
பத்துப் பாட்டு நூல்களில் ஆறாம் இடத்தில் வைத்து எண்ணப்படுவது மதுரைக்காஞ்சி ஆகும். இதைப்பாடியவர் மாங்குடி மருதனார். இவர் இந்நூலில் பாட்டுடைத்தலைவனாக தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் மன்னனை வைத்துப் பாடி உள்ளார். அகவல்பா (ஆசிரியப்பா), மற்றும் வஞ்சிப்பாவினால் எழுதப்பட்ட இந்நூல் மொத்தம் 782 அடிகளைக் கொண்டதாகும்.
இந்நூலுக்குத் திருமிகு பொ. வே. சோமசுந்தரனார் எழுதி உள்ள உரையைச் சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரையை சென்னை – உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம் வெளியிட்டுள்ளது.
இந்நூலை எழுதிய புலவர் பெருமான் மாங்குடி கிழார், மதுரைக்காஞ்சிப் புலவர், காஞ்சிப் புலவர் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுகின்றார். இவர் எழுதிய பாடல்கள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. .
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானம் (ஆலங்கானம்) என்ற சோழ நாட்டின் ஊரில் சோழ மன்னரையும், சேர மன்னரையும், ஐந்து வேளிர் மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) தோல்வியடையச் செய்தான். இப்போர் பற்றின குறிப்புகள் அகநானூறு 36, 175-11, 209-6, நற்றிணை 387, புறநானூறு 19, 23-16, மதுரைக்காஞ்சி 127 ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையில் பாடப்படுபவனும் தலைவனும் இவரே ஆவார்.
இந்நூல் காஞ்சித்திணையில் அமைந்ததாகும். இந்த உலகம் நிலையில்லாததாகும். இந்த உலகில் நிலைபேறுடைய புகழை நாடிச் செயல்படும் நிகழ்ச்சிகளைக் கூறுவது காஞ்சித்திணை எனப்படுகிறது. காஞ்சித்திணை என்பது வீடுபேறு நிமித்தமாக அறம் பொருள் இன்பம் என்னும் பொருட்பகுதியாலும் அவற்றின் உட்பகுதியாகிய உயிரும் உடலும் செல்வமும் இளமையும் நிலைபெறாத உலகின் இயற்கையைப் பொருந்திய நல்ல நெறியினை உடையது ஆகும். மதுரைக்காஞ்சி என்பதற்கு ‘மதுரையிடத்து அரசர்க்குக் கூறிய காஞ்சி’ எனப் பொருள் கூறினார் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.
பாண்டியன் நெடுஞ்செழியனைச் சிவபெருமானின் வழித்தோன்றல் என்று மாங்குடி மருதனார் புகழ்ந்து பாடுகின்றார். மன்னனின் வள்ளல் தன்மை, ஆலங்கானம் போரில் பெற்ற வெற்றி, பிற போரின் வெற்றிகள், கைப்பற்றிய பகைவர்களின் நாடுகளை சிறந்த முறையில் ஆட்சிபுரிதல், மன்னனை வாழ்த்தி அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தல், பாண்டிய நாட்டின் ஐந்து வகை நிலங்கள், மதுரை நகரின் சிறப்புகள், அங்கு வாழும் மக்களைப் பற்றிய செய்திகள், மதுரை நகரின் கடை வீதிகள், உணவுப்பொருள்கள், செல்வர்களின் மாளிகைகள், நால்வகைப் படைகளின் இயக்கம், பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி, சமணர் பள்ளி, அறங்கூறு அவையம், மதுரையில் இரவு வாழ்க்கை, ஓண நாள் விழா, மன்னனின் நிலை, போர் மறவர்களை மன்னன் வாழ்த்துதல், மன்னனைப் புலவர் மிகச் சிறப்பாக வாழ்த்துதல் ஆகியவற்றைக் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது.
