The Terminal (2004) | thedullwoodexperiment

45 ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் மனதில் / நினைவில் நிற்கும் ஒரு ஜெர்மானியக் கதை.

ஒரு மிக மிகப் பெரிய அரசு அலுவலகம். பல கட்டடங்கள். ஒவ்வொன்றிலும் பல மாடிகள். அதில் பல் வேறு அலுவலகங்கள். ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்பட்ட / சம்பந்தப்படாத அலுவலகங்கள்.

கொஞ்சம் நம்ம DMS மாதிரி ஆனால் அதைவிட பல மடங்கு பெரிய ஆயிரக் கணக்கானவர்கள் வேலை செய்யும் இடம்.

‘டேவிட்’ காலை, மாலையில் எங்காவது பிச்சை எடுத்து ஒரு கேட்பாரற்ற இடத்தில் இரவு உறங்குவது வழக்கம். ஆனால் மதியம் வெய்யில் சுட்டெரிக்கும் போது இந்த அலுவலகத்துக்கு வந்து ஏசி வசதியுடன் கூடிய வரவேற்பு அறையில் வந்து உட்கார்ந்து கொள்வான். ரொம்ப மழை பெய்தாலும் அங்குதான் வருவான். குளிர்காலத்தில் அங்கு heater செய்யப்படும் போதும் அங்குதான் இருப்பான். ஏராளமானவர்கள் வேலை செய்யும், நடமாடும் இடம் ஆதலால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. சிலர் இவனுக்கு காலை / மாலை வணக்கம்கூட சொல்வதுண்டு. கொஞ்சம் கொஞ்சமாக அவன் பல இடங்களுக்கும் செல்வது செல்வதும், லிட்டில் ஏறி இறங்குவதும் உண்டு.

ஒருமுறை ஒருவர் இவனைக் கூப்பிட்டு “கொஞ்சம் என்கூட இரண்டாவது மாடியில் இருக்கும் என் அறைக்கு வா என்று” கூறி தன் கையில் இருந்த பெட்டியையும் பைல் களையும் கொடுத்தார். டேவிட் அதை பணிவோடு வாங்கிக்கொண்டு அவர் பின்னரே சென்றான்.

அவர் இடத்துக்கு வந்ததும். “நீ ‘C’ செக்ஷன்லதான இருக்கே, இந்த சர்க்குலரை எடுத்துக் கொண்டு போய் அங்கே எல்லார்கிட்டேயம் காண்பித்து கை எழுத்து வாங்கி வா” என்றார். “சரி அய்யா” என்று சொல்லிவிட்டு, அந்த சர்க்குலரை வாங்கிக் கொண்டு வந்தான். அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது.

 அவனுக்குப்  படிக்கத் தெரியும். ஆனால் படிக்க வில்லை. நேராக ‘C’ செக்ஷனுக்கு சென்று அந்த சர்க்குலரை முதலில் உட்கார்ந்திருந்த ஒரு அலுவலரிடம் கொடுத்தான். அவர் அதைப் படித்து விட்டு, “அட நம்ம ராபர்ட் ரிடயர்ட் ஆகிறாராமப்பா. பிரிவு உபசாரக் கூட்டம் நாளைய மறுநாளாம். எல்லோரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு contribution செய்யவும் என்று இருக்கிறது. நான் 20 டாலர் போடப் போகிறேன். எல்லோரும் முடிந்த வரையில் நிறைய போடுங்கள். தங்கமான மனிதர். என்று சொல்லி தன் பெயர் எழுதிவிட்டு 20 டாலர் என்று அதற்கு எதிரில் எழுதி பின் பையிலிருந்து 20 டாலர் எடுத்து கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு அடுத்த டேபிளுக்குப் போனான். அவர் “அட ராபர்ட்டுக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா? சரி நானும் 20 போடுகிறேன் ஆனால் இப்ப இல்லை. மதியம் எடுத்து கொடுத்து விடுகிறேன். நீ ஒண்ணு செய் இந்த சர்க்குலரை கொடுத்து விட்டுப் போ. ஒரு 4 மணிக்கு வா. மற்றவர்களிடமும் கேட்டு நானே வாங்கி வைக்கிறேன்.” என்று சொல்லி அதை வாங்கிக் கொண்டார். டேவிட் எதுவும் பேசாமல் வந்து விட்டான்.

