‘இந்த வீணைக்குத் தெரியாது.. இதைச் செய்தவன் யாரென்று..’ பாடலை ராகத்தோடு முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் செல்வி.
“’ரயில் சிநேகம்’ பார்க்கறயாடி..” கயல்விழி கேட்டாள்.
“புதன்கிழமை ராத்திரி ஏழரை மணிக்கு வீட்டுல எல்லாரும் ஆஜராயிடுவோம்.. தூர்தர்ஷன்ல இந்த சீரியலுக்காகவே..”
“ஜேசுதாஸ் குரல்.. மனசை உருக்குது இல்ல..”
“சொல்ல மறந்துட்டேன் கயல்.. ஸாலிடேர் கலர் டிவி வாங்கிட்டோம்..”
“நாங்க இன்னும் டயனோரா பிளாக் அன்ட் ஒயிட்டை மாத்தவேயில்லடி..”
இருவரும் திண்டுக்கல்லில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் தனியார் பேருந்தில் அருகருகே உட்கார்ந்திருந்தனர். மின் வாரியத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலிருந்து இணைபிரியாமல் செல்வதும் திரும்பி வருவதும் வாடிக்கையாகி விட்டது. ஒருத்தி விடுப்பு எடுத்தால் மற்றவளும் அலுவலகத்திற்கு வர மாட்டாள். நட்பில் அப்படியொரு நெருக்கம்.
“ஏன் வாட்டமா இருக்கே.. உடம்பு சரியில்லயா..”
“இன்னிக்காச்சும் அந்தக் கடன்காரன் வராம இருக்கணும் செல்வி..” பதற்றத்துடன் நாக்கைச் சுழற்றி உதடுகளை ஈரமாக்கிக் கொண்டாள் கயல்விழி.
“யாரு.. சேதுவா.. அங்க கைத்தறி நெசவு பண்றானே..”
“ஆமான்டி.. ஒருத்தனுக்கு தெனமும் ‘ஈபி’ ஆபீஸ்ல என்ன வேலை.. மாசத்துக்கு ஒரு தடவை கரண்ட் பில்லு கட்ட வந்தா சரி.. அடிக்கடி ஏதாவது சாக்குல எங்கிட்ட வந்து பேச்சு குடுக்கறான்.. ரெண்டு நாளைக்கு முன்னாடி.. ‘வழக்கமா எங்களுக்கு நுப்பது யூனிட்தான் ஆகும்.. இந்த முறை கூட வந்திருக்கு.. மீட்டர்ல ஏதோ கோளாறு’னு புலம்பினான்.. ‘ரீடிங் எடுக்கறவங்ககிட்ட போயி கேளு’ன்னு சொல்லி அனுப்பிட்டேன்..”
“அவன் வர்றதே உன்னை பார்க்கதான் கயல்..” என்றாள் செல்வி. “இருவத்து மூணு வயசு.. கன்னிப்பொண்ணு.. அழகா இருக்கே.. வாலிப பசங்க உன்னை சுத்ததான் செய்வாங்க..”
பாலன் டிரான்ஸ்போர்ட் பஸ்ஸில் ஜிகினா வேலைப்பாடுகளுடன் வண்ண விளக்குகள் அணைந்தணைந்து எரிய, ‘புது வசந்தம்’ பாட்டு உச்ச ஸ்தாயியில் அலறிக் கொண்டிருந்தது. “வத்தலகுண்டு டிக்கெட் எடுத்தவங்க எந்திரிச்சி வாங்க..” என்ற நடத்துநர் பயணிகளிடம் “அண்ணே.. படிக்கட்டை மறிச்சுட்டு நிக்காதீங்க.. அங்கிட்டு போய்டுங்க..” என்று சத்தம் போட்டார்.
கயல்விழி “அந்த சேதுவை நினைச்சாலே எரிச்சலா இருக்குடி.. அவன் மீசையும் தாடியும்.. போன வாரம் ‘மௌனம் சம்மதம்’ ஆடியோ கேஸட்டை என் டேபிள்ல வெச்சுட்டு போயிருக்கான்..” என்றாள்.
“அன்னிக்கி கொடை ரோடுக்கு போயிருந்தேன்னு சொல்லி.. சிறுமலைப்பழம் ஒரு டஜன் குடுத்தானே.. எதுக்குன்னு நெனைக்கறே..” செல்வி கேட்டாள். “ஒனக்கு மட்டும் கொடுத்தா வெளிப்படையா தெரிஞ்சுடுமேன்னு.. அசிஸ்டென்ட் இஞ்சினியர்ல ஆரம்பிச்சு லைன்மேன் வரைக்கும் எல்லாருக்கும் வாழைப்பழ விநியோகம் பண்ணியிருக்கான்..”
