escape of Odysseus from one eyed giant at cyclops using goats

(picture from Image Creator Microsoft bing)

ஓடிசியஸின்  வேண்டுகோளைக்  கேட்ட மன்னர்  அவனுக்கு வேண்டிய உதவி செய்வதாக உறுதி கூறிவிட்டு அவனை நிம்மதியாக படுக்கும்படி சொல்லிவிட்டு தன் அரண்மனைக்குச் சென்றார்.

மறுநாள் மன்னர்  ஓடிசியசை தனது  குடிமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவன் பயணம் செய்வதற்கு உதவியாக சிறந்த கப்பல் ஒன்றையும்  கப்பலை செலுத்துவதற்காக மாலுமிகளையும்  ஏற்பாடு செய்யுமாறு மன்னர்  குடிமக்களுக்கு கட்டளையிட்டார்.

குடிமக்களும் மன்னர் கட்டளைப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு அரண்மனைக்கு வந்தனர்.  மன்னர் ஓடிசியசிற்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமக்களுக்கும் பெரிய விருந்து ஒன்று ஏற்பாடு செய்தார்.  அந்த விருந்தில் டிரோஜன் போரைப் பற்றிய பாடல் ஒன்றை ஒரு கவிஞர் பாடினார், ஓடிசியஸ்  அதைக் கேட்டுவிட்டு  முகத்தை மூடிக்கொண்டு அழுதான். அதைப் பார்த்த மன்னர்  வீர  விளையாட்டு போட்டிகளைத் துவங்கும்படி ஆணையிட்டார்.  ஓடிசியஸூம்   அந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்தான்.

குடிமக்களும் மன்னரும் ஓடிசியஸின் வீரத்தைப் பாராட்டினர்.  இப்படிப்பட்ட வீரனுக்கு உதவுவது தனது கடமை என்றும் மன்னரும் மனதில் தீர்மானம் கொண்டார்.

விளையாட்டுப்  போட்டிக்கு பிறகு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.  ஓடிசியஸ் தனது துயரத்தை அடக்க வழியில்லாமல்  தவித்தான். இதைக் கண்ட மன்னர் ஓடிசியஸ்  வாழ்வில் பல துயரமான சம்பவங்கள் நடந்திருக்கும் என்பதை ஊகித்து அவனது  முழு வரலாற்றையும் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார் .

இதுவரை அவன்  ஏற்றுக்கொண்ட பயணத்தில் எந்தெந்த நாடுகளை பார்த்தான்  என்றும் அங்கெல்லாம் அவனுக்கு  நேர்ந்த துயர் அனுபவங்கள் என்னென்ன என்பதையும்  விளக்கிக் கூறும்படி அன்புடன் வேண்டிக் கொண்டார். அது மட்டுமல்லாமல்  டிரோஜன் போரில் அவன்  ஆற்றிய வீர தீரச் செயல்களைப் பற்றி தனக்கும் தனது குடிமக்களுக்கும் விளக்கிச் சொல்லுமாறும் பேரன்புடன் கேட்டுக்கொண்டார்.

ஓடிசியஸ்  தனது நீண்ட கதையைக் கூறத் தொடங்கினான்.

மன்னர் மன்னா! என் மீது அன்பு கொண்ட இந்நாட்டு மக்களே! வீரமும் தீரமும் விவேகமும் வெற்றியும் நிறைந்த என் வாழ்க்கையில் துயரமும் அடுக்கடுக்காக வந்து கொண்டேயிருந்தன.

இதாக்கா என்னும் புகழ் பெற்ற ஊரே என் நாடு. அதன் மன்னன் நான்.  டிராய் நாட்டில் நடைபெறும் போரில் கிரேக்கருக்கு ஆதரவாக ஹெலனை மீட்டு வரும் பணிக்கு என்னை அர்பணித்த வீரத் தளபதியும்  நான். வீரர் அக்கிலிஸ் ஹெக்டரைக்  கொன்ற பின்னரும் டிராய் நாட்டுக் கோட்டைக்குள் செல்ல இயலாமல் தவித்தோம். பின்னர் ஒரு மாயக் குதிரையை நான் வடிவமைத்து அதன் மூலம் கோட்டைக்குள் சென்று டிராய் நகரைக் கைப்பற்றினோம்.

