
இந்த மாதம் , 60 சிறுகதைகளில், ‘தப்பு தப்பு தான்’ என்னும் தலைப்பில் ராகவன் மாணிக்கம் எழுதி தினமணிகதிரில் வெளிவந்த சிறுகதை பிப்ரவரி மாத சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. – ரேவதி பாலு
—————————————————————————————————————————————-
ஒரு மாதத்தில் அச்சுப் பத்திரிகைகள், மின்னிதழ்கள் ஆகியவற்றில் வெளியான 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படித்து அதில் ஒரு சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு சுவாரசியமான அதே சமயத்தில் ஒரு சவாலான பணி. குவிகம் அமைப்பினர் இந்தப் பணியை எனக்குக் கொடுத்தபோது, முந்தைய வருடங்களில் ‘இலக்கிய சிந்தனை’ அமைப்பு இந்த பணியை நடத்தி சிறந்த 12 சிறுகதைகளை ஒரு வருடத்திற்கு தேர்ந்தெடுத்தது, அதை வானதி பதிப்பகம் ‘இலக்கிய சிந்தனை சிறந்த சிறுகதைகள்’ என்று அந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வருடத்தையும் குறிப்பிட்டு ஒரு சிறுகதை தொகுப்பு நூலாக வருடா வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஒரு விழா நடத்தி ஏ.வி.எம். ராஜேஸ்வரி ஹாலில் வெளியிட்டது என்று அலையலையாக பல கடந்த கால நினைவுகள் மேலெழும்பி வந்தன. நான் இந்த நினவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள ஒரு பிரத்யேக காரணம் உண்டு. எனக்கு இரு முறை இலக்கிய சிந்தனை அமைப்பின் மாதாந்திர சிறந்த சிறுகதை பரிசு கிடைத்துள்ளது.
எத்தனையெத்தனை மின்னிதழ்கள், அவைகளில் எத்தனை எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்று பார்த்தபோது பிரமிப்பாக இருக்கிறது. அவர்களில் நிறைய பேர் புதிதாக எழுதுகிற இளம் எழுத்தாளர்கள். மடை திறந்த வெள்ளம் போல அவர்களில் மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே கொட்டி எழுதும் பாணியை நிறைய புது எழுத்தாளர்கள் கடைபிடிப்பது போலத் தோன்றியது சில கதைகளைப் படித்ததும்.
இந்த 60 சிறுகதைகளில், ‘தப்பு தப்பு தான்’ என்னும் தலைப்பில் ராகவன் மாணிக்கம் எழுதி தினமணிகதிரில் வெளிவந்த சிறுகதை பிப்ரவரி மாத சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
கவனத்தைக் கவர்ந்த வேறு சில சிறுகதைகள்:
சங்கு இதழில் வெளியான ‘பிரியாணி’ என்னும் சிறுகதை, ‘மண்வெட்டி’ என்பவர் எழுதியது. நாம் அடிக்கடி சொல்லும் வாசகமான “நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடந்தே தீரும்” என்பதற்கு உதாரணமாகவும் சிறந்த மனிதாபிமானத்திற்கு எடுத்துக் காட்டாகவும் உள்ளது. ஒரு ஒப்பந்தாரருக்கு அரசாங்க அலுவலகத்தில் அவர் சாலை போட்ட ஒப்பந்தத்திற்கு எந்த வித லஞ்சமும் வாங்காமல், கமிஷன் அடிக்காமல் சரியான தொகை உடனடியாக காசோலை மூலம் வழங்கப்படுகிறது. அவர் மிக்க நன்றியுடன் அங்கேயுள்ள அலுவலர்கள் எல்லோருக்கும் ஒரு நாள் பிரியாணி, லஞ்சுக்கு வாங்கித்தருகிறார். வாசலில் ஒரு வயோதிகர் அந்த பிரியாணி வாசனையால் ஈர்க்கப்பட்டு தன் பசிக்கு சிறிதளவு பிரியாணி கொடுக்கும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறார். பிரியாணி பொட்டலங்கள் அலுவலர்கள் எண்ணிக்கையை கணக்கு செய்து வாங்கப்பட்டதால் கூடுதலாக ஒன்று கூட இல்லை. கடைநிலை ஊழியர் ஆறுமுகம் அந்தப் பெரியவர் மேல் பரிதாபப்பட்டு தன் பிரியாணி பொட்டலத்தை அவருக்குக் கொடுத்து விட்டு தன் பசியை தண்ணீர் குடித்து ஆற்றிக் கொள்கிறார். அப்போது அஜ்மல் என்னும் ஊழியர் தான் ரமலான் நோன்பு அன்று ஆரம்பித்திருப்பதாகச் சொல்லி தன் பொட்டலத்தை ஆறுமுகத்திற்குக் கொடுக்கிறார். எந்த வித எதிர்பார்ப்புமின்றி தன் பிரியாணி பொட்டலத்தை பசியாக இருக்கும் ஒருவருக்கு மனமாரக் கொடுத்த புண்யமே ஆறுமுகத்தின் பசியை ஆற்றுகிறது என்று அஜ்மல் சொல்கிறார்.
