விக்கிரமசோழன்

Vikrama Cholan - YouTube

குலோத்துங்க சோழனின் கதையை முடிப்பதற்கு முன் சில நிகழ்வுகளை நாம் பார்த்தே ஆகவேண்டும்.

வருடம் 1076:

ஆட்சியேற்ற ஆறு வருடங்களில், குலோத்துங்கனின் ஆட்சி, சோழ நாட்டை மீண்டும் சாம்ராஜ்யமாக்கியிருந்தது. வேங்கியில், சோழன் ஆதரவில் விஜயாதித்தன் ஆண்டுவந்தான். அங்கு அமைதி நிலவிவந்தது. மேற்கே, சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனும் அமைதி காத்து வந்தான் என்றே கூறவேண்டும். விஜயாதித்தன் இறக்கும் தறுவாயில் இருந்தான். அந்தச் செய்திகள் தஞ்சைக்குச் சுடச்சுட வந்தவண்ணமிருந்தன. முடிவில் அந்த முடிவுச் செய்தி வந்தது. விஜயாதித்தன் காலமானான்.

கங்கைகொண்ட சோழபுரத்து அரண்மனையில், குலோத்துங்கன் மந்திராலோசனைக் கூட்டம் கூட்டினான். அமைச்சர்கள், படைத்தலைவர்கள், இளவரசர்கள் குழுமியிருந்தனர். படைத்தலைவர்களில் கருணாகர பல்லவன் இருந்தான். காளிங்காராயன் இருந்தான். இருங்கோவேள் இருந்தான். இளவரசர்களில், ராஜேந்திரன், ராஜராஜ சூடங்கன், வீரசோழன், விக்கிரமசோழன் நால்வரும் இருந்தனர்.

இந்த நான்கு இளவரசர்களைப்பற்றிச் சிறுகுறிப்பு வரைந்து விட்டு, மந்திராலோசனைக்குத் திரும்புவோம்.

முதல் மகன் இளவரசன் ராஜேந்திர சோழன்: இவன் யானைப் படைகளைக் கைக்கொள்வதில் சிறந்தவன். வாள் பயிற்சியில் இவனை வெல்ல அன்று சோழ நாட்டில் எவரும் இல்லை. ராஜேந்திரன் இலங்கைக்கு யுத்தத்துக்கு சென்று அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓடச் செய்து வென்றான்.

இரண்டாவது மகன் ராஜராஜசோழன். ஸ்ரீவிஜய தேசத்தில் சோழர்களின் பிரதிநிதியாக பெரும் படையுடன் இருந்தான்.

மூன்றாவது மகன் வீரசோழன். பெயரிலேயே வீரத்தை வைத்துக்கொண்டு போர் புரியாமலா இருந்திருப்பான்? எனினும் நமக்குக் குறிப்புகள் எதுவுமில்லை.

விக்கிரம சோழன் நான்காவது இளவரசன். இவனைப்பற்றி நாம் சிறு குறிப்பு எழுதப்போவதில்லை. ஏனெனில், இவனைப் பற்றி நாம் நிறைய எழுதவுள்ளோம்.

எங்கே விட்டோம்? மந்திராலோசனை!

குலோத்துங்கன் சொன்னான்: “மேலைச் சாளுக்கியம், கலிங்கம் இந்நாடுகள் நம்முடன் பகையோடு உள்ளன. தெற்கே பாண்டியநாடு, சேரநாடு, ஈழம் இவைகளும் – எப்பொழுது வாய்ப்புக்கிடைக்கும், நாம் மீது படையெடுக்கலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரம், வேங்கியில் நமது ஆதிக்கம் நிலையாக இருப்பதால்தான் வட திசை அமைதியாக உள்ளது. இந்நேரம், நமது கூட்டாளியான விஜயாதித்தன் காலமானது, பிரச்சினையை உருவாக்கிவிட்டது” என்றான். யாரும் ஒன்றும் பேசவில்லை. மன்னனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தனர். மன்னர், வேங்கியின் முன்னாள் இளவரசர் ஆயிற்றே! அவருக்குத் தெரியாதது நமக்கு என்ன தெரியப்போகிறது என்று அமைதியாக இருந்தனர்.

மன்னன் தொடர்ந்தான். “விக்கிரமாதித்தன் இந்த சமயம் மேலைச்சாளுக்கியத்திலிருந்து படையெடுத்து வேங்கியை ஆக்கிரமித்துக்கொள்ள முயற்சிகள் செய்வான். வேங்கி நம் கையை விட்டுப்போகாமல் இருக்கவேண்டுமானால், அங்கு நமது நேரடி ஆட்சி நடக்கவேண்டும்” என்றவன் மேலும் தொடர்ந்தான்: “இளவரசர்கள் இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி இம்முறை இளவரசன் ‘இராசராச மும்முடிச் சோழனை’ வேங்கி நாட்டை ஆளும்படி அனுப்புகிறேன். அவன் அங்கு அமைதியை நிலை நாட்டி, எதிரிகளைக் கட்டுக்குள் வைத்து, ஆட்சி புரியவேண்டும்” என்றான். அத்துடன் சபை கலைந்தது என்பதற்கு அறிகுறியாக கையை உயர்த்தினான்.

