ஆனால் 2022 இல் நடந்த புத்தக கண்காட்சியில் இரண்டு வருடங்களாக தொட்டின் காரணமாக தொற்றுநோய் அச்சத்தின் காரணமாகவும், பல கட்டுப்பாடுகளின் காரணமாகவும் முடங்கிப் போன வாழ்க்கையில் இருந்து மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைக்கு கிட்டத்தட்ட திரும்பிய நிலையில் குடும்பம் குடும்பமாக புத்தக கண்காட்சிக்கு வந்தார்கள். 2022 வந்தவர்களின் பிரதான நோக்கம் நண்பர்களை சந்திப்பதும், உரையாடுவதும்தான். வந்தவர்களில் பெரும்பாலோர் புத்தகங்கள் வாங்காமல் கூட சென்றார்கள். ஒவ்வொருவருடமும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மூன்று வாரங்களில் புத்தக கண்காட்சிக்கு வருகிறார்கள் .இந்த வருடமும் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் வந்ததாக சொல்லப்படுகிறது. பத்து ரூபாய் நுழைவுச்சீட்டில் இருக்கும் வரிசை எண்ணை கொண்டு தான் ஓரளவுக்கு இதை கணக்கிடுகிறார்கள் .ஆனால் சிறுவர்களுக்கும் ,மாணவர்களுக்கும் அனுமதிச்சிட்டு தேவையில்லை .சிறுவர்களுக்கென்று சில அரங்குகள் பிரத்தியேகமாக இருந்தன .சுய முன்னேற்றம் ,போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்ப அரங்குகள் ( youtube மற்றும் ஈ புக் ) மற்றும் உயர் கல்விக்கான பாட புத்தகங்கள் இவற்றுக்காக மட்டுமே அரங்குகள் தனியாக இருந்தன. அதுமட்டுமின்றி கேரளம் ,கர்நாடகம் ,டெல்லி பதிப்பகக்தாரர்களின் அரங்குகளும் இருந்தன.
இந்த வருடம் எதிர்பாராத விதமாக இரண்டு நாள் மழை பெய்தது . மழையினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் முன்னேற்பாடுகள் செய்வதற்காக ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு , சில முன்னேற்பாடுகள் அரங்கிற்குள் நிர்வாகம்( பப்பாசி) செய்திருந்தது.கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் புத்தக கண்காட்சியிக்கு தினமும் சென்று வருகிறேன் .
குவிகம் கிருபானந்தனும், நானும் விருட்சம் அழகிய சிங்கருக்கு உதவியாக இருக்கும் பொருட்டு சென்று வந்தோம் . இது ஒரு நல்ல அனுபவம்.இதற்கு முந்தைய மூன்றாண்டு புத்தக கண்காட்சிக்கும் இந்த வருட கண்காட்சிக்கும் சில வேறுபாடுகளை( மாற்றங்களை) நான் கவனித்தேன் .
மாற்றங்களைப்
பற்றி எழுதுவதற்கு முன்னால் சில முக்கியமான காரணிகளைப் பற்றி சொல்லுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 1950 க்கு பிறகு அதாவது தேசவிடுதலைக்குப் பிறகு , காமராஜர் காலத்தில் ,( மதிய உணவோடு )தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் அதிகமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. , ஒரு புதிய தலைமுறை பள்ளிக்கூடத்திற்கு வந்தது . நகர்ப்புறம் மட்டுமல்லாது பரவலாக கிராமங்கள் உட்பட தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து தரப்பினரும் கல்வி அறிவு பெற்றனர். இதன் விளைவாக எழுபதுகளில் எழுத படிக்க தெரிந்தவர்கள் அல்லது கல்லூரி சென்று படித்து பட்டம் பெற்றவர்களின் உயர்ந்ததோடு ஒரு மிகப்பெரிய வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்தது. இந்த புதிய தலைமுறையிலிருந்து புதிய எழுத்தாளர்களும் எழுதத் தொடங்கினார்கள்.