சு.வெங்கட் எழுதிய ‘சுழல்’ என்னும் கதை சொல்வனத்தில் வெளியாகியிருக்கிறது. இதில் வாழ்க்கையின் சில போக்குகளை தொட்டுக் காட்டிவிட்டு மற்றதை வாசகர்களின் ஊகத்திற்கே விட்டு விடுவதில் ஆசிரியரின் புத்திசாலித்தனம் நமக்குத் தெரிகிறது. சினிமா துறையில் ஒரு காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றும் ரோஹிணி என்னும் பெண்ணுக்கு குழந்தைகளில்லை. குழந்தைப்பேறு சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவரிடம் செல்ல நேரிடுகிறது. மருத்துவரிடம் செல்லும்போது சுழல் கதவு வழியே வெளியே வரும்போது உள்ளே கர்ப்பிணிகளாகச் செல்பவர்கள் கையில் குழந்தையுடன் சுழல் கதவு வழியே வருவதைக் கண்டு தான் மட்டும் சுழல் கதவின் மறுபக்கமே இன்னும் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறாள். ரோஹிணி அடிக்கடி சினிமா படப்பிடிப்பிற்காக வெளியூர் செல்ல நேர்கிறது. மஞ்சு என்னும் பெண் அவள் வீட்டில் எல்லா வேலையும் செய்கிறாள். ரோஹிணி ஊரில் இல்லாதபோது அவள் கணவன் சந்திராவுக்கு சமைத்துப் போட்டு அவனை கவனித்துக் கொள்கிறாள். அவள் கணவன் செல்வம் சரியான குடிகாரன். ஒரே வீட்டில் வசித்தாலும் அவனுடன் ஒட்டோ உறவோ இல்லை என்று மஞ்சு கூறுகிறாள். ஒரு நாள் செல்வம் இறந்து விட்டதாகத் தகவல் வருகிறது. ரோஹிணி ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கே மஞ்சு எங்கே என்று கேட்கிறாள். அவளுக்கு மயக்கமாக இருப்பதால் அவள் வேறு அறையில் சிகிச்சை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அவள் கர்ப்பமாக இருப்பதால் மயக்கம் என்று கூறப்பட, நம்மால் நடந்ததை ஊகிக்க முடிகிறது. ரோஹிணிக்கு, தான் இன்னும்அந்த சுழல் கதவின் அந்தப்பக்கமே நிற்பது போலத் தோன்றுகிறது.
வருங்காலக் கணவன் என்னும் தலைப்பில் ‘சகா’ தினமணிகதிரில் எழுதிய கதை. இதில் தன் வருங்கால வாழ்க்கையை மாப்பிள்ளை, பெண் என்று சம்பந்தபட்டவர்களே தான் முடிவு செய்ய வேண்டும், அவர்கள் சரியாக முடிவு செய்வார்கள் என்னும் சிறப்பான கருத்து சொல்லப்படுகிறது.
