HAPPY women's DAY MESSAGE CARD Template | PosterMyWall


“பெண்ணே நீ கலங்குவதற்காக பிறக்கவில்லை

கதிரவன் போல் ஒளி வீசுவதற்காக பிறந்துள்ளாய்!”

“நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவதில்லையாம்”

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பெண்ணின் பெருமையைப் பற்றி. எல்லா தொழில்களிலும் நேரம், காலம், லீவு எல்லாம் உண்டு. ஆனால் இந்தப் பெண்டிர்களுக்கு இவை ஒன்றும் தரப்படாவிட்டாலும் இவர்களை மதித்து ‘பெண்கள் தினம்’ என்று உலகம் பூராவும் கொண்டாடப்படுகிறது.

எல்லா நாட்களும் பெண்கள் தினம் ஆனாலும் இப்படி ‘பெண்கள் தினம்’ என்று ஒன்று கொண்டாடப்படுவதால் இந்த நன்னாளை முன்னிட்டு எட்டு பெண்களைப் பேட்டி கண்டு எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.

 

பெண்களில் எந்த வித பாகுபாடும் இல்லாதெனினும் நமது மூன்று விதமான எல்லைப் படையில் இருக்கும் வீரர்களின் பெண்டிர்களின் சுமை சிறிது அதிகம் என்பதால் அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர எண்ணியுள்ளேன்.

எல்லாப் பெண்களுக்கும் கடின காலம் இருக்கும் என்றாலும் இவர்களது நிலைமை ஒரு துளி அதிகம். கணவரது அருகாமை இல்லாதது என்பது ஒரு புறம் என்றால், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடமாற்றம், அந்த சூழ்நிலைக்கேற்ப தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் தயார்ப்படுத்துதல்,   மூலைக்கு மூலை செல்போன் வந்து விட்ட இந்தக் காலத்தில் கூட கணவர் சீனா எல்லையில் கடுங்குளிரில் ஃபோன் கூட செய்ய முடியாத நிலையில் இருத்தல் போன்றவை இவர்களுக்கே உரித்தானது.

ரோஜாப் பூவில் நிறைய இதழ்கள் இருந்தாலும் மார்ச் 8 ஐ முன்னிட்டு நான் எட்டு இதழ்களை இங்கு நோக்கலாம் என்று எண்ணுகிறேன். வாருங்கள் என்னுடன் நீங்களும் அதன் மணத்தை அனுபவிக்கலாம்.

மிருதுவான கூந்தல் கிடைக்கனுமா? ரோஜா இதழ் தெரபி யூஸ் பண்ணுங்க!! | rose petal  hair mask for super soft silky hair - Tamil BoldSky

 

