பொழுதைக் காட்டுகிறார். முல்லையின் சிறுபொழுது மாலையாகும்.
வாமனனாகத் திருமால் வருகிறார்; மாவலி வார்த்த நீரை வாங்கிப் பின் வானளாவ உயர்கிறார்; அதுபோலக் கடல் நீரை வாங்கிப் பருகிக் கார்முகில்கள் உயர்ந்து எழுகின்றன. மழை பொழிகின்றன. ”நேமியொடு வலம்புரி பொருந்த மாதாங்கு தடக்கை”எனத் திருமாமாலின் கைகள் சங்கு, சக்கரம் தாங்கி உள்ளதை நப்பூதனர் காட்டுகிறார். பெரியாழ்வாரின்,
“நெய்த்தலை நேமியும் சங்கு நிலாவிய
கைத்தலங்கள் காண்மீரே”
எனும் அடிகள் நினைவுக்கு வருகின்றன. இப்படிப்பட்ட கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவனின் பிரிவால் தலைவி தனித்திருக்கிறாள். இவ்வாறு வருந்தி இருக்கும் தலைவியைக் காண வயது முதிர்ந்த பெண்கள் வருகின்றனர். வந்தவர்கள் அவளின் துயர் நீங்க அவளை மாயோன் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். கோயிலுக்குச் செல்லும்போது நெல்லும் பூவும் எடுத்துச் செல்கின்றனர்.
முல்லையும் நெல்லும் எடுத்துச் செல்வதைச் சிலப்பதிகாரம்,
“அரும்பவிழ் முல்லை நிகர்ம்லர் நெல்லொடு தூஉய்” என்றும்,
நெடுநல்வாடை, “நெல்லும் மலரும், தூஉய்க்கை” என்றும் காட்டுகின்றன. ”பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” என்னும் அடியானது பண்டைக்கால்த்தில் விரிச்சி கேட்டல் என்னும் வழக்கம் இருந்ததைக் காட்டுகிறது.
நாம் மேற்கொள்ளூம் செயல் முடியுமா முடியாதா என்பதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மொழியும் சொற்களைக் கொண்டு முடிவு செய்வதே விரிச்சி கேட்டல் என்பதாம். நம் தலைவி கோயிலுக்குச் செல்கிறாள். அப்போது ஓர் ஆயர்குலப்பெண் “கன்றுகளே! நீங்கள் வருந்த வேண்டாம்; இடையர் பின் இருந்து செலுத்த உங்கள் தாய்ப்பசுக்கள் விரைவில் வந்துவிடும்” எனத் தன் கன்றுகளிடம் கூறுகிறாள்.
இயல்பாகக் காதில் விழுந்த இந்த நல்ல சொற்களைக் கேட்ட பெண்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். தலைவியிடம் ஓடி வந்து, “தாயே! நாங்கள் நல்ல சொற்களைக் கேட்டோம்; பகைமேற் சென்ற தலைவன் விரைவில் வருவான்” என ஆறுதல் மொழிகள் கூறுகின்றனர்.
அடுத்து நப்பூதனார் வேறு ஒரு காட்சியைக் காட்டுகிறார்.
தலைவனாகிய மன்னன் பகைமேற் படையெடுத்து பாடிவீடு அமைக்கிறான். பகைநாட்டை அடுத்துள்ள காடுகளை அழித்து அங்குள்ள வேடுவரை வென்று பாசறை அமைக்கிறான். பாசறையானது நகரம் போலவே இருக்கிறது. அதில் ஒழுங்கான அமைப்பில் அமைந்த தெருக்களும், தழைகள் வேய்ந்த வீடுகளும் காணப்படுகின்றன.
