

பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி கோயிலுக்கு அருகே நந்தவனம் அமைத்து தினந்தோறும் மாலை கட்டி , பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருந்தார், என ஏற்கனவே, இத்தொகுப்பின் முந்தைய பதிவு ஒன்றில் பார்த்தோம்.
ஒருநாள் துளசிச் செடி அருகில் ஒரு பெண் குழந்தையை கண்ட ஆழ்வார், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததால் பெருமாளே ஒரு புத்திரியை அனுப்பி வைத்ததாக மகிழ்ந்து *கோதை* என்று பெயர் சூட்டி வளர்த்தார்.
கோதை என்றால் தமிழில் *பூ மாலை* என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம்.
மிகச் சிறிய வயதில் இருந்தே, கண்ணனின் லீலைகளையும் பராக்கிரமத்தையும் பெரியாழ்வார் சொல்லக் கேட்டு, கண்ணன் பால் பிரேமை கொண்டு, அவன் நினைவாகவே இருந்தவள் கோதை நாச்சியார்.
தினந்தோறும் பெரியாழ்வார் பெருமாளுக்கு கொடுக்கும் மாலையை தான் அணிந்து அழகு பார்த்து, பிறகு எம்பெருமானுக்கு அனுப்பி வந்தாள் கோதை. இதை ஒருநாள் பார்த்துவிட்ட பெரியாழ்வார், இது அபச்சாரம் ஆயிற்றே என்று மிகவும் வருந்தி கோதை அணிந்து களைந்த அந்த மாலையை பெருமாளுக்கு சூட்டாமல் துயரத்தில் ஆழ்ந்திருந்தார். பெருமாள் அவர் கனவில் வந்து, உன் மகள் சூடிக்கொடுத்த மாலையே எனக்கு உவப்பானது என்று சொல்லி மறைந்ததும், தன் மகள் பிராட்டியின் அம்சம் என்பதை உணர்ந்தார், பெரியாழ்வார். இதை ஒட்டியே கோதை நாச்சியாரை *சூடிக்கொடுத்த சுடர்க்கொடி* என்றும் அழைக்கிறோம்.
கோதையின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்த பொழுது, ” மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் ” என்று சொல்லி, திருவரங்கத்துப் பெருமாளையே மணக்க விரும்புகிறேன் என்றும் சொல்லிவிட்டார் கோதை. பெரியாழ்வார் கனவில் மறுபடியும் பெருமாள் வந்து, ஸ்ரீரங்கத்திற்கு கோதை நாச்சியாரை அழைத்து வர பணித்து, அதன்படி அனைவரும் ஸ்ரீரங்கம் செல்ல, எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே, கருவறைக்குள் சென்று அரங்கனுடன் இரண்டற கலந்து விட்டாள், அந்த அரங்கன் மனதையும் நம் எல்லோருடைய மனதையும் ஒருசேர ஆண்ட அந்த கோதை எனும் ஆண்டாள்.
திருப்பாவை ஆகட்டும், நாச்சியார் திருமொழி ஆகட்டும் ஆண்டாளின் பாசுரங்களை படிக்கும் பொழுது இதில் பக்தி தலை தூக்கி நிற்கிறதா அல்லது தமிழின் சிறப்பு தலை தூக்கி நிற்கிறதா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.
*ஆழ்வார்களும் கண்ணதாசனும்* தொகுப்பில் நான் இதுவரை எழுதி வந்த பகுதிகள் ஒரே மாதிரியான கட்டமைப்பு ( structure ) கொண்டிருக்கும். முதலில், எடுத்துக் கொண்ட ஆழ்வாரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம், பிறகு அவருடைய ஏதேனும் ஒரு பாசுரம் , அதன் பொருள், பிறகு அந்த பாசுரம் கவிஞர் கண்ணதாசனின் எந்த பாடலை என் நினைவுக்கு கொண்டு வந்தது என்பதாக, ஓர் ஒழுங்கு ( order ) இருக்கும்.
இப்பகுதியில், அக்கட்டமைப்பிலிருந்து சற்றே விலகுகிறேன் .