நவீன சிந்தனை, பழைய வாழ்க்கை முறையை பதிவு செய்தல் , இடது சார்பு பொதுவுடமை சார்ந்த இலக்கியங்கள் , புதிய வடிவமும் பேசுபொருளும் வட்டார வழக்குகளும் அதுவரை பேசப்படாத மக்களது வாழ்வியல் சூழலும் இலக்கியத்தில் வெளிப்பட்டன .ஒரு பெரிய வாசகர் வட்டமும், புதிய எழுத்தாளர்களும் உருவான இந்த காலகட்டம் அச்சு இலக்கியத்தின் உச்சம் என்றே சொல்லலாம் .இது கிட்டத்தட்ட 90 வரை இந்த போக்கு நீடித்தது .
90க்கு பிறகு தமிழ் வழி கல்விக்கு பதிலாக ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் , தொழில்நுட்ப மாற்றங்களும் குடும்ப மற்றும் புற உலகச் சூழலும் இந்த இளம் தலைமுறையினரின் முன்னுரிமைகளை மாற்றியமைத்தது.
இந்த பின்னணியில்தான் புத்தக கண்காட்சியில் யார் யார் வந்தார்கள். எந்த மாதிரியான புத்தகங்கள் பெரிதும் வாங்கப்பட்டன என்பதை நாம் கவனிக்க வேண்டும் .
50 லிருந்து 70 வரைக்கும் பிறந்த தலைமுறையினரில் பெரும்பாலோர் 60 வயதை கடந்தவர்கள். இவர்கள் பழைய எழுத்தாளர்கள் முதல் 90 வரை எழுதிய பிரபலமான எழுத்தாளர்களின் பெரும்பாலான படைப்புகளை முன்னமே வாங்கி இருப்பார்கள் .படித்தும் இருப்பார்கள். இது தவிர பல பிரபலமான எழுத்தாளர்கள் (உதாரணம் புதுமை பித்தன், ஜெயகாந்தன் …..) அனைத்து படைப்புகளையும் இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து படித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது . இந்தப் பின்னணிகளை மனதில் நிறுத்தி இன்றைய இந்த வருட புத்தக கண்காட்சி. மீண்டும் சொல்லுவோம் .பொங்கல் விடுமுறையில் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. ஆனால் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. விற்பனையும் நன்றாகவே நடந்ததாக தெரிகிறது .
இனி வாசகர்கள் அல்லது புத்தக கண்காட்சிக்கு வந்தவர்களின் விருப்பத்தேர்வு எதுவாக இருந்தது இதை அறிந்து கொள்வதில் எனக்கும் கொஞ்சம் ஆர்வமாகவும் இருந்தது. பெரும்பான்மையோர் இளைஞர்கள் தான். இவர்களது விருப்பத்தேர்வு அபுனைவு (nonfiction) , சுய முன்னேற்றம் , ஆங்கில நாவல்கள் , பங்குச் சந்தை. மற்றும் முதலீடு சம்பந்தமான நூல்களாகத்தான் இருந்தது. இந்த வகை நூல்கள் தமிழிலும் அதிகமாக விற்பனை ஆகி உள்ளது .
குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இளைஞர்களின் கூட்டம் இருந்தது பாரதிபுத்தகாலயம், NCBH, பெரியார் பதிப்பகங்கள், நீலம் பதிப்பகம் ( அம்பேத்கர் படைப்புகள் மற்றும் தலித் இலக்கியம் )காலச்சுவடு…….. இது போன்ற பதிப்பகங்களில் இளைஞர்களின் கூட்டம் இருந்தது. பெரும்பாலும் அபுனைவு நூல்களை(NonFiction) வாங்கியுள்ளனர். கவிதை புத்தகங்கள் அவ்வளவாக விலை போகவில்லை. திரைப்படங்களின் மூலமாக பிரபலமான பல கவிஞர்களின் கவிதை தொகுப்புகள் அனேகமாக தூசி தட்டப்பட்டு அடுத்த புத்தக கண்காட்சிக்கு காட்சி பொருளாக இருக்கும் . தமிழில் எளிதாக / சரலமாக படிக்க முடியாத இளைஞர்களில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் வெளிவந்த திருக்குறள், புறநானூறு , பண்டைய இலக்கியங்களை விரும்பி வாங்கினார்கள்
.எனவே நமது தமிழ் இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதன் மூலம் , (உருவாக இருக்கும் ஒரு பெரிய சந்தை) அடுத்த .தலைமுறையினரை பரவலாக சென்றடையும் என்று தெரிகிறது .இதற்கு ஒரு சந்தையும் உருவாகி இருப்பதாக உறுதியாக சொல்லலாம் .
