பால் .. தமிழ்ப்பால் -எஸ் எஸ்

 

பாலைக் குடித்திடும் குழந்தையின்
குறுஞ்சிரிப்பில் வழிவது புதுக்கவிதை

பாலில் விழுந்த பழத்தைக் கிளிக்கு
உண்ணக் கொடுப்பது பழங்கவிதை

பாலை முழுதும் பசுவின் குட்டிக்கே
குடிக்கத் தந்தால் அது செங் கவிதை

பாலைக் குறுக்கி சர்க்கரை கலந்து
இளஞ்சூட்டில் உண்டால் திரட்டுக் கவிதை

பாலில் துடிக்கும் காதலர் களிவெறியில்

உறவில் இணைந்தால் அது மரபுக் கவிதை

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
கலந்து படைத்தால் அது பிள்ளைக்கவிதை

பாலே அருவியாகி கருவறையில் அமர்ந்த
பிரான் தலையில் சொரிந்தால் சிவகவிதை

பாலும் பழமும் கலந்து காதலிஇதழில்
காதலன் தந்தால் அது குலவுகவிதை

பாலில் மிளகிட்டு இளஞ்சூட்டில் அருந்தி
கமகத்துடன் பாடுவது இசைக்கவிதை

பாலை பானைக்குள் சுற்றம் சூழவந்து
தெளித்துக் கரைப்பது முடிவுக் கவிதை

 

நெஞ்சம் மறப்பதில்லை? –   கவிமணி *இரஜகை நிலவன்*

                   காற்றுக்கு கற்றுக்
       கொடுக்கவா முடியும்
காலத்திற்கு கடிவாளம்
        கொண்டு கட்டமுடியுமா?
வாழ்வின் வயலில்
         விதைத்த விதைகள்
வாழைமரமாய் செழித்தே
         விரிந்து நின்றிட
வானவில் வந்து
     வானை அழகாக்கிட
வார்த்தைகள் திரும்பவும்
      வாதிட்டுச் செல்ல…
அலைகளுக்கு சொல்லி
         அரற்றும் முயற்சியாய்
அறைந்து செல்லும்
அணிஅணியான நினைவுகள்
இன்னிசை கலவா
      இன்னொருபுறப் பாடல்கள்
இசைய மறுக்கம்
       இன்னொரு கனவுகள்…
வந்தவைகவைகளை தக்க
       வைக்கும் முயற்சியில்
வற்றிப் போனவைதான்
        வரவேண்டியவை ஆகின..
இன்முகம் காட்டி
      இன்னமும் நினைவலைக்குள்
இன்னும் தவிக்கும்
        இருபுற சிறகுகள்…
 சிக்கிக் கொண்ட
         பறவையாய் சிந்தனைகள்
சிந்தைக்குள் அலையாய்  
          நெஞ்சம் மறப்பதில்லை?
%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%
* *விதி தேவன் புன்னகை* – சசிகலா விஸ்வநாதன்

*தன்முனையியைபு அந்தாதி*

 

விதியை மதியால்
வெல்லல் ஆகுமா?
மதி விதி
வழியே போகும்

போகும் மதி
போக்கிடம் அறியாது
மந்தியின் மதி
விதியும் அறியாது

அறுப்பானா பனை
தினை விதைத்தவன்
மதியுள்ளவன் விதையிட்டவன்

தானென்றே  துணிவான்

துணிந்து முயலாமல்
நொந்து  கொள்வான்
மதியீனன் விதியன்
புன்னகைத்துக் கொள்வான்.

——————————————————————————————————————————
காதல் – பானு நாச்சியார்  ( காதல் கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற கவிதை) 

உன்னழகால் நானும் உண்மைதனைச் சொல்லுவேன்
எங்கே விழுந்தேன் என்பதும் மறந்தேன்

எடுப்பான மச்சம் இதயத்தைத் தொட்டதோ
கன்னத்தின் குழிதான் தென்றலாய் வீசியதோ

கவர்ந்தது என்னைப் புறத்தோற்றமா இருக்காது

கண்வழி வந்த காதல் கண்டேன்
அகத்தில் தெரிந்த அக்கறை உணர்ந்தேன்

மௌனம் கூட ரகசியமாய் பேசியதே
பூர்வ ஜென்ம பந்தம் இதுவே

உன்னை சுற்றிய நினைவுகள் ஆயிரம்
அருகில் இருந்தாலும் தொலைவில் போனாலும்
நெருக்கத்தில் இருப்பதுபோல்
உணர்வது சரியே உணர்ந்தேன் சகியே

