கிருஷ்ணாயன் (Krishnayan)
குஜராத்தி மூலம்- Kaajal Oza Vaidya
ஆங்கில மொழியாக்கம்- Subha Pande
கிருஷ்ணன் என்னும் பெயரை, அதைக் கொண்ட கடவுளைக் கொண்டாடுகிறோம் – குழந்தையாக, தாய் தகப்பனாக, தோழனாக, இன்னும் பலவிதமான பாத்திரங்களாக. இந்தத் தலைப்பையும் பார்த்தால் அவற்றுள் ஒன்றாகத்தான் எண்ணத் தோன்றும். உண்மையில் இது மிக மிக ஆழமாகச் சிந்தித்து எழுதப்பட்ட நூல் என எண்ணுகிறேன். காஜல் ஓஸா வைத்யா (Kajal Oza-Vaidya) எனும் பிரபலமான குஜராத்தி எழுத்தாளர் எழுதியது. சுபா பாண்டே (Subha Pande) என்பவர் இதனை அருமையான ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.
யாருமே எண்ணியிராத புதுமையான கருத்து மூலநூலின் ஆசிரியருக்கு உதித்திருப்பது நாம் செய்த புண்ணியம். நமது அபிமான கிருஷ்ணனின் இன்னொரு பரிமாணத்தை, அற்புதமான அவனைப் பற்றிய சிந்தனைகளை அறிந்து கொள்ள இந்த ஆங்கில மொழியாக்கம் தானே கைகொடுக்கிறது?
<<<<<>>>>>
சரஸ்வதி, கபிலா, ஹிரண்யா ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில், கிருஷ்ணன் வேடன் ஜராவின் அம்பினால் அடிபட்டு காலில் ரத்தம் ஒழுக மிக வேதனையுடன் மரத்தினடியே படுத்துள்ளான். அவன் தனக்கு நெருக்கமான, தன்னுடன் ஆத்மபூர்வமாகவும் தொடர்புள்ள நான்கு பெண்களின் அனுமதியில்லாமல் இவ்வுலகைவிட்டு நீங்க முடியாது. யார் அந்த நான்கு பேர்? கிருஷ்ணனிடம் தன்னையே கொடுத்தவர்கள்; அவன் அன்பொன்றையே பிரதானமாகக் கருதுபவர்கள். தன் இதயராணியும் பட்டத்தரசியுமான ருக்மிணி, தனது ஆத்ம சிநேகிதியான திரௌபதி, இளமைப்பருவத்துத் தோழியும் காதலியுமான ராதா, மற்றொரு இளையராணியான விளையாட்டுப் புத்தியுடைய சத்யபாமா.
ஒவ்வொருவருடனும் விடைபெறும் முன் அவர்களுடனான தனது நாட்களை, செயல்களை, உரையாடல்களைத் திரும்ப அசைபோடுகிறான் கிருஷ்ணன். மனிதனான தன்னை அவர்கள் தெய்வம் என அறிந்திருந்தாலும், தமது வாழ்வின் ஒரு இன்றியமையாத அங்கமாக அவர்கள் அவனை இணைத்து வைத்திருந்தாலும், அவன் தங்களைப் பிரியும் நாள் நெருங்கிவிட்டதனை ஏதோ ஒரு சூட்சுமத்தால் உணர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொருத்தியும் அவன் ஏன் தன்னை விட்டுவிட்டுத் தன்னந்தனியனாக விடைபெறுகிறான் என்று தவிக்கிறாள். அவன் கொடுக்கும் விடை அற்புதம்!
ஒவ்வொரு சந்திப்பும், உரையாடலும், விடைபெறுதலும் நெகிழ்ச்சியின் உச்சகட்டம். கண்களில் வழியும் நீரினூடேதான் என்னால் இப்புத்தகத்தைப் படிக்க முடிந்தது.
எத்தனைமுறை இதனைப் படித்திருப்பேன் என்பதும் அந்தக் கிருஷ்ணனுக்கு மட்டும்தான் தெரியும்.
<<<<<>>>>>
தன் மனதில் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருக்க, திரௌபதி கிருஷ்ணனைச் சந்திக்க துவாரகைக்கு வருகிறாள். கிருஷ்ணனுடனான தனது கடைசி சந்திப்பு அது என அவள் உணர்ந்தாளா? காத்திருந்து, ஒரு காலைப்பொழுதில் அவன் பூஜையிலிருந்து வந்ததும், அவனிடம் விடைபெற்றுக் கொள்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் அமைதியாக மனதில் எடைபோடுவது ஆசிரியரின் எழுத்துவன்மை!