‘தப்பு தப்பு தான்’ ராகவன் மாணிக்கம் எழுதி தினமணிகதிரில் வெளிவந்த சிறுகதை சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. சிறு சிறு தப்புகள் தான் வாழ்க்கையில் பெரிய தப்புகள் செய்யும் தைரியத்தைக் கொடுக்கிறது என்னும் முக்கியமான கருத்து அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு நிறுவனத்தில் தச்சு வேலையில் இருக்கும் உத்திராபதி சொந்த வாழ்க்கையில் வீட்டு வாடகை கூடக் கொடுக்க முடியாமல் வறுமையில் உழன்றாலும், நேர்மை, நியாயம் என்பதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர். ப்ளஸ் டூ முடித்து விடுமுறையில் இருக்கும் இளைய பிள்ளை ரகுவை தன்னுடன் வேலைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே தன் தந்தைக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை எல்லாம் பார்த்து ரகுவிற்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. அப்போது முதலாளி வீட்டிலிருந்து அழைப்பு வர உத்திராபதி அன்றைய வேலைகள் முடிந்தவுடன் மாலையில் ரகுவையும் அழைத்துக்கொண்டு அங்கே செல்கிறார். அங்கே உத்திராபதி வேலைக்கு வைத்த பக்கிரி என்னும் ஒருவன் முதலாளியை ஏமாற்றி கட்டுமானத் தொழிலில் தப்பு தண்டாவெல்லாம் செய்திருக்கிறான் என்று தெரிய வருகிறது. அவனுக்கு தண்டனையாக கொடுக்கப்பட்ட வேலையை அவன் கைக்காசைப் போட்டே முடிக்க வேண்டும் அப்படி செய்யா விட்டால் போலீசில் பிடித்துக் கொடுக்கலாம் என்று தீர்ப்பு கூற, முதலாளி உத்திராபதியின் நியாயமான கருத்தைப் பாராட்டி அப்படியே செய்யலாம் என்று முடிவு செய்கிறார். உத்திராபதி வீட்டினுள் ஏதோ வேலையாகச் சென்ற போது சட்டென்று ரகுவின் கையில் இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்து, “உங்கப்பா கிட்ட கொடுத்தா வாங்க மாட்டார். நீ வீட்டுக்குக் கொண்டு போய் அம்மாவிடம் கொடு!” என்று சொல்லிக் கொடுக்கிறார். ரகுவிற்கு அப்பாவை நினைத்து பயமாக இருந்தாலும் ‘வீட்டு வாடகை’ கொடுக்க வேண்டிய சூழ்நிலையை நினைத்து அதை வாங்கிக் கொள்கிறான்.
வீட்டிற்கு போகும்போது உத்திராபதி ரகுவிடம் சொல்கிறார், “நேர்மையில்லாம நடந்து கிட்டதால அந்த பக்கிரி இன்னிக்கி எப்படி அசிங்கப்பட்டு நின்னான் பார்த்தியா?” என்று
ரகு மெதுவாக, “அவுரு கொஞ்சம் அளவுக்கு அதிகமா தப்பு பண்ணிட்டாரு. அதான் அவர் செய்த தப்பு!” என்கிறான்.
“எப்போதுமே தப்பு தப்புதான். கொஞ்சமா செய்தா தப்பு நல்லதா ஆயிடுமா? சின்ன தப்புகள் தான் பெரிய தப்புகளை பண்ற தைரியத்தைக் கொடுக்கிறது. ஒரு மனுஷனுக்குத் தேவை நாணயமானவங்கிற நல்ல பேரு தான். அதனால சுத்தி நடக்கிற விஷயங்களைப் பாரத்து கவனத்தை சிதற விடாம எப்போதும் நியாயமா, நேர்மையா வாழக் கத்துக்க. அதுதான் உனக்கும் நல்லது, நிம்மதி. நீ தனியா இருக்கும்போது இதை யோசித்துப் பார்த்தியானா நீயே புரிஞ்சிப்பே!” என்று சொல்லிவிட்டு கண்டிப்பாக நேர்மையே நிம்மதி என்னும் விஷயத்தை தன் மகன் உணர்ந்து கொள்வான் என்ற எண்ணத்தில் ஏதோ நாட்டின் உயரிய விருதைப் பெற்ற கம்பீரத்துடன் நடையைத் தொடர்ந்தார் என்று முடிகிறது இந்த சிறுகதை. இந்த காலத்தில் அரிதாகிப்போன நேர்மையை வலியுறுத்துவதோடு எப்படி ஒரு சின்ன தப்பு தான் பெரிய பெரிய தப்புகள் செய்யும் தைரியத்தைக் கொடுக்கிறது என்பதையும் சொல்லியிருக்கும் விதத்தில் இது சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெறுகிறது.