ஜெயமோகன், எஸ்.ரா அரங்குகள் எப்பொழுதும் அடர்த்தியாகவே இருந்தது
மாலையில் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளுக்கான அரங்கத்தில் , சிலர் தங்களது அரசியல் சார்பையும் ஓரளவுக்கு காட்டிக்கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். விதிவிலக்காக பல இலக்கியங்களிலிருந்தது மேற்கோள் காட்டி , புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாக திரு இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் உரை இருந்தது . புத்தகம் வெளியீடு மற்றும் அறிமுகம் போன்ற நிகழ்ச்சிகளுக்காகன சிற்றரங்கில் ,விருட்சம் சார்பாக இலங்கை எழுத்தாளர் சாந்தன் அவர்களின் ஐந்து நூல்கள் பற்றிய ஒரு நிகழ்வு ஜனவரி 30 ஆம் தேதி காலை நடைபெற்றது. அழகிய சிங்கர் கேட்டுக் கொண்டதன்படி சாந்தனின் அசோகவனம் என்ற நூலை (8கதைகளின் தொகுப்பு) பற்றி நான் பேசினேன் . எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இன்றி பல எழுத்தாளர்களும்,, பிரபலங்களும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கவிஞர் விக்கிரமாதித்தன் ,மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் சுயசரிதயை எழுதிய எழுத்தாளர் ஜீவசுந்தரி, இருவரும் எந்தவிதமான ரொம்ப இயல்பாக பார்வையாளரில் ஒருவராகவே வந்து போனார்கள். இருவரும் அரங்கிற்கு விருட்சம் அரங்கிற்குவந்தது மகிழ்ச்சியான செய்தி.
இந்த முறை பிரபலமான பல எழுத்தாளர்களின் நூல்களும் சாகித்ய அகாடமி விருது பெற்ற வேல் பாரி, பழைய எழுத்தாளர்களின் படைப்புகளும் அவ்வளவாக விற்பனையாகவில்லை. பல படைப்புகள் சந்தையின் மதிப்பை வெகுவாக எழுந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், எப்பொழுதும் நன்றாக விற்பனையாகும் “பொன்னியின் செல்வன் “நாவல் தனது மதிப்பையும், ஈர்ப்பைபும் முழுவதுமாக இழந்து விட்டது போல தோன்றுகிறது .பொன்னியின் செல்வன் நாவலின் விற்பனை சரிவுக்கு மனிரத்தனம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமே பிரதான காரணம். ஒரு நாவலை படிக்கும் பொழுது ,அதுவும் சரித்திர நாவலை படிக்கும் பொழுது ஒவ்வொரு வாசகனுக்கும் அவனுக்கான கற்பனை கதாபாத்திரங்கள் காட்சிகள் எல்லாம் இருக்கும் .அந்த கற்பனை உலகத்தை பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து சுத்தமாக அழித்துவிட்டார் இன்றைய தலைமுறையினர் வரை அனைத்து தரப்பினரையும் இன்றும் தக்க வைத்திருப்பவர் எழுத்தாளர் சுஜா காத்திருக்கிறதுதா தான் அவரது படைப்புகள் இன்றும் சந்தை மதிப்பை இழக்கவில்லை .புதிய வாசகர்களும் வாங்குகிறார்கள் . சுஜாதாவை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