“அமர் கடக்கும் வியன் தானை
தென்னவன் பெயரிய துன் அருந்துப்பின்,
தொல்முது கடவுள் பின்னர் மேய,
வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந!”
என்று மன்னன் கடவுளுக்கு நிகராகப் போற்றப்படுகிறான்
போரினில் வெற்றி பெறும் படையினை உடைய ‘தென்னவன்’ என்னும் பெயரையுடைய, பகைவர்கள் நெருங்க முடியாத வலிமையையுடைய, பழமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றலும், பக்கமலையில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனுமாகிய வீரர் பெருமானே!
அடுத்து மன்னனின் வள்ளல் தன்மை கூறப்படுகிறது. ”அங்கே ஒரு பக்கத்தில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதனால் எழுந்த ஓசைகள் நிறைந்த ஊர்களில் இருந்து, முழவுபோலும் தோளினையுடைய பொருநர் தடாரி எனும் இசைக்கருவியை இசைத்துப் பாடுகின்றனர். அவர்களுக்கு அச்சம் பொருந்திய தலைமை உடைய கன்றும், பிடியும் கொண்ட கூட்டத்துடன், ஒளியுடைய தந்தங்களை உடைய களிற்று யானைகளைக் கொடுத்தும், பாணர்க்கும் விறலியர்க்கும் பொன்னால் செய்த தாமரை மலர்களைச் சூட்டியும், அழகிய அணிகலன்களை எல்லார்க்கும் கொடுக்கும், பல குட்ட நாட்டில் உள்ளவர்களை வென்ற வேந்தனே!”என இப்பாடல் அடிகள் காட்டுகின்றன
”ஒரு சார் விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவுத் தோள் முரண் பொருநர்க்கு
உருகெழு பெருஞ்சிறப்பின்
இரு பெயர்ப் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்,
பொலந்தாமரைப் பூச் சூட்டியும்,
நலம் சான்ற கலம் சிதறும்,
பல் குட்டுவர் வெல் கோவே!
கீழ்க்கண்ட பாடல் அடிகள் தலையாலங்கானப்போர் பற்றிக் காட்டுகின்றன.
”ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,
அரசுபட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட,
அடுதிறல் உயர் புகழ் வேந்தே!”
”தலையாலங்கானம் என்ற ஊரில் பகைவர்களுக்கு அச்சம் தோன்றுமாறுப் போரிட்டு, சேர சோழ மன்னர்களையும் ஐந்து குறுநில மன்னர்களையும் தோற்கடி த்ததோடு, அவர்களின் முரசைக் கைப்பற்றிக் களவேள்வி விரும்பிப் பகைவர்களைக் கொல்லும் ஆற்றல் மிக்க உடைய உயர்ந்த புகழையுடைய வேந்தனே!” என்பதே இப்பாடல் அடிகளின் பொருளாகும்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்,சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, என்னும் சேர மன்னனையும், கிள்ளிவளவன் எனும் சோழ மன்னனையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்னும் ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான். இச்செய்தியை அகநானூறு, நற்றிணை, புறநானூறு நூல்களும் காட்டுகின்றன.
நூலின் இறுதியில் மாங்குடி மருதனார் மன்னனுக்கு அவன் புகழ் நிலைக்க அவன் செய்ய வேண்டியனவற்றைக் கூறுகிறார். இந்த நகரில், மரத்தடிகளில் எல்லாம் செம்மறிக் கிடாக்கள் கொல்லப்படுகின்றன. கொழுப்பையுடைய அவற்றின் தசைகளைச் சுடுவதால் அக்கொழுப்பு உருகவும், நெய்யுடன் பொரியல்கள் உண்ண விரும்புவோர் ஆரவாரிக்கின்றனர். தாளிக்கும்போது எழுந்த நிறத்தையுடைய புகை முகில்கள் போல் திசைகளில் பரவுகின்றது. அப்படிப்பட்ட இந்த ஊரில், பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று நீயும் நல்ல வேள்வித் துறையில் ஈடுபடுவாயாக!
