பிரபா  ராஜன் அறக்கட்டளை – குவிகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை

வேலம்மா – நந்து சுந்து

an 80 years old village lady in tamilnadu going for ruling party election meeting as part of crowd and having lot of pains

வீட்டுக் கதவை யாரோ டொக் டொக்கென தட்டும் சத்தம் வேலம்மா காதில் விழவில்லை.

“ஏய் கெய்வி, கதவத் தட்டறது கேக்கல்லியா? வெளிய வா” என்றது ஒரு கட்டையான குரல்.

வாளியில் தன்னுடைய புடவையை அலசிக் கொண்டிருந்த வேலம்மா அலசுவதை நிறுத்தினாள்.

“ஆரு வாசல்ல?” என்றாள்.

“கட்சிக்காரங்க. உனக்கு வேலை வந்திருக்கு” என்றது குரல்.

“கட்சிக்காரங்கன்னா ஆரு. அம்புட்டுக் கட்சிக்காரங்களும் தான் இங்கே வாராங்க.”

“நான் பூபதி வந்திருக்கேன். ஆளும் கட்சி”

புடவையை பக்கத்தில் இருந்த கல் மீது வைத்தாள் வேலம்மா. கூரையிலிருந்து மழை வடிவது போல புடவையிலிருந்து நீர் வடிய ஆரம்பித்தது.

“என்னா சேதி?” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தாள் வேலம்மா.

உலர்ந்து போன புகையிலை மாதிரி கன்றிப் போயிருந்தாள். நரைத்துப் போன தலை முடி ஒழுங்கில்லாமல் நாலா திசைகளிலும் படர்ந்திருந்தது.

“அடுத்த வாரம் ஒரு திறப்பு விழா இருக்கு. அமைச்சர் வராரு. கொடி பிடிச்சுகிட்டு ஆயிரம் பேர் இருக்கணும். நீயும் வரணும்” என்றார்

நீ வருகிறாயா என அனுமதி கேட்கவில்லை. வர வேண்டும் எனத் திட்டமாய்க் கூறுகிறார். வேலம்மா மறுக்க மாட்டாள் என அவருக்குத் தெரியும்.

“என்னிக்கி?”

“வியாழக்கிழமை.”

“விசாலக்கெளமையா? சரி, வாரேன். சேத்திக்கோ.”

“மேலனூர் போகனும்.”

“எம்புட்டு தூரம்?”

“இருபது கிலோ மீட்டர். வழக்கம் போல லாரி வந்துடும்.”

“என்னா கொடுப்பே?”

“நானூறு ரூபா.”

“அவங்க ஒனக்கு எவ்வளவு தராங்க?”

“கெய்வி, அது எதுக்கு உனக்கு? சாயங்காலம் கைல நானூறு வந்துடும்.”

“அப்பொறம்?”

“பிரியாணிப் பொட்டலம். இந்த தடவை மோரு எக்ஸ்டிரா. வெய்யிலா இருக்குதில்லே. காலி தண்ணீ பாட்டில் கொண்டு வந்துடு. அப்பப்போ டிரம்லேந்து தண்ணியை நிரப்பிக்கலாம்.”

“பொடவ இல்லையாக்கும்?”

“இருக்குது. எவ்வளவு புடவை தான் உனக்கு வேணும்? போன தடவை கொடுத்த புடவை வைச்சிருக்கே இல்லே?”

“கட்சிப் பொடவயைக் கட்டிகிட்டு ரோடுல நடமாட முடியுமா சொல்லு ராசா? பேரக் குழந்தைக்கு தூளி கட்டறதுக்கு அந்த பொடவய வச்சிகிட்டேன்.”

பூபதி வீட்டுக்குள் கண்களை மேய விட்டார். இடது மூலையில் விட்டத்திலிருந்து ஒரு தூளி தொங்கிக் கொண்டிருந்தது. இரண்டு மாதம் முன்பு வேலம்மாவுக்குக் கொடுத்த புடவை தூளியாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

“கெய்வி. தூளி தான் கட்டியாச்சு இல்லே. மறுபடியும் புடவை எதுக்கு?”

“ஏன்? அந்தக் காசை நீ வாரி சுருட்டிகிட்டுப் போலாம்னு பாக்கிறியா? பொடவயக் கொடு. கொயந்த ஒன்னுக்குப் போனா மாத்தறதுக்கு வேற தூளித் துணி வேணுமில்ல.”