கண்காட்சி தொடங்குவதற்கு முதல் நாள், திருமண மண்டபத்திற்கு திருமணத்திற்கு முந்தைய நாள் பெண் வீட்டார் சென்று இறங்குவது போல, எல்லா பதிப்பகத்தாரும் பெட்டி பெட்டியாக புத்தகங்களோடு அரங்கிற்குள் வந்து எல்லாவற்றையும் சீராக காட்சிப்படுத்தியபின்் , திருமண மண்டபம் கலை கட்டுவது போல ரம்யமான ஒரு அழகை புத்தக கண்காட்சி பெற்றது .வாசகர்கள் வருவதற்கு முன்னால் காலையில் அமைதியான அந்த சூழலில் எல்லா புத்தகங்களையும் பார்க்கும் பொழுது ,எல்லா பறவைகளும் வந்து வேடந்தாங்களில் அமர்ந்திருப்பது போல என்ன ஒரு அழகான காட்சி. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் , பல அறிவாளிகளின் சிந்தனைகள் , எவ்வளவு கற்பனைகள் ,எவ்வளவு தகவல்கள்………. அந்தச் சூழலை வர்ணிப்பதற்கு வார்த்தைகளுக்கு வலு வில்லை .அதே போல புத்தக கண்காட்சி முடிந்த கடைசி நாள் இரவு ,திருமணம் முடிந்த மறுநாள் மண்டபத்திலிருந்து பெண் வீட்டார் தங்களது பொருள்களை எல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு வீடு திரும்புவது போல இருந்தது . திருமண மண்டபம் திடீரென்று கலை இழந்து வெறுச்சோடி இருக்கும் அதே போல மனநிலையில் தான் கடைசிநாள் இரவு இருந்தது. பரவாயில்லை மீண்டும் நமது நண்பர்களின் சிறந்த படைப்புகளோடு அடுத்த வருடம் மேலும் கூடுதல் வாசிப்பு அனுபவத்தோடு கண்காட்சியில் சந்திப்போம். அந்த நாட்களுக்காக இப்போதே மனது ஏங்குகிறது _காத்திருக்கிறது.
புத்தக கண்காட்சிக்கு இணையாக பழைய புத்தக நடைபாதை கடைகள் அதிகமாகவே இருந்தது. மக்கள் கூட்டம் அங்கு அதிகம். கடைக்காரரிடம் நமக்கு வேண்டிய புத்தகத்தின் பெயரைச் சொன்னால், அவரே அது சம்பந்தமான புத்தகங்களையும் அதே புத்தகத்தையும் தேடி எடுத்து கொடுத்து விடுவார் .அவர்களிடமும் சென்று உரையாடினேன் .அவர்களின் கூற்றுப்படி புத்தக கண்காட்சியின் காலத்தில் , பல தலைப்புகளிலும் பழைய புத்தகங்களை அதிகமாக சேகரித்து கடை வைப்பதற்கு தயாராகி விடுவார்களாம். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது . நடைபாதை பழைய புத்தக கடை வியாபாரிகள் , பிரபல எழுத்தாளர்கள் மட்டும் இன்றி இந்தக் காலத்து இளைஞர்களின் விருப்பத்தேர்வு எது என்பதும் ஓரளவிற்கு நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் . வியப்பாக இருந்தது.
விருட்சம் அரங்கில்(744&745) தினந்தோறும் நண்பர்கள் வந்து , சிறிது நேரம் இருந்து உரையாடி மொபைலில் படம் பிடித்து சென்றது மகிழ்வான தருணங்கள். நண்பர் நாகேந்திர பாரதி வரும்பொழுது நிச்சயம் உண்டு நொறுக்குத் தீனி.
ஒரு கொசுறுத் தகவல் இந்த முறை நான் வாங்கிய புத்தகங்களை காட்டிலும் ,கண்காட்சியில் இருந்த நேரங்களில் படித்த புத்தகங்கள் அதிகம்.