முதல் இதழ் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்றுள்ள அப்போலோ மருத்துவ மனையில் உணவியல் நிபுணராகவும், மூன்று இடங்களில் முதன்மை வகுப்பு ஆசிரியராகவும் பணி புரிந்துள்ள கர்நாடகாவைச் சார்ந்த நம்ரதா பட். 24 வருடங்கள் ‘ஆர்மி பெண்கள் நலக் குழு’வைத் திறம்பட நடத்தியுள்ளார். தற்போது பூனாவில் இருக்கும் இவர் மாற்றுத் திறனாளிகளுக்காக உடற்பயிற்சி, பேச்சுப் பயிற்சி கொடுக்கும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இவரது கணவர் ஆர்மியில் மிக உயர்ந்த பதவியில் இருப்பதால் தனியாளாக எல்லாவற்றையும் சமாளிப்பதுடன் விசேஷங்களுக்கும் செல்ல வேண்டி வருகிறது. அப்படி ஒரு சமயம் ஒன்றரை வயதுக் குழந்தையுடன்  பரோடாவிலிருந்து மங்களூர் செல்லும் போது இரவில் மனம் ஏதோ கலக்க எட்டிப் பார்த்தால் ஸூரனுர் டொமிவில்லி என்ற ஓர் இடத்தில் இரயில் வண்டி நின்று விட்டது. கடுங்குளிர், இருட்டு. வண்டி எப்போது கிளம்பும் என்று தெரியாததால் இதற்கு மேலும் வண்டியில் உட்கார்ந்து இருப்பது ஊசிதமல்ல என்று இறங்கி, பஸ்ஸில் சென்றால் விசேஷத்திற்கு நேரம் ஆகும், மேலும் இந்த இருட்டில் சிறு குழந்தையுடன் எத்தனை நேரம் பஸ்ஸில் பிரயாணம் செய்ய முடியும் என்று யோசித்து ஒரு வாடகைக்  காரைப் பிடித்துள்ளார். அதுவும் கொஞ்சம் அபாயகரமானதுதான். தெரியாத வண்டியில் ஏறி அவரிடம் ஃபோன் செய்ய வேண்டும் என்று கூறியதற்கு, சிறிது பொறுங்கள் பத்திரமான பூத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார். பயந்து கொண்டே இருந்தவுடன் தனக்குத் தெரிந்த பூத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து வீட்டிற்கு பேசியபோது அவர்கள் திட்ட ஆரம்பித்தவுடன் பூத்தின் உரிமையாளர் ஃபோனை வாங்கி ‘நீங்கள் கவலைப் பட வேண்டாம், எனக்குத் தெரிந்த நல்ல ஓட்டுனர்தான்’ என்று இரண்டு பக்கமும் சமாதானப்படுத்தினார். வீட்டிற்குச் சென்றவுடன் அவர்கள் கேட்ட முதல் கேள்வி ‘ஏன் பஸ்ஸில் வராமல் வாடகைக் காரில் வந்தாய்?’ இவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை! பத்திரமாக வந்து சேர்ந்ததிற்கு ஒரு பாராட்டு வேண்டாம், ஆறுதல் கூட இல்லையே! பள்ளியில் சிறந்த ஓட்டப்பந்தைய வீரர். வரைதல், மெழுகுவர்த்தி செய்தல், கேக் செய்தல் மற்றும் தோட்டத்தைப் பராமரித்தல் என்று பல கலை வித்தகர். தத்துவம், ஊட்டச்சத்து சம்பந்தமான புத்தகங்களையே விரும்பிப் படிக்கும் இவர் தற்போது படித்து முடித்துள்ள ட்டுயுடில் பதிப்பகத்தின் பிரான்செசகோ மிரல்ஸ் மற்றும் ஹேக்டர் அவர்களால் எழுதியுள்ள ‘இகக்காய் ஜர்னி’ மிகவும் பிடித்தமான புத்தகம் என்கிறார். இது வாழ்க்கையில் சந்தோஷத்தை அடைவதைப் பற்றி விவரித்துள்ளது என்று கூறும் இவர் இது வாழ்க்கையை முழுமையாக்குவதையும், நீண்ட வாழ்விற்கு ஓர் அர்த்தத்தை உண்டாக்குவதையும் உணர்த்துகிறது எனவும், வாழ்வின் இரகசியத்தைத் தெரியப்படுத்துகிறது எனவும் கூறுகிறார்.

 

இரண்டாவது இதழ் பஞ்சாப்பைச் சார்ந்த பிஎஸ்சி பிஎட் படித்து பள்ளியில் ஆசிரியராக வேலை செய்த நந்தினி டாண்ட். கணவர் லேயில் இருந்த போது பத்தாவது, எட்டாவது படிக்கும் தனது இரண்டு பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு கொரோனா காலத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்ட மாமியாருக்குத் தனி அறையில் மருத்துவ ஏற்பாடுகள் செய்து, மூக்கின் வழியாக உணவு கொடுத்து காப்பாற்றியதில், எப்போதும் தளர்ந்து போகக் கூடாது, கடமையைச் செய்ய வேண்டும், எங்கே மனமோ அங்கே மார்க்கமுண்டு என்று அறிந்து கொண்டேன் என்கிறார். தற்போது சண்டிகரில் இருக்கும் இவருக்கு டான்ஸில் மிகவும் விருப்பமுண்டு, ஆகவே முடிந்தவரை டான்ஸ் வகுப்புகளுக்குச் செல்வார். மனத்திற்கு இரம்யமான, இலகுவான புத்தகங்களைப் படிக்கும் இவருக்கு மிகவும் பிடித்த புத்தகம் பெங்குவின் பதிப்பகத்தாரின் டிவிங்கிள் கன்னாவால் எழுதப்பட்ட ‘மிஸ்ஸெஸ் ஃபன்னி போன்ஸ்’. மிக பணக்காரரும், பிராபல்யமானவருமான இந்த ஆசிரியர் ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சிகளையும், குழந்தைகள் செய்யும் அட்டகாசங்களையும், வாழ்க்கையின் பலவிதமான காலங்களையும் ஹாஸ்யமாகச் சொல்லி நம்மை மகிழ்விப்பதால் இந்தப் புத்தகத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரசிக்கலாம் என்று வாழ்வை எளிதாக்குகிறார்.