“குழந்தை ஒன்னுக்குப் போறதுக்குத் தன் கட்சிப் புடவையை உபயோகம் பண்றியா?” என்று சிரித்தார் பூபதி. அவருக்குக் கோபம் வரவில்லை.

“சரி, புடவை ஒன்னு கொடுத்திடலாம்” என்றார்.

“கட்சியோட அல்லா கலரும் புடவைல வரா மாதிரி கொடுக்க வானாம். அக்கம் பக்கம் அல்லாரும் ஒரு மாதிரியாப் பாக்கறாங்க. பொடவ ஒரு கலரு. ரவிக்கை ஒரு கலருன்னு கொடுக்கலாமில்லே?”

“மாவட்டம் கிட்டே சொல்றேன். வியாழக்கிழமை கார்த்தால ஏழு மணிக்கு அரச மரத்தடீல நில்லு.”

“சரி.”

“வயித்துக்கு ஏதாவது சாப்பிட்டு வா. மத்யான பிரியாணி மட்டும் தான் கட்சி கொடுக்குது.”

வியாழக்கிழமை காலை. ஆறரை மணிக்கே அரச மரத்தடிக்கு சென்று விட்டாள் வேலம்மா. அவளுக்கு முன்பாகவே பத்து பேர் வந்து அங்கு குழுமியிருந்தார்கள்.

கடைசி வீட்டு சின்னசாமி கூட தாடையை சொறிந்துக் கொண்டு அமர்ந்திருந்தான். கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தான். அதில் சில கட்டங்களில் பொத்தல் விழுந்திருந்தன.

அவனுக்கு வேறுவித கவனிப்பும் இருக்கலாம்.

“எதுக்கு கூட்டம்? எந்த அமைச்சரு வாராரு?” என்று கேட்டாள் வேலம்மா.

“தெரீல. யாரோ பெரிய அமைச்சராம்” என்றாள் பொன்னாயி.

மணி ஏழரை ஆயிற்று. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வீங்கி முப்பதுக்கு மேல் போனது.

“என்னா… இன்னும் அந்த பூபதிப் பயலைக் காணோம்” என்றாள் வேலம்மா.

எட்டு மணிக்கு லாரி வரும் சத்தம் கேட்டது. மணல் சாலையில் புழுதி பறக்க ஆரம்பித்தது. புழுதிக்கு ஊடே மஞ்சள் முகப்போடு ஒரு லாரி தெரிந்தது.

அரச மரத்திலிருந்து சற்றுத் தள்ளி லாரி நின்றது. பீடி குடித்துக் கொண்டே டிரைவர் இறங்கினார். எல்லோரும் லாரியை நோக்கி நகர்ந்தார்கள்.

“யாரும் ஏறாதீங்க. பூபதி ஐயா வரணும்” என்றார் டிரைவர்.

பத்து நிமிடத்தில் பூபதி புல்லட் மோட்டர் சைக்கிளில் வந்திறங்கினார். மொட மொடவென பேப்பர் மாதிரி வெள்ளைச் சட்டை போட்டிருந்தார். ஜல்லடை மாதிரி சட்டைப் பாக்கெட். ஜல்லடைக்குப் பின்னால் மங்கலாகத் தலைவர் படம். கையில் விசேஷ நாட்களில் மட்டுமே அணியும் தலைவர் படம் போட்ட மோதிரம்.

“நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வராரு” என்று கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார் பூபதி.

“அப்படின்னா?”

“ரோடு போடற மந்திரி” என்றார் அருகிலிருந்த வாலிபர் ஒருவர்.

“எக்ஸ்ப்ரஸ் ஹைவே போடறாங்க. அப்படின்னா என்னன்னு கேக்காதீங்க. அது அனாவசியம். இன்னைக்கு அதுக்கு அடிக்கல் நடறாங்க” என்ற பூபதி நான்கு பேரிடம் ஒரு துணி பேனரைக் கொடுத்தார். அதில் அடுக்கு மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.

“நீங்க நாலு பேரும் பேனரை வைச்சிகிட்டு முன்னால நில்லுங்க. மத்தவங்க எல்லாம் கட்சிக் கொடியை வைச்சிகிட்டு பின்னால நின்னாப் போதும்.”