பாசறைகளில் யானைகள் நிறைய இருக்கின்றன. யானைகளுக்குப் புரியக்கூடிய சொற்கள் அல்லாமல் வேறு ஒன்றும் கல்லா இளைஞர்கள்தாம் பாகர்கள். யானைகளை அவர்கள் அவற்றின் மொழியில் அதட்டுகின்றனர். “சுவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி” அவர்கள் யானைகளை உண்ண வைக்கின்றனர். பாகர்கள் வைத்திருக்கும் சுவைமுட் கருவி என்பதற்கு பரிக்கோல், குத்துக் கோல் எனப் பொருள் கூறப்படுகிறது. தற்போது அதை அங்குசம் என்கிறோம்.
பாசறையில் வீரர்கள் தங்களது விற்களை ஊன்றி அவற்றின் மேல் அம்புக் கட்டுக்களைத் தொங்கவிட்டிருக்கிறார்கள். இக்காட்சியை,
“கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப நற்போர்
ஓடாவல் வில்தூணி நாற்றி”
என்ற அடிகள் காட்டும் அருமையான உவமையின் வழி அறிய முடிகிறது. அதாவது தங்கள் காவி ஆடைகளைக் கல்லில் தோய்த்தபின் அவை உலர்வதற்காக அவற்றை மண்ணில் ஊன்றப்பட்ட தங்கள் திரிதண்டங்களின் மீது அந்தணர்கள் வைத்திருப்பது போன்று அவை காட்சி அளித்தனவாம்.
பல கூடாரங்களின் நடுவில் உள்ள ஒரு சிறந்த கூடாரத்தில் மன்னன் தங்கி உள்ளான். அங்குள்ள விளக்குகள் அணைந்து விடாதவாறு மங்கையர் சீர்திருத்திக் கொண்டுள்ளனர். “விரிவு வரிக் கச்சிற் பூண்ட மங்கையர்” என்று நப்பூதனார் அவர்களைக் காட்டுகின்றார். இரவைப் பகலாக்கும் ஒளிவீசும் வாளை அவர்கள் தம் கச்சில் கட்டி இருந்தனராம். எனவே கச்சு என்பது இங்கே மார்க்கச்சைக் குறிக்காமல் மகளிரின் சட்டையைக் குறிக்கிறது எனலாம். அக்கூடாரத்தில் மெய்க்காப்பாளர் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு காவல் காப்பது மல்லிகைப் புதர் அசைவது போல உள்ளதாம். எனவே மெய்க்காப்பாளர் வெண்ணிற உடை அணிந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது எனலாம்
காவலர்கள் வெண்துகில் அணிவதை,
“மீப்பால் வெண்துகில் போர்க்குநர் பூப்பாய்
வெண்துகில் சூழ்ப்பக் குஅல் முறுக்குநர்”
எனும் அடிகள் காட்டுகின்றன. ’ஓங்குநடைப் பெருமூதாளர்’ என்ற சொற்றொடரால் மெய்க்காப்பாளர் குறிக்கப்படுவதால் அவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என்பதையும் நல்ல ஒழுக்கத்துடன் பணியில் நீண்ட நாள்களாய் இருப்பவர்கள் என்பதையும் அறிய முடிகிறது.
இச்சூழ்நிலையில் பொழுது அறிந்து உரைப்போர் வந்து மன்னனிடம் காலத்தைக் கூறுகிறார்கள். அவ்வப்போது மன்னனுக்குக் காலத்தைக் கூற சிலர் இவர் போன்று நியமிக்கபப்டிருந்தனர். இவர்களை “நாழிக் கணக்கர்” எனச் சிலம்பு காட்டும்.
மன்னன் உடனே கிளம்பி உள்ளறையை அடைகிறான். எனவே அரசனது கூடாரம் மட்டும் இரண்டு அறைகளால் ஆனது என்றும் முன்னால் உள்ள அறை அனைவரிடமும் கலந்துரையாடவும், உள்ளறை பள்ளிகொள்ளவும் பயன்படுத்தப்பட்டன என்றும் அறிய முடிகிறது. அங்கே சில வாய்பேச இயலாதவர்கள் காவல் காக்கும் பணி செய்கின்றனர். அவர்கள் ஊமையர் என்பதை, “உடம்பின் உரைக்கும் நாவின் உரையாப் படம்புகு மிலேச்சர்” என்று நப்பூதனார் கூறுகிறார். அதாவது கை, முகம் ஆகிய உடம்பால் பேசக் கூடியவர். நாவினால் பேச முடியாதவர் என அறியலாகிறது.
