புத்தகம் :  100 Thoughts That Lead To Happiness ( English)

எழுதியவர்: Len Chetkin

Published by : Jaico Publishing House, Mumbai 400 001 (2007)

 

      சென்ற மாதம் ( பிப்ரவரி 2024) பெங்களூரில் வெர்ட்சுவோசோ  ரிடையர்மென்ட் கம்யூனிட்டியில் உள்ள வாசகசாலையில் நான் படித்த புத்தகம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த சிறிய புத்தகமும் அதே நூலகத்தில்தான் என் கண்ணில் பட்டது.

    “மகிழ்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும் 100 எண்ணங்கள்” என்னும் தலைப்பே என்னை உடனே கவர்ந்தது. கல்லூரி பருவத்திலும் அதைத் தொடர்ந்து பணி வாழ்வின் தொடக்க நாட்களிலும்  நான் நிறைய சுய முன்னேற்ற புத்தகங்களை தேடிப் பிடித்துப் படித்தேன். அப்போது அது ஒரு விதமான பைத்தியமாகவே இருந்தது. அதைத் தொடர்ந்து சில வருடங்களில் என் மனம் பரபரப்பை எல்லாம் விட்டு சற்றே அமைதி அடைந்தவுடன், அத்தகைய நூல்களைப் படிக்கும் பழக்கம் தானாக உதிர்ந்து விட்டது. வெற்றியைத் தேடும், வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் நூல்களை நான் விட்டுவிட்டாலும், மகிழ்ச்சியை நாடுவது நிற்கவில்லை. அது தொடர்பாக நூல்களைப் படிப்பதின் மூலம் மகிழ்ச்சியின் புதிய கதவுகள் திறக்காதா என்ற ஆதங்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

  லென் செட்கினின் இந்த நூல்  அத்தகைய 100 எண்ணங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது என்ற எண்ணமே படிக்கும்போது மகிழ்ச்சியைத் தந்தது.

   பின்னட்டையில் குறிப்பிட்டிருப்பது போல, நாம் சந்திக்கும் சில மனிதர்கள் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு சிக்கல்களுக்கும் இடைஞ்சல்களுக்கும் இடையே விழுந்து எழுந்தாலும், எப்படியோ மகிழ்ச்சியுடனேயே காட்சி தருகிறார்கள். வேறு சிலரோ, எவ்வளவு இருந்தாலும் சந்தோஷப்பட 100 விஷயங்கள் இருந்தாலும், எதையோ பறி கொடுத்தது போலவே காணப்படுகிறார்கள்.

   என்ன நடக்கிறது இங்கே ? மகிழ்ச்சியாக எப்போதும் தங்களை வைத்துக் கொள்கிறவர்களின் மகிழ்ச்சியின் பின் உள்ள மர்மம் என்ன ?

   இந்தக் கேள்விக்கு மிக எளிமையான விடை ஒன்றை அளிக்கிறார் ஆசிரியர்.

   நமக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே ஒரே ஒரு எண்ண தூரம் தான் இருக்கிறது. அதை நாம் கடந்து விட்டால் போதும் ; மகிழ்ச்சி எப்போதும் நம் வசப்பட்டுவிடும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.  நூறு எண்ணங்கள்,  எழுத்தாளரின் வாழ்க்கையிலிருந்து அவற்றின் சக்தியை விளக்க 100 உதாரணங்கள் என்று கோர்வையாக நம்மை உடனழைத்துச் செல்கிறார் செட்கின்.

   ஒவ்வொரு அத்தியாயமும் ஓரிரண்டு பக்கங்கள்தான். முதல் 10 அத்தியாயங்களின் தலைப்புகளை குறிப்பிட்டால், உங்களுக்கு நூலைப் பற்றிய ஐடியா கிடைத்துவிடும். 

 

  1. Send love to someone you feel has wronged you in some way.
  2. There are no bad guys.
  3. Using our creativity rids us of depression.
  4. Don’t hurry – Don’t worry – Don’t think too much.
  5. There is an inner voice speaking to you at all times. You’ll never hear it if you don’t quiet your mind. Listen – Meditate.
  6. Feeling down in the dumps? Read about love.
  7. No matter what your situation in life, you can catapult yourself into the place of your dreams.
  8. You teach best what you must need to learn.
  9. Live never to be ashamed of anything you’ve ever done. Then you can go about your life without fearing something might surface that you are’nt proud of.
  10. We are always in a healing mode – physically, spiritually and mentally.

 

      இந்த நூல் படிப்பதற்கு மிகவும் எளியது, பயனுள்ளது. மகிழ்ச்சியை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்.

      வேறு என்ன வேண்டும் ?