காதலுக்கு மரியாதை 

புகழ் பெற்ற  தமிழகக் காதலர்கள்

மனதிற்கு பிடித்தவரை உயிராக நேசிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் காதலர் தின வாழ்த்துகள். ‘காதல்’ என்ற வார்த்தை சற்று சங்கடத்தை ஏற்படுத்துமெனில் ‘Happy Valentines Day’.

இன்றைய உலகில் அனைத்தும் மாறி வருவதை எண்ணி கவலைப் படும் பொழுது, ‘மாற்றம்’ ஒன்றுதான் மாறாதது என்ற அறிவுரை மனதை சமாதானப் படுத்தக் கூறக் கேட்டிருப்போம்.
எனக்கென்னவோ ‘ காதல்’ என்ற வார்த்தைக்கும் ‘மாற்றம்’ என்ற வார்த்தைக்கு சமமான முதலிடமோ அல்லது குறைந்த பட்சம் இரண்டாம் இடமோ கொடுக்கப் பட வேண்டும் எனத் தோன்றும்.

காதல் வயப்படாதோர் எந்தக் காலத்திலும் இல்லை என்ற மாறாத உண்மையை ராஜா, பாரதி பாஸ்கர் இருவரும் ஒரே அணியில் இணைந்து எதிர்த்து பேசினால் கூட சாலமன் பாப்பையா அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்புக் கொடுக்க முடியாது.

புராண காலத்தில் சிவன், மால், முருகன் என எந்தக் கடவுளையும் காதல் விட்டு வைக்க வில்லை. நாம் விநாயகரை பிரம்மச்சாரி ஆக அரச மரத்தடியில் தனித்து உட்கார வைத்தோம். வடக்கே அவரையும் விட வில்லை.

முருகப் பெருமானோ காயாத கானகத்தில் தேடித் தேடி வள்ளி என்ற புள்ளி மானைக் காதலித்தார். அவர் காதலித்த கதையை யுகம் யுகமாக நாடக மேடைகளில் ‘வள்ளி திருமணம்’ என அறங்கேற்றி மக்களை மகிழ்ச்சியும் படுத்திக் கொண்டுள்ளார்.

தேவர்களையும் ரிஷிகளையும் கூட விட்டு வைக்க வில்லை இந்தக் காதல்.

பின்னர் இதிகாச காலத்தில் இராமனை ஏக பத்தினி விரதனாக்கிக் கொண்டாடினோம். ஆனால்
பதின்ம வயது பாலகனாய் மிதிலை வழியாக அவர் அயோத்திக்கு வரும் பொழுது பாதையை நேரே பார்த்து வராமல் தலை நிமிர்ந்து மாடத்தை நோக்க, சீதையும் அண்ணலை நோக்க கண்டதும் காதல் மலர்ந்தது. மனங்கள் இணைந்து மணத்தில் முடிந்தது.

இராமனுக்கு பின் தோன்றிய கிருஷ்ணனோ, சொல்லவே வேண்டாம். ‘லீலை’ என்ற வார்த்தைக்கு புது அர்த்தத்தை ஏற் படுத்திச் சென்றார்.

சங்க காலத்தில் அகத்திணை இலக்கியங்கள் அன்றைய காதலை கவிநயத்துடன் ஆவணப் படுத்தியுள்ளன. மனம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஒன்றுகூடி தாம் அனுபவித்த இன்பம் இப்படிப்பட்டது என்று பிறருக்குச் சொல்ல முடியாததாய் அகத்தினுள் அனுபவிக்கும் உணர்ச்சியை அகத்திணை அழகு பட கூறுகிறது.

காதல் குறித்து அகத்திணைப் பாடல்களில் எண்ணற்ற உவமைகள் கொட்டிக் கிடக்கின்றன. சில பாடல்களை எழுதிய புலவர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும், அவர்கள் எழுதிய உவமைகளால் பேர் பெற்ற புலவர்களும் சங்க இலக்கியத்தில் இருக்கின்றனர்.
அகத்திணை உவமைகள் சங்ககால மக்களின் காதல் வாழ்க்கையை நம் கண்முன் காட்டுவதாக அமைந்துள்ளன.

அறத்தையும், பொருளையும் நமக்குக் கூறிச் சென்ற வள்ளுவரும் காதலை விட்டு வைக்க வில்லை.

பௌத்தமும், சமணமும் தன் அடியார்களின் காதலுக்கு கட்டுப் பாடு விதித்து துறவறத்தை அவர்களின் தலையில் ஏற்றி வைத்தது . நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடிய வில்லை.

பின்னர் வந்த சமயக் குறவர் நால்வரில் இருவரை குடும்பஸ்தர்களாக்கி தேவாரம் பாட வைத்தது வைதீக மதம். அதிலும் சுந்தரரை தம் கண்கள் குருடானாலும் பரவாயில்லை என வலையில் விழ வைத்தது அந்த பாழாய்ப் போன காதல்.

ஈசனின் விதி அவரையே திருவாரூர் வீதிகளில் சுந்தரரின் காதலுக்கு கால் நடையாய் தூது போக வைத்தது.

சாதி,மதம் இல்லாத சங்க காலத்தில் காதலிக்க ஆண், பெண் என்ற அடையாளம் போதுமானதாய் இருந்தது. சாதியும், மதமும் தலை தூக்கி ஆட ஆரம்பித்த பின்னர் ‘காதல்’ ஒரு தவிர்க்க வேண்டிய கெட்ட வார்த்தையானது.

எனக்கு 12-13 வயதிருக்கும். ஶ்ரீதர் டைரக்‌ஷனில் முத்துராமன், ரவிச்சந்திரன், பாலையா, நாகேஷ் நடித்த ஒரு அருமையான படம். புரிந்திருக்கும். நல்ல படம் எடுத்த டைரக்டருக்கு ஒரு நல்ல பெயர் வைக்கத் தெரியவில்லை. அந்த பதின்ம வயதில், “அப்பா, நான்’காதலிக்க நேரமில்லை’ படம் பாக்கணும்’ எனக் கேட்டால் ‘ எடு …. அது ஒன்னுதான் குறைச்சல், கணக்கில் என்ன மார்க் வாங்கின, போய்ப் படி’ என்ற பதில்தான் கிடைத்தது. அப்புறம் அவருடைய அலுவலகத்தில் review கேட்டு கூட்டிப் போனது சரித்திரம்.

இதை ஏன் சொல்ல வந்தேன் என்றால் நம்மில் பெரும் பாலானோர் காதலித்து மணக்காமல், மணம் புரிந்தவரை காதலிக்கத் துவங்கினோம். அதுவும் நன்றாகவே இருந்தது. இருக்கிறது.

இன்று ஒரு படி மேலே சென்று ஒரு ஆணும், பெண்ணும் உன்னதமான அன்பைப் பரிமாறிக் கொள்ளும் தினம் காதலர் தினம் என கூறிக் கொள்கிறோம்.

காதலர் தினத்தின் ரிஷிமூலம் Valentine’s Day.

பாவம் ரோம சக்ரவர்த்தியால் கிறித்தவ படை வீரர்கள் திருமணம் செய்ய தடை விதிக்கப் பட்டிருந்ததாம். அத்தடையை மீறி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த St’ Valentine கொலை செய்யப் பட்டாராம். இது நடந்தது மூன்றாம் நூற்றாண்டு. பல நூறு ஆண்டுகள் கழிந்து 13-14 நூற்றாண்டுகளில் அவர் நினைவு நாளான Feb. 14 ஐ மேல் நாடுகளில் Valentine Day என கொண்டாடத் துவங்கினர். அக்கலாச்சாரம் மெள்ள மெள்ள கடல் தாண்டி வந்து நம் நாட்டை அடைய 400-500 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இருந்தாலென்ன இடைப்பட்ட நாட்களில் நாம் என்ன காதலிக்காமலா இருந்தோம். நமக்கு பிரியமானவர்களிடம் அன்பைப் பரிமாறிக் கொண்டுதானே இருந்தோம். வருடத்தில் ஒரு நாள் அல்ல, வருடம் முழுவதும்.

இனியும் தொடர்வோம்.