வேள்பாரி நாவல் நண்பர்களின், ‘பாணர்கள் குழு ‘ வின் சிறுகதைத் தொகுப்பு ‘இராவெரி ‘ புத்தகம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்படும் நேரம் நெருங்கி விட்டதால் கண்காட்சியில் நுழைந்ததும் நேராக அந்தப் ‘ பொன்னி ‘ ஸ்டாலுக்கே போய் விட்டாகி விட்டது. ‘ வாங்க அண்ணா ‘ என்று அன்புடன் வரவேற்று , என்னை நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினார் டாக்டர் நந்தினி . சுரேஷ் ,சுகேஷ் , மகேஷ் என்று பாணர்கள் பலர் அறிமுகம் .அவர்களைத் தொடர்ந்து மதுரை மண்ணுக்கே உரிய வேகமும் விறுவிறுப்புமாக இயங்கிக் கொண்டிருந்த அருள் அவர்களுடனும் . அமைதியும் ஆற்றலும் நிரம்பிய டேனியல் அவர்களுடனும் சந்திப்பு . முக நூலில் மட்டுமே சந்தித்திருந்த பாணர்களுடன் நேரடிச் சந்திப்பு . கிண்டலும் சண்டையாக , அந்த வாட்ஸப் குழுவே அங்கே காட்சி அளித்தது .
அதிக உற்சாகம் அளிக்கும் இந்தியன் வங்கி நண்பர் தலைவர் தர்மராஜ் வெளியூர் சென்று விட்டதால் வர இயலவில்லை என்ற விபரமும் தெரிய வந்தது . புத்தக அமைப்பில் பெரும் பங்கு வகித்த தங்கராஜ் அவர்களும் மதுரையில் இருந்து வர இயலாத சூழ்நிலை.
பக்கத்தில் இருந்த தேசாந்திரி பதிப்பகம் சென்ற நண்பர்களுடன் சேர்ந்து சென்று எஸ் ராமகிருஷ்ணன் அவர்களை அழைத்து வரும்போது , அவரது பதிப்பகப் புத்தகங்கள், கொடும் மழையால் பெருத்த சேதமடைந்ததற்கு வருத்தம் நிறைந்த விசாரிப்புகள். மற்றும் சில இலக்கிய அளவளாவல் . அப்போது ராகம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் பற்றி விசாரித்தபோது ‘ சாருகேசி ‘ என்ற பழம்பெரும் எழுத்தாளர் , ஐம்பது ,அறுபதுகளில் எழுதியவர் , முன்பு தொடர்ந்து எழுதி வந்த இசை பற்றிய கட்டுரைகள் விபரம் தெரிய வந்தது. அது புத்தகமாகக் கிடைக்கவில்லை. இது போன்று ப்ரிண்டில் வெளிவராமல் மறைந்து போன பல இலக்கியப் பொக்கிஷங்களில் ஒன்றாக இருக்கலாம். குவிகம் பசுபதி சார் அவர்களின் ப்ளாக்கில் தேடினால் கிடைக்கலாம் சில பொக்கிஷங்கள் என்றும் தோன்றியது .
தொடர்ந்த பொன்னி அரங்க புத்தக வெளியீட்டு விழாவில் , எஸ்ரா அவர்களை வரவேற்றுப் பேசிய பாணர் குழுவின் நித்யா அவர்களின் வரவேற்புரை ஒரு இலக்கிய உரை. தொடர்ந்து புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய எஸ் ரா அவர்களின் வாழ்த்துரை இளம் எழுத்தாளர்களுக்குச் சிறந்த அறிவுரை . ‘தொடர்ந்து எழுதுங்கள் , வித்தியாசமான தலைப்பு வையுங்கள். திரும்பப் படித்துத் திருத்தம் செய்யுங்கள் . மூத்த எழுத்தாளர்கள் கதைகளைப் படியுங்கள், உங்கள் கதையைப் பற்றிய காரசார விமரிசனங்களை அலசுங்கள்’. என்று பல அறிவுரைகள். நமது பாணர் குழுவில் நடக்கும் காரசார விமர்சனங்கள் நம்மைப் புண்படுத்தாமல் பண்படுத்தும் நினைவும் நமக்கு ஞாபகம் வந்தது. இந்த நிகழ்வுக்கு எஸ் ரா அவர்களுடன் அவரது துணைவியாரும் வந்து சிறப்பு செய்வித்தது பாணர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது .
முன்பதிவு செய்த அனைவர்க்கும் நந்தினி மேடம், அருள் , டேனியல் மூவர் குழு உடனே புத்தகக் கட்டுகளைப் பிரித்து , புத்தகங்களைக் கொடுத்தது சிறப்பு. முன் பதிவு செய்து தேவையான அளவு புத்தகங்களை பிரிண்ட் செய்த பாணர்களின் பதிப்பக யுக்தி அருமை. முன்பதிவிலே ஒரே வாரத்தில் இருநூறு புத்தகங்கள் ஆர்டர் ஒரு சாதனை. வாழ்த்துகள் .
தொடர்ந்து பாணர் நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு நவீன விருட்சம் ஸ்டால் சென்று அறிமுகம், புகைப்படங்கள். அழகியசிங்கரின் நவீன விருட்சம் இதழ் அளிப்பு . மற்றும் அவரது இலக்கிய வாட்சப் குழுக்கள் மூலம், பல கதைஞர்கள், கவிஞர்கள், பாடகர்கள் போன்றோரை உருவாக்கியும் , உற்சாகப்படுத்தியும் அவர் செய்து வரும் இலக்கிய சேவை பற்றிய கருத்துப் பரிமாறல் . இந்த இலக்கிய சேவை அழகியசிங்கரின் பெயரை இலக்கிய உலகில் என்றும் நிலைத்து இருக்கச் செய்யும் .
தொடர்ந்து விருட்சம் ஸ்டாலிலும் வேறு சில ஸ்டால்கள் சென்றும் புத்தகம் வாங்கல். தேசாந்திரி பதிப்பகத்தில் ‘ தேசாந்திரி-எஸ்ரா ‘ . நியூ செஞ்சுரி ஸ்டாலில் ‘இலக்கியத்தில் மேலாண்மை-இறையன்பு ‘ . விருட்சம் ஸ்டாலில் ‘ ‘வேதம் புதுமை செய்த பாரதி-ஸ்ரீரங்கம் மோகனரங்கன் ‘, தொ.பரமசிவன் படைப்புகள் ‘ . சென்ற வாரம் வந்தபோதே விருட்சம் ஸ்டாலில் பத்துப் புத்தகங்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாங்கியாயிற்று. இந்தப் புத்தகங்களும் அந்த அலமாரியில் அவற்றோடு சென்று சேரும். படிக்கும் போது படிக்கப்படும்.
கண்காட்சியில் கால் நடந்தபோது கண் பார்த்த நண்பர் சொல்வேந்தர் மில்டன் அவர்களுடன் அளவளாவால் . அடுத்துப் பார்த்த கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களை நவீன விருட்சம் அழைத்து வந்து உரையாடல், அவரது ‘ உத்தரகோசமங்கை ‘ கவிதை புத்தகம் பற்றிய விசாரிப்பு. அவர் எனது சொந்த ஊரான உத்தரகோசமங்கை சென்று வந்த விபரம் தெரிந்து கொள்ளுதல். திரும்ப அவரை அவர் விரும்பிய மற்றுமொரு ஸ்டாலில் சென்று விட்டு விட்டு , அவரது உடல் நலம் பேண வாழ்த்துச் சொல்லி விட்டுத் திரும்ப ‘ நவீன விருட்சம் ‘.