4 மணிக்கு போனபோது அந்த மனிதர் “வா வா உனக்காகத்தான் காத்துக் கொண்டு இருக்கிறேன். அவசரமா வெளியிலே போகணும். இந்தா அந்த சர்க்குலர் அதோடு இந்த கவரில் மொத்த கலக்ஷணும் இருக்கு இந்தா என்று கொடுத்தார்” அதை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லி விட்டு பழைய இடத்துக்கு வந்து இந்த அதிகாரியிடம் சர்க்குலரையும் கலெக்ஷன் கவரையும் கொடுத்தான். அவரும் நன்றி சொல்லி விட்டு வாங்கி வைத்துக் கொண்டார்.

இரண்டு நாள் கழித்து அதே அலுவலகத்தில் இவரின் பிரிவு உபசாரக் கூட்டம் நடந்தது. டேவிடும் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டான்.

யார் யாரோ ராபர்ட்டைப் பற்றி உயர்வாகப் பேசினர். பின்னர் இவரும் கண்ணீரோடு பேசினார். அவர் அனுபவங்கள், சேர்ந்த நாளிலிருந்து இன்றுவரை நடந்த நிகழ்வுகள், நன்றி நன்றி என்று என்ன என்னமோ பேசினார். பின்னர் எல்லோரும் அங்கேயே டின்னர் அவர் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். டேவிட் அதில் கலந்து கொண்டான். அருமையான சாப்பாடு. அவன் இது போன்ற ருசியான சாப்பாட்டை சாப்பிட்டது இல்லை. எல்லாம் முடிந்து கிளம்பும் போது, அவனிடம் கவர் கொடுத்தவர் கூப்பிட்டு நன்றி சொல்லி விட்டு மீதி இருந்த ஒரு கேக் பாக்கெட்டை கொடுத்தார். டேவிடு க்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே சந்தோஷமாக அவன் இருப்பிடத் துக்கு சென்றான்.

மறு நாளில் இருந்து மேலும் சிலர் காலை மாலை வணக்கம் சொன்னார்கள்.

பின்னர், ஒரு பதினைந்து நாளுக்குப் பின் 20 டாலர் கொடுத்தவர் இவனைக் கூப்பிட்டு “நம்ம டிபார்ட்மென்ட் “லாயிட் ” ட்ரான்ஸ்வர் ஆகி வேறு ஊருக்கு போகிறார். ராபர்ட்டுக்கு செய்தது போலவே இவருக்கும் ஒரு பிரிவுக் கூட்டம் நடத்தணும். ஒரு சர்க்குலர் தரேன் அதை இந்த டிபார்ட்மெண்ட்டெல்லாம் போய் கலெக்ஷன் செய்து கொண்டு வா” என்று ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அவனும் அதை எடுத்துக் கொண்டு போய். கையெழுத்தும் பணமும் வாங்கி வந்து கொடுத்தான். ஆனால் இந்த முறை ஒரு 20 டாலர் குறைத்துக் கொடுத்தான். யாரும் கண்டு கொள்ள வில்லை. அன்றும் நல்ல ஒரு டீ பார்ட்டி நடந்தது. நன்றாக சாப்பிட்டான். மிகிந்துபோன சில பண்டங்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.

 கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வருடத்தில் 20 முறையாவது – ரிடைர்மென்ட், பதவி உயர்வு, இறப்பு, புதிய அதிகாரிக்கு வரவேற்பு, திருமணம் என்று ஏதாவது பண வசூல் நடந்து கொண்டே இருந்தது. அநேகமாக டேவிட் தான் யாரிடம்மெல்லாம் சென்று எந்த இடத்தில் சென்று வசூலிக்க வேண்டும் என்று அத்துப்படி ஆகி இருந்தது. அவன் ஒரு நிரந்தர வேலை செய்பவன் போல ஆகிவிட்டான். யாருக்கும் சந்தேகமே ஏற்படவில்லை. அவனும் அவ்வப்போது 20, 30, 40 என்று ஒவ்வொரு முறையும் கொஞ்சம் சந்தேகம் வராமல் எடுத்துக் கொண்டான். நல்ல உடைகள், கேண்டீன்  சாப்பாடு என்று வாழ்க்கை வசதியானது.

