a man and his lover in a maal in chennai

இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் கொடுத்திருக்கிறேன். அதற்குள் என் கதை முடிய வேண்டும். அதற்காகக்த்தான் இந்த பெரிய ஷாப்பிங் மாலுக்கு முன் பக்கமிருக்கும் நடைபாதையில் நின்றுக் கொண்டிருக்கிறேன். கதையை முடித்துக்கொள்ள வேண்டுமென்றால் வீட்டிலேயே கயிற்றில் தொங்கியிருக்கலாம்.. இல்லை விஷத்தைக் குடித்திருக்கலாம்.. இதுதானே உங்கள் எண்ணோட்டம்.  நான் தங்கியிருக்கும் அறையில் அரைகுறையாக நீட்டினாலே மின்விசிறி கையை பதம் பார்த்துவிடும். அதனால் தூக்கில் தொங்கும் பேச்சுக்கே இடமில்லை. எனக்கு சின்ன வயதிலிருந்தே கசப்பு பிடிக்காது. முன் அனுபவம் இல்லாததால் விஷம் கசக்குமா இல்லை இனிக்குமா என்று சந்தேகம். அதனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று அந்த எண்ணத்தையும் கைவிட்டேன். அதோடு நான் இந்த ஷாப்பிங் மாலுக்கு முன்னால் வந்து நிற்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

சாலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறி ஒழுங்கில்லாமல் வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன. இதில் ஏதோ ஒரு வாகனம்தான் என் மீது மோதப் போகிறது.. இல்லை இல்லை.. நான் அதன்மீது மோதப் போகிறேன்.. அந்த பாக்கியம் எந்த வாகனத்துக்குக் கிடைக்கப் போகிறது என்று இன்னும் ஐந்து நிமிடங்களுக்குள்.. இல்லை.. நாலே முக்கால் நிமிடங்களுக்குள் தெரிந்து விடும்.

சுற்றுமுற்றும் பார்த்தேன். சாலையைக் கடக்க சிலர் திணறிக் கொண்டிருந்தார்கள். ஷாப்பிங் மாலுக்குள் நுழைய சில கார்கள் வரிசையில் காத்திருந்தன. இன்று விடுமுறை கிடையாது. இருந்தாலும் தேவை இருக்கிறதோ இல்லையோ.. எல்லோரும் மாலுக்கு வந்து விடுகிறார்கள். அப்படி என்னதான் வாங்குவார்கள்? அதெல்லாம் வாங்க அவர்களிடம் உண்மையிலேயே பணம் இருக்கிறதா? இல்லை பல்வேறு வங்கிகளின் பெயருடன் விசா, மாஸ்டர் எம்ப்ளத்துடன் பர்சில் சொருகப்பட்டிருக்கும் கடன் அட்டையைத் தேய்த்துவிட்டு மாசக் கடைசியில் பில் வந்தவுடன் தலையைப் பிய்த்துக் கொள்வார்களா?

வலது கையால் கன்னத்தைத் தட்டிக் கொண்டேன். உயிரை மாய்த்துக்கொள்ளப் போகும் கடைசி நிமிடங்களில் சம்பந்தமில்லாதவர்கள் பற்றின இந்த கரிசன எண்ணோட்டம் எனக்குத் தேவையா? அவர்கள் ஏதோ செய்துவிட்டுப் போகிறார்கள். நான் என் கதையை முடிக்கும் வேலையை கவனிக்கட்டும்.

எந்த வாகனம் என்று ஆராயத் தொடங்கினேன்.. நான்கு சக்கர வண்டிகளை விட இருசக்கர வண்டிகள்தான் வேகத்தைப் பற்றி கவலைப்படாமல் சீறிப் பாய்ந்துக் கொண்டிருந்தன. நான்கு  சக்கரங்கள் கொஞ்சம் மிதமான வேகத்தில்தான் நகர்ந்தன. உகும்.. இந்த வேகம் சரிப்படாது.. இருசக்கரங்களைத்தான் நம்ப வேண்டும் போலிருக்கிறது. பத்து நிமிடங்கள் பயணித்தால் ஹை-வே வந்துவிடும். அங்கே பஸ்களுக்கும் லாரிகளுக்கும் குறைவிருக்காது தான். அதுவும் எல்லாமே இலக்கை நோக்கி வேகமாக பயணிக்கும். அதில் ஏதோ ஒன்று லேசாகத் தட்டினாலே நான் – ஸ்டாப்.. பாயிண்ட் டு பாயிண்ட் மோட்சம்தான். ஆனால் இந்த மாலுக்கு முன்னால் என் கதை முடிய வேண்டும் என்பதுதான் என் கடைசி ஆசை.

