6) அமர்நீதி நாயனார்!
அமர்நீதியார் பழையாறையைச் சேர்ந்தவர்.செல்வச் செழிப்பு மிக்க வணிகர் குலத்தில் தோன்றியவர்.அடியவர்களுக்கு உணவும், உடையும்,கீளும்( அரை ஞாண் கயிறு),கோவணமும் தருவதைக் கொள்கையாகக் கொண்டவர்.
சிவபெருமான் கோவில் கொண்ட திருநல்லூரில் மடம் ஒன்றைக் கட்டி அங்குத் திருவிழாவுக்கு வரும் அடியவரை உபசரித்து வந்தார்.
ஒருநாள்,அந்தண அடியார் ஒருவர்,அமர்நீதியாரிடம் தம் கோவணத்தைத் தந்து பாதுகாத்து வைக்கும்படிச் சொல்லிவிட்டு நீராடச் சென்றார்.
நனைந்தபடித் திரும்பி வந்தவர் தாம் கொடுத்த கோவணத்தைக் கேட்டார். அமர்நீதியார் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் அதனைக் காணவில்லை. எங்குத் தேடியும் கிடைக்காததால் வேறு புதிய கோவணம் தருவதாகக் கூறினார் அதனை அவ்வடியார் ஏற்றுக் கொள்ளவில்லை.
தம்மிடம் இருந்த வேறொரு கோவணத்தைத் தந்து அதற்கு நிகரான எடையுள்ள கோவணத்தைத் தந்தால் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.
அதனை ஒரு துலாக்கோலின் தட்டில் வைத்துத் தம்மிடம் இருந்த புதிய கோவணத்தை மற்றொரு தட்டில் இட்டார் அமர்நீதியார்.
எடை சமமாகாததால்,இன்னும் பல கோவணங்கள், பட்டாடைகள், வெள்ளி, பொன், மணிகள் போன்றவற்றை இட்டார்.அப்போதும் எடை நிகராகவில்லை.
வியப்படைந்த அமர்நீதியார், இறைவனை வணங்கித் தாமும், தம் மனைவியும்,தம் மகனுமாகத் தட்டில் ஏறத் துலாக்கோல் நேர் நின்றது.
அம்மையொடு வானில் காட்சி கொடுத்து இறைவன் அவர்களுக்குச் சிவபதம் அளித்து அருளினான்.
அமர்நீதியார் வெண்பா!
அந்தணராய் ஈசன் அளித்தவக் கோவணம்
எந்த இடத்திலும் இல்லையென, – வந்தவர்
கொண்டசினம் போக்கக் குடும்பம் துலையேறக்
கண்டசிவக் காட்சி களிப்பு!
**********””
7) எறிபத்த நாயனார்!

எறிபத்தர், கருவூரைச் சேர்ந்த சிவனடியார். அவர்,சிவனடியார்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தீங்கு செய்வோரைத் தண்டிக்கவும் தம் கையில் ஒரு மழு (கோடரி) என்ற ஆயுதத்தை வைத்திருந்தார்.
அவ்வூரில் சிவகாமியாண்டார் என்ற முதிய அடியார் மலர்களைப் பறித்து இறைவனுக்கு மாலையாகக் கட்டிச் சாத்தும் திருப்பணியைச் செய்து வந்தார்.அவர் ஒருநாள் மலர்க்கூடையுடன் சென்று கொண்டிருந்த போது ,சோழ மன்னனின் பட்டத்து யானை
அக்கூடையைப் பறித்து எறிந்து சிதைத்தது.
சிவகாமியாண்டாரின் அலறலைக் கேட்ட எறிபத்தர் அங்கு வந்தார். நடந்ததை அறிந்து சினம் கொண்டு யானையின் துதிக்கையைத் தம் மழுவால் வெட்டித் தள்ளினார்.உடன் வந்த பாகர்களையும் வெட்டி வீழ்த்தினார்.
யானையும், பாகர்களும் கொல்லப்பட்ட செய்தி அறிந்த புகழ்ச் சோழன்,தன் படை பின்னே தொடர்ந்து வரக் குதிரையில் ஏறி அந்த இடத்துக்கு வந்தான். பகைவர் யாரும் இல்லை என்பதைக் கண்டான். கொன்றவர் எறிபத்தரே என்பதை அறிந்தான்.
