popular tamil lyricist kavignar Piraisoodan passed away

தஞ்சை மாவட்டம் நன்னிலம் ஊர். கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர், திரைக் கவிஞர் ஆகும் எண்ணத்தில், சென்னை வந்தவர். கண்ணதாசனின் அபார ரசிகர். கவிஞர், நடிகர், வசனகர்த்தா, ஆன்மிகவாதி எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் கவிஞர் பிறைசூடன்.
எந்தவித பழக்கமும் இல்லாத ஒரு நேர்மையான மனிதர். அவரைச் சந்தித்துப் பேசியபோது, நான் இதை உணர்ந்தேன். அவரும் நல்ல உயரம் – அவரின் எண்ணங்களும உயரம்.

1984ஆம் ஆண்டு ஆர் சி சக்தி இயக்கத்தில் வெளியானசிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதியதன் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். மெல்லிசை மன்னர் தவிர, இளையராஜா , தேவா, ரஹ்மான் என்று பலரின் இசையில் பல்வேறு படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.

திரைப்படங்களில் 2,000 பாடல்கள், தனிப் பாடல்கள் 7,000 பாடல்கள் என சுமார் 10,000 பாடல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை மூன்று முறை பெற்றவர்.

ரஜனி நடித்த `ராஜாதி ராஜா’ படத்தில் ‘மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா’
‘பணக்காரன்’ படத்தில் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’
கேளடி கண்மணி’யில் ‘தென்றல் தான் திங்கள்தான் நாளும் சிந்தும்’
ஈரமான ரோஜாவேயில் `கலகலக்கும் மணி ஓசை சலசலக்கும் குயில் ஓசை மனதினில் பல கனவுகள் மலரும்’
‘கோபுர வாசலிலே’ படத்தில் ‘காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’
என இவர் எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

1991-ல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில்
‘சோல பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா’
என்ற பாடலுக்காக, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றார்.
‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலில் இசையுடன் இவரின் வரிகள் காதல் தோல்வியின் வலியில் நனைத்தது. ,
உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேனில் ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’,எனப் பல பாடல்கள் இவரின் கைவண்ணம்.

ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ படத்தில் ‘நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடிபோதும் எனும் பாடல், வாழ்வின் யதார்த்தத்தை கூறுகிறது.

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

ராஜாதி ராஜா படத்தில் இடம் பெற்ற மீனம்மா பாடல் நல்ல மொழி அழகு கொண்டது

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா…
சுகமான புது ராகம்…
உருவாகும் வேளை நாணுமே…
இதமாக சுகம் காண…
துணை வேண்டாமோ
இட்ட அடி நோகுமம்மா…
பூவை அள்ளி தூவுங்கள்…
மொட்டு உடல் வாடுமம்மா…
பட்டு மெத்தை போடுங்கள்…
சங்கத்தமிழ் காளை இவன்…
பிள்ளை தமிழ் பேசுங்கள்…
சந்தனத்தை தான் துடைத்து…
நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்…
பள்ளியறை நேரமிது…
தள்ளி நின்று பாடுங்கள்…
சொல்லி தர தேவை இல்லை…
பூங்கதவை மூடுங்கள்…

இட்ட அடி நோகுமம்மா, பூவை அள்ளித் தூவுங்கள்’ என்று தொடங்குகையில், சட்டென்று ஒரு சிலிர்ப்பு எழுந்தடங்கும். கம்பன் மகனும் கூத்தனும் சோழனும், தெருவழியே கொட்டிக்கிழங்கு விற்க வந்த கலைமகளும் நினைவில் வந்து போவார்கள்

பிறைசூடனின் தனித்த முத்திரைகளில் இதுவும் ஒன்று. பழந்தமிழ்ப் பாடல் வரிகளின் உள்ளுறை உவமங்களை எடுத்தாள்வதில் வல்லவர் அவர். எடுத்தாளும் விதம் துருத்தலாய்த் தெரியாமல் வெகு இயல்பாக அமைந்திருக்கும்.

‘நடந்தால் இரண்டடி’ (செம்பருத்தி) பாடலைக் கேட்டால் சித்தர்களின் ஞானக் கும்மிகள் நினைவில் எழும். நூற்றுக்கணக்கான சித்தர் பாடல்களை நினைவிலிருந்தே சொல்லக்கூடியவர் பிறைசூடன். அவற்றின் தாக்கமும் நோக்கமும் மேற்சொன்ன திரைப்பாடலிலும் ஒன்றுகலந்திருக்கும்.
ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது அவற்றுக்கு ஜிங்கில்ஸ் எழுதிய இவர், அவர் இசை அமைத்த ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா’ என்ற பாடலையும் எழுதினார்.

‘ஸ்ரீராம ராஜ்யம்’ உட்பட சில மொழிமாற்றுப் படங்களுக்கு பாடல்களோடு வசனங்களையும் எழுதியிருக்கிறார்.
நிறைய பக்திப் பாடல்களையும் எழுதியுள்ள இவர், அவருடைய கவிதைகளை ‘தாலாட்டு முதல் தாலாட்டுவரை’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இது ஒரு அற்புதமான கவிதைத் தொகுப்பு.
தமிழ் மொழிப் புலமையையும் திரையிசைப் பாடல் வரிகளின் நுட்பங்களை விளக்கும் திறமையையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினார்.