என்னை உரசினாற்போல் ஒரு ராயல் என்பீல்ட் பைக் வந்து நின்றது. நான் தான் கொஞ்சம் நகர்ந்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு யுவனும் யுவதியும் பைக்கில் உட்கார்ந்தபடியே செல்பி எடுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு அந்த யுவதி பைக்கிலிருந்து குதித்து இறங்கினாள். பிறகு அந்த யுவனைக் கட்டிக் கொண்டு சுற்றத்தைப் பற்றி கவலைப்படாமல் அவன் உதட்டில் ஒரு “இச்” பதித்தாள்.

“லவ் யு டா”

சொல்லிவிட்டு அவள் மாலுக்குள் மறைந்தாள். அவனும் பைக்கில் பறந்தான்.

என் மனம் சட்டென்று ஐந்து வருடங்களுக்கு முன் தாவியது.

இதே மால்தான்.. வந்த புதுசு.. அஸ்வதிக்கு ரொம்பவே பிடித்த இடம்..

நானும் அஸ்வதியும் என்னுடைய டூ-வீலரில் வந்து இறங்கினோம். ராயல் என்பீல்ட் இல்லை. டி.வி.எஸ். மொபெட்.. அதுவும் செகண்ட் ஹாண்ட்.. ரொம்பவே பழசு. ஓடும்போது தொழிற்சாலை இயந்திரம் போல் ஓசை எழுப்பும். பாதியில் முரண்டு பிடித்து நின்றுவிடும். ஸ்டாண்ட் போட்டு இதயமே வெளியே வந்து விழுந்துவிடும் அபாயத்தோடு மூச்சிறைக்க பெடல் செய்து ஒரு வழியாக வண்டியை ஸ்டார்ட் செய்து..

ஆனால் அஸ்வதி இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவளுக்கு நான் அவளுடன் இருந்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம். எதைப் பற்றியும் நினைக்கவும் மாட்டாள்.

“இதப்பாரு.. நீ பேங்க்குல வேலை பார்க்கறே. நல்ல சம்பளம்.. நான் ஒரு சோட்டா பிரைவேட் கம்பெனில பதினஞ்சாயிரம் ரூபாய்க்கு அல்லாடிட்டிருக்கேன்”

“பரவாயில்லை”

“உங்க ஃபேமிலி மிடில் கிளாஸ்.. டீசெண்டா இருக்கீங்க. ஆனா நாங்க கிராமம்.  இங்க இருக்கறது தீப்பெட்டி அளவுல ஒரு ரூம்ல.. சரிப்படுமா?”

“படும்”

“யோசிச்சு சொல்லு”

“”நல்லா யோசிச்சுத்தான் உன்னைக் காதலிச்சேன். எனக்குப் பிடிச்சதே உன்னோட இந்த நேர்மைதான்”

“இல்லை.. எனக்கென்னவோ நீ கொஞ்சம் செண்டிமெண்டா..”

“நிச்சயமா இல்லை.. நல்லா தெளிவாத்தான் சொல்றேன்.. ஏதோ சினிமாவுல ஹீரோயின் பேசற டைலாக் மாதிரி தோணலாம்.. ஆனா இப்ப நான் சொல்றது உண்மை. நீ இல்லாம என்னால ஒரு வாழ்க்கையை நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை.. முடியாது..”

அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. அவளுடைய காதலின் தீவிரம் புரிந்தது.

ஆனால் கிராமத்தில் என்னைப் பெற்றவர்களுக்கு அது புரியவில்லை.

“காதல் கீதல்னு சொன்னா சீவிருவேன்.. இங்கிட்டு உன் அத்தை மவ மாரியம்மாவோட உனக்கு கல்லாணம்னு வாக்குக் கொடுத்திட்டேன்”

எனக்கு அதிர்ச்சி.

“எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்க..”

“எதுக்குலே கேட்கணும்? எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதானே? அதானே நம்ம வழக்கம்.. வர தை மாசம் எட்டாம் தேதி முகூர்த்தமும் குறிச்சாச்சு.. சேதி அனுப்பலாம்னு இருந்தேன்.. நீயே வந்து நிக்கறே”

“எனக்கு இதுல இஷ்டம் இல்லை. அஸ்வதிதான் என்.. உகும்.. நான் இப்பவே ஊருக்குக் கிளம்பறேன்”

அவசரமாக எழுந்தேன்.

அப்பாவும் எழுந்து வந்து என் தோளில் கை போட்டு..

“எதுக்கு.. எதுக்குலே கிளம்பறே? எப்படியும் போன கையோட திரும்பித்தானே வரணும்”

எனக்குப் புரியவில்லை.

“திரும்பியா? எதுக்கு?”

“பின்ன.. அப்பன், ஆத்தா, தங்கை சாவுக்கு வரவேண்டாமா?”