பிழை ஏற்பட்டிருந்தால் அன்றிச் சிவனடியார் ஒருவர் இதனைச் செய்திருக்க மாட்டார் என்பதை உணர்ந்தான்.
எறிபத்தரும் தான் யானயையும்,பாகர்களையும் கொன்ற காரணத்தைக் கூறினார்.
அடியாருக்கு யானை இழைத்த குற்றத்துக்கு இத்தண்டனை போதாது, என்றும், தன்னையும் தண்டிக்க வேண்டும் என்றும், கூறிய அரசன் தன் வாளை அவரிடம் தந்தான்.
அரசனின் அன்பினால் நெகிழ்ந்த எறிபத்தர், அவனுக்குத் தீங்கு நினைத்தோமே என்று வருந்தி அவ்வாளால் தம் கழுத்தை அரியத் தொடங்கினார்.திகைப்படைந்த அரசன் விரைந்து வந்து வாளையும் அதை ஏந்திய கையையும் சேர்த்துப் பற்றிக் கொண்டான்.
அப்போது ஓர் அசரீரி உங்கள் இருவரின் அன்பைப் புலப்படுத்த இறைவன் அருளால் இது நிகழ்ந்தது என்று கூறியது
இறந்த கிடந்த யானையும் எழுந்தது, பாகர்களும் எழுந்தனர்.
சிவகாமியாண்டார் இறைவன் அருளை வியந்து திருக்கோயிலுக்குச் சென்றார். எறிபத்தர் தம் திருப்பணியைச் செய்யச் சென்றார்.
முடிவில் கயிலையில் கணங்களின் தலைவராகும் பேறு பெற்றார்.
எறிபத்தர் வெண்பா!
கோடரியால் யானையைக் கொன்றவெறி பத்தரின்
பாடறிந்து வாள்தந்தான் பார்வேந்தன் – வாடிக்
கழுத்தரியத் தான்முயலக் கைதடுத்தான் மன்னன்
பழுத்ததவர் பக்தியின் பாங்கு!
*****************
8) ஏனாதி நாயனார்!

சோழ நாட்டிலுள்ள எயினனூரைச் சேர்ந்தவர் ஏனாதி நாத நாயனார், திருநீற்றின் மீது மாறாத பற்றுக் கொண்ட ஏனாதியார் வாட் போர்
பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணி செய்து வந்தார். அதனால் வந்த ஊதியத்தை அடியார்களுக்குப் பயன்படுத்தி வந்தார்,
அதிசூரன் என்பவனும் படைக்கலப் பயிற்சி அளித்து வந்தான், அத்தொழிலில் ஏனாதி நாயனாருக்கு வருவாய் அதிகம் வந்ததால் அவர் மீது பொறாமை கொண்டான்,
ஒரு நாள் படையுடன் போர் செய்ய வந்தவன், போரில் வெல்பவரே போர்ப்பயிற்சி செய்யும் உரிமை பெற்றவர் என்று கூறினான்.
இதற்கு ஒப்புக்கொண்ட ஏனாதி நாயனாரும் தம்படையுடன் போருக்குப் புறப்பட்டார்
போரில் ஏனாதியாரே வெற்றி பெற்றார். தோற்று ஓடிய அதிசூரன் வீரத்தால் ஏனாதி நாதரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்தான். எனவே அவரை வஞ்சகத்தால் வீழ்த்த நினைத்தான்.
இருவரும் ஒருவருக்கொருவர் தனிப்போர் செய்யலாம் என்று அதிசூரன் சொல்லவும் அதற்கும் நாயனார் ஒப்புக்கொண்டார். அதிசூரன் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு, அதைக் கேடயத்தால் மறைத்துக் கொண்டு போருக்கு வந்தான். போரில் ஏனாதியாரின் கை ஓங்கிய போது கேடயத்தை விலக்கினான். அவன் நெற்றியில் திருநீற்றைக் கண்ட நாயனார் நீறு அணிந்த அடியாரைக் கொல்லுவது தகாது என்றும், தாம் வாளைக் கீழே போட்டால் நிராயுதபாணியைக் கொன்ற பாவம் அடியாரைச் சேரும் என்றும் எண்ணினார்.
வாளைக் கையில் வைத்துக் கொண்டே நின்று தம்மை அவன் கொல்ல இடம் கொடுத்தார். அதிசூரன் தான் எண்ணியதை நிறைவேற்றிக் கொண்டான்.