படுக்கையில் இப்பொழுது அரசன் படுத்திருக்கும் காட்சி காட்டப்படுகிறது. முதல்நாள் போரையும் மறுநாள் நிகழ இருக்கும் போரையும் அவன் மனம் எண்ணுகிறது. முதல்நாள் போரில் பாம்பு துடிப்பது போன்று துதிக்கைகள் வெட்டி வீழ உயிர் துறந்த யானைகளை நினைப்பான். “பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துனிய” என ஆசிரியர் உவமை காட்டுகிறார். தனக்காகச் ”சோறு வாய்ந்து ஒழிந்தோரை” எண்ணுவான். மேலும் அம்பு பாய்த வலியுடன் தீனி உண்ணாமல் கிடக்கும் குதிரைகளை நினைத்துக் கொள்வான். அவன் நிலை.
“ஒருகை பள்ளி யொற்றி ஒருகை
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடுக நினைந்து” எனும் அடிகள் மூலம் காட்டப்படுகிறது.
அதாவது ஒரு கை படுக்கையில் இருக்கிறது. மற்றொரு கை தலைக்கு அடியில் தலையணையாக இருக்கிறது. தலைக்கு அடியில் உள்ள கை அணிந்துள்ள கங்கணத்தில் தலையில் அணிந்துள்ள முடி சேர்ந்துள்ளது. இவ்வாறு ஆடவர் கங்கணம் [கடகம்] அணிவதை, “வண்டாரர் வண்கடகம் மின்னத்தம் கை மறித்து” என்று சீவக சிந்தாமணி காட்டும்.
இப்பொழுது நப்பூதனார் காட்சியை மாற்றித் தலைவியைக் காட்டுகிறார். பெருமுதுபெண்டிர் விரிச்சி கேட்டு வந்து ஆறுதல் மொழிகள் கூறியும், தலைவி வருந்துகிறாள். உடல் மெலிகிறது. வளையல் கழன்று விழுகிறது. அவ்வளையலை எடுத்து மீண்டும் அணிகிறாள்.
“ஓடுவளை திருத்தியும் மையல் கொண்டு மொய்யென உயிர்த்தும்
ஏவறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து”
எனும் அடிகளால் தலைவியின் நிலை காட்டப்படுகிறது.
மயில் போல மயங்கிக் கிடக்கும் அவள் அருகில் பாவை விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. எனவே இரவு வரத் தொடங்கிவிட்டது என அறிகிறோம். இப்பொழுதும் மழை பொழிந்து கொண்டிருப்பதால் முன்னர் தலைவியைக் காட்டிய காட்சியின் தொடரே இஃது என அறிய முடிகிறது.
தலைவி தன் வருத்தத்தைப் போக்கத் தன் மனத்தை மழை கொட்டும் ஓசையில் திருப்புகிறாள். அவள் எழுநிலை மாடத்தில் இருக்கிறாள். அம்மடத்தின் கூடு வாய்களிலிருந்து மழை நீர் கொட்டும் ஓசை கேட்கிறது. இப்பொழுது அவள் தன் கவனத்தை யாழிசையில் திருப்பித் தன் வருத்தம் போக்க எண்ணுகிறாள்.
ஏனெனில் தலைவன் பிரிந்து செல்லும்போது, “கண்ணே! யான் திரும்பி வரும்வரை ஆற்றி இரு” எனக் கூறிச் சென்றான். தலைவியும் உடன்பட்டாள். கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை அன்றோ?. எனவேதான் தன் சொல்லைக் காக்க மிகையாக வருந்தாமல் ஆற்றி இருக்க எண்ணுகிறாள். தலைவன் தன் துயர் போக்க விரைவில் வருவான் என எண்ணுகிறாள்.