ஹெலனை மீட்டு மன்னர்   மெனிலியசிடம் ஒப்படைத்தோம். வெற்றிக் களிப்புடன் அனைவரும் தங்கள் நாட்டிற்குப் புறப்பட்டோம். நாங்கள் செய்த மாபெரும் தவறு வெற்றியின் மிதமிதப்பில் கடவுளர்களுக்குச் சரியான பலிகள் கொடுக்கத் தவறியதுதான்.

விளைவு எங்கள் கடல் பயணம் மிகவும் கொடுமையாக இருந்தது. காற்று எங்களுக்கு எதிராக வீச ஆரம்பித்தது.    எங்கள் கப்பல்களை நாங்கள் செல்ல வேண்டிய பாதைக்குப் பதிலாக வேறொரு தீவில் கொண்டுபோய் சேர்த்தது.  அந்தத் தீவில் இருந்த வீரர்கள் எங்களைத் தாக்க வந்தனர். வீரத்தில் யாருக்கும் சளைக்காகத் நாங்கள் அந்த வீரர்களை வென்று வெற்றிவாகை சூடினோம்.

நாங்கள் உடனே அந்த தீவை விட்டு புறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அங்கிருந்த மதுவின்  மயக்கத்தில் என் வீரர்கள்  சற்று காலதாமதம் செய்தார்கள். விளைவு தீவின் உள்  பகுதியிலிருந்து பெரும்படை வந்து எங்களைச் சூழ்ந்துகொண்டது. நாங்களும் துணிந்து தாக்கினோம். இருப்பினும் என் வீரர்களில் பலர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள்  கப்பலில் ஏறி அதனை விரைவாகச் செலுத்தி தப்பித்தோம் .

ஆனால் சிறிது தூரம் செல்வதற்குள் கடவுளர்கள்  எங்கள் கப்பல்களுக்கு எதிராகப் பெரிய புயலை ஏவினர். அதனால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் எங்கள் பாய் மரங்கள் உடைபட்டன. பாய்கள் கிழிபட்டன. அதன் பின் நாங்கள் லோட்டஸ்களின் நாட்டை அடைந்தோம். அங்கிருந்த லோட்டஸ் பழங்களைத் தின்ற சில மாலுமிகள் அதற்கு அடிமையாகி அந்தத் தீவை விட்டு வர மறுத்தனர். அவர்களை அங்கேயே விட்டுவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அதன் பின்  சைக்ளோப்பியர் வசிக்கும் தீவை அடைந்தோம். அது நல்ல வளமான தீவு. நிறைய ஆடுகள் இருந்தன. வயல்களும் பழ மரங்களும் நிறைய இருந்தன. புயலிலும் துயரிலும் தவித்த எங்களுக்கு அந்தத் தீவு சொர்க்க புரியாக இருந்தது. அந்த நாட்டிலிருந்து எங்கள் பயணத்திற்குத் தேவையான் உணவுப்  பொருட்களையும் ஆடுகளையும்  எடுத்துச் செல்லவேண்டும் என்று முடிவு கட்டினோம்.

அதற்காக  மற்றவர்களை கப்பல் அருகேயே காவல் இருக்கச் சொல்லி , நான்  ஆறு மாலுமிகளை  அழைத்துக்கொண்டு  தீவுக்குள் சென்றேன் .

அங்கே ஒரு பெரிய குகை தென்பட்டது. அது ஒரு மன்னனின் உணவு குவிக்கப்பட்டிருக்கும் களஞ்சியம் போல் இருந்தது. எண்ண  முடியாத அளவிற்கு ஆடுகளும் அங்கே இருப்பதைப் பார்த்தோம். குகைக்குள்ளே பல தரப்பட்ட உணவு வகைகளும் இருந்தன. அந்த இடத்தின் தலைவனைச் சந்தித்து அவனிடம் வேண்டி உணவுப் பொருட்களைப் பெற்றுச் செல்லலாம் என்று காத்திருந்தோம்.

