முதல் அத்தியாய சுருக்கம்:
ஐஸ்லாண்டிற்கு இரவு 12 மணிக்கு அடைந்து அங்கு புக் செய்த டைம் ஷேர் வீட்டிற்குள் செல்ல முடியாமல் தவித்து பின்னர், வீட்டின் சொந்தக்காரரைப் போனில் பிடிக்க இயலாமல் துடித்து , கடைசியில் ஒரு வழியாக டாக்ஸி ஒட்டியின் உதவியால் உள்ளே சென்று நள்ளிரவில் சூரிய உதயத்தைக் கண்டு அதிசயித்துப் படுக்கப் போனார்கள்….
சரி, உறங்கலாம் என்று 1:30AM படுத்தோம்.
அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது, எங்கள் கதவு வேகமாகத் தட்டப்பட்டது………..
********************************
சற்று கவலை ஏற்பட வாசல் விளக்கை ஏற்றி ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தால், ஒரு தம்பதி கைக்குழந்தையுடன் நிற்கிறார்கள்.
“நான் இந்த டைம் ஷேர் ஓனர்தான், கதவைத் திறக்கலாம்”
கதவைத் திறந்தவுடன், குளிருக்கான ஜாக்கெட்டை விலக்கியபடி,
“இப்படி அர்த்தராத்திரியில் வந்து கதவைத் தட்டியதற்கு மன்னிக்கவும். உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். நாங்கள் அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் என்பதால் ‘வாசல் விளக்கின் மேல் சாவி உள்ளது’ என்ற குறும் செய்தியை அனுப்பி இருந்தேன். அது உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை. அவசரமாக டாக்டரிடம் போகும்படி ஆகிவிட்டது”, மனிதர் முகத்தில் நிஜ வருத்தம் தெரிந்தது (செய்தி தாமதமாகக் கிடைத்தது. அவர் மீது குற்றமில்லை)
குழந்தை சோர்வுடன் அம்மாவின் தோளில் சாய்ந்து கண்ணை இடுக்கிப் பார்த்தது. ஒரு பையிலிருந்து பிஸ்கட், சாக்லேட்டுகளை எடுத்து மேசையில் பரப்பி, “ஏதும் சாப்பிட்டீர்களா?” என்றார் மிகவும் கனிவாக.
“காலை 9 மணிக்கு வந்து விடுகிறேன். நீங்கள் தங்கியிருக்கும் நாட்களில் என்ன பார்க்கலாம்? என்பதை ஷெட்யூல் போட்டு வைத்திருக்கிறேன். காலையில் விவாதிப்போம். டூர் ஆப்பரேட்டரிடம் சொல்லிவிட்டேன்” என விடை பெற்றார்.
அவர் காலையில் வருவதற்குள், ஐஸ்லாந்து பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்;
ஐஸ்லாந்து என்னும் இந்த தீவு, நீரும் நெருப்பும் கலந்த வியத்தகு நிலப்பரப்பைக் கொண்டது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பனிப்பாறை அடுக்குகளையும், இன்னும் வெந்து தணியாத எரிமலைகளையும், தாகம் பொங்கும் வெந்நீர் ஊற்றுகளையும், கருஞ்சிவப்பு லாவா படுகைகளையும், பசுமை தோட்டங்களையும், சரம் சரமாய்க் கோர்த்த மணிகளைப் போல குட்டித் தீவுகளையும் உள்ளடக்கி அழகிய கடற்கரை எல்லைகளைக் கொண்டது.
வட அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் ஆலிலை மிதப்பது போல அழகிய வடிவம் கொண்டது இந்த தீவு. இதற்கு அருகில் கிரீன்லாந்து 286 கிமீ மற்றும் ஸ்காட்லாந்து 795 கிமீ, நார்வே 950 km தொலைவிலும் உள்ளது. ஐஸ்லாந்தை விமானம் மூலம் அடைய நியூயார்க்கிலிருந்து ஐந்து மணி நேரமும், ஐரோப்பா நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மணி (Nonstop) நேரமும் பிடிக்கும்.
சுமார் 1,03,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவில் பதினோராயிரம் சதுர கிமீ அளவிற்கு எரிமலை படுகைகளும், 12000 சதுர கிமீ பனிப் படுக்கைகளும் இடம் பிடித்துக் கொண்டுள்ளன. மக்கள் தொகை சுமார் 4 லட்சம். நம் ஆவடி, அம்பத்தூரை விடக் குறைவு.
