லண்டன் காட்விக் (Gatwick) விமான தளத்திலிருந்து புறப்பட்டு, ஒரு சீஸ் சாண்ட்விச் ப்ளஸ் கடுங்காப்பி, கிண்டலில், என்.கணேசனின், ‘நீ நான் தாமிரபரணி’யின் சில அத்தியாயங்கள், ஒரு குட்டி தூக்கம் முடித்தால், ஐஸ்லாந்து வந்துவிடும். கிட்டத்தட்ட மூன்றரை மணி பயணம்.
ஐஸ்லாந்தின் பிரதான விமான நிலையமான கீபிளாவிக்கில் (KEFLAVIK) தரையிறங்கிக் கொண்டிருக்கும் போது கடிகாரம் இரவு 11:30 என்று காட்டியது. ஒரு முறைக்கு இரு முறை மணி பார்த்தேன். காரணம் நம்மூரில் மாலை 5:45 வாக்கில் அடிக்கும் மாலை வெய்யில் போல, வெளி சூழ்நிலை இருந்தது. தொடர்ந்து, ஏதோ பூமிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று வேற்று கிரகத்தில் நுழைவது போல தரைக் காட்சிகள்!!
பொதுவாக ஐரோப்பா உள்ளிட்ட பலநாடுகளில் தரையிறங்கும் போது விண்ணுயர்ந்த கட்டிடங்கள், அடுக்கடுக்கான மேம்பாலங்கள், குறுக்கும் நெடுக்குமாக ஹைவேக்களில் விர் .. விர் என்று அவசரகதியில் துரத்தும் கார்கள் என்று பழகிய கண்களுக்குச் சற்றும் எதிர்பாராத வெறுமையும் கருமையும் சூழ்ந்த நிலப் பரப்பு.
லண்டன் ஹீத்ரோ, ஐந்து பெரிய டெர்மினல்களுடன், வானத்தில் காக்கைகள் போல இறங்கக் காத்திருக்கும் விமானங்கள் என்று இருக்க, இங்கு எந்த ஒரு அலட்டலும் இல்லாத சிறிய ஏர்போர்ட். எங்களது விசா சரிபார்க்கப்பட்டு வெளியே வந்தோம். ஜூன் மாதம் என்றாலும் குளிர் காற்று முகத்தில் அறைய, உடல் உடனடியாக கனத்த ஜாக்கெட்டைத் தேடியது.
ஒரு குழுவாக லண்டனிலிருந்து கிளம்பி ஐரோப்பிய நாடுகளுக்கு டூர் பஸ் மூலம் பயணித்த அனுபவங்கள் உண்டு. எதையுமே ஒழுங்காகப் பார்க்க முடியாத அவசரத்தில், அதிக இடங்களைக் காண்பிக்கிறோம் என்ற பெயரில் ஒவ்வொரு இடத்திலும் அதற்குரிய நேரம் கொடுக்காமல் வெறும் மண்ணை மட்டும் மிதித்து எண்ணிக்கையை ‘டிக்’ செய்யும் நிலைமை.
இதற்கு மாற்றாக, நாமே திட்டமிட்டு ஏன் ஒவ்வொரு இடமாகப் பார்க்கக் கூடாது? என்று ஞானோதயம் தோன்றியதின் விளைவாக, ஐஸ்லாந்து பற்றியும் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் குறிப்பெடுத்துக் கொண்டு திட்டம் வகுத்து நாங்கள் மட்டும் ஜோடியாக இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தோம்.
வெளியே வந்து டாக்ஸி பிடித்தோம். டிரைவர் நடுத்தர வயது இளைஞனாக இருக்கக்கூடும் என்று முகம் கூறியது. முழு நீளப் பனிக் கோட்டு அணிந்திருந்தான். தலையில் புசுபுசுவென ரஷ்யத் தொப்பி. தங்கப் போகும் (Time Share) வீட்டின் முகவரியைக் காண்பித்தோம்.
டாக்ஸி, ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பி மெயின் ரோட்டுக்கு வந்தது. சூரியன் இப்பொழுதுதான் இறங்கி இருந்தது. அந்தி இருள் துவங்குவதற்கான வானிலை நிறமாற்றங்கள் ஏற்படத் துவங்கியிருந்தன. மணியை பார்த்தேன் நள்ளிரவு 12:00.