 

மூன்றாவது இதழ் ஜெய்ப்பூரைச் சேர்ந்த லைப் சைன்ஸில் எம்எஸ்ஸி யும் சைகாலாஜியில் எம்ஃபில் பட்டமும் பெற்றுள்ள  தருணா சிங். பிள்ளை பத்து வயதாகும்போது விமானப் படையில் பணிபுரிந்து கொண்டிருந்த கணவர் ஒரு விபத்தில் படுகாயமடைந்து விட இருவரையும் காப்பாற்றப் போராடினார். தற்போது ஜோத்புரில் இருக்கும் இவரது அரிய பண்பு பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குழந்தைகளுக்குப் படிப்பிற்காக பண உதவி செய்வதும், அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பதும், பெண் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதும், போலியோ தாக்கப்பட்டவர்களுக்கு ஆபரேஷனுக்கு பண உதவி செய்வதும் ஆகும். உலகம் சுற்றும் வாலிபியான இவர் 28 நாடுகளுக்குச் சென்றுள்ளார். கடினமான மலைகளில் ஏறுவதில் அதிக விருப்பம். அதிகப் புத்தகங்களைப் படிக்கும் இவருக்கு பீகான் பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ‘விக்டோர் இ பிரங்கிள் அவர்களுடைய சுயசரிதை’ மிகவும் பிடித்துள்ளது என்று கூறுகிறார். இது வாழ்க்கையின் நேர்மறை எண்ணங்களை தோற்றுவிப்பதாகவும், எந்த நிலைமையிலும் ஒருவருடைய நம்பிக்கையை மற்ற எவரும் தகர்க்க முடியாது எனக் கூறுவதாகவும், போராடுவதே வாழ்க்கைப் படகை ஓட்டும் என்று உணர வைப்பதாகவும் எண்ணுகிறார்.

 