ஜூன், ஜூலை மாதங்களில் கிட்டத்தட்ட 22 முதல் 24 மணி நேர சூரிய வெளிச்சம், டிசம்பர் மாதத்திலோ வெறும் 5 மணி நேர மட்டுமே வெளிச்சம் (11:00AM to 3:00PM) – என்கிற விசித்திர பருவகால அட்டவணையைக் கொண்டது. அவ்வப்போது மழை அல்லது பனிப்பொழிவின் போது காற்றின் வேகமும் தன்மையும் அடிக்கடி மாறும்.
அதனால், சுற்றுலாப் பயணிகளின் எத்தகைய சிறப்பான திட்டமிடலைக் கூட வானிலையின் சூழ்நிலை முற்றிலும் மாற்றி அமைத்து விடும். அவ்வப்போது நேரம் பார்ப்பது போல வானிலை நிலவரத்தையும் பார்த்துக் கொள்வது நல்லது.
ஐஸ்லாந்தில் தலைநகரம் ரெய்க்ஜாவிக் (REYKJAVIK). ரேக்கவிக் என்பது சொல் மொழி. ஒரு பொடிநடையாய், பூகோளத்தின் வட துருவத்தை நோக்கி வாக்கிங் சென்றால் கடைசியாக நாம் காணும் நகரம் இந்த ரேக்கவிக் ஆகத்தான் இருக்கும்.
********************************
காலை 7:30 மணிக்கு, வேர்க்கடலை வெண்ணெய் தடவிய டோஸ்டட் பிரெட்டை ருசித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் வந்தார் ஹவுஸ் ஓனர். அவரிடம் அமர்ந்து பார்க்க வேண்டிய இடங்களுக்கான அட்டவணையை முடிவு செய்தோம்.
“அருகில் உள்ள பழங்கால லைட் ஹவுஸ் பகுதிக்குக் காலையில் சென்று வாருங்கள். மதிய உணவு எங்கள் வீட்டில். உங்களுக்காக என் மனைவி பிரத்தியேகமாக ஹக்கார்ல் (Hakarl) சமைப்பதாகச் சொல்லியிருக்கிறாள்”
‘அக்காள் ?’ – அப்படி என்ன ஸ்பெஷல் அதில் ? என்றாள் மனைவி. ஐஸ்லாந்து கடல் உணவிற்குப் பெயர் பெற்றது. அரிதாகக் கிடைக்கக்கூடிய சுறாவைச் சுத்தப்படுத்தித் தயாரிக்கும் உணவு, ஹக்கார்ல் !
மீன், மீட், காளான் தவிர மற்றவைதான் நாங்கள் உண்போம் என்று சொல்ல, வித்தியாசமாக எங்களைப் பார்த்து, “இங்குத் தலைநகர் ரேக்கவிகில் இந்திய உணவகம் இருக்கிறது. உங்களுக்கு அதை அறிமுகப்படுத்தச் சொல்கிறேன்”
“கவலைப்படாதீர்கள். நாங்கள் எங்களுக்குத் தேவையான ரெடிமேட் உணவு வகைகளைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்றோம்.
எங்களுக்குக் கிடைத்த டிரைவர் கம் கைட் மிகவும் உற்சாகமானவர். ஐஸ்லாந்து பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்தார். நீளமான ஒரு பெயரைச் சொன்னவர், “ஜோன் என்று கூப்பிடுங்கள், என் அம்மா என்னை அப்படித்தான் கூப்பிடுவாள்” என்றார்.
“அம்மாவை உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமோ? “
“ஆம் என் தேசம் போல! ” என்றார் புன்னகையுடன்.
வீட்டைப் பூட்டிவிட்டுக் கிளம்பினோம். முதலில் காரடுர் (GARDUR) கலங்கரை விளக்கம் இருக்கும் இடத்திற்கு நாம் போகப் போகிறோம் என்றார் ஜோன். சிறிது தூரம் கடந்ததும் எதிரில் வந்த கார், எங்களை நிறுத்தியது.
பார்த்தால் இரண்டு பெரிய கூடை நிறையப் பழங்களைத் தாங்கிக்கொண்டு இறங்கிய ஹவுஸ் ஓனர் எங்கள