பக்தி இலக்கியங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தார். திருவாவடுதுறை ஆதீனப் பள்ளியில் பயின்றதை அதற்குக் காரணமாகக் கூறுவார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘போர்க்களம் இங்கே’ (தெனாலி), ‘ரசிகா ரசிகா’ (ஸ்டார்) ஆகிய பாடல்களை எழுதியிருக்கிறார். ‘ரசிகா ரசிகா’ பாடலில் ‘இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும், அதன் மணம் இனிக்கும்’ என்பது போன்ற காதல் மொழிகள் கவனத்தை ஈர்த்தன. இளையராஜாவின் இசையில் எழுதிய ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ (உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்), .

தினந்தோறும் நாம் பயணங்களில் கேட்டபடி சாதாரணமாகக் கடந்துபோகிற இந்தப் பாடல்களில் தொட்டுத் தொடரும் தமிழ் மரபுகளை விளக்கிச் சொல்ல பிறைசூடனைப் போல இன்னும் நமக்குப் பல கவிஞர்கள் வேண்டியிருக்கிறது.

இளையராஜா திரைப்படங்களுக்காக இசையமைத்துப் பாடிய பிரபலமான தாலாட்டு, ஒப்பாரிப் பாடல்களில் சிலவற்றை பிறைசூடன் எழுதியிருக்கிறார். ‘மன்னவன் பாடும் தமிழ் பிறந்த தென்பாண்டி முத்தே முத்தே’ (பொங்கி வரும் காவேரி) என்ற தாலாட்டு, பெண் குழந்தையை ‘பூமஞ்சள் கொத்தே’ என்று வர்ணிக்கையில் சிறப்புறுகிறது.

எழுதா இலக்கியங்களின் சாரத்தையும் உள்வாங்கிக்கொண்டதன் வெளிப்பாடுகள் அவை. ராஜ்கிரண் நடித்த ‘சோலப் பசுங்கிளியே’ (என் ராசாவின் மனசிலே) பாடல் கேட்டோர் யாவரையும் கண்கலங்க வைப்பது. ‘பந்தக் காலு பள்ளம் இன்னும் மண்ணெடுத்து மூடலையே’ என்பதும்கூட ஒப்பாரிப் பாடல்களிலிருந்து டுத்தாளப்பட்ட வார்த்தைகள்தான். .

தன்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மனமின்றி வாய்ப்புகளை விட்டுக்கொடுத்தவர் .
2017ஆம் ஆண்டு, நான் எனது ரசிகாஸ் அமைப்பு நடத்திய, இயக்குனர் ஶ்ரீதர் நிகழ்விற்கு, அவரை அழைக்க, அவர் இல்லம் சென்றேன். அன்புடன் பேசியதுடன், அவர் எழுதிய புத்தகங்கள் தந்தார். ஶ்ரீதர் விழாவிற்கும் வந்து மிகச் சிறப்பான உரை தந்தார். என்னிடம் பேசியபோது, தான் யாரிடமும் வாய்ப்பு கேட்டு போனதில்லை என்று உண்மைக் கவிஞனுக்கே உரிய கர்வத்துடனும், கம்பீரத்துடனும் கூறினார். சினிமாவில் நிலைத்து நிற்க நிறைய விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் , தனக்கு அந்த மன நிலை இல்லாததால், கிடைப்பது இறைவன் தருவது என்றே வாழ்வதாகச் சொன்னார். அவரின் தோற்றமும், சொன்ன விதமும் அது உண்மைதான என்பதை உணர்த்தியது.

இளையராஜா இசையில் அவரின் பாடல்கள் பல ஹிட்டாய், அவர் வாய்ப்பு தந்தாலும, நாம் நண்பர்களாக இருந்து கொள்வோம் – பாடலாசிரியர் – இசை அமைப்பாளர் என்ற உறவு வேண்டாம் என்றாராம். காரணம், அவரின் எழுத்துக்களில் தேவை இல்லாமல் திருத்தம் கூடாது என்ற சுய மரியாதை. தான். (one line change என்றாலும, என் line ஆக இருக்கவேண்டும் என்று கூறிய கவிஞர் வாலியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது)

பிறைசூடன். மொழிமாற்றுப் படங்களுக்கு வசனங்கள் எழுதியும் பாடல்கள் எழுதியும் அந்த இழப்பை ஈடுகட்டிக்கொண்டார். ஆயிரக்கணக்கில் பக்திப் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

ஆன்மிகத்திலும் ஆழம் கண்ட பிறைசூடன் மஹா பெரியவரின் ஆன்மிக சேவைகளை விளக்கி, ‘மஹா பெரியவா’ எனும் கவிதை நூலை எழுதி, வெளியிட்டார். டப்பிங் படங்களுக்கும் பாடல்கள், வசனம் எழுதியுள்ளார். ஏராளமான பட்டிமன்றம், கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பல முக்கியமான பங்களிப்புகளை வழங்கிய பிறைசூடன் ஆஸ்கர் விருதுக்கு இந்தியப் படங்களைப் பரிந்துரைக்கும் குழுவிலும் இடம் பெற்று இருந்தார். கரோனா காலத்தில், எதிர் பாராமல் மரணம் அடைந்தவர்களில் இவரும் ஒருவரானது இலக்கிய உலகிற்கு பெரிய இழப்பு என்பதே உண்மை.

திருமண வீடுகள் எதுவென்றாலும் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும்தான் வாழணும்’ (பணக்காரன்) என்று வாழ்த்திக்கொண்டிருப்பார் பிறைசூடன். அவரது குருநாதர் கண்ணதாசனின் ‘வாராயென் தோழி வாராயோ’ (பாசமலர்) பாடலும் அதற்கு முன்போ, பின்போ ஒலிக்கும். குருவை வியந்து நாளும் பொழுதும் போற்றிய ஒரு சீடனுக்கு அதைவிட என்ன பெருமை வேண்டும்?

அடுத்த வாரம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம்.