புகழ் பெற்ற  தமிழகக் காதலர்கள் . Image 1 of 2

‘வாராயோ தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ’

என்று பாடிக்கொண்டே சீனு மதில் பக்கம் வந்தான். நண்பனைப்  பார்த்தவுடன் பாட்டை நிறுத்திவிட்டு வெட்கப்பட்டு கொண்டே

   ‘நாளைக்கு ஒரு நாள் எனக்கு லீவு வேணும்’ என்று கேட்டான்.

   ‘என்னடா ஸ்கூல் பையன் மாதிரி லீவு கேக்குற என்ன விஷயம்’ அப்படியென்று நண்பன் கோபி கேட்க

‘ஒன்னும் இல்லடா சும்மாதான், வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு’.

‘டேய் நீ வீட்டு வேலை எதுவும் செய்ய மாட்டேன்னு எனக்கு தெரியாதா என்ன விஷயம் சொல்லு’

 ‘இல்லடா நெஜமாவே அம்மா வந்து கொஞ்சம் வேலை கொடுத்து இருக்காங்க’

 ‘டேய் இது அதைவிட அதிசயம், கொடுத்த வேலை எதுவுமே நீ செய்ய மாட்ட, உண்மைய சொல்லு’

 ‘பொண்ணு பாக்கப் போறேன்’

 ‘எந்த பொண்ணு உன்ன பாக்க சம்மதிச்சி இருக்கா, எந்த நாட்டு இளவரசி’

என்று எல்லாரும் கேலி செய்யவும் ‘

‘என் மனதில் குடி கொள்ளப் போகும் மாதரசி இப்பொழுது இருப்பது திருச்சியில்’

என்று வீர வசனம் பேசினான் சீனு.  

‘டேய் நம்ம செட்டில் உனக்கு தான் ஃபர்ஸ்ட் கல்யாணம் ஆகிறது, பொண்ணு பாத்துட்டு வந்துட்டு எங்களுக்கு எல்லாம் அந்த அனுபவத்தைச் சொல்லு’

சீனு அங்கே இருந்த எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.  

‘சீனு நாளைக்கு நாம பெண் பாக்கப் போறோம், உங்க அப்பா நான் நீ’ என்று அம்மா சொன்னவுடன்,

‘அம்மா என் பிரண்டு கோபி எனக்கு எல்லா விதத்திலும் நல்ல நண்பன், அவன் வந்து பார்த்தால் எனக்கு உதவியா இருக்கும், அவனைக்  கூப்பிடட்டுமா’

என்று கேட்க

 ‘சரி நம்ம மூணு பேர் போறோம், நாலாவது அவனைக் கூப்பிடு’ அப்படியென்று அம்மாவும் சம்மதிக்க கோபிக்கு போன் பண்ணி

‘கோபி நாளைக்கு நீயும் என்னுடன் பெண் பார்க்க வர வேண்டும்’

என்று சொன்னவுடன் கோபி

‘நான் எதற்கு’

என்று கேட்டதற்கு

 ‘டேய் நீ வந்தா எனக்கு ஒரு தெம்பா இருக்கும், நீ என்னோட நல்லது கெட்டது எதிலேயும் கலந்து இருக்க, பொண்ணு எப்படி என்று நீயும் எனக்கு ஒரு அபிப்பிராயம் கொடுக்கலாம் இல்லையா’

என்று சொல்லவும் கோபி கடைசியில் அரை மனதாக ஒத்துக் கொண்டான்.  

 அந்த நாளும் வந்தது நான்கு பேரும் போய் பெண் பார்த்தார்கள் களையான முகம், நல்ல படிப்பு, ஒரு வேலையிலும் இருந்தாள், பெண் பிடிக்காது என்று சொல்வதற்கு கோபிக்கு எந்தக் காரணமும் தென்படவில்லை.

இரண்டு நாள் கழித்து சீனு மறுபடியும்

‘எங்க அம்மா எனக்கு எப்பயாவது இந்த தை மாதத்திற்குள் கல்யாணம் பேசி முடிக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள்’

என்று சொன்னான். கோபிக்கு ஒன்றுமே புரியவில்லை!

‘என்ன ஆச்சு திருச்சி பொண்ணு நல்லா தானே இருந்தா, எந்தவிதத்தில் அவளை இவன் ஏற்கவில்லை’ என்று நினைத்த கோபி

‘ஏன் திருச்சி பெண்ணுக்கு என்ன ஆச்சு?’