“என்ன சொல்றீங்க?”

“உன் அத்தை மக மாரியம்மா கழுத்துல நீ தாலி கட்டலைன்னா நான் சொன்னது நடக்கும்லே”

“அப்பா..”

“உங்கப்பனைப் பத்தி உனக்குத் தெரியும்.. உன் அத்தைக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்.. வாக்கு சுத்தம் வேணும்ல.. உனக்கு உன் காதல் முக்கியமா இல்லை உன்னைச் சேர்ந்தவங்க உசிரு முக்கியமான்னு நீயே முடிவு பண்ணிக்க.. காதல்தான் முக்கியம்னா.. எங்க காரியத்தை முடிச்சிட்டுப் போ.. போய் நல்லா இரு..”

அஸ்வதி என் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். மாலின் கீழ் தளத்திலிருந்த ஒரு திண்டில் அமர்ந்திருந்தோம்.

கிராமத்தில் நடந்ததைச் சொன்னேன்.

அவள் முகத்தில் அதிர்ச்சி,,

“உன்னால முடியுமா?”

நான் பதில் சொல்லாமல் பார்வையை அகற்றினேன்..

அவள் உடைந்த குரலுடன்..

“என்னால முடியாது.. என்னால உன்னை மறக்க முடியாது. என் மனசுல உன்னை செதுக்கி வெச்சிருக்கேன். அதை அழிக்க முடியாது”

சொல்லும்போதே அவள் கண்களிலிருந்து அருவியாக நீர் கொட்டியது..

“அஸ்வதி.. ப்ளீஸ்.. அழாதே.. எல்லாரும் பார்க்கறாங்க”

“பார்க்கட்டும்.. என் வாழ்க்கையே இங்க கேள்விக்குறியா இருக்கு.. எவன் பார்த்தா எனக்கென்ன?”

“இல்லை அஸ்வதி.. கொஞ்சம் புரிஞ்சுக்க..”

“என்ன புரிஞ்சுக்கச் சொல்றே? மனசு நிறைய உன்னை வெச்சுக்கிட்டு.. இப்ப நீ இல்லைன்னா அது ஏத்துக்குமா? இதப்பாரு.. உங்க அப்பா சொன்னார்னு சொன்னியே.. இப்ப நான் சொல்றேன்.. நீ எனக்கு இல்லைன்னா.. உகும்.. நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை.. வேண்டாம்.. அப்புறம் ஒரு நிமிஷம் கூட நான் இருக்க மாட்டேன்”

“அஸ்வதி..”

“உனக்கு என்னைப் பத்தித் தெரியும்.. நிச்சயமா நான் உசிரோட இருக்க மாட்டேன்”

இப்போது அவள் அழுகையின் வீரியம் அதிகரித்திருந்தது. உண்மையிலேயே சிலர் வேடிக்கை பார்த்தார்கள்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

“அஸ்வதி.. மூணு உசிர் போக நான் காரணமா இருக்க முடியாது”

“அப்ப என் உசிரு போக காரணமா இருந்தாப் பரவாயில்லையா?”

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சட்டென்று எழுந்து வேகமாக நடந்தேன். வாயிலை அடைந்தவுடன் திரும்பிப் பார்த்தேன். அஸ்வதி முகத்தில் கை பதித்து கேவிக் கொண்டிருந்தாள்.

அதற்குப் பிறகு நான் அஸ்வதியைப் பார்க்கவில்லை. ஜாகையை மாற்றிக் கொண்டு வட சென்னையில் அடையாளம் தெரியாத ஒரு மூலைக்குச் சென்று விட்டேன். இருந்த வேலையை விட்டு அதே சாமுத்ரிகாலட்சணத்துடன் கூடிய இன்னொரு வேலையில் சேர்ந்தேன்.

ஐந்து வருடங்களாக ஊர் பக்கமே போகவில்லை. நான் இருக்கும் இடத்தையும் தெரிவிக்கவில்லை. அவ்வப்போது என் நண்பன் மூலம் வீட்டு நிலவரத்தை விசாரித்துக் கொள்வேன். கலவரப்படும்படி எதுவும் நடக்கவில்லை..

ஆனால் நான் நிம்மதி தொலைத்திருந்தேன்..

துரோகம்.. அஸ்வதிக்கு நான் பண்ணினது பெரிய துரோகம்.. மன்னிக்க முடியாத குற்றம்..

அதுவும் நான் காட்சியிலிருந்து விலகி வந்தது இன்னும் பெரிய குற்றம்..

அவள் நிலமை என்ன?

ஒருவேளை அவள் சொன்னது போலவே தன்னை மாய்த்துக் கொண்டிருப்பாளா?