பண்டைய ஆணையையுடைய விளங்கிய நல்ல ஆசிரியர்கள் தம்முள் சேர்ந்து நுகர்ந்த செந்தமிழ் வழங்கும் காலம் எல்லாம் உன் புகழ் விளங்க வேண்டும். அதற்காகத் தமிழ்ச் சங்கம் நிறுவுக! அச்சங்கத்தில் மெய்ந்நூல் புலப்படுத்த சிறப்பினை உடைய நிலந்தரு திருவின் நெடியோன் போல, வியப்பும் சான்றான்மையும் உடைய செவ்விதான சான்றோர் பலரை அமர்த்துக. குற்றம் இல்லாத சிறப்புடன் தோன்றி, அரிய பொருட்களைக் கொண்டு வந்து குடிமக்களின் நலம் பெருக்குக! நூல்களைக் கற்று நின் புகழை நிலைநிறுத்துக! கடல் நடுவில் தோன்றும் கதிரவன் போலவும், பல விண்மீன்களுக்கு நடுவில் உள்ள நிலவு போலவும், பொலிவு பெற்ற சுற்றத்துடன் பொலிந்து இனிது விளங்கி, உண்மையான நல்ல புகழை உலகில் நிறுத்துக!, பகைவர்களை வென்று கொல்லும் தவறாத வாளையுடைய இளைய பல கோசர்கள், நெறி முறையின் மரபில் நின்னுடைய மெய்மொழியைக் கேட்டு நடக்க, பொன்னால் செய்த அணிகலன்களை அணிந்த ஐம்பெரும் அமைச்சர்களும் (ஐம்பெரும் குழுக்களும்), பிறரும் நிறைந்து, பொலிவு விளங்குகின்ற புகழினை உடைய அவை நின்னுடைய அறத்தின் தன்மையைப் புகழ ஆட்சி செய்வாயாக! மகளிர் பொன்னால் செய்த வட்டில்களில் நறுமணம் மிகுந்த தேறலை நினக்குத் தர, அதனைப் பருகி, நாள்தோறும் மகிழ்ச்சி அடைந்து இனிதாக இருப்பாயாக!
நூலின் மையமே மன்னனுக்கு அறிவுரை கூறும் இப்பகுதியாகும். இந்நூலில் பல்வகை உணவு வகைகள் சொல்லப்படுகின்றன.
“சேறும் நாற்றமும் பலவின் சுளையும்,
வேறுபடக் கவினிய தேமாங்கனியும்,
பல்வேறு உருவின் காயும் பழனும்,
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும
அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும்,
புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்,
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்,
இன்சோறு தருநர் பல்வயின் நுகர,
சாற்றாலும் மணத்தாலும் வேறுபட்ட அழகு கொண்ட பலாவின் சுளைகள், இனிய மாவின் பழங்கள், ஆகியவற்றுடன் பல்வேறு வடிவில் உள்ள காய்கள், பழங்கள் உண்ணப்படுகின்றன. முகில்கள் மழைபொழிந்து வளர்த்த கொடிகள் அழகு பெற்று, மெல்லிய சுருள் விரிந்த சிறிய இலைகளையுடைய கீரைகள் சமைக்கப்படுகின்றன. அமுதை வார்த்தார்ப்போல் உள்ள கற்கண்டுத் துண்டுகளையும், பலரும் புகழும்படி சமைத்த பெரிய இறைச்சித் துண்டுகள் கலந்த சோற்றையும், கிழங்குகளுடன் உண்பார்கள்.
மாங்குடி மருதனார் மனன்னுக்கு நிலையாமையைப் பற்றி இப்படிக் கூறுகிறார்.
”பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறைப்
படுகண் முரசம் காலை இயம்ப,
வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணை கெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்த்
திரை இடு மணலினும் பலரே உரை செல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே! ”
பருந்துகளும் பறக்கமுடியாத உயர்ச்சியுடைய அரண்மனைகள் இருக்கும். அங்குள்ள பாசறைகளில் பள்ளியெழுச்சி முரசம் அதிகாலையில் ஒலிக்கும். மன்னர்கள் பகைவர்களுக்குக் கேடு உண்டாகும்படி வென்று, வேண்டிய நிலங்களில் சென்று தங்குவார்கள். அவர்கள் வெற்றி முரசுகளையுடைய பல வேல்களை உடைய மன்னர்கள் ஆவர். அவர்களின் எண்ணிக்கை கரையை இடித்து முழங்கும் செறிந்த கரிய கடலின் அலைகள் குவிக்கின்ற மணலினும் பலர் ஆவார்கள், தங்கள் புகழ் எங்கும் பரவும்படி, அகன்ற இடத்தையுடைய இந்த உலகை ஆண்டார்கள். ஆனாலும் பிறவியை நீக்க முயலாது மாண்டவர்கள் ஆனார்கள்” என்பது இந்த அடிகளின் பொருளாகும். இதன்மூலம் அரசனுக்கு உலகில் எதுவும் நிலையானதன்று என விளக்குகிறார்.
நாட்டு மக்களின் குறைகளையும். வழக்குகளையும் விசாரித்துத் தீர்ப்பு வழங்க அறம் கூறு அவையம் என்னும் அமைப்பி மதுரையில் இருந்ததாம். அதைப்பற்றிச் சொல்லும்போது,
”அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து,
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகிச்,
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்”
என மாங்குடி மருதனார் காட்டுகிறார்.
அந்த அவையத்தில் நடுவுநிலைமையுடன் கூறுவார்களா அல்லது கூறமாட்டார்களா என வந்தவர்களின் அச்சத்தையும் வருத்தத்தையும் ஆர்வத்தையும் நீக்கும் பெருமக்கள் இருந்தார்கள். மேலும் அவர்கள் சினமும் மகிழ்ச்சியும் கொள்ளாத நடுநிலையில் இருந்தார்கள். அவர்கள் துலாக்கோலை ஒத்த நடுவுநிலைமை உடையராய் இருந்தார்கள். அப்படிப்பட்ட சிறந்த கொள்கையுடையவர்கள் அறம் கூறும் அவையில் இருந்தார்கள்.
மேலும் மதுரை மாநகரில் பெரும்பாணர் வாழிடம், அந்தணர்ப் பள்ளி, பௌத்தப் பள்ளி, அமணப் பள்ளி எனப் பலர் வாழும் இடங்கள் தனித்தனியாய் இருந்தன. அவற்றில் அந்தணர்ப் பள்ளியக் காட்டும்போது,
“சிறந்த வேதம் விளங்கப் பாடி,
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து,
நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி
உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்” என்று மாங்குடி மருதனார் காட்டுகிறார்.
அங்கே இருந்த அந்தணர்கள் சிறந்த வேதங்களைப் பொருள் விளங்கப் பாடத்தகுந்தவர்கள். அவர்கள் மிகச் சீரிய தலைமை அடைந்த ஒழுக்கத்துடன் இருந்தார்கள், அவர்கள் நால்வகையான நிலங்கள் கொண்ட இந்த உலகத்தில், இறை பணியினால் உயர்ந்த நிலையை இவ்வுலகத்தில் இருந்தே அடைய எண்ணிய பெருமக்கள் ஆவர். அறநெறியிலிருந்து தப்பாது அன்புடைய நெஞ்சம் உடையவர்களாய் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். மேலும் மலையைக் குடைந்தாற்போல் அந்தணர் இருப்பிடம் இருந்தது எனவும் மதுரைக்க்காஞ்சி காட்டுகிறது.
சங்ககால மதுரையை மட்டுமன்றி அங்கு வாழ்ந்த மக்களின் பல்வேறு நிலைகளையையும், இந்தப் பத்துப் பாட்டு நூல் விளக்குகிறது எனத் துணிந்து கூறலாம்.