நான்காவது இதழ் பஞ்சாப்பைச் சார்ந்த ஆங்கிலத்திலும், அரசியல் அறிவியலிலும் எம்ஏ பட்டம் பெற்ற பூஜா சேச்சி. பத்தாம் வகுப்பு வரை உள்ள சலுகை பெற்ற மாணவர்களுக்கு கோச்சிங் வகுப்பு எடுப்பதும், உடற்பயிற்சி வகுப்பு நடத்துவதும், பேட்மிட்டன் விளையாடுவதும் இவருடைய முக்கியமான அம்சங்களாகும். ஆர்மி வாழ்க்கையில் 1998 இல் முதன் முதலாக அடி எடுத்து வைத்தவுடன் மே, 1999 இல் கார்கில் போர் ஆரம்பமானது. சாதரணமானச் சூழ்நிலையில் வளர்ந்த இவருக்கு இந்தப் போர் செய்தியும், ஆர்மி சூழ்நிலையும் சிறிது பதட்டத்தைக் கொடுத்தது. மே 8 ந் தேதி பிறந்த குழந்தையை விட்டு விட்டு 28 ந் தேதி கணவர் கார்கில் போருக்காக எல்லைக்குச் சென்று விட, தினந்தோறும் டிவியில் வீர மரணம் எய்திவர்களின் பெயர்களைப் பயத்தோடு பார்த்துக் கொண்டிருப்பாராம். அதை இப்போது நினைத்தாலும் மயிர்கூச்செறியும் இவர் ஆனால் அந்த நேரத்தில் இறை நம்பிக்கை ஒன்று தான் தனக்கு எல்லா பலத்தையும், திடத்தையும் கொடுத்தது என்கிறார். அந்தக் காலம் தான் தனக்கு இப்போதிருக்கும் உறுதி மனப்பான்மைக்குக் காரணம் என்கிறார். தற்போது சண்டிகரில் இருக்கும் இவர் சைமன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ராண்டா பைய்ர்னே எழுதிய ‘பகவத் கீதா மற்றும் அதன் பவர்’ என்ற புத்தகம் தமக்கு மிகவும் பிடித்தமான புத்தகம் என்று கூறுகிறார். இது நாம் விரும்பும், எதிர்பார்க்கும் எல்லாம் நம்மால் அடைய முடியும் என்றும், நல்ல செயல்களைச் செய்தால் அது நம் மீதே  பிரதிபலிக்கும் என்றும், நல்ல வாழ்க்கைக்குத் தேவையான நேர்மறை எண்ணங்களும், அன்பும் எல்லோர் மீதும் பொழிய வைக்கும் என்றும் உணர்த்துவதாக கூறுகிறார். நல்ல செயல்களைச் செய்து விட்டு பலனை கடவுளிடம் விட வேண்டும் என்று சுட்டுகிறது இப்புத்தகம் என்றும், இது ஒருவரது வாழ்க்கை முறையை மேலும் செம்மைப்படுத்தும், அழகாக்கும் என்றும், ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப்புது எண்ணங்கள் ஏற்படும் என்றும், அறிவு சம்பந்தமான இந்தப் புத்தகம் நல்ல சிந்தனையைத் தூண்டும் என்றும், வாழ்க்கையின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஒரு முறையாவது இதைப் படிக்க வேண்டும் என்றும்  பரிந்துரைக்கிறார்.

ஐந்தாவது இதழ் டெல்லியைச் சேர்ந்த ஆங்கில இலக்கியத்தில் எம்ஏ பட்டம் பெற்றுள்ள, வர்ணம் தீட்டுவது, துணியில் வேலைப்பாடு, தோட்டம் பராமரித்தல், தையல், கவிதை புனைவது இவைகளில் ஆர்வமுள்ள தற்போது பூனாவில் இருக்கும் பூர்வா பாலி டான்டன். இவருடைய தந்தை ஆர்மியில் இருந்ததால் சிறிய வயதிலேயே நிறைய இடங்களைப் பார்த்துள்ளார். பெண்ணிற்கு 3 1/2 வயதாகும்போது, கணவர் வெளி இடத்திற்கு மாறுதல் ஆன போது ஒரு விபத்தில் அடிபட்ட கனுக்காலில் ஆபரேஷன் நடந்ததால் வாக்கரை வைத்துக் கொண்டு நடந்து, கார் ஓட்டி பெண்ணை ஸ்கூலில் கொண்டு விட்டு அழைத்து வந்து மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இது வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத் தூண்டுகோலாக அமைந்தது என்று  திட மனதுடன் கூறுகிறார். புத்தகமும் கையுமாக இருக்கும் இவரைக் கவர்ந்த புத்தகம் அநேகம் இருந்தாலும் டபுள்டே பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சித்ரா பானர்ஜீ திவாகருனி அவர்களால் புனையப்பட்ட ‘தி பேலஸ் ஆப் இல்லூஷன்ஸ்’ மிகவும் பிடித்த புத்தகம் என்று கூறும் இவர் மேலும் திரௌபதியின் கண்களால் பார்க்கப்பட்ட மகாபாரதம் இது என்றும் போருக்கான சூழ்நிலை எப்படிப்பட்ட கடினமான சூழலையும் எதிர் கொள்ள ஆற்றலைத் தருவதாகவும், இந்த நாட்டையும், மனித உறவுகளையும் மதித்துப் பார்க்கும் கண்ணோட்டத்தைத் தருகிறது என்றும் மனந்திறந்து கூறுகிறார்.

