இடம் பொருள் இலக்கியம் 15. பள்ளித் தோழ”ர்”

சென்னையிலிருந்து கிளம்பிய கோவை எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டையைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. யார் அந்த சுவாமிஜி ? எதற்காக என்னைக் கூப்பிட்டிருக்கிறார் ? என்ன தகவலோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டே ரயிலின் பெட்டிகளுடே “வெஸ்டிப்யூல் “ வழியாக , சுவாமிஜி இருக்கும் “கேபினை” அடைந்தேன்.
இரண்டு விரல்களால் கதவைத் தட்டி “எக்ஸகியூஸ் மீ வரலாமா “ என்றேன்.
“வாருங்கள் உங்களத்தான் எதிர்பார்த்திருந்தேன் “ என்று சொல்லி மெல்லப் புன்னகைத்தார்.
மாநிறம்; நல்ல உயரம் , சாந்தமான முகம்; சிரிக்கும் கண்கள். இராமகிருஷ்ண மடத்துத் துறவிகள் அணியும் காவி உடை.. என் கண்களில் தெரியும் குழப்பத்தைப் பார்த்தபடி, “ என்ன வி வி எஸ் தானே ! என்னை அடையாளம் தெரிகிறதா?”
“ நோ மகராஜ் “ இல்லையென்று தலையாட்டினேன்.
“நான்தான் ஒங்களோட ஸ்கூலில் படித்த ரகு “ என்று மறுபடியும் புன்னகைத்தார்.
திடீரென ஐம்பது ஆண்டுகள் காலடியில் நழுவி ஓடின. அடே! ஆமாம் ! இவர் .. இவன் .. ரகு . பள்ளியில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த நண்பன் (ர்) இத்தனை வருடங்களுக்குப் பின் என்னை எப்படிக் கண்டுபிடித்தான்.. மனத்துக்குள் கேள்விகள் மண்டின.
“ என்ன வி வி எஸ் .. ஞாபகம் வந்துவிட்டதா?”
“ஏய் நீ நம்ம பழையமாம்பலம் ரகுதானே ! எப்படி மறக்கும்? ரொம்பத்தான் மாறிட்ட “ என்று சொல்ல வந்தவன் , கொஞ்சம் நிதானித்து, “ எஸ் மகராஜ் ! நவ் ஐ ரிமெம்பர் .. ஆமாம் நீங்க எப்படி என்னைக் கண்டுபிடிச்சிங்க?” என்று வினவினேன்.
“ நான் ரொம்ப வருஷமா ஒங்க அக்ட்டிவிட்டீஸ் எல்லாம் அவதானித்துக் கொண்டுதான் வரேன். நம்ம மடத்துல நீங்க பேசற நிகழ்ச்சி எல்லாம் ஃபாலோ பண்ணுவேன். நான் போன பத்து வருஷமா ஸ்ரீ லங்கா இராமகிருஷ்ண மடத்தில் பணியாற்றிவிட்டு , போன மாதம்தான் கோயமுத்தூர் பெரிய நாயக்கன் பாளையம் இராமகிருஷ்ண வித்யாலயாவிற்கு மாற்றலாகி வந்திருக்கேன். சென்னை மடத்துல ஒரு அலுவல் காரணமா வந்திருந்தேன். இன்று கோவை எக்ஸ்பிரஸ் வண்டியில் திரும்பறேன். காலையில் சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயில் ஏறும் போது உங்களப் பார்த்தேன். சார்ட்ல பேரைப் பார்த்து கன்பர்ம் பண்ணிக்கொண்டேன். பிறகு டி டி ஆர் மூலமா கூப்பிட்டனுப்பினேன்.”
“ ரொம்ப மகிழ்ச்சி. காப்பி சாப்பிடலாமா? “
“ ம்.. சாப்பிடலாமே”
ரகு ரொம்ப சாதுவான பையன். நான் “பி” செக்ஷன் ;அவன் “ஹெச்” என்று நினைவு வெஸ்ட் மாம்பலத்தில் இருந்து எங்க வீட்டு வழியாகத்தான் ஸ்கூலுக்குப் போவான். தி. நகரில் நான் வசித்த மாம்பலம் சாலைக்கு அருகில் தான் துரைசாமி ரோடில் ஸ்ரீ ராமகிருஷ்ண பள்ளி ஹாஸ்டல் இருந்தது. அங்கே பெரிய பிரார்த்தனைக் கூடமும் , சிறு நூலகமும் உண்டு.. ரகு,சுந்தர், பிரபு, பாலகிருஷ்ணன், என் சகோதரன் கணேஷ் நான் எல்லோரும் இந்த ஹாஸ்டலில் மாலை நேரங்களில் கூடுவதுண்டு. அதற்குக் காரணம் இரண்டு பெரியவர்கள். ஒன்று எங்களுக்கு இராமகிருஷ்ண இலக்கியத்திலும் சுவாமிஜி மேலும் மிகுந்த ஈடுபாட்டை உண்டாக்கிய எங்கள் ஆசிரியர்பிரான் திரு வே. மு. மந்திரமூர்த்தி; இரண்டாவது எங்களை ஹாஸ்டல் வளாகத்தில் எந்நேரமும் வந்து செல்ல அனுமதி அளித்த தலைமை சுவாமிஜி நந்தானந்தா ஜி. ( இவர்கள் இருவரைப் பற்றியும் தனியே எழுத நிறைய செய்திகள் உண்டு. ).
1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா; நாங்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். அப்போதிலிருந்தே ஸ்ரீ இராமகிருஷ்ணா இயக்கத்தில் எங்களுக்கெல்லாம் ஈடுபாடு வந்துவிட்டது. நாங்கள் ஹாஸ்டல் நூலகத்திலேயே பல மணி நேரங்கள் செலவு செய்வோம்; பல புத்தகங்கள் படிப்போம். என் தமிழ் ஆங்கில அறிவுக்கு நல்ல அடித்தளம் போடப்பட்ட நாட்கள் அவை. பிறகு மந்திரம் சாருடன் பல விஷயங்களை விவாதிப்போம். இந்துமதம், பக்தி, அத்வைதம் போன்ற தத்துவங்களைப் பற்றியும் பேசுவோம். சில நீண்ட மாலைப் போதுகளில் , இவற்றைப் பற்றியெல்லாம் பேசிப் பேசி முடியாமல் நான் ரகு வீடு வரை சென்று அவன் வீட்டு வாசலிலும் நின்று பேசி முடித்துவிட்டு வர இரவு வந்துவிடும்.
அப்போதே ரகுவுக்கு இராமகிருஷ்ண மடத்தில் ஈடுபாடு எங்களைவிடவும் அதிகம் உண்டு என்று தெரிந்தாலும் , அவன் மடத்தில் துறவியாகச் சேர்ந்தது எங்களுக்குத் தெரியாது.. பல ஆண்டுகளுக்குப் பின்னே இந்த சந்திப்பு- ஓடும் இரயிலில்; எப்படிப் பேசுவது ? துறவியாகி விட்ட நண்பனை எப்படி விளிப்பது? பழைய கதையைப் பேசுவது சரியாக இருக்குமா?
“ காப்பி வந்தாச்சு.! இன்னும் என்ன யோசனை?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
“ ஹி . ஒண்ணும் இல்ல . பழைய ஞாபகங்கள் “ என்று குரலை இழுத்தேன்.
“ ஓ ! அதெப்படி இல்லாம போகும் . சரி கோவையில என்ன வேலை? கொஞ்ச நாள் இருப்பிங்களா .. மடத்துக்கு வரணும்.”
“யூனிவர்சிடி வேலை .. ஒரு வாரம் இருப்பேன்”
“அப்படின்னா வர திங்கள் காலையிலே எங்க வித்யாலயா ஸ்டூடண்ட்ஸ் க்கு ஒரு லெக்சர் கொடுக்கணும்.
“சரி”
“அப்ப ஒண்ணு பண்ணுங்க. ஞாயிறு மாலையே வந்துவிடுங்கள். வித்யாலயா கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. ராத்திரி தங்கிட்டு காலை ஒன்பதுலேந்து பத்து மணிவரை லெக்சர் முடிச்சிட்டு நீங்க யூனிவர்சிட்டி போயிடலாம்” என்றார்.
அதே போல ஞாயிறு மாலையே சென்ற நான் கெஸ்ட் ஹவுஸில் அன்று இரவு வெகு நேரம் “ரகு மகராஜ் அவர்களோடு பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்தேன் . . துறவியா ? இல்லறத்தானா? என்பதெல்லாம் “பள்ளி நட்பின்” முன்னால் கரைந்து போய்விடும் செயற்கை அடையாளங்கள் என்று அன்று புரிந்துகொண்டேன்.
ரகு மகராஜ் அவர்களை சந்தித்து ஒரு சில ஆண்டுகளில் நான் கல்லூரி முதல்வர் பணியை ஏற்றுக் கொண்டேன். அவர் எனக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அப்போது தெரியாது அவர் ஒருநாள் எங்கள் கல்லூரி செயலராக வருவார் என்று; அவர் கல்லூரி செயலராகப் பொறுப்பேற்ற போது நான் முதல்வராக இருந்தேன். ஆறு மாதங்களில் ஓய்வு பெறவேண்டும். எனினும் அந்த ஆறு மாதங்கள் மிக இனிமையான மாதங்கள். பள்ளித் தோழருடன் இணைந்து பணி செய்யும் வாய்ப்பு. இட் வாஸ் அ ரேர் பிரிவிலேஜ் அண்ட் கோயின்ஸிடென்ஸ்.
ரகு மகராஜ் நன்றாகப் பாடக்கூடியவர். அவர் பணி புரிந்த இராமகிருஷ்ணா மடத்துக் கிளைகளில் மாலை தோறும் நிகழும் பஜனைகளில் தவறாமல் கலந்து கொண்டு பாடுபவர். இதன் தொடர்பாக எங்கள் அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது.
2014-ல் சென்னை விவேகானந்தா இல்லத்துக்கான குத்தகை முடிவடையும் தருவாயில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் அதனை மீண்டும் 99 ஆண்டுகளுக்கு நீட்டுவித்து அரசாணை விதித்தார். இந்த மகிழ்ச்சியான அரசாணையைத் தொடர்ந்து , பல புதிய கட்டுமான வேலைகளை இராமகிருஷ்ண மடம் அங்கே தொடங்கியது. மாணவர்களுக்கான சில பயிற்சி வகுப்புகள் அங்கே தொடங்கப்பட்டன. அந்த இடத்தில் ஒரு தியான மண்டபமும் , சுவாமிஜி வரலாற்றை விளக்கும் கண்காட்சியும், சிறிய நூலகமும் அமைக்கப்பட்டன.
விவேகானந்தா இல்லத்தின் வரலாறு சுவை மிக்கது. சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் வரலாற்று புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு தாயகம் திரும்பியவர் 1897ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்தார். இங்கு தங்கியிருந்த போது அவர் புகழ் பெற்ற ஒன்பது சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அப்போது, சுவாமி விவேகானந்தரிடம் சென்னையில் ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் ஒன்றினை தொடங்கிட வேண்டுகோள் வைக்கப்பட்டது. கொல்கத்தா திரும்பிய சுவாமி விவேகானந்தர், அங்கு ராமகிருஷ்ணர் மடத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தரை இங்கு அனுப்பிவைத்தார். சசிமகராஜ் என்றழைக்கப்பட்ட சுவாமி இராமகிருஷ்ணானந்தரின் தலைமையில் இந்த கட்டிடம் தென் இந்தியாவின் முதலாவது ராமகிருஷ்ணர் மடமாக செயல்படத் துவங்கியது.
சுவாமிஜி 1897 ம் ஆண்டில் இங்கே தங்கியிருந்த நாட்களை நினைவுகூரும் வகையில் பிப்ரவரி மாதத்தில் “ விவேகானந்தா நவராத்திரி” விழா கொண்டாடப்படும். ஒன்பது நாட்கள் மாலை முதல் இரவு எட்டரை மணிவரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
6.45 p.m : Kaviyarangam on Vivekanandar – Oru Panmuga Paarvai Lead by Kavimaamani V.V.S
இந்த நிகழ்வில் 2015-ம் ஆண்டு விழாவில் ஒருநாள் நாங்கள் இணைந்து ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். குருமகராஜ் சுவாமிஜி பிரார்த்தனைப் பாடல்களில் சிறந்த ரகு மகராஜ் பாடல்களை இசைக்க அப்பாடல் வரிகளுக்கு நான் பொருள் சொன்னேன். அப்படிச் சொல்லும் போதே அவருடைய வாழ்க்கை வரலாற்று விவரங்களையும் இணைத்துப் பேசினேன். மிகவும் சுவையான “பரோக்ராம் “ என்று பலர் பாராட்டினார். துறவு வாழ்க்கையில் பயணிக்கும் பழைய பள்ளித் தோழருடன் இணைந்து ஒரு நிகழ்ச்சி நடத்தியதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. கோவையில் இருக்கும் அவரோடு இன்றும் தொடர்பில் இருக்கிறேன்.
பள்ளி நண்பர்களைப் பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் , என்ன பதவியில் யார் இருந்தாலும் “வாடா போடா “ விளிச்சொல் தான் என்பதை நாம் அறிவோம் . ஆனால் ரகு மகராஜ் விஷயத்தில் இது எப்படி சரியாக இருக்கும் ?. நான் அவரை “வாங்க போங்க “என்றுதான் விளித்தேன். அவர் யாரையுமே ஒருமையில் அழைப்பதில்லை.
எனது பள்ளி நண்பர்கள் வரிசையிலே “பள்ளித் தோழர்” என்று “ர்” விகுதியோடு நான் அழைக்கும் ஒரே நபர் ரகு மகராஜ் அவர்களே !