இவ்வாறு தலைவி ஆற்றி இருக்கையில் வெளியே பெருத்த ஆரவாரம் கேட்கிறது. பகைவரை வெற்றி கொண்ட தலைவன் விரைந்து வருகிறான். அவன் வரும் முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. பெரிய படையோடு வருகிறான். அவனது வெற்றிக்கொடி ஆடுகிறது.
“வலன்நேர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப” எனும் பாடலடியால் கொம்பும் சங்கும் முழங்கின என அறிகிறோம். பொன் நிறம் கொண்ட கொன்றை மலர்கள் மிளிர்கின்றன. நீல வண்னத்தில் காயா மலர்கள் பூத்துள்ளன. காந்தள் பூவானது கை போல மலர்ந்துள்ளது. “கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள்” என்று பரிபாடலும் காட்டும்.
தலைவன் முல்லை நில வழியே வருகிறான். வழியில் வரகுக்கொல்லை அமைந்துள்ளது. அங்கே இள மான்கள் துள்ளி விளையாடுகின்றன. “எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களின்” காலத்தில் அவன் வருவதாக நப்பூதனார் கூறுகிறார். எதிர்காலத்தில் மழை பெய்வதற்காகச் செல்கின்ற வெண்முகில்கள் விளங்கும் மாதம் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.
ஆகவே இஃது ஆவணித் திங்களின் தொடக்கம் எனக் கருத இடம் உண்டு. அதாவது கார்காலம் தொடங்கிவிட்டது. வேந்தன் வரும் தேரின் குதிரைகளை மீண்டும் மீண்டும் விரைவாகச் செல்ல விரட்டுகிறார்கள். “துணைபரி துரக்கும் செலவினர்” என்னும் சொற்றொடரால் இதை உணரலாம். இவ்வாறு தலைவன் தேரின் ஒலி, கொம்பு, சங்கு, ஆகியவற்றின் முழக்கம் தலைவியின் காதில் விழுந்து அவளை மகிழ்விக்கின்றன.
இத்துடன் நப்பூதனார் நூலை முடித்துவிட்டார். தலைவன் வந்து சேர்ந்ததையும், தலைவியைச் சந்தித்து கலந்து மகிழ்ந்ததையும் அவர் காட்டவில்லை. ஏனெனில் அது குறிஞ்சியின் ஒழுக்கமாகிவிடும். எனவே கூறாமல் விட்டார் எனலாம். மேலும் கார்காலத்தின் மாலைப்பொழுது, தலைவியின் பிரிவுத் துயர், மன்னன் பாசறை, மன்னனின் எண்ணங்கள், தலைவி துயரம், தலைவன் வரல், என ஆறு சிறு காட்சிகளாக முல்லைப்பாட்டைப் படித்து உணரலாம்.
முல்லைப்பாட்டில் இடைச்சொற்கள், வேற்றுமை உருபுகள் இவற்றை நீக்கினல் சுமார் 500 சொற்கள் உள்ளன. ஒருமுறை வந்த சொல் மீண்டும் வந்தால் அதை விட்டுவிட்டுக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கைதான் வரும். இந்த 500 சொற்களில் இரண்டு திசைச்சொற்கள் உள்ளன. அவை யவனர், மிலேச்சர் என்பன. மேலும் நேமி, கோவலர், படிவம், கண்டம், படம், கணம், சிந்திது, விசயம், அஞ்சனம், ஆகிய 9 வட சொற்கள்தாம் இந்நூலில் உள்ளன. ஆக மொத்தத்தில் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிற சொற்களை முல்லைப்பாட்டு பெற்றுள்ளது என மறைமலை அடிகளார் காட்டுகிறார்.
சிறந்த இலக்கியமாகவும், பழம்பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை விளக்கும் பெட்டகமாகவும் முல்லைப்பாட்டு விளங்குகிறது என்று துணிந்து கூறலாம்.