“எனக்கு இங்க வேலை பார்க்கவே பிடிக்கலடி.. சீக்கிரமா திண்டுக்கல்லுக்கு டிரான்ஸர் கிடைச்சா நிம்மதியாயிருக்கும்..”
“உங்கப்பாவுக்கு மேலிடத்துல யாரையோ தெரியும்னு சொன்னியே.. என்னாச்சு கயல்..”
“மெட்ராஸ் செக்ரடேரியட்ல.. எலக்ட்ரிசிட்டி அமைச்சரோட ‘பிஏ’கிட்ட பேசியிருக்காங்களாம்.. அடுத்த வருஷம்.. அதாவது.. தொண்ணூத்தி ஒண்ணுல நிச்சயமா மாத்தல் வந்துடும்னு சொல்லியிருக்காரு..”
“எனக்கும் சேர்த்து ட்ரை பண்ணச் சொல்லு..”
*********
உலகநாதன், தாரா தம்பதியினரின் ஒரே செல்லப்பெண் கயல்விழி. மகளுக்கு கூடிய விரைவில் மணமுடிக்க வேண்டுமென்று தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். திண்டுக்கல்லில் பிரபலமான பூட்டு வியாபாரியின் மகன் ஜாதகம் பொருந்தி வந்தது. தாமரைப்பாடி, பெரியகுளம் போன்ற இடங்களிலிருந்தும் நல்ல வரன்கள் வந்தன. பெற்றோர் மீதான அளவற்ற பாசத்தினால் அவர்களை விட்டுப் பிரிய கயல்விழிக்கு மனமில்லை. ஏதேதோ காரணம் சொல்லி எல்லாப் பையன்களையும் மறுத்து விட்டாள். இனி அவளைக் கேட்காமலேயே நிச்சயம் செய்து விடுவதென்று பெற்றவர்கள் தீர்மானித்தனர்.
டிவியில் ‘ஒளியும் ஒலியும்’ பார்த்தபடியே பிச்சிப்பூவைத் தொடுத்துக் கொண்டிருந்தாள் தாரா.
“அம்மா.. நான் டெலிபோன் பூத் வரைக்கும் போயிட்டு வரேன்..” என்று புறப்பட்டாள் கயல்விழி. இடுப்புப் பகுதி தெரியாமலிருக்க புடவையை மேலே உயர்த்தி ரவிக்கையுடன் சேர்த்து ‘பின்’ போட்டுக் கொண்டாள். தனக்கு வந்த கடிதத்தை ரகசியமாக எடுத்துக் கொண்டாள்.
“இந்த ராத்திரி வேளையில யாருகிட்டடி பேசப் போறே..”
“செல்விக்கு ஆபீஸ் விஷயம் ஒண்ணு சொல்லணும்மா..” என்று புளுகினாள்.
‘சாவி’ வார இதழைப் படித்துக் கொண்டிருந்த உலகநாதன் “நான் ஸ்கூட்டர்ல கூட்டிட்டு போகட்டுமா..” என்றவாறே எழுந்தார்.
“வேண்டாம்ப்பா.. இங்க.. தெருமுக்குல தானே..“
சந்தை ரோடில் வழக்கமாகப் பேசும் மளிகைக் கடை ‘காயின் பூத்’தைத் தவிர்த்து விட்டு சற்று தள்ளியிருக்கும் ‘பிஸிஓ’க்குச் சென்றாள்.
செல்வியின் வீட்டு லேன்ட்லைன் நம்பரை முயற்சித்தவுடன் அவளே பேசினாள் “என்ன இந்த வேளையில.. எதாவது பிரச்னையா..”
“அந்த ராஸ்கல் எனக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பியிருக்கான்டி..”
“சேதுவா.. அவனுக்கு எப்படி உன் விலாசம் தெரியும்..”
“அதுதான்டி எனக்கும் புரியலை.. “
“என்ன எழுதியிருக்கான் படி..”
“மிஸ் கயல்விழி, 1229, சந்தனக்காரத் தெரு, நாகல் நகர், திண்டுக்கல்-624003..”
“அதைக் கேக்கலை.. கிரீட்டிங்ஸ் கார்டு உள்ள என்னயிருக்கு..”
“இதயத்தை அம்பு துளைக்கற மாதிரி படம் வரைஞ்சு.. கீழே ‘நேசத்துடன்’னு எழுதி கேள்விக்குறி போட்டிருக்கான் செல்வி..”
“சேதுதான் அனுப்பினான்னு எப்படி சொல்றே..”