‘இல்லடா எனக்கு மனசுக்கு பிடிக்கவில்லை’

‘என்ன! எந்த விதத்தில் பிடிக்கவில்லை என்று சொல்கிறாய்?’

‘விடு நாளைக்கு கரூர் போகலாம்’

என்று சொன்னான். சரி அவன் மனதில் ஏதோ இருக்கிறது என்று கோபியும் கரூர் செல்லும் சம்மதித்தான்.

கரூரில் தடபுடலாக பெண் பார்க்கும் வைபவம் நடந்தது. சொஜ்ஜி, பஜ்ஜி, டிகிரி காபி என்று பெண்ணின் அப்பா அமர்க்களப்படுத்தி விட்டார்கள் அந்தஸ்தும், அவர்கள் நிலையும் நன்றாக இருந்தது.

 ‘நிச்சயம் இந்தப் பெண்ணை சீனுவுக்கு பிடிக்கும், அவர்கள் குடும்பத்தையும் பிடிக்கும்’

என்று வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஒரு ரெண்டு மூணு நாள் கழித்து மறுபடியும் சீனு

‘டேய் இப்போ சென்னைல ஒரு பெண்ணைப் பார்க்கப் போறோம்’

 என்று சொல்லவும், கோபிக்கு நிஜமாகவே ஒன்றுமே புரியவில்லை.

   ‘கரூர் வீட்டுலேயாவது அவர்கள் வெறும் பிஸ்கட்டும் காப்பியும் தான் கொடுத்தார்கள், திருச்சி வீட்டில் பெண்ணும் நன்றாக இருந்தாள், அவர்கள் அந்தஸ்தும் நன்றாக இருந்தது. பின் என்னவாயிற்று!’

புரியாமல் சென்னைக்குப் போனால், சென்னை பெண் நவ நாகரிமாக இருந்தாள். சென்னை அல்லவா! அவனுக்கும் சென்னைக்கு மாற்றல் ஆவதற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனால் இந்த தையில் முகூர்த்தம் சொல்லிவிடுவான் என்று கோபி சந்தோஷமாக வீட்டிற்கு வந்தான். ஆயிற்று மறுபடியும் சீனு

‘நாம் மதுரையில் போய் ஒரு பெண் பார்க்கலாம், இந்தப் பெண்ணுக்கு பாட்டு சிறிது நாட்டியமும் தெரியும்’

 ‘நீ போடுற தாளத்துக்கு அவ டான்ஸ் ஆட போறாளா’

 ‘சரி சரி எப்ப பெண் பாக்கப் போற?’

 ‘டேய் நீ இல்லாமலா? எப்ப பெண் பாக்கப் போறோம் என்று கேள்’

‘இல்லை இந்த தடவை நான் வரல. நீ மட்டும் போய் பொண்ண பார்த்துட்டு வா. நீ எதுனால இந்த மூணு பெண்களையும் நிராகரித்தாய் என்று புரிய மாட்டேங்குது, உன் மனசுல என்ன இருக்கு, யார் மனசுல யாரோ, அந்த ஆண்டவன் போட்ட முடிச்சோ, கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள், உன் கல்யாணம் சொர்க்கத்தில் எப்போது நிச்சயிக்கப்படும் என்று தெரியவில்லை. நீயே சௌக்கியமா போய் வா மகனே போய்வா’

 என்று கோபி சிறிது கோபமாகவும் சிறிது விரக்தியாகவும் சொல்லவும், வேறு வழி இல்லாமல் குடும்பத்தாரும் சென்று பெண் பார்த்து விட்டு வந்தனர். இரண்டொரு நாட்களில் சீனுவுடைய அப்பா அம்மா கோபி வீட்டிற்கு வந்து ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழங்கள் வைத்து

‘நீங்க எல்லாரும் வந்து நிச்சயதார்த்த விழா நடத்திக் கொடுக்கணும்’

என்று சொல்லவும் கோபிக்கு ஒரே சந்தோஷம். அப்பா! கடைசியில் இந்த பெண்ணை சரி என்று சொன்னான் என்றால், இந்த பெண் நிச்சயம் ரதிதான் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷமாக இருந்தான். ஆனால் நிச்சயதார்த்தம் சென்னையில் நடக்க இருந்ததால் இவனால் போக முடியவில்லை. சில நாட்களிலேயே நான்கு மாதங்கள் வெளிநாடு போக வேண்டி வந்தது. சீனுவுக்கு விருப்பமே இல்லை அவனை அனுப்ப.