ராசராசன், வேங்கியில் தன் கடமையைச் செய்யத் துவங்கினான். ஆயினும், சோழநாடு திரும்பவேண்டும் என்ற எண்ணம் அவன் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. ஓராண்டு முடியும் போது, தந்தைக்கு தனது மனநிலையை எழுதினான்.

கி.பி.1077-ல் குலோத்துங்கன், ராசராசனை சோழநாட்டுக்கு வரவழைத்து, தன் அடுத்த மகன் வீரசோழனை அந்நாட்டை ஆண்டுவர அனுப்பினான். அவன் ஆறு ஆண்டுகள் வேங்கியை ஆண்டான். அவனுக்கும் சோழநாடு திரும்பவேண்டும் என்ற எண்ணம் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. ஆறாண்டு முடியும் போது, தந்தைக்கு தனது மனநிலையை எழுதினான்.

கி.பி.1084 -ல் குலோத்துங்கன், வீரசோழனை சோழநாட்டுக்கு வரவழைத்து, தன் மூத்த மகன் இராசராச சோழ கங்கனை அனுப்பினான். அவன் வேங்கி நாட்டை ஆண்டான்.

கி.பி.1089-இல் மீண்டும் வீர சோழனே வேங்கி நாட்டை ஆண்டுவர அனுப்பப்பட்டான். அவன் கி.பி. 1093 வரை அந்நாட்டை ஆண்டுவந்தான்.

குலோத்துங்கன், கி.பி.1093ல் கடைசி இளவரசன் விக்கிரம சோழனை வேங்கி நாட்டை ஆள அனுப்பிவைத்தான். விக்கிரமசோழன் இருபத்தைந்து வருடம் அங்கிருந்து வேங்கியை ஆண்டுவந்தான்.

இடையில், குலோத்துங்கனின் ஆட்சியின் 26ஆம் ஆண்டில் (கி.பி. 1096 இல்) அரசியல் களம் சூடுபிடித்தது. விக்கிரமசோழன் வேங்கியின் அரசுப் பிரதிநிதியாக இருந்து வந்தான். தென் கலிங்க வீமன் தன்னாட்சி பெறுவதற்காக வேங்கியின்மீது படையெடுத்தான். விக்கிரமசோழன் பெரும்படையுடன் சென்று வீமனோடு போர் செய்து அவனை வென்றான். தோல்வியுற்ற வீமன் சிற்றரசனாகவே இருந்து வேங்கிக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்டான். இது முதல் கலிங்கப்போர்.

முதல் மூன்று இளவரசர்களும், அந்த ஐம்பது வருடத்தில், காலத்தால் கரைக்கப்பட்டு மறைந்து போயினர். சோழமகுடத்துக்கு உரியவன் விக்கிரமன் தான் என்பதை  மன்னன் உணர்ந்தான். தனது மூப்பும், தள்ளாமையும் குலோத்துங்கனை முடிவெடுக்க வைத்தது. விக்கிரமனின் வீரம் குலோத்துங்கனைக் கவர்ந்திருந்தது.

குலோத்துங்கன் விக்கிரம சோழனுக்கு பட்டத்து இளவரசனாகப் பட்டம் சூட்டுவதற்காக கி.பி. 1118 இல் அவனை வேங்கியிலிருந்து சோழநாட்டுத் தலைநகருக்கு வரவழைத்தான். இருவரும் சேர்ந்து சோழநாட்டை ஆளத்தொடங்கினார். வேங்கியில், விக்கிரமசோழன் இருந்த இடத்தில் தெலுங்குச் சோழர்களில் ஒருவனை அரசு பிரதிநிதியாக நியமித்து வேங்கி நாட்டை ஆண்டு வரும்படி செய்தான். குலோத்துங்கனின் இச்செயலை, வேங்கி நாட்டு மக்கள் விரும்பவில்லை. இதனால் வேங்கி நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது. வேங்கியை மேலைச் சாளுக்கிய நாட்டோடு இணைத்துக்கொள்ள வேண்டுமென்று நெடுங்காலமாக முயன்று கொண்டிருந்த ஆறாம் விக்கிரமாதித்தன் இதைத் தக்க வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டான். வேங்கி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டை எளிதாக வென்று கைப்பற்றிக் கொண்டான். குலோத்துங்கன்மேல் இருந்த தன் பரம்பரை வஞ்சத்தை ஆறாம் விக்கிரமாதித்தன் தீர்த்துக்கொண்டான்.

கி.பி. 1120 இல் முதலாம் குலோத்துங்கன் மறைந்ததும் விக்கிரம சோழன் சோழப் பேரரசின் மன்னனாக முடி சூட்டிக்கொண்டான். நான்காவது மகனாக இருந்தாலும், அதிர்ஷ்டம் இருந்தால், அனைத்துத் தடைக்கற்களும் தானே விலகும் என்பதற்கு அவன் வாழ்க்கை ஓர் உதாரணம்.

சோழநாடு பொற்காலத்தில் தொடர்ந்து பயணிக்கிறது. அதை நாமும் தொடர்ந்து பார்ப்போம்.