“அவன் கையெழுத்து நல்லாவே ஞாபகமிருக்கு.. நேத்தி கூட ஆபீஸ்ல யாருக்கோ ‘சிங்கிள் ஃபேஸ்’ கனெக்ஷனை ‘த்ரீ ஃபேஸா’ மாத்தணும்னு லெட்டர் எழுதி என்கிட்ட தான் குடுத்தான்..”
“இந்த விஷயம் உங்க அப்பா அம்மாக்கு தெரியுமா..”
“இல்லடி.. நல்ல வேளையா.. நான் வீட்டுக்குள்ள நுழையும்போதே லெட்டர் பாக்ஸ்ல இதைப் பார்த்து எடுத்து வெச்சுகிட்டேன்.. எங்கப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.. கொன்னே போட்டுருவார்.. “
“சரி.. பதறாதே.. நாளைக்கு ஆபீஸ்ல ‘ஏஈ’ சார்கிட்ட சொல்லலாம்..” என்றாள் செல்வி. “உனக்கு பிடிச்ச கமலஹாசனோட படம்.. ‘மைக்கேல் மதன காமராஜன்’ தீபாவளி ரிலீஸ் ஆகுதாம்.. நாகா தியேட்டர்ல.. அடுத்த சனிக்கிழமை செகண்ட் ஷோ நாங்க போலாம்னு இருக்கோம்.. உனக்கும் சேர்த்து ரிசர்வ் பண்ணவா..”
“எங்கம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்டி..” என்று போனை வைத்தாள் கயல்விழி.
********
ஆண்டிப்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் அன்று மாதத்தின் இரண்டாம் நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. மின் கட்டணம் செலுத்துவோர் கொடுத்த கசங்கிய ரூபாய் நோட்டுக்களை ஒழுங்குபடுத்தி, நுகர்வோர் அட்டையில் பதிந்து, ஒவ்வொருவருக்கும் ரசீது எழுதி,.. ஓய்ந்து போய் விட்டாள் கயல்விழி.
அவளுடைய பேனா திடீரென்று எழுத மறுத்தது. எழுந்து போய் புது ரீஃபில் வாங்கிவர நேரமில்லை. ஆங்கிலப் புத்தாண்டுப் பரிசாக சேது கொடுத்துவிட்டுச் சென்ற பால்பாயின்ட் பேனாவைக் குப்பைத் தொட்டியில் வீசியது நினைவுக்கு வந்தது. அவசரத்திற்கு அதிலிருந்து உருவிக் கொள்ளலாம் என்று குனிந்து எடுத்தாள். உள்ளே ரீஃபிலைச் சுற்றியிருந்த மெல்லிய காகிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். ‘ஐ லவ் யூ’ என்று எழுதியிருந்ததைப் படித்தவுடன் படபடப்பாக உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு இருக்கையை விட்டு எழுந்தாள்.
செல்வியிடம் “ஒரு நிமிஷம் வாயேன்..” என்று நடுங்கும் கைகளுடன் அவளை இழுத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்றாள். அங்கே 1991ஆம் வருடத்திற்கான புது காலண்டர்களும், கேபிள்களும், ரப்பர் கையுறைகளும் இறைந்து கிடந்தன. மூலையில் மீட்டர், ஃப்யூஸ் போன்ற மின் சாதனங்கள் மீது ஒட்டடை படிந்திருந்தன.
“என்ன கயல்.. ஏன் மூஞ்சி எல்லாம் வேர்த்திருக்கு..”
“படுபாவி சேது பண்ண காரியத்தை பாருடி.. “ என்று தாளைக் காண்பித்து விஷயத்தைச் சொன்னாள்.
“ஓ.. இதுக்குதான் ஆபீஸ்ல எல்லாருக்கும் பேனா சப்ளை பண்ணானா.. இப்பதான் புரியுது..” என்றாள் செல்வி. “தீபாவளி சமயத்துலயே அவனைக் கூப்பிட்டு கண்டிச்சோம்.. அப்படி இருந்துமே சேட்டை பண்ணிட்டே இருக்கான்..”
“இவனாலே ரொம்ப உளைச்சலா இருக்குடி.. இந்த விவகாரம் வீட்டுல தெரியாது.. எனக்கு மும்மரமா கல்யாணத்துக்கு பார்த்துட்டு இருக்காங்க.. நான்தான் தட்டி கழிச்சிட்டேயிருக்கேன்.. “
“உன் கழுத்துல மஞ்சக்கயிறு ஏறிடுச்சின்னா இவன் வாலாட்டறதை நிப்பாட்டிடுவான் கயல்..”