ஆறாவது இதழ் தற்போது ராஞ்சியில் இருக்கும் கணக்கிலும், கல்வியிலும் எம்ஏ பட்டம் பெற்று கல்வியில் ஆராய்ச்சிப்படிப்பு மேற்கொண்டிருக்கும் டெஹ்ராடூன், உத்தரகாண்டைச் சேர்ந்த ஜோதி ஜோஷி டட். இப்போதும் இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு கணிதம் இணையதள வகுப்பு நடத்துகிறார். கணவர் பார்டருக்குச் சென்றுவிட 4 வயது குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டு விடுதியில் தங்கி ஆராய்ச்சியை மேற்கொண்டார். புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வமுள்ள இவர் பௌலோ கோயில்கோ எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஹார்பர் டார்ச் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ‘தி ஆல்கெமிஸ்ட்’ புத்தகத்தை மிகவும் விரும்புகிறார். இந்தப் புத்தகம் ஒருவரைத் தன்னுள் பார்க்குமாறு செய்கிறது என்றும் அதனால் இது சுய உதவிகரமாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

 

 

ஏழாவது  இதழ் மருந்தகம் படிப்பு படித்த பெல்காம், கர்நாடகாவைச் சேர்ந்த மண்டல ஆர்ட், பேப்பர் அலங்காரத்தில் விருப்பமுள்ள தற்போது பூனாவில் இருக்கும் கீதா சம்பத்குமார் பாடில். 2013 இல் ஸ்ரீநகரிலிருந்து 30 கிமீ தூரத்திருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த போது 5 மாத கர்ப்பிணியான இவர் சோதனைக்காக மருத்துவமனை செல்ல வேண்டி வந்தது. அந்தக் காலக் கட்டத்தில் அஃப் சல் குருவைச் சேர்ந்தவர்கள் ஆர்மி வண்டி மீது கல்லடித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் பகலில் எந்த வண்டியும் போக முடியாது. இரவிலும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு 500 மீட்டருக்கும் நின்று நின்றுதான் வண்டிகள் போகும். கேட்கப்படும் துப்பாக்கிச் சத்தம் அருகில் இல்லை என்று சொன்னாலும் எங்கே துப்பாக்கிகுண்டு வயற்றில் விழுந்து விடுமோ என்று பயந்து நடுங்கிக் கொண்டும், இந்தச் சூழ்நிலையில் வயிற்றில் வளரும் புது உயிரை நினைத்து அழுது கொண்டும் 30 கிமீ தூரத்தை எட்டு மணி நேரத்தில் கடந்து காலை 6 மணிக்கு மருத்துவமனைச் சென்று அடைந்தார்கள். அப்போது வாழ்க்கை என்பது எப்படி நிலையில்லாதது என்று உணர்ந்ததாகவும், எப்போதும் அந்த நாட்களை வாழ்நாளில் மறக்க முடியாது என்றும், அதை இப்போது நினைத்தாலும் பயமாகவும், ஜிப்சியில் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு கடவுளை வேண்டிக்கொண்டே எவ்வாறு அதனை எதிர்கொண்டேன் என்று ஆச்சர்யமாக இருப்பதாகவும் சொல்கிறார். இதுதான் ஆர்மீ வாழ்க்கை. ‘க்ருஹ ஷோபா’ என்ற கன்னட பத்திரிகையை விரும்பிப் படிக்கும் இவர் பிரபாத் பிரகாஷன் பதிப்பகத்தின் ஹிந்தியில் முகேஷ் நாடன் எழுதியுள்ள ‘ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கைக் கதைகளை’ மிகவும் ஆழ்ந்து படிப்பாராம். வாழ்க்கைக்குத் தூண்டுகோலாக இருக்கும் இந்தப் புத்தகம் வாழ்க்கையின் நடைமுறை வழிகாட்டியாக இருக்கிறது என்று மனந்திறந்து கூறுகிறார்.