அனைவரிடமும் கட்சிக் கொடியைக் கொடுத்தார் பூபதி.

“நம்ம மாவட்டத்துலேந்து எல்லா ஊர்லேந்தும் லாரி வருது. மொத்தம் நாப்பது லாரி. கும்பல்ல யாரும் காணாமப் போகாம ஒரே இடத்துல நில்லுங்க.”

ஒவ்வொருவராக லாரியில் ஏறினார்கள். அனைவரும் ஏறி முடித்ததும் பின் பக்க தடுப்பை மூடி கம்பியை சொருகினார்கள்.

லாரி ஒரு அரை வட்டம் அடித்து விட்டுப் புறப்பட்டது. கரடு முரடான சாலையில் லாரி ஆட்டம் போட்டது. வேலம்மாள் பக்கவாட்டில் பிடித்துக் கொண்டாள். கைகளில் சிவப்பு நிற புழுதி ஒட்டிக் கொண்டது.

முக்கால் மணி நேரத்தில் லாரி ஓரிடத்தை அடைந்தது. அங்கு இருபதுக்கும் மேல் லாரிகள் நின்று கொண்டிருந்தன.

பூபதி முதலிலேயே வந்து காத்துக் கொண்டிருந்தார்.

“எல்லாம் இறங்குங்க. கொஞ்ச தூரம் நடக்கணும்.”

“எதுக்கு நடக்கணும்?’ என்றாள் துடுக்காய் ஒரு பெண்.

“இதுக்கு மேல லாரி போகக் கூடாது. பாதுகாப்பு ஏற்பாடு. போலீஸ் சொல்லியிருக்கு. கொஞ்ச தூரம் தான், நடங்க.”

அனைவரும் இறங்கி நடந்தார்கள்.

ஒரு பள்ளிக்கூட கட்டிடத்துக்கு அருகே குழாய் இருந்தது. வேலம்மா ஓடிப் போய்க் கைகளைக் கழுவிக் கொண்டாள். அதற்குள் அவளுடைய குழு முன்னால் போய் விட்டது. பின்னாலேயே ஓடினாள்.

நடந்து கொண்டே இருந்தார்கள். விழா நடக்கும் இடம் வரவில்லை.

“எம்மாம் தூரம்?” என்றாள் வேலம்மா.

“கெய்வி, சும்மா வா. அமைச்சர் உன் வீட்டுப் பக்கத்துல வந்து திறப்பு விழா செய்வாரா?”

வேலம்மாவின் இடது கால் செருப்பின் வார் எந்நேரமும் அறுந்து விழும் நிலையில் இருந்தது.

“அல்லாருக்கும் செருப்பு கொடுக்கலாம் இல்லே!” என்றாள் அலுத்துக் கொண்டே.

“செருப்பு தான் டி.வி கேமிரால தெரியுதாக்கும். கட்சில அதுக்கெல்லாம் நிதி ஒதுக்கல, கம்முன்னு வா.”

ஒரு கிலோ மீட்டர் நடந்ததும் விழா நடக்கும் இடம் வந்தது. ஏகப்பட்ட போலீஸ் இருந்தது. ஒரு இன்ஸ்பெக்டர் வாக்கி டாக்கி வைத்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

குவியலாக தொலைக்காட்சி கேமிராக்கள். கழுத்தில் அடையாள அட்டையுடன் சரவணன், செந்தாமரைச் செல்வி என ஏகப்பட்ட செய்தியாளர்கள்.

காலை பத்தரை மணி சூரியனின் கிரணங்கள் சாய்வாக முகத்தில் இறங்கின. அந்த சாய்வே கடுமையாக சுட்டது.

வேலம்மாவுக்கு முகம் வியர்க்க ஆரம்பித்தது.

“எத்தினி மணிக்கு அமைச்சர் வாராரு?’ என்று அருகிலிருந்த ஆளிடம் கேட்டாள்.

“பத்து மணிக்கு”

“இன்னும் பத்து மணி ஆவல்லியா?”

“இப்போ பத்தரை மணி”

“ம்ம்ம்” என்றாள் வேலம்மா. பிறகு “பண்ணண்டு மணிக்குத் தான் வருவாங்க” என்றாள்.

“எப்படிச் சொல்றீங்க தாயீ?”