“எனக்கும் அதுதான்டி தோணுது.. இந்த வருசம் டிரான்ஸரும் வந்துட்டா நிம்மதியா இருக்கும்..”
“கிடைச்சிடும்.. கவலைப்படாதே..” என்று பேச்சை மாற்றினாள் செல்வி. “நாங்க புதுசா ‘வீஸிஆர்’ வாங்கியிருக்கோம்.. ஞாயித்துக்கிழமை அதுல ‘கேளடி கண்மணி’ பார்க்க போறோம்.. நீயும் வா.. உனக்கு எதாச்சும் படம் வேணும்னா சொல்லு..”
“கமல் நடிச்ச ‘வெற்றி விழா’.. தியேட்டர்ல பார்க்க முடியாம போயிடுச்சி.. “
“அவ்வளவுதானே.. ரெண்டு கேஸட்டையும் எடுத்துடுவோம்..” என்றாள் செல்வி.
**********
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தியை தூர்தர்ஷனில் ஷோபனா ரவி வாசித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குள் டிவி திரையில் ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ அறிவிப்பு அலைபாய்ந்தது. சலித்துக் கொண்ட உலகநாதன் ‘ஜுனியர் போஸ்ட்’ பத்திரிகையைப் புரட்டத் தொடங்கினார்.
அன்று ஏதாவது அரசியல் கலவரம் நடக்கலாம் என்பதனால் கயல்விழி ஆபீசுக்குப் போகவில்லை. காலையில் சமையல் வேலைகளில் அம்மாவுக்கு உதவினாள். கோடை வெய்யிலின் தாக்கத்தால் மதியம் செல்வியின் வீட்டிற்கு பாரதிபுரம் வரை நடந்து போக மனமின்றி சோம்பலாகப் படுத்துக் கிடந்தாள்.
பேனா சம்பவத்திற்காக ஆபீசில் எல்லோரும் சேதுவை மிரட்டிய பிறகும் அவன் ‘இதயம் பேசுகிறது’ புத்தகத்தைக் குறியீடாகக் கொடுத்ததும், அலுவலக தொலைபேசியில் அவளை அழைத்து மின்தடை பற்றி விசாரித்ததும் நினைவுக்கு வந்து வருத்தின. அவனுடைய தொல்லைகளால் வேலையை விட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
இரவு டேப் ரிக்கார்டரில் ‘அஞ்சலி’ படப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த போது “கயல்விழீ..” என்று தாரா அழைத்தாள்.
“என்னம்மா..” என்றபடியே ஹாலுக்கு வந்தாள்.
“காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு வைச்சுட்டா எங்க கடமை முடிஞ்சுடும்.. இதுவரைக்கும் நிறைய பேரை ஏதாவது சாக்கு போக்கு சொல்லி வேண்டாம்னுட்டே.. ”
“மெட்ராஸ்ல இருந்து ஒரு ஜாதகம் வந்திருக்கு.. எட்டுப் பொருத்தம் இருக்காம்.. ஜோசியர் சொல்லிட்டார்.. பையன் ரயில்வேயில வேலை பார்க்கறான்..” என்றார் உலகநாதன். “நாங்க முடிவு பண்ணிட்டோம்..”
“அவனுக்கு அம்மா கிடையாது.. ஒரே மகன்.. அப்பாவும் அத்தையும் இருக்காங்க..”
கயல்விழி மனதளவில் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.
“சொந்த வீடு இருக்கு.. வசதியானவங்க.. நீ வேலைக்கு போகணும்னு கட்டாயம் இல்லேன்னு சொல்லிட்டாங்க.. “
“இதுதான் பையன் போட்டோ..” என்று தபால் உறையிலிருந்து எடுத்துக் காட்டினாள் தாரா.
மீசையில்லாமல் நெற்றியில் சந்தனப் பொட்டுடன் அவனைப் பார்த்தவுடன் ‘சுந்தரி நீயும்..’ பாடல் கயல்விழியின் மனதுக்குள் ஒலித்தது. ஆண்டிப்பட்டி விவகாரத்திலிருந்து விடுதலை பெற திருமணம் ஒன்றே தீர்வு என்று தோன்றியது. பெற்றோரையும், செல்வியையும் விட்டுப் பிரிய வேண்டுமே என்ற ஏக்கத்திற்கு தானாகவே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
“ஜூன் மாசம் பொண்ணு பார்க்க வர்றாங்களாம்..”
“சரிப்பா.. எனக்கும் சம்மதம்..” என்றாள் தலையைக் குனிந்தபடியே. “பையன் பேரு என்ன.. “
“சேதுராமன்.. வீட்டுல ‘சேது’ன்னு கூப்பிடுவாங்களாம்..