சாலை நன்றாக இருந்தாலும், இரு புறங்களிலும் பாசி படர்ந்த கருப்பு நிற பூமி, அதில் ஆங்காங்கே பசுமையும், மஞ்சளும் கலந்த திட்டுகள், கற்பாறைகள், ஆங்காங்கே தேங்கி நிற்கும் ஐஸ் படுகைகள் எனச் சுற்றுச்சூழல் அதிசயப்படுத்தியதோடு, சற்று அச்சத்தையும் ஏற்படுத்தியது.
சாலையில் அரைமணி நேரம் பயணிக்கும் போது, தூரத்தில் எப்போதாவது ஓரிரு வீடுகள் தலை காட்டும். மற்றபடி சப்தமில்லா சாலை பயணம். அதற்குள் இருள் சூழ்ந்தது. ‘அதோ அந்த வீடுதான்!’ என்று சொன்ன டிரைவருக்கு யூரோக்களை கொடுத்துவிட்டு நன்றி சொல்லி இறங்கினோம்.
சிறிய அளவிலான வீடு, சுற்றி மரக்கட்டைகளால் ஆன காம்பவுண்ட். வெளி கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தோம். வீடு எந்த வித வெளிச்சமும் இன்றி இருளாக கிடந்தது. கதவை தட்டினோம். யாரும் திறக்கவில்லை. அப்பொழுதுதான் கவனித்தோம். வீடு பூட்டி இருந்தது. ஒரு நிமிடம் திக்! என்றது. ஒரு முறைக்கு இருமுறையாக ஹாண்டிலை இழுத்துப் பார்த்தோம். திறக்கவில்லை. சுற்றும் முற்றும், பெரிய இடைவெளி விட்டு அங்கும் இங்குமாக ஓரிரு வீடுகள். இரவு பனி மற்றும் குளிர். வெளி விளக்கைப் போடலாம் என்றால் ஸ்விட்ச் எங்கே இருக்கிறது என்று இருளில் தெரியவில்லை.
மொபைலிலுள்ள விளக்கு மூலம் ஒளியேற்றி ஜன்னல் மற்றும் சுற்றுவட்டாரத்தை எட்டிப் பார்த்தோம். வீடு எந்தவித சலனமுமின்றி அமைதியாக இருந்தது. திரும்பிப் பார்த்தபோது, டாக்ஸி டிரைவர் வண்டியில் அமர்ந்தபடி கிளம்பாமல், சிகரெட் குடித்தபடி எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது . மனைவி என் கையை இறுக்கப் பிடித்தாள். ஏற்கனவே சில்லென்று இருந்த கைகளில் பயம் தெரிந்தது.
யாரோ ஒரு மூன்றாம் மனிதன் நம்முடன் இருக்கிறான் என்ற ஆறுதலும், அதே சமயத்தில் ட்ராப் செய்தவுடன் கிளம்பாமல் ஏன் இன்னும் அங்கேயே நம்மைப் பார்த்தபடி இருக்கிறான். இது நாம் வர வேண்டிய இடம் தானா? என்ற கேள்வியும் எழுந்தது. முன் பின் தெரியாத நாட்டுக்கு இப்படி நள்ளிரவு விமானம் பிடித்து வந்த மடத்தனத்தைத் தாண்டி பயம் தொற்றிக் கொண்டது.
சுதாரித்துக் கொண்டு அந்த டைம் ஷேர் ஓனருக்கு போன் செய்தோம். இருமுறை போன் செய்தும் முழு ரிங் சென்று துண்டிக்கப்பட்டு விட்டது., எங்களை இன்னும் கவனித்துக் கொண்டிருந்த டிரைவர் வண்டியின் விளக்குகளை அணைத்து விட்டு கீழிறங்கி எங்களை நோக்கி வந்தவன் தன் பனிக்குல்லாவை விலக்கியபடி,
“ எனி பிராப்ளம்?”
“ஆம் கதவு பூட்டியுள்ளது, ஓனர் போன் எடுக்கவில்லை”
எங்களிடமிருந்து மொபைல் நம்பர் வாங்கி தொடர்பு கொண்டான். பதிலில்லை. குளிர் பரவலாகத் தெரிந்தது.