சொல்ல நினைத்தது ஒன்றையும் திரௌபதியால் சொல்ல முடியவில்லை. ஆசிரியர் திரௌபதியின் மனத்தைத் திறந்துகாட்ட முயல்கிறார்:
கிருஷ்ணன் கேட்கிறான்: “ஏதாவது சொல்ல வருகிறாயா யக்ஞசேனி?”
“எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை கிருஷ்ணா.”
“சொல்ல ஆரம்பி; தன்னால் வரும்.”
“எனது எண்ணங்களையும் சொற்களையும் நான் கூறுமுன்பே அறிந்து கொள்பவன் நீ கிருஷ்ணா. நான் சொல்லிவிட்டால் பின்பு சொல்வதற்கு ஒன்றுமில்லாமல் போய்விடுமே.”
“நான் முழுமையாக உன்னுடையவன் தோழி. உன்னுடன் எப்போதும் இருப்பவன், அதனால் என்னிடம் சொல்வதனால் எதனை நீ இழப்பாய்?”
“த்வதீயம் வஸ்து கோவிந்தம் துப்யமேவ சமர்ப்பயே- இதனையே நான் சொல்ல வந்தேன். எனக்காக நீ கொடுத்த என்னுடைய எல்லாவற்றையும், என்னையும் உன்னிடம் அர்ப்பணித்தபின்பு வேறென்ன சொல்வேன் நான்?” கண்களில் பொங்கும் நீருடன் அவள், கிருஷ்ணை வெளியேறுகிறாள்.
அவன் அனைவருக்கும் சொந்தம். அவன் அனைவரையும் அவரவர்கள் வேண்டியபடியே ஏற்றுக்கொள்பவன்!
<<<<<>>>>>
அவனிடம் தீராத காதல் கொண்டு உருகி உருகி வேண்டி, ஒரு பெண்ணும் செய்யத் துணியாத செயல்களை (தன்னைக் கவர்ந்து செல்லும் வழிமுறைகளை அவனுக்கு எடுத்துக்கூறி) செய்து தன் வாழ்வை அவனோடு பிணைத்துக்கொண்டவள் காதல் மனைவி ருக்மிணி. இத்தனை காலத்திற்கப்புறமும் அவள் மிகுந்த துயரத்துடன் கேட்கும் ஒரு கேள்வி அவனில் எதிரொலித்தது.
“ஏன்? இத்தனை காலங்களாக உமது இந்தத் துயரங்களைத் தன்னந்தனியனாகச் சுமந்து கொண்டிருக்கிறீர் ஆர்யபுத்திரரே? ஏன்? நான் உமது செயல்களைத் தடுத்திருப்பேனா, மறுத்திருப்பேனா? இல்லை இல்லை. உமது அன்பு மனையாளான எனக்கு இதற்குக் கூடவா பாத்தியதை இல்லை? வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும், தர்மம், அர்த்தம், காமம் ஆகிய பாதைகளில் உம்முடன் கைகோர்த்து நான் நடந்திருக்கிறேன். இப்போது விடுதலை (மோக்ஷம்) வேண்டும்போது ஏன் தனியாகச் செல்கிறீர்?”
உள்ளத்தைக் கிழித்துக் குதறும் கேள்விகள். கடவுளேயானாலும் மனிதனாகப் பிறந்துவிட்டால் மனிதர்கள் அனுபவிக்கும் உள்ளத்துயரங்களை அப்படியே அனுபவிக்க வேண்டும் எனும் நியாயத்திற்கு, தர்மத்திற்குத் தன்னை உட்படுத்திக் கொண்டவன் கிருஷ்ணன்.
ருக்மிணியின் கேள்விக்கு அவனிடம் உத்தரம் இல்லை. அவனுக்காக இப்பெண்கள் தமது அனைத்தையும் கொடுத்து அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்வு அவனுடையதுடன் சங்கமமாகி விட்டிருந்தது. <<<<<>>>>>
அடுத்தது அவனுடைய உயிர்க்காதலி கோகுலத்து ராதா.
திரும்ப ஆசிரியரின் சொற்களை நாடுகிறேன்:
ராதா: “நீ என்னை விட்டுச் சென்றாலும் நான் உன்னுடனேயே இருப்பேன் கிருஷ்ணா ….. நீ என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டு போக இயலாது தெரியுமா? நீ வேண்டும்போது என் பெயரை ஒருமுறை உச்சரி, நான் உன் பக்கத்தில் இருப்பேன். …….”
காதலால் நிரம்பிய, கருணையும் அக்கறையும் கொண்ட துயரந்தோய்ந்த இரு விழிகள் சரஸ்வதி நதியின் நீரில் மிதந்தன. “என்னை விட்டுவிட்டுத் தனியாகப் போகப் போகிறாயா கிருஷ்ணா? எப்படி உன்னால் முடியும்? நீ திரும்பி வர மாட்டாய். பார்! நான் உன்னுடன் வருவேன். நான் உன்னுடைய நிழல். ஒருவர் எவ்வாறு தன் நிழலைவிட்டுச் செல்ல முடியும்?”