சிவபெருமானே தோன்றி ஏனாதிநாதர் என்றும் தன்னுடன் பொன்னம்பலத்தில் இருக்கும் பேற்றை அருளினான்.
ஏனாதியார் வெண்பா!
திண்ணார் பலகையத் தீயவன் நெற்றியின்
வெண்ணீற்றைக் காட்டி விலகவும் – கண்ணாலே
கண்டார் தயங்கவும் கைவாள் வினைமுடிக்கக்
கொண்டார்பொன் அம்பலம் கோ
( பலகை- கேடயம்)
( திண்ணார் பலகை- உறுதியான கேடயம்)
( வினைமுடிக்க- நினைத்த செயலை முடிக்க= கொல்ல)
( கோ- தலைவர்- ஏனாதியார்)
விளக்கம்:
தீயவனான அதிசூரன், உறுதியான கேடயத்தால் நெற்றியை
மறைத்திருந்தான். வாட்போர் நடக்கும் போது கேடயத்தை விலக்கவும் நெற்றியில் இருந்த வெண்மையான திருநீறு தெரிந்தது. அதைக் கண்ட ஏனாதி நாயனார் தயங்க, அதிசூரன் வாளால் அவரைக் கொன்றான். நாயனார் சிவபெருமானின் பொன்னம்பலத்தை அடையும் பேறு பெற்றார்.
*****************
9)கண்ணப்ப நாயனார்!

பொத்தப்பி நாட்டின் வேடர் குலத் தலைவன் நாகனின் மகன் திண்ணன். திண்ணனார் படைக்கலப் பயிற்சியும் வேட்டையாடும் பயிற்சியும் பெற்றுச் சிறந்து விளங்கினார். அவருக்குப் பதினாறு வயது ஆனபோது, தந்தை நாகன் அவரை வேடர் குலத் தலைவர் ஆக்கினார் .
ஒரு நாள், வேடர் பலர் சூழ அவர் வேட்டைக்குப் போனார்.
பல விலங்குகளை வேட்டையாடினார். பின்னர் ஒரு காட்டுப்பன்றி விரைவாக ஓட அதைத் துரத்திக் கொண்டு காடன், நாணன் என்ற இருவருடன் பின்னே சென்றார். அப்பன்றி காளத்தி மலைச்சாரலை அடைந்தபோது அதனை வீழ்த்தினார்
அந்த மலை மேல் செல்லும் விருப்பம் திண்ணனாருக்கு உண்டாயிற்று.
அக்காளத்தி மலையின் மேல் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை அவர் கண்டார். அக்குடுமி தேவரின் மீது அவருக்கு அளவில்லா அன்பு உண்டாயிற்று. யாருமின்றித் தனியாக இருக்கும் குடுமித் தேவரின் நிலை கண்டு இரங்கினார். பிறகு தம் வாயில் ஆற்று நீரைக் கொண்டு வந்து அதனால் நீராட்டிப் பன்றி இறைச்சியைப் படைத்தார். இரவு முழுவதும் காவல் இருந்தார். காலையில் மீண்டும் கீழே சென்று இறைச்சியும் நீரும் கொண்டு வந்தார்.
குடிமித் தேவருக்கு வழக்கமாக பூசை செய்யும் சிவகோசரியார் என்ற அந்தணர் அங்கிருந்த இறைச்சி முதலியவற்றைப் பார்த்து மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார்.
இப்படி ஐந்து நாள்கள் சென்றன.
ஐந்தாம் நாள் இரவு சிவக்கோசரியாரின் கனவில் வந்த இறைவன் மறுநாள் காலை அவர் மறைவாய் இருந்து கொண்டு நடப்பதைப் பார்க்குமாறு கூறினார்.
மறுநாள் காலை வழக்கம்போல இறைச்சி முதலியவற்றுடன் திண்ணனார் வந்தார். முன்பே வந்த சிவகோசரியார் மறைவில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது சிவலிங்கத்தின் வலக் கண்ணில் குருதி வடிந்தது திடுக்கிட்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் செய்தார்.
குருதி நிற்காததால், அம்பினால் தம் கண்ணைத் தோண்டி இறைவன் கண்ணில் பொருத்தினார். உடனே குருதி வழிவது நின்றது.