அங்கும் இங்கும் எங்கும் உன்னுருவம்
என்னில் உறைந்தாய் எண்ணம் நிறைந்தாய்

காதலை இயம்ப காலம்தான் பார்க்கிறேன்
இயம்பாது போனாலும் காதலுண்டு நமக்குள்….

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அஞ்சறைக் காதல் – மகாராணி சாத்தூரப்பன் ( காதல் கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற கவிதை)

வெகுளியால் கடுகு போல் பொரிந்தாள் என் கண்மணி.
அவள் அகம் சீராக இல்லை என்பதை உணர்ந்தேன்.
மிளகு கண்களால் என்னை மிரட்டினாள்.
நேற்று வரை நாங்கள் கடுகு உளுந்து.
இன்று என்ன கடுப்பு என்று தெரியவில்லை.
என்னவென்று விளங்காமல் விரல்களை பிசைந்திருந்தேன். விரலில் தட்டுப்பட்ட மோதிரம் விவரத்தைச் சொன்னது.

அவளிடம் நான் மண்டியிட்டு இல்லை…
மாட்டிக்கொண்ட, இல்லை இல்லை..
எங்கள் மணநாள் என்று!!
மரியாதையாய் மன்னிப்பு கேட்டு,
மஞ்சள் குங்குமம் இட்டு
என் மணவாட்டியின் மனம் கவர்ந்தேன்..

மீண்டும் கடுகு உளுந்தாய் அஞ்சறையில்…
நான், என் அஞ்சுகத்தின் அகத்தில்!!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% 

காதல் . .. எம் ரவி  ( காதல் கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற கவிதை) 

நீ ஒட்டுகிற பொட்டின்
பின்புற ஸ்டிக்கராக
நீ விளக்கேற்றும் போது
இறக்கிற தீக்குச்சியாக
நீ படிக்கிற புத்தகத்தின்
முக்கோண மூலையாக
நீ தொடுக்கிற பூமாலையின்
நீளமான நாராக
நீ கட்டுகிற கைக்கடிகாரத்தின்
அடியில் பயணச் சீட்டாக
எவ்வாறேனும்
இருந்து தொலைத்துவிட்டுப் போகிறேன்
உன் செங்காந்தள் விரல்கள்
தினம் தினம் எனைத் தழுவுமே
அது போதாதா?

*************************************************************************************
மழைத் துளியின் காதல்  கே ஜி எம் பிரியா -( காதல் கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற கவிதை) 

என்னை அன்றாடம் கடந்து போகும் மயிலே!
உன் மேல் பொய்கையாய் பாய்ந்திட நினைத்து,
மழையாய் பொழிந்தேன்!!

என் எண்ணம் அறிந்தவள் போல,
அழகாய் என்னை பார்த்து சிரித்து நின்றாள் ஓரத்தில்!
நானும் அவளை ஏமாற்றி நின்றேன்!!

துள்ளி வந்தவளிடம், தூறலாய் சேர்ந்தேன்!
குழலில் ‘முத்து’ போல் படிந்து, மழையாகிய நான் ,
அவளின் “மணி மகுடம்” ஆனேன்!!

கருவிழியின் நடுவில் விழுந்தென்னைப் பார்த்து,
‘கண் அடித்தாள்’ !
அவள் என்னை நுகர்ந்திட,
மூக்கின் நுனியில் விழுந்தேன்!!

இறுதியில், மோட்சம் பெற எண்ணி அவளின் இதழில் அமர்தேன்!
என்னைப் பருகி வாழ்வளித்தாள்!!

பிரபஞ்சத்தில் காதல் உணர்வு பொதுவானது!
மனிதர் போல்,
மழைத் துளிக்கும் துளிர்த்தது “காதல்”!!