ஆயர்பாடியின் காலைநேரத்து ஓசைகள் கிருஷ்ணனின் காதில் விழுகின்றன. வளையல்கள் குலுங்கத் தயிர் கடையும் ஓசை; பாலைக் கறக்கும் ஓசை; நுரைபொங்கும் பாலின் வாசம், பசுக்களின் கழுத்து மணியோசை… யாரோ “கண்ணா, கண்ணா,” என அழைக்கும் குரல்……
தோழி, வாழ்க்கைத்துணைவி, காதலி அனைவரும் இணைந்த பெண்மை, அவனுடன் ஒன்றி அவனில் முழுமை பெற்றுவிட்டது. மூன்று நதிகள் சங்கமமாவது போல என்கிறார் ஆசிரியர்.
நான் சிந்திக்கிறேன் ………. ப்ரமை பிடித்தது போல அமர்ந்திருக்கிறேன். ஒரு பெண் எழுத்தாளர், தாமே அப்பாத்திரங்களாக மாறி அப்பெண்களின் உள்ளங்களைத் திறந்து காட்டும் அனுபவம் பிரமிக்க வைக்கிறது.
<<<<<>>>>>
சத்யபாமா வேறு விதம். ஒரு சிறுமியின் பிடிவாதமும் குழந்தையின் குதூகலமும் நிரம்பியவள். இப்போது கூட பிரபாச க்ஷேத்திரத்துக்கு கிருஷ்ணனுடன் செல்வதற்காகத் தன்னை நன்கு அலங்கரித்துக்கொண்டு அவர்களுடன் புறப்பட்டு விட்டாள். பெண்கள் யாரும் வருவதற்கில்லை என்றதும் அவளுடைய ஆசை நிராசையாகி விட்டது. கிருஷ்ணன் அவளுக்கு, அவள் ஏன் வரமுடியாது என்பதனைப் பூடகமாக உணர்த்த முயல்கிறான். புரிந்ததோ இல்லையோ, பாமா அமைதியாகி விடுகிறாள்.
<<<<<>>>>>
இப்படிப்பட்ட பாத்திரங்களுடன் ஒன்றி விடுவோம். தன் இறுதிப் பொழுதுகளில் தன்னுடன் அவர்களது வாழ்வைப் பிணைத்துக்கொண்ட நான்கு பெண்களைப் பற்றிச் சிந்திக்கிறான் கிருஷ்ணன் எனும் மானிடன்; மானிடனாகப் பிறந்த கடவுள்!!
மனோதிடம் வாய்ந்த, பட்டத்து அரசி ருக்மிணி தன்னை விட்டுவிட்டு அவன் இறுதிப்பயணம் தனியாக ஏன் அமையவேண்டும் எனக் கேட்கிறாள்.
திருமணத்தின் பொருளை அறிந்தும் அறியாமலும் இன்னும் தேடியபடி இருக்கும் விளையாட்டுப் புத்திகொண்ட சத்யபாமா.
திரௌபதி அவனுடைய ஆத்ம தோழி, நம்பிக்கைக்குகந்த அந்தரங்க சகி, அவன் என்றேனும், எப்போதாவது தன்னைக் காதலித்திருக்கிறானா என அறிய விழைகிறாள்.
ராதா, கிருஷ்ணனின் உள்ளத்திலும் ஆத்மாவிலும் ஒன்றிவிட்டவள்.
இவர்கள் அனைவரும் எவ்வாறு அவனுக்கு விடைகொடுக்கிறார்கள் என்பதே இந்த நூலின் தாத்பர்யம். ஒரு விறுவிறுப்பான கதைபோல எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் வெகு அழகாக எழுதிச் சென்றிருக்கும் விதமும் உள்ளத்தை மயில்பீலி போல வருடுகிறது. காதில் அந்த மாயக்கண்ணனின் குழலோசை ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. உள்ளம் கனத்துக் கிடக்கிறது. கண்கள் கிருஷ்ணனின் ப்ரியையான யமுனை எனும் காளிந்தியுடன் புனலாகப்பொங்கப் போட்டியிடுகின்றன. கிருஷ்ணனின் மீதான அன்பு, ஆசை, காதல், பக்தி, பாசம் அனைத்தும் மேலும் பெருகி வழிகிறது. நானும் அவனில் கரைகிறேன்….
த்வதீயம் வஸ்து கோவிந்தம் துப்யமேவ சமர்ப்பயே!
***************************
பி. கு. அமேசானில் இப்புத்தகம் கிடைக்கும்.