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு முறை அவள் வீட்டுக்கு அருகிலிருந்த பெட்டிக் கடையில் டீ குடிப்பது போல் விசாரித்தேன்.

“அது பெரிய சோகம் சார்.. காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க..”

அதற்குமேல் விவரம் கேட்க என் மனதில் பலம் இருக்கவில்லை.

அஸ்வதி இல்லை.. சொன்னது போலவே மடிந்துவிட்டாள்.. அதற்கு நான் தான் காரணம்.. நான் மட்டுமே காரணம்..

சாப்பிடமுடியவில்லை.. தூங்கமுடியவில்லை.. வேலிலையிடத்தில் நிறைய ஏசல்கள் வாங்கினேன்.. மனம் சஞ்சலத்தின் உச்சத்துக்குப் போய்..

இதோ இந்த முடிவுக்கு வந்தாகிவிட்டது.

“அஸ்வதி.. நீ இருக்கும் இடத்துக்கு நானும் வரேன்.. அதுவும் உனக்குப் பிடிச்ச இடம்.. நான் உன் மனசை தூள் தூளாக்கின இடம்.. நான் வாழ்க்கைல மறக்க முடியாத இந்த இடம்.. இங்கேர்ந்தே வரேன்.. மேலயாவது நாம ஒண்ணு சேரலாம்”

நினைவுகளிலிருந்து திரும்பி வாகனத்தின் முன் குதிக்க நான் தயாரானேன். நான் கொடுத்த கெடு முடிய இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்தன..

திடீரென்று விசில் சத்தம்..

திரும்பிப் பார்த்தேன்..

நான்கைந்து போலீஸ்காரர்கள் வண்டிகளை உடனே விலகும்படி விரட்டி கொண்டிருந்தார்கள். இரண்டு மூன்று பெண் கான்ஸ்டபிள்கள் நடைபாதையில் இருப்பவர்களை மாலுக்குள் செல்லும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

யாரோ பெருந்தலை அந்த வழியாக..

இப்போது தெரு காலியாகிவிட்டது. எங்கோ சைரன் ஒலி கேட்டது..

“நிக்காதீங்க.. உள்ள போங்க”

என்னையும் மாலுக்குள் தள்ளினார்கள்.

“சே.. என்ன கொடுமை இது.. சாகக் கூட விடமாட்டேங்கறாங்களே”

மாலுக்குள் செல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை.. உள்ளே அந்த திண்டு கண்ணில் படும்.. அதில் அஸ்வதி உட்கார்ந்து கேவிக் கொண்டிருந்தது நினைவில் வரும்..

வேண்டாம்.. இன்னும் கொஞ்ச நேரம்.. போலீஸ் கெடுபிடி முடிந்து மீண்டும் போக்குவரத்து சூடு பிடித்து விடும்.. நிச்சயமாக எனக்காக ஒரு வண்டி நிர்ணயப்பட்டிருக்கும்.. இவ்வளவு நாள் காத்திருந்த அஸ்வதி இன்னும் சில நிமிடங்கள் எனக்காக மேலே காத்திருக்க மாட்டாளா?

“குட்டி.. ஓடாதே நில்லு”

குரல் கேட்டு மின்சாரம் தாக்கியது போல் திரும்பிப் பார்த்தேன்..

அது.. து..

அஸ்வதி..

கொஞ்சம் பூசியிருந்தாள்.. பழைய சுவடுகள் எதுவுமில்லாமல் முகத்தில் நிறைய சந்தோஷம்.. நெற்றியில் குங்குமக் கீற்று..

தரையில் ஓடிய குழந்தையை வாரி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து..

அவளை உரசியபடி சீரியல் நடிகர் போல் ஒருவன்.. அவள் கணவன்.. அவன் முகத்திலும் ஏக சந்தோஷம்.. அவன் ஏதோ சொல்ல அவள் நாணத்துடன் சிரிக்க.. அவனும் சிரித்தபடி அவள் தோளில் கைபோட்டு அணைக்க..

எனக்கு மண்டைக்குள் ஏதோ ஓலமிட்டது..

திண்டு.. அஸ்வதி.. நான் உசிரோட இருக்க மாட்டேன்.. கையில் முகம் புதைத்து கேவிக் கேவி அழுது.. துரோகத்தை நினைத்து நினைத்து நான் இத்தனை காலமாக மருண்டது..

சே.. என்னங்கடா இது?

அப்ப காதல் என்பது வெறும் இன்பாக்சுவேஷன் தானா?.. பொய்தானா?

விலகும் மேகம் தானா?

என்னை முடித்துக் கொள்ளும் திட்டத்தைக் கைவிட்டு அன்றிரவே ஊருக்குக் கிளம்பினேன்.