இளைப்பாற ஒரு சென்டர் பாயிண்ட் நவீன விருட்சம். பொருத்தமான பெயர் தான். . அழகியசிங்கருக்கு உதவியாக எப்போதுமே அங்கே இருக்கும் கிருபானந்தன், ராஜாமணி அவர்களுடன் உரையாடல். கிருபானந்தன் அவர்களின் நகைச்சுவையும் கிண்டலும் தனி. அப்போது அங்கு வந்து சேர்ந்த ‘ தளம் ‘ பா ரவி அவர்களின் சமுதாய இலக்கியம் பற்றிய கண்ணோட்டம் , சந்தியா நடராஜன் அவர்களின் கலகலப்பான பேச்சு, ‘இராவெரி ‘புத்தகத்தில் உள்ள எனது சிறுகதையை உடனே படித்து விட்டு நண்பர் ராஜாமணி அவர்கள் நெகிழ்ந்து பாராட்டி , கிராம மக்களின், காலரா நோய்க்கால ஒற்றுமை உணர்வை நினைவு படுத்திப் பேசியது, எல்லாமே சிறப்பு .
இப்போது இன்னும் சில நண்பர்கள் நவீன விருட்சம் ஸ்டாலில்.கதை புதிது யாஸ்மின் பேகம் மேடம் , குவிகம் பிரேமா மேடம், சொல்வேந்தர் அருண்மொழி மேடம் ,காந்தீய நண்பர் நித்தியானந்தம் அவர்களுடன் சந்திப்பு . தொடர்ந்த அட்டகாசமான சந்திப்பு நமது இசை புதிது ‘ கேள்விக்காரன் ‘ அவர்களுடன். அந்த சிரிப்பும் பேச்சும் அவருக்கே உரிய மகிழ்ச்சியும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். மற்றும் ஒவ்வொரு வருடமும் அழகியசிங்கரின் ஸ்டாலில் வந்து உதவிசெய்யும் கோவை இளைஞர்கள் இருவருடனும் பேச்சு.
விருட்சம், குவிகம் , பறம்பின் பாணர்கள், கவிதை வனம் , சொல்வேந்தர் மன்றம் என்று பல குழுக்களைச் சேர்ந்த நண்பர்களை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சந்தித்த மகிழ்ச்சி இது போன்று இனி அடுத்த வருடம் தான்.
கடைசி நாள் என்பதால் அதிகக் கூட்டம். மாலை நெருங்க நெருங்க வேகத்தோடு கூடிய ஒரு சோகமும் தெரிந்தது. ஸ்டால் அமைத்து ஒவ்வொரு நாளும் வந்து சென்ற பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும், அன்று ஒரு விழா முடியும் நாள் என்ற வருத்தம் இருப்பது தெரிந்தது. இரண்டே முறை வந்த நமக்கே கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது விடை பெற்று வரும்போது .
முகப்பை ஒரு போட்டோ எடுத்து திரும்பிப் பார்த்தபடி திரும்பியபோது ஆட்டோவில் வரும்போது எனது போனில் ‘ க்ளிக் சப்தம். மெசேஜ் ஒன்று வந்து விழுந்த சப்தம். , குவிகம் வாட்சப் குழுவில் , பிரேமா மேடம் அவர்கள், இராவெரி புத்தகத்தில் எனது சிறுகதை படித்து நெகிழ்ந்து எழுதி இருந்த வாழ்த்துச் செய்தி .புத்தக வெளியீட்டுக்கு விழாவுக்குப் பொருத்தமான முடிவுரை.
இதற்கு முன்னுரையாகப் போன வாரம் போன் செய்து ‘ நீங்க எழுதி அனுப்பிய கதை, இராவெரி புத்தகத்தில் வருகிறது அண்ணா, அடுத்த வாரம் வெளியீட்டு விழா, வாருங்கள் ‘ என்று அழைத்த டாக்டர் நந்தினி மேடம் நினைவு வந்தது. தனிப்பட்ட முறையில் நூறுக்கு மேல் மின்புத்தகங்கள் வெளியிட்டு இருந்தாலும் நண்பர்களோடு சேர்ந்து எழுதி வெளிவரும் புத்தகங்களுக்குக் கிடைக்கும் மதிப்பு அதிகம்தான், ஆர்டரும் அதிகம்தான். கூட்டமும் அதிகம் தான், மகிழ்ச்சியும் அதிகம்தான். அனைவர்க்கும் நன்றி .




















