
விசித்ராவுக்கு நாளை காலை கல்யாணம்.
முதல் நாளான இன்று காலை நிச்சயதார்த்தம் முடிந்து , மாலையில் வரவேற்பு.
காலையில் இருந்து உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து விட்டனர்.
நண்பர்கள் தெரிந்தவர்கள் என வரவேற்பு நிகழ்ச்சியும் களை கட்டியது.
எல்லோரும் கலகலப்பாக இருக்க , விசித்ரா மட்டும் கலகலப்பாக இருப்பது போல் நடித்து கொண்டு இருந்தாள்.
அலங்கார விஷயங்களில் கவனமாக இருந்தாள்.
மருதாணி வைத்து , வளையல் போட்டு என்று… அதுவும் போட்டோ எடுக்கிறார்கள் என்றால் இயற்கையாக இருப்பது போல் ,
மாப்பிள்ளை சரத்துடன் சகஜமாக பேசிக்கொண்டு….
ஆனால் , மனம் சுரேஷை நினைத்து கொண்டு இருந்தது.
எத்தனை முறை சொன்னேன் கடைசி நிமிடம் வராதே , உனக்காக காத்திருந்து எனக்கு பைத்தியமே பிடித்து விடும் என்று.
ரிஸப்ஷன் சமயத்தில் கூட அவள் கண்கள் சுரேஷைத் தேடி அலை பாய்ந்தது.
அவனைக் கண்ணில் பார்த்து விட்டால் நிம்மதியாக இருக்கும்.
சுரேஷ் வரவில்லை. ரிஸப்ஷன் முடிந்து , மண்டபம் அமைதியாகி விட்டது.
மணி பதினொன்று ஆகி விட்டது.
விசித்ராவுடன் சென்னையில் வேலை பார்க்கும் ரமா ,விசித்ராவுடன் இருந்தாள்.
” என்ன விசித்ரா , ஏதோ ஒரு கவலை இருக்கு போல. என்னாச்சு ? “
” இல்லடி , சுரேஷக் காணோமே “
” லக்ஷ்மி ப்ரதரா ?
நம்ம கூட வேலை பார்க்கும் லக்ஷ்மி வரல்லயான்னு யோசிக்காம , அவங்க அண்ணன் வரல்லன்னு புலம்பற. என்னம்மா கல்யாணப் பொண்ணு , என்ன ப்ளான் ? “
“சும்மா இருடி… நீ வேற “
“கவலபடாத ! நா காட்டிக் கொடுக்க மாட்டேன். கடசி நேரத்தில கம்பி நீட்டுற ப்ளானா ?”
” அடிப்போடி , பாக்குவெத்தலை மாத்தும் போது எங்க மாமியார் எனக்கு ஒரு வைர நெக்லஸ் போட்டாங்க . அதுல ஒரு கல் விழுந்துடுச்சு. ஜே.ஆர் ஜுவல்லர்ஸ்ல்ல கொடுத்து செட் பண்ணி தர சுரேஷ் கிட்ட கொடுத்து இருக்கேன். மாமியார் ஏற்கனவே என்னை அந்த நெக்லைஸ போடலியான்னு கேட்டுகிட்டே இருக்காங்க. முகூர்த்தத்துக்கு போட்டுப்பேன்னு சொல்லி இருக்கேன்”
கதவை யாரோ லேசாக தட்டினார்கள்.
சுரேஷ் தான்
விசித்ராவுக்கு வாயெல்லாம் பல்.
” ரொம்ப தேங்க்ஸ் சுரேஷ். இல்லேன்னா மாமியார் என்னை பத்தி ரொம்ப நினைச்சுடுவாங்க”
நெக்லஸஸை கழுத்தில் வைத்து அழகு பார்த்தாள். சரத் என்ன சொல்வார் ? தன் அலங்காரத்தை பார்த்து மயங்கி விழுவார் என அக மகிழ்ந்தாள்.