ஆண்டாளின் எந்த ஒரு பாசுரத்தையும் எடுத்து சொல்வதற்கு முன்னால், ஆண்டாளின் பெயரில் கண்ணதாசனுக்கு இருந்த அபரிமிதமான பக்தியையும் அபிமானத்தையும் முதலில் சொல்ல விழைகிறேன்.
கவிஞர் கண்ணதாசனுக்கு வைணவம், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார்கள், என்று பொதுவாக மிகுந்த ஈடுபாடு. இதை அவர் தன் சுயசரிதமான *மனவாசம்* புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
இருந்தாலும், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அவர் மனதில் ஆண்டாளை சிம்மாசனம் போட்டு அமர்த்தி இருந்தார் என்று சொல்லலாம்.
ஆண்டாளைப் பற்றி குறிப்பிடும் பொழுது கண்ணதாசன் கீழ் வருமாறு கூறுகிறார் :
*நாச்சியார் திருமொழியில் பல தமிழ் வார்த்தைகள் எனக்கு வியப்பளித்தன. …*
*நானும் என்னை காதலியாக்கிக் கொண்டு கண்ணனை நினைத்து உருகி இருக்கிறேன்…..*
*இசைக்காக ஏதேதோ புலம்பி இருக்கிறேன்.*
*ஆனால் இசைமங்கலம், சொல் மங்கலம், பொருள் மங்கலத்தோடு*
*புது தமிழ் சொற்களை தூக்கிப்போட்டு*
*பந்தாடி இருக்கும் நாச்சியார் திருமொழி,*
*எனது சிறுமையை எண்ணி எண்ணி*
*என்னை வெட்கப்படவே வைத்தது.*
கண்ணனை கூடும் வேளை இன்னும் வரவில்லையே என்று அவனை நினைத்து உருகும் ஆண்டாளின் பாசுரங்களை படித்துவிட்டு, கண்ணதாசன் மேலும் இவ்வாறு எழுதுகிறார் :
*நாச்சியார் துடிக்கிறார்*
*நாமும் துடிக்கிறோம்*
*நாச்சியார் உருகுகிறார்*
*நாமும் உருகுகிறோம்*
*நாச்சியார் கெஞ்சுகிறார்*
*நாமும் கெஞ்சுகிறோம்*
*நாச்சியார் கொஞ்சுகிறார்* *தமிழும் கொஞ்சுகிறது*
கடைசியில் *தமிழும் கொஞ்சுகிறது* என்று முத்தாய்ப்பு வைத்திருப்பது நமது கவிஞரைத்தவிர வேறு யாருக்கு வரும் ?!
கண்ணதாசனின் பாடல்களில், ஆண்டாள் *பாசுரங்களின் தாக்கம்* என்பதைத் தாண்டி , *ஆண்டாளின் நேரடி தாக்கம்* வெளிப்படும் ஒரு பாடலை இப்போது குறிப்பிட விரும்புகிறேன்.
சிவாஜி கணேசன் நடித்த *அண்ணன் ஒரு கோவில்* படத்தில் **எம் எஸ் விஸ்வநாதன்* இசையமைக்க ,டி எம் சௌந்தரராஜன்* பாடிய *கண்ணதாசன்* பாடல் .
*மல்லிகை முல்லை*
*பொன் மொழி கிள்ளை*
என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடலின் குறிப்பிட்ட சரணம் :
*சூடிக் கொடுத்தாள்*
*பாவை படித்தாள்*
*சுடராக எந்நாளும்*
*தமிழ் வானில் ஜொலித்தாள்*
*கோதை ஆண்டாள்*
*தமிழை ஆண்டாள்*
*கோபாலன் இல்லாமல்*
*கன்னித் தமிழ் தேவி*
*மைக் கண்ணன் அவள் ஆவி*
*தன் காதல் மலர் சூடி*
பாடல் காட்சிப்படுத்தப்பட்ட வகையிலும், கதாநாயகனின் தங்கை, ஆண்டாள் அலங்காரத்தில், மணக் கோலத்தில் வருவதாக காட்சி விரியும்.
ஆண்டாளின் எந்த *பாசுரம்* , கண்ணதாசனின் எந்த பாடலை நினைவுபடுத்துகின்றது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