சில நாட்களுக்குப்பின், ஒரு விபரீதமான யோசனை தோன்றியது. ஒரு சர்க்குலரை தானே தயாரித்தான்.

க்ரிஸ்டோபர் – 56 வயது – திடீரென்று மாரடைப்பால், லீவில் சொந்த ஊரில் இருந்தபோது, இறந்து விட்டார். அவரின் சடங்குகளில் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அவர்கள் குடும்பத்தாருக்கு ஒரு தொகை கொடுக்கவும் உங்களால் முடிந்ததை கான்ட்ரிபகான்ட்ரிபியூட் செய்யவும் என்று ஒரு சர்க்குலரை தயார் செய்து கொண்டு எல்லாரிடமும் கலெக்ட் செய்தான். எந்த டிபார்ட்மென்ட் என்று போட்டிருந்தானோ அந்த இடம் மற்றும் அதன் அருகில் இருந்த அலுவலகங்களுக்கு செல்ல வில்லை. நிறைய கலெக்ஷன்.

அவனுக்கு பெரிய அதிசயம் என்ன என்றால். அவனுடைய கற்பனை கிரிஸ்டோபரை பலருக்குத் தெரிந்து இருந்தது.

“ஓ.. கிரிஸ்டோபரா.. ரொம்ப நல்லவர்.

 “நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் ஜாயின் பண்ணினோம். ஆனால் வேறு வேறு டிபார்ட்மென்ட்”
“குள்ளமா எப்பவும் கையில் ஒரு குடையோடு இருப்பார் அவர்தான்”

“அவரின் பக்கத்து ஊர் தான் நான். ரொம்ப வருஷம் ஆகிவிட்டது அந்த கிராமம் விட்டு வந்து”

என்று பலப்பல விமர்சனங்கள்.

அவனுக்கே ஒரு சந்தேகம் வந்து விட்டது, அப்படி ஒருவர் இருக்கிறாரோ என்று

ஒரு சிலருக்கு அவரைத் தெரியவில்லை.
ஆனாலும் பணம் கொடுத்தார்கள். நல்ல வரும்படி.

அவனை  நாலு மாசத்துக்கு ஒரு தடவை இந்த மாதிரி ஏதாவது ஒரு சர்க்குலர் இவனே போடுவான். இவனை பலருக்கு தெரிந்தது. பலருக்கும் பிடித்திருந்தது. யாருக்கும் சந்தேகமே வரவில்லை.

ஒருநாள் அவன் வரவேற்பு அறையில் ஒரு பெஞ்ச்சில் படுத்திருந்தான். கொஞ்சம் உடம்பு சரியில்லை. இரவு அங்கேயே தூங்கி விட்டான்.

மறுநாள் காலையும் எழுந்திருக்க வில்லை. யாரோ ஒருத்தர் வந்து தட்டி எழுப்பினார். அவன் எழுந்திருக்க வில்லை. வேறு பலரையும் கூப்பிட்டுச் சொன்னார். என்ன என்று தெரியவில்லை. எழுந்திருக்க மாட்டேன் என்கிறானே என்று வேறு பலரிடமும் சொன்னார். எல்லோரும் வந்து பார்த்து விட்டு அட இவன் இறந்து விட்டான் போல என்று என்று சொல்லி வருத்தப் பட்டார்கள். “எவ்வளவு நல்லவனர். ஓடி ஓடி வேலை செய்வான். இவனுக்கு உறவினர்கள் யார்? இருப்பிடம் எது? என்று ஆளாளுக்கு கேள்வி கேட்டார்கள். பதில் சொல்ல ஆள் இல்லை. அதனால் விட்டு விட முடியுமா? யாரோ சொன்னார், ” இவனுக்கு என்று யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறான். அங்கே இருந்த சிலர் சேர்ந்து ஒரு சர்க்குலர் தயார் செய்து பணம் கலெக்ட் செய்து இறுதிச் சடங்கு செய்வது என்று தீர்மானம் செய்தார்கள்.

அதுவரை யாருக்குமே கலெக்ட் ஆகாத அளவுக்கு மிகப்பெரிய தொகை கலெக்ட் ஆனது.