“ஷோ யுவர் புக்கிங்” – அதில் உள்ள மற்றொரு நம்பரை தொடர்பு கொண்டபோது போன் கிடைத்தது. அது ஓனரின் நண்பரோ அல்லது சொந்தக்காரர் யாரோ ஒருவருடைய நம்பர். அவர்கள் வேறொரு போன் நம்பரைக் கொடுத்து அழைக்க சொன்னார்கள். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் இந்த மொபைல் அழைப்புகள் மூலம் பதட்டமாகக் கடக்க. அவனுடைய மொபைல் போனில் கால் வந்தது. எங்கள் நிலைமையைச் சொல்ல,
அந்த வீட்டின் முகப்பில் உள்ள ஒரு விளக்கு மேல் சாவி இருப்பதாகச் சொல்லி அதை எடுத்துக்கொள்ளச் சொன்னார். அந்த சாவியை அவனே எடுத்து வீட்டைத் திறந்து உள்விளக்குகளை போட்டு. எங்கள் பெட்டிகளைக் கொண்டு வந்து உள்ளே வைத்தான். எங்களுக்கு மெதுவாக உயிர் வந்தது.
நாங்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு போய் பெட்ரூமில் வைக்க, அவன் ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து ஓனரை அழைத்து, திட்டு என்றால் அப்படி ஒரு திட்டு!
அந்தத் திட்டின் சாரம் ;
நம் நாட்டுக்கு வந்த விருந்தாளிகளை நீங்கள் எப்படிப் பரிதவிக்க விடலாம்? முதல் முறையாக வரும் அவர்கள் நம் நாட்டை பற்றி என்ன நினைப்பார்கள்? உங்களைப் பற்றி நான் டூரிஸம் மினிஸ்டரியில் புகார் செய்து, உங்கள் சேவையை ஏன் பிளாக் செய்யக்கூடாது?
அந்த இல்லத்தின் மூலையில் இருக்கும் பேன்ட்ரி பகுதிக்குச் சென்று அலமாரி, பிரிட்ஜை திறந்து பார்த்தான். பிரட், பீனட் பட்டர் ஜாம், டீ பாக்கெட் உள்ளது. டோஸ்டர் உபயோகித்துக் கொள்ளுங்கள்.
எங்கள் நாட்டின் விருந்தினர் என்ற முறையில் உங்களின் ஆரம்ப தடங்கல்களுக்கு மன்னிக்க வேண்டும். இனி நீங்கள் தங்கியிருக்கும் நாட்கள் நலமாகவே இருக்கும் என்று நம்புகிறேன். இது என்னுடைய போன் நம்பர் எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம், டாக்ஸி சர்வீஸ்’காக மட்டுமல்ல ஒரு இனிய நண்பனாக..!!
நாங்கள் நன்றியைச் சொன்னோம். உள் கதவைச் சாத்திவிட்டு பெருமூச்சு விட்டோம். நேரம் இரவு 12:55. ஜன்னல் கதவுகள் எல்லாம் சாத்தியிருக்கிறதா என்று பார்க்க என் மனைவி திரைச்சீலையைத் திறந்தாள்.
“இங்கு வந்து அதிசயத்தைப் பாருங்களேன்” – தெளிவான வானத்தின் கிழக்கு கோடியில் ஆரஞ்சு வண்ணத்தில் தகதக என அருணன் தேரில் ஆதவன் அழகாக எழுந்து கொண்டிருந்தான். இரவில் எழும் சூரியன்!
நம் சென்னை கடற்கரையில் விடிகாலை 5:45 அளவிலான அற்புதக் காட்சி எப்படியிருக்குமோ அந்த சூழல், ஆனால் கருப்பு பாறை மற்றும் மண் துகள்கள் மீது சூரிய கிரணங்கள் பட்டு அதிலுள்ள கனிமங்கள் காரணமாகப் பல வண்ண மணிகள் தோட்டத்தில் இறைத்தது போல அப்படியொரு ஒரு ஸ்டன்னிங் காட்சி!
அந்த அற்புதக் காட்சியை மனத்திரை நிரந்தரமாகப் பதிவு செய்து கொண்டது
சரி, உறங்கலாம் என்று 1:30AM படுத்தோம்.
அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது, எங்கள் கதவு வேகமாகத் தட்டப்பட்டது………..
(தொடரும்..)