மாலையின் அந்த இடத்தில் தலைவன் வந்தான். அவன் சாதாரண மனிதன் அல்ல மாபெரும் ராட்சதன் என்பதை அறிந்தபோது நடு நடுங்கிவிட்டோம். அவன் பாலிபீமஸ் என்ற நெற்றியில் ஒரே கண்ணை உள்ள அரக்கன் என்பதை அறிந்தோம். எங்களைப் பார்த்துவிட்டு “யார் நீங்கள்?” என்று இடி போல் அவன் கத்தியதைக் கேட்டதும் எங்களது பயம் அதிகரித்தது. இருப்பினும் நான் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு , ” நாங்கள் டிராய் நாட்டுப் போரை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். உங்களிடம் கேட்டு உணவுப் பொருள் வாங்கிச் செல்ல வந்திருக்கிறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள் ” என்று வேண்டிக் கொண்டேன். ஆனால் அந்த ராட்சசன் பதில் எதுவும் சொல்லாமல் குகையின்  கதவை ஒரு பெரிய பாறையை வைத்து மூடினான் .   என்னுடைய மாலுமிகள் இருவரைக் கொன்று அவர்கள் உடலைச் சாப்பிட்டுவிட்டு ஆட்டுப்பால் குடித்துவிட்டு    “எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது. நாளை காலை மற்றவர்களைக் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு ஆடுகள் மத்தியில் படுத்து உறங்கினான்.

odysseus-and-the-cyclops

எங்களால் அந்த ராட்சசனைக் கொல்வது அதிக சிரமமிருக்காது. ஆனாலும் அந்த வாயிலில் உள்ள பாறையை எங்களால் அகற்ற முடியாது. அது அவனால் மட்டுமே முடியும். அதனால் அடுத்த நாள் காலை வரை காத்திருந்தோம். காலையில் அவன் பாறைக்  கதவைத் திறந்து ஆடுகளை வெளியே செல்ல உத்தரவிட்டான்.   எங்களைப் பார்த்து  ஒவ்வொரு வேளைக்கும் இருவரைச் சாப்பிட்டுவிட்டு கடைசியாக என்னைச் சாப்பிடப் போவதாகக் கூறி ‘அதுதான் நான் உனக்கு அளிக்கும் பரிசு’ என்று சொல்லிவிட்டு எங்களை  உள்ளே வைத்து கதவை மூடி ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றான்.

அவன் திரும்பி வந்ததும் அவனைக் கொல்வதற்கு ஒரு திட்டம் தீட்டினேன். அதன்படி நானும் என் சக மாலுமிகளும் ஆளுக்குக்கொரு  மரக் குச்சியை  உடைத்து அங்கிருந்த நெருப்பில் அதன் முனையை கருக்கி சூட்டுக்கோலைத்  தயார் செய்திருந்தோம் .

அன்று மாலை அந்த ராட்சசன் குகைக்கு வந்ததும் நான் அவனுக்கு என்னுடன் கொண்டுவந்த மதுவை ஒரு கோப்பையில் ஊற்றிக் கொடுத்தேன். அவன் அதை ரசித்துக் குடித்து இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கிக் குடித்தான்.  இருப்பினும் எங்கள் வீரர்களில் இருவரைக் கொன்று சாப்பிட்டுவிட்டு  குகைக் கதவை மூடுமுன் நான் எஞ்சியிருந்த நான்கு வீரர்களை அழைத்துக் கொண்டு நாங்கள் ஐவரும்  தயார் செய்த குச்சியைக் கொண்டு எங்கள் பலம் முழுவதையும் உபயோகித்து அவனுக்கிருக்கும் ஒரே கண்ணில் பாய்ச்சினோம். அப்படியும் அவன் தனது கண்ணில்  குத்தப்பட்ட குச்சிகளை எடுத்து வீசினான். அவனால் எங்களைப் பார்க்க முடியவில்லை. ஓடிப்போய் குகை வாசலில் நின்று கொண்டான். அதன் வழியாக நாங்கள் தப்பித்துச்  செல்ல வேண்டும். அவனுடைய ராட்சசக் கைகளுக்குள் அகப்படாமல் அந்த வாசலைக் கடக்க முடியாது. எங்களைப்  பிடிப்பதற்காகவே கண்தெரியாத அந்த ராட்சசன் வழியை மறைத்துக் கொண்டு கையை அகல விரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். 