எட்டாவது இதழ் எம்ஏ பிஎட் பட்டம் பெற்று வரைவதிலும், தோட்ட வேலையிலும் ஆர்வமுள்ள ஹிமாசலப் பிரதேசத்தின் தர்மசாலாவைச் சேர்ந்த தற்போது பூனாவில் வசிக்கும் தீக்க்ஷா பதக். கணவரின் மாறுதலால் குழந்தையையும் கவனித்துக் கொண்டு வேலைக்குச் செல்ல முடியாததால் தனது விருப்பமான வேலையை விட வேண்டி வந்துள்ளது என்று கூறும் இவர் இதற்காக பொறுமையைக் கடைப்பிடித்தும், வேறு அலுவல்களில் தம் மனத்தைச் செலுத்தியும் இந்தக் காலக் கட்டத்தை கடந்துள்ளதாகக் கூறுகிறார். மும்பை பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் எம்ஏ படித்துக் கொண்டிருந்த போது ஒரு பாடம் பெண்ணியத்தைப் பற்றியது. அப்போது அவருடைய ஆசிரியர் பரிந்துரைத்த பெங்குவின் பதிப்பகத்தின் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட ‘லஜ்ஜா’ என்கிற புத்தகம் தன்னை வெகுவாக ஈர்த்துள்ளது என்கிறார். இது பாப்ரி மஸ்ஜித்தில் நடந்த கலவரங்களைப் பற்றிய நெடுங்கதையாகும். பாமர மக்கள் பட்ட கஷ்டங்களைச் சொல்லி இதன் ஆசிரியர் ‘மதத்தின் மற்றொரு பெயர் மனிதத்தன்மை’ என்று எடுத்துக்காட்டுவதால் தன்னை இது வெகுவாக ஈர்த்துள்ளது என்கிறார்.

 

இந்த எட்டு இதழ்கள்தானா என்றால் இல்லை கானகத்தில் நான் தேடி எடுத்த ஒரு பூவின் சில இதழ்கள் இவை. எட்டு இதழ்கள் தனித்தனியாக இருப்பதில்லை. அவை ஒன்று சேர்ந்து ஒரு ரோஜாவாகிறது. பல ரோஜாக்கள் சேர்ந்த ஆரம் பகவானுக்குப் போடப்படும் மாலை ஆகிறது. எடுத்தவை இவை. இவைத் தவிர மாணிக்கங்கள், வைடூரியங்கள் என்று பலவும் உள்ளன. அதிலும் நமது எல்லையைக் காக்கும் வீரர்களின் துணைவிமார்கள் எந்த ஒரு உதவியும் இல்லாமல், குளிரிலும் பனியிலும் தனியாகப் போராடி கணவரது சுமையைத் தன் தோளில் தாங்குவது போற்றற்குரியது. ‘மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டா” என்ற உலக நீதி படி ‘நான் மறந்தாலும் எனை தானே நீ ஆள்கிறாய், நீ மறைந்தாலும் எனில்தானே நீ வாழ்கிறாய்’ என்பது சத்ய வாக்கு. “விடிந்து வரும் உலகத்துக்கே நீ ஒளி விளக்கடி, ஆணும் பெண்ணும் சமம்தான் இதனை அறிந்து கொள்ளடி, தான் யார் என்பதை உணர்ந்து கொண்டால் உலகம் உனதடி, பெண்ணே உணர்ந்து கொள்ளடி” என்று ஒரு கவி பாடிய பாட்டு எவ்வளவு பொருத்தம்! பல்வேறு தேசம், நாடு, மதம், கலாச்சாரம் இவைகளைத் தாண்டி இவர்கள் எல்லோரும் ஒரே மனித ஜாதி என்ற அடிப்படையில் மனிதத்தன்மையின் புனிதத்தைக் காப்பாற்றும் பெண்ணினம். இவர்களையும், இவர்களைப் போன்றவர்களையும் நாம் தலைவணங்கிப் பாராட்டுகின்றோம். இவர்கள் பல்வேறு இடங்களில் பரவி இருந்தாலும் இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் மனித நேயத்திற்கும் அதனை எடுத்துரைக்கும் நூல்களுக்கும் நாம் தலை வணங்குகிறோம். வாழிய பாரத நம் நாடு! வந்தே மாதரம்! பாரதி சொன்ன மாதிரி “தையலை உயர்வு செய்ய வேண்டும். “போற்றி போற்றி பல்லாயிரம் போற்றி”! “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்று பாரதி அவர்களைக் கொண்டாடுகிறார்.

 

 

 

.