 ‘டேய் என் கல்யாணத்துக்கு இருக்க மாட்டியா, எனக்கு தோள் கொடுப்பவனாய் இருந்து குடை பிடிக்க மாட்டாயா’

 என்று கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தான்.

 ‘என்னடா பண்றது, இப்படி எங்க ஆபீஸ்ல என்னை வெளிநாட்டுக்கு அனுப்புறாங்களே’

 என்று சொல்லிக்கொண்டு கோபியும் வருத்தத்தோடு வெளிநாடு சென்று விட்டான். சீனு கல்யாணம் நடந்து தன் வாழ்க்கையை ஆரம்பித்து விட்டான்’

 நான்கு மாதங்கள் கழித்து தன்னுடைய வெளிநாட்டு பிரயாணத்தை  முடித்துக் கொண்டு வந்த கோபி

 ‘சீனு மனைவியை முதலில் பார்க்க வேண்டும். மூன்று பெண்களை வேண்டாம் என்று சொன்னவன் நான்காவது ஒரு பெண்ணை திருமணம் பண்ணிக் கொண்டிருக்கிறான் என்றால் அவள் நிச்சயம் ரதியோ ரம்பையோதான்’

என்று நினைத்துக் கொண்டே அம்மாவிடம் சொல்லிக் கொண்டு சீனு வீட்டிற்கு சாயங்காலம் போனான்.

உள்ளே நுழையும் போது கொஞ்சம் குட்டைத் தலைமுடியுடன்  கருப்பாக இருந்த பெண் வந்து

 ‘வாருங்கள் கோபி அண்ணா’

 என்று கூப்பிடவும் இவனுக்கு ஆச்சரியம், சீனுவிற்கு தங்கை கிடையாது, அப்படி இருந்தாலும் இது ஜாடையே வேறு மாதிரி இருக்கிறது, இது யாராக இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டே உள்ளே நுழைய  

‘வா வா இப்பத்தான் வெளிநாட்டு பிரயாணம் எல்லாம் முடிந்ததா,எப்படி இருந்தது?’

 என்று சீனு கேட்க  

‘கொஞ்சம் கருப்பா குண்டா குட்ட தலைமுடியுடன் என்னை வரவேற்றவள் யார்?’

‘ஓ நீ என் கல்யாணத்துக்கு எல்லாம் வரவில்லை இ\ல்லையா, அதனால் தான் இப்படி கேட்கிறாய், ஆமாம் அவள் தான் என் மனைவி காயத்ரி’

 என்று சொல்லவும் கோபி மூச்சு விடாத குறையாக

‘பொதுவாகவே நான் பெண்களின் நிறத்தைப் பற்றி அபிப்பிராயம் சொல்லாதவன், ஆனாலும் நீ பார்த்த மூன்று பெண்களுடன் இவளை ஒப்பிட்டால் இவள் கொஞ்சம் சுமார் ரகம் தான், படிப்பும் சிறிது சாதாரணம், மண்டை உடைகிற மாதிரி இருக்கிறது என்ன ஆச்சு உனக்கு?’

 ‘நான் நன்றாகத் தான் இருக்கிறேன்’

 ‘இல்லை எனக்கு எப்படி சொல்வது என்றே தெரியவில்லை, நாம் இருவரும் மூன்று பெண்களைப் பார்த்தோம், மூன்று பேரும் ஏறக்குறைய பார்க்க நன்றாக இருந்தனர், நல்ல படிப்பும், ஆனால் இந்தப் பெண் கொஞ்சம் நிறம் கம்மியாக இருக்கிறாளே!’

 ‘இந்த உலகத்தில் இவளைப் போல அழகி யாருமே இல்லை, எனக்கு மேனகாவைப் பார்க்கிற மாதிரி இருக்கிறது, சரஸ்வதி அம்சமோ என்று தோன்றுகிறது’

 என்று சொல்லவும்

‘இதுதான் காதலோ!, மன்மதன் பாணம் இப்படி தைக்கிறதோ!, மன்மதலீலையைக் கண்டார் உண்டோ!’

என்று கோபி பாட ஆரம்பித்தான். காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் காமனின் பாணம் எங்கு எப்பொழுது யாரை தைய்க்கும் என்பது சிதம்பர ரகசியமே!