Odysseus And The Sheepஅப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கிருக்கும் ஆடுகளை வெளியே செல்லும்படி விரட்டி அடித்தேன். ராட்சசன் தன்னைத் தாண்டிச் செல்லும்  ஆடுகளின் முதுகைத்  தடவிப் பார்த்து அது மனிதர்கள் அல்ல என்று தெரிந்து அவைகளை வெளியே போக விட்டான். நானும் என் கக மாலுமிகளும் கொழுத்த ஆடுகளில் மூன்று ஆடுகளை அவன் படுப்பதற்காக வைத்திருந்த செடி கொடிகளால் ஒன்றாகக் கட்டி அவற்றின்  வயிற்றுப்புறத்திற்குக் கீழே தொட்டில் போல் கட்டிக் கொண்டு அதில் படுத்துக் கொண்டு சென்றோம்.  ஆடுகளுடன் ஆடுகளாக  குகை வாசலுக்குக் சென்றோம். அவன் ஆடுகளின் முதுகை மட்டும் தடவிப் பார்த்ததால் அதுவும் நடு ஆட்டின் அடியில் ஒளிந்துகொண்டிருக்கும் எங்களை அவனால்  கண்டுபிடிக்க முடியவில்லை.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொருவராக அந்தக் குகையிலிருந்து தப்பினோம்.

பிறகு விரைவாகச் சென்று மற்ற மாலுமிகளுடன் சேர்ந்து கப்பலில் ஏறிக்  கொண்டோம். போகும்போது அங்கிருந்த உணவூப்  பொருட்களையும்  ஆடுகளையும் கப்பலில் ஏற்றிக்கொள்ளத் தவறவில்லை.

கப்பல் அந்தக் குகை வழியாகச் செல்லும் போது அங்கே குகை வாசலில் அந்த ராட்சசன்  நின்றுகொண்டு தன்னிடமிருந்து தப்பிய எங்களைத் தேடி கண் தெரியாமல் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தான். 

எங்களைத் துன்புறுத்தி சக மாலுமிகளைக் கொன்றுத் தின்ற அவன் மீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது. அவனைப் பார்த்து ” அடேய்! அற்பப் பதரே ! உன் கண்ணை யார் சிதைத்தது என்று கேட்டால் இத்தாக்காவின் மன்னன் ஓடிசியஸ் என்று கூறு ” என்று வீராவேசமாகக் கத்தினேன். 

அவன் அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தவனைப் போல் நின்றான். ” நீ தான் ஓடிசியஸா ! என்னால் நம்பவே முடியவில்லையே ! நான் யார் தெரியுமா? கடல் தேவன் பொசைடன் அவர்களின் மகன்.   உன்னால்தான் இந்த ஆபத்து நடக்கும் என்று ஒரு ஜோதிடன் எனக்கு முன்னமே கூறினான். நீ ஒரு மன்னனைப் போல்  வருவாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு கோழையைப் போல் எனக்கு மது கொடுத்து மயங்க வைத்து என் கண்ணைப் பறித்தாய்! இருப்பினும் மன்னன் என்பதால் உன்னை மதிக்கிறேன்! நீ மறுபடியும் என் குகைக்கு வா ! நீ கேட்டபடி உனக்கு உணவும் ஆடுகளும் தருகிறேன் ” என்று கூறினான். 

எனக்கு அவன் மீது உள்ள ஆத்திரத்தில் மேலும் கத்தினேன் ” பொசைடன் மகனாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை!  உன்னைக்  கொன்று நரகத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று கூறினேன்.

அப்போது அவன்  வானத்தைப் பார்த்து ” பொசைடன் தந்தையே! என்னைத் தாக்கிய ஓடிசியஸ் அவன் சொந்த நாட்டிற்குத் திரும்பப் போகவதற்குள் அவனுக்குத் தீராத துயரங்களையும்  துன்பங்களையும் தந்து   அவனைத் துடிதுடிக்க விடுங்கள்! அவனுக்கு ஏராளமான விபத்துக்களும் சிக்கல்களும் அவமானங்களும் வரவேண்டும். ” என்று உரத்த குரலில் வேண்டியது எங்கள் அனைவரது காதுகளிலும் விழுந்தது. 

தன் மகனின் குரல் தந்தை பொசைடனிற்குக் கேட்டிருக்க வேண்டும்.  அந்த சைக்ளாப்ஸ் அரக்கனிடமிருந்து தப்பினாலும் பொசைடன் எங்களை விடாமல் துரத்தித் துரத்தி அடித்தார். 

நாங்கள் அடுத்ததாக அயோலியா தீவை அடைந்தோம்! 

(தொடரும்)