“எம்புட்டு தடவை நான் கொடி புடிச்சிகிட்டு நின்னிருக்கேன். எனக்குத் தெரியாதா? கீழ ஒக்காரு.”

இருவரும் கீழே அமர்ந்தார்கள். சரளைக் கற்கள் திரட்சியில்லாத அவளின் பின் பாகத்தைக் குத்தின.

புடவையை எடுத்து தலைக்கு முக்காடாகப் போட்டுக் கொண்டாள். கால் மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் குடித்தாள். தண்ணீரில் ஏதோ வாடை வந்த மாதிரி இருந்தது.

பதினோரு மணி தாண்டி விட்டது. போலீஸிடம் பரபரப்பு தோன்றியது.

“அமைச்சர் வாராரு. எல்லாரும் ஏந்திரிங்க” என்றார் பூபதி.

வரிசையாக வெள்ளைக் கார்கள் வந்தன.

“ம்ம்ம்ம்” என்று சைகை காட்டினார் பூபதி.

அனைவரும் கட்சிக் கொடியை ஆட்டினார்கள். ’அமைச்சர் வாழ்க’ என்று கத்தினார்கள்.

அமைச்சர் காரிலிருந்து இறங்கினார். கூட்டத்தைப் பார்த்தார். கூட்டம் ’ஓ’வெனக் கத்தியது. கொடிகளை பலமாக ஆட்டியது.

அமைச்சர் கை கூப்பினார்.

“யார் ஏற்பாடு?” என்றார் அருகிலிருந்தவரிடம்.

“மாவட்டச் செயலாளர்.”

மாவட்டச் செயலாளர் மதிவாணன் முன்னால் போய் நின்றார்.

“நல்லா செஞ்சிருக்கீங்க. தலைமை கிட்ட சொல்றேன்.”

“நன்றி தலைவரே” விளக்குக் கம்பம் மாதிரி குனிந்தார் மதிவாணன்.

வேலம்மாவின் கும்பல் கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தது. விழா மேடையில் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை.

அரை மணி நேரத்தில் விழா முடிந்து விட்டது.

போலீஸ் கலைய ஆரம்பித்தது.

பிரியாணிப் பொட்டலங்களை வினியோகிக்க ஆரம்பித்தார் பூபதி. பொட்டலத்தின் மேலே இருந்த செய்தித்தாள் சொத சொதவென நனைந்திருந்தது.

“நல்ல பெரிய பொட்டலம். திருப்தியா சாப்பிடுங்க” என்றார் பூபதி.

“பிரியாணி கடைய மாத்த மாட்டீங்களா? பழய நாத்தம் அடிக்குது” என்றாள் வேலம்மா.

“கெய்வி, ஆனாலும் உனக்கு வாய் அதிகம். விடிகார்த்தால செஞ்சது, கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். வேணும்னா சொல்லு, இன்னொரு பொட்டலம் தரேன்.”

“மொதல்ல குடிக்கத் தண்ணியைக் குடு. பாட்டில் காலி.”

சாப்பிட்டு முடித்ததும் அனைவர் கையிலும் ரூபாய் நோட்டுகளைத் திணித்தார் பூபதி.

ஆரஞ்சு நிறத்தில் இரண்டு புத்தம் புது இருநூறு ரூபாய் நோட்டுகள். அதை சுருட்டி இடுப்பில் சொருகிக் கொண்டாள் வேலம்மா.

“புது நோட்டை இப்படி கசக்கறியே?” என்றாள் பொன்னாயீ.

“அடப் போம்மே. நானே கசங்கிப் போய்க் கெடக்கறேன். ரூவா எப்படி இருந்தா இன்னா?”

ஒன்றரை மணிக்கு லாரி அவர்கள் ஊருக்குள் புகுந்தது. தேர் முட்டி அருகே லாரியை நிறுத்தினார் டிரைவர்.

“எல்லாரும் இறங்குங்க” என்றார்.

“என்னய்யா இங்கே இறக்கிட்டே?”

“ரெண்டு மணிக்கு இன்னொரு சவாரி இருக்கு. கம்பி லோடு அடிக்கணும்” – பதிலுக்குக் காத்திராமல் லாரி போய் விட்டது.

“களவாணிப் பய. பொய் சொல்றான். நடங்கடீ” என்றாள் வேலம்மா.

வீட்டுக்கு வந்தவள் குளிர்ந்த நீரில் முகம், கை கால்களைக் கழுவிக் கொண்டாள். வாசல் அருகே பாயை விரித்தவள் அயர்ந்து தூங்க ஆரம்பித்தாள்.

பதினைந்து நாட்கள் போயிருக்கும். வாசலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தாள் வேலம்மா.

வேலுச்சாமி வந்தார். எதிர்க்கட்சியின் உள்ளூர் பிரபலம்.

“என்ன தாயீ. நல்லா இருக்கியா?” என்றார்.

“இருக்கேன். முன்னே மாதிரி ஒடம்புல தெம்பு இல்லே. வெயில் தாங்க முடியல்லே.”

“மூணு நாள்ல ஒரு மீட்டிங் இருக்கு. வரியா? கொடி பிடிக்கனும்”

“வரேன். வேற என்னா வேல இந்த வேலம்மாவுக்கு!”

“எதிர்க்கட்சி மீட்டிங். எதிர்க்கட்சி கொடி பிடிக்கனும்”

“அது வளக்கமா செய்யறது தானே. அல்லா கொடியும் பிடிக்கறது தானே. துட்டு கைல வந்தா சரி”

“இந்த தடவை டபுள் பேமெண்ட். கூட்டத்தை சிறப்பா செய்யணும்னு எதிர்க்கட்சி தலைவர் சொல்லிட்டாரு.”

“எங்கே கூட்டம்?”

“மேலனூர்ல.”

“இப்போத் தானே மேலனூர்ல ஆளும் கட்சிக்கு ஒரு கூட்டத்துக்குக் கொடி பிடிச்சேன். இப்போ என்னா இன்னொரு கூட்டம்?”

“எக்ஸ்ப்ரஸ் ஹைவே போடக் கூடாதுன்னு எதிர்க்கட்சித் தலைவர் போராட்டம் செய்யறாரு. ஆளும் கட்சிக்கு வந்த கூட்டத்தை விட அதிகமா இருக்கனும்னு உத்தரவு. உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தாக் கூடக் கூட்டி வரலாம். பார்த்து செஞ்சிடலாம்.”

வாசலில் நிழலாட்டம் தெரிந்தது. தோளில் மாட்டிய கைப்பையுடன் வீடு நோக்கி வந்த ஒரு பெண் வீட்டு முகப்பில் நின்றாள். குறை சொல்ல முடியாதபடி களையாக இருந்தாள்.

“யாரு இது?” என்றார் வேலுச்சாமி.

“என் மருமவ, செம்பகம்.”

ஒரு கணம் செம்பகத்தையே பார்த்தார் வேலுச்சாமி.

“மருமவ அம்சமா இருக்கா” என்றார்.

“அவளுக்கென்ன? அவ ஒரு ராசாத்தி.”

“ஏன் தாயீ. உன் மருமவளை ஆரத்தி எடுக்க அனுப்பேன். தட்டுல ஐநூறு ரூபா போடுவாங்க. கைலயும் கணிசமாக் கொடுத்திடலாம்.”

“யோவ். இன்னொரு வாட்டி இந்த மாதிரி கேக்காதே. கூலிக்குக் கொடி பிடிக்கற இந்த வேல என்னோட போவட்டும். அவ ஜெராக்ஸ் கடைல கவுரதயா வேலைக்கு போயிக்கிட்டிருக்கா. அவளையும் இழுக்காதீங்க. செம்பகம், நீ உள்ளாற போ.”

“சரி தாயீ, வந்துடு. நல்ல சாப்பாடு ஏற்பாடு செஞ்சிருக்கு.”

வேலுச்சாமி போய் விட்டார்.

மூன்றாவது நாள்.

கொடி பிடித்து வீட்டுக்கு வந்தவுடன் வயிறு கட முடா என்றது. ஏழெட்டு முறை பின்பக்கம் ஒதுங்க வேண்டி இருந்தது.

மறுநாள் காலை சரியாகி விட்டது. கால் நீட்டி அமர்ந்து தென்னங்குச்சி கொண்டு விளக்குமாறு செய்ய ஆரம்பித்தாள். நாகலிங்கம் கடையில் கேட்டிருக்கிறார்கள்.

இரண்டு மாதங்களுக்குக் கொடி பிடிக்கும் வேலை ஏதும் வரவில்லை.

உடலும் முன்பு மாதிரி ஒத்துழைக்கவில்லை. உடம்பிலிருக்கும் சத்தெல்லாம் நீர்த்துப் போன மாதிரி இருந்தது.

ஒரு திங்கட்கிழமை. எதிர்கட்சி வேலுச்சாமி வந்தார்.

“கெய்வி, ஒரு சாலை மறியல் போராட்டம் இருக்கு. வரியா? ஹைவேஸ்ல ஒரு மணி நேரம் உக்காரணும்.”

“இல்லே ராசா. தார் ரோடுல ஒக்காற முடியுமான்னு தெரீல. ஒடம்பு சரியாச்சுன்னா வாரேன்.”

வேலம்மாவால் போராட்டத்துக்குப் போக முடியவில்லை.

அதன் பிறகு அதே எதிர்க் கட்சி வேலுச்சாமி வந்து இரண்டு முறை கேட்ட போதும் வேலம்மா மறுக்க வேண்டியதாகி விட்டது. பத்து நிமிடம் சேர்ந்தாற்போல் நின்றால் தலை சுற்றுவது போல் இருந்தது. சுவற்றைப் பிடித்துக் கொள்ள வேண்டி இருந்தது.

இரண்டு வாரங்கள் போன பிறகு எதிர்க்கட்சி வேலுச்சாமி வந்தார்.

“கெய்வி. நாயித்துக்கிழமை ஆளுங்கட்சியோட மீட்டிங் இருக்கு. ஏதோ பொன் விழாக் கொண்டாட்டம். முதல் வரிசைல நிக்கணும், போறியா?”

“என்னாய்யா? ஆளும் கட்சிக்கு நீ வந்து கேக்கறே. கட்சி மாறிட்டியா?”

“இல்லே. நல்ல சான்ஸ் வருதுன்னு சொன்னேன். நல்லா கொடுப்பாங்க. நானும் ஒரு ஐயாயிரம் தரேன்.”

“ஐயாயிரமா? நீ எதுக்குக் கொடுக்கறே?”

“கொடுக்கணும் போல இருக்கு. ஐயாயிரம் உனக்குப் பெருசு தானே?”

“ஆமா… பேரக் கொயந்தைக்கு கொலுசு வாங்கிப் போடலாம் தான்.”

“ஆளும் கட்சி வந்து கேட்டா சரின்னு சொல்லிடு.”

“சரி தம்பீ.”

“நான் வந்துட்டுப் போனதை சொல்லாதே.”

எதிர்க்கட்சியின் லோக்கல் ஆபீஸில் வட்டத் துணைச் செயலாளர் கடும் கோபத்தில் இருந்தார்.

“வேலுச்சாமீ. அந்த வேலம்மா கிழவிக்கு ஐயாயிரம் ரூபா கொடுத்து ஆளுங்கட்சி கூட்டத்துக்கு போகச் சொன்னீங்களாமே? கட்சிக்கு ஏன் இப்படி துரோகம் செய்யறீங்க?”

வேலுச்சாமி சிரித்தார்.

“அந்தக் கெய்வி இப்பவோ அப்பவோன்னு கெடக்கு. மீட்டிங்ல போய் வெய்யில்ல கொடி பிடிச்சுகிட்டு நின்னா ஸ்பாட்லயே கெய்வி புட்டுக்கும். இல்லேன்னா மயக்கம் போட்டு சுருண்டு விழும். அதை வீடியோ எடுத்து சோசியல் மீடியால போட்டா ஆளும் கட்சியைப் போட்டு கிழி கிழின்னு கிழிச்சிடுவாங்க. ஐயாயிரம் ரூபாய் பாக்கற நீங்க ஐயாயிரம் ஓட்டு நமக்கு சைடு மாறி வரும்கறதை நினைச்சுப் பாக்கல்லியே” என்றார்.

அந்தப் பொன் விழா நாளும் வந்தது.

அரச மரத்தடியில் லாரி நின்று கொண்டிருந்தது. கும்பலாகப் பெண்கள்.

“எல்லாரும் ஏறுங்க” என்றார் டிரைவர்.

வேலம்மா வண்டியில் ஏறினாள்.