அப்போது குடுமித் தேவரின் இடக்கண்ணில் குருதி வழியத் தொடங்கியது.
திண்ணனார் தமது மற்றொரு கண்ணையும் தோண்டி அங்கு அப்ப முடிவு செய்தார்.
சிவலிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தில் தன் காலை அடையாளத்துக்காக வைத்தார். பிறகு தம் இடக்கண்ணைத் தோண்டி எடுக்க அதன் மீது அம்பை வைத்தார்.
அப்போது சிவபெருமான் மூன்று முறை “கண்ணப்ப நிற்க” என்று கூறித் தடுத்தார். ஆதலால் திண்ணனார் கண்ணப்பர் ஆனார். சிவகோசரியார் காண, வானவர் பூமாரி பொழிந்தனர்.
இறைவன், கண்ணப்பரின் கையைப் பிடித்துக் கொண்டு “ஒப்பில்லாதவனே, இனி நீ என் வலப்பக்கத்தில் என்றும் நிலையாக இருப்பாய்” என்று கூறி அருளினான்.
கண்ணப்பர் வெண்பா
கொட்டும் குருதி குடுமியன் கண்வழிய,
இட்டார்தன் கண்ணை எடுத்தங்கு; – கிட்டுமிடக்
கண்பறிக்கும் போதிறைவன் “கண்ணப்ப” என்றுரைத்தான்
பண்பறிந்து பாராட்டும் பார்!
******************
10)குங்குலியக் கலய நாயனார்.

சோழ நாட்டைச் சேர்ந்த திருக்கடவூரில் கலயர் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். அவர், இறைவனுக்குக் குங்குலிய தூபம் இடும் திருப்பணியைச் செய்து வந்தார். அதனால் குங்குலியக் கலயர் என்ற பெயரைப் பெற்றார்.
இறைவன் அருளால் அவர் வறுமையுற்ற போதும் தம் திருப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். இருந்த பொருளெல்லாம் விற்றும் திருப்பணியைத் தடையின்றிச் செய்து வந்தார்.
ஒருமுறை அவருடைய மனைவி, மக்கள், சுற்றத்தார் ஆகியோர் இரண்டு நாள் உணவின்றி வாடினர்.அப்போது அவர் மனைவி தம் தாலியைக் கொடுத்து அதை விற்று நெல் வாங்கி வரச் சொன்னார்.
அதனைக் கொண்டு அவர் நெல் வாங்கச் சென்ற போது எதிரில் ஒருவன் குங்குலியப் பொதியையக் கொண்டு வருவதைப் பார்த்தார். குங்குலியத்தைக் கண்ட நாயனார் தாலியைத் தந்து அதனைப் பெற்றுக் கொண்டார். அதைக் கொண்டு போய்க் கோயில் களஞ்சியத்தில் சேர்த்து விட்டுக் கோயிலிலேயே தங்கிவிட்டார் . வீட்டில் அனைவரும் பசியுடன் தூங்கிவிட்டனர்.
இறைவன் திருவருளால் பொற் குவியலும், நெற்குவியலும், அரிசி போன்றவற்றையும் குபேரன் கொண்டு வந்து அந்த வீட்டில் குவித்தான். இறைவன் குங்குலிய கலையரின் மனைவி கனவில் தோன்றி வீட்டில் செல்வம் நிறைந்திருப்பதை உணர்த்தினான்.
விழித்தெழுந்த அம்மையார் அனைவருக்கும் உணவு சமைக்கலானார். கோயிலில் இருந்த நாயனாரை, இறைவன் இல்லம் சென்று, பால் சோறு உண்ணுமாறு கூறினார்.
அவ்வாறே இல்லம் சென்று பசியாறினார் நாயனார்
திருப்பனந்தாள் என்ற தலத்தில் இறைவனின் திருமேனி சற்றுச் சாய்ந்து இருந்தது. மன்னன் யானையைக் கொண்டு அதனை நிமிர்த்த முயன்றும் இயலவில்லை. இதனைக் கேள்விப்பட்ட நாயனார் அங்குச் சென்று இறைவன் திருமேனியில் ஒரு கயிற்றைக் கட்டி மறுமுனையைத் தம் கழுத்தில் மாட்டி இழுக்கத் தொடங்கினார். நாயனாரின் அன்பைக் கண்ட இறைவன் சாய்வு நீங்கி நேராக நிற்கத் தொடங்கினார். அனைவரும் நாயனாரின் பெருமையை உணர்ந்தனர் குங்குலியக் கலய நாயனார், பல திருப்பணிகள் செய்து வாழ்ந்த பிறகு சிவபெருமான் திருவடி நிழலை அடைந்தார்
குங்குலியக் கலயர் வெண்பா
பொற்றாலி தந்து பொதிநிறைந்த குங்குலியம்
பெற்றார், கொடுத்துநற் பேறடைந்தார் -உற்றதவர்
இல்லத்தில் செல்வம். இறைவனை நேர்நிறுத்தி
நல்லபணி செய்தார் நனி!
விளக்கம்:
நெல் வாங்குவதற்குக் கொண்டு சென்ற பொற்றாலிக்குக் குங்குலியப் பொதியை வாங்கிக் கோவிலில் கொடுத்துப் பேறு பெற்றார்.
இல்லத்தில் இறைவன் அருளால் செல்வ வளம் பெற்றார்.
சாய்ந்திருந்த இறைவன் திருமேனியை நேராக நிற்கச் செய்தார்.
கிடைத்த செல்வத்தைக் கொண்டு அடியார்க்குத் தொண்டு செய்தார்
****************””””
11) மானக்கஞ்சாற நாயனார்!
கஞ்சாறூர் என்பது சோழ நாட்டைச் சார்ந்த ஒரு தலமாகும். அங்குத் தோன்றிய மானக்கஞ்சாறர் மன்னரின் படைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்று இருந்தார். செல்வ வளம் மிக்க அவர், சிவனடியார் வேண்டுவனவற்றை எல்லாம் மறுக்காது கொடுக்கும் வழக்கம் உடையவர். இறைவன் அருளால் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ந்து மணப்பருவத்தை அடைந்த போது ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மண நாளன்று ஏயர்கோன் கலிக்காம நாயனார் கஞ்சாறூரின் எல்லையை வந்தடைந்தார்.
அப்போது சிவபெருமான் மாவிரதி என்ற பிரிவைச் சேர்ந்த சிவனடியாரின் கோலத்தில் அங்கு வந்தார்.அடியாரை அன்புடன் வரவேற்ற நாயனார்,தம் மகளை அழைத்து வந்து அவரை வணங்கச் சொன்னார்.
வணங்கி எழுந்த மணப் பெண்ணின் மேகம் போன்ற கூந்தலைப் பார்த்த அடியார் மானக்கஞ்சாறனாரிடம் ,”இவளது தலைமயிர் நமக்குப் பஞ்சவடி ஆகும்” என்றார். (பஞ்சவடி என்பது தவசிகள் மார்பில் அணியும் முடியால் பின்னப்பட்ட பூணூலில் ஒருவகை)
அதைக்கேட்ட நாயனார் தம் வாளை உருவி மகளின் கரிய கூந்தலை அரிந்து அடியாரிடம் நீட்டினார். அதை வாங்குவதைப் போல் நின்ற அடியார் உடனே மறைந்தார்.
உமையம்மையொடு வானத்தில் காட்சி கொடுத்த இறைவன் மானக்கஞ்சாறரின் அன்பை அனைவருக்கும் தெரிவிக்கும் பொருட்டே அவ்வாறு செய்ததாகக் கூறியருளினார்.
நாயனாரின் மகள்கூந்தல் முன்போல் வளர்ந்தது.
கலிக்காமர் அவளை மணந்து கொண்டு ஊருக்குத் திரும்பினார்.
“ ஒருமகள் கூந்தல் தன்னை வதுவைநாள் ஒருவர்க் கீந்த பெருமையார்” என்று சேக்கிழார் மானக்கஞ்சாற நாயனாரைப் போற்றுகிறார்.
மானக்கஞ்சாறர் வெண்பா
ஏந்தல் அடியார் எழிலார் மணப்பெண்ணின்
கூந்தலினைக் கேட்கக் கொடுத்தாரே -ஈந்தகுழல்
மீண்டும் தழைத்தது மெய்யருளால், சீர்வதுவை
ஆண்டு நடந்த(து) அறி!
ஏந்தல் – பெருமை மிக்கவன்
வதுவை – திருமணம்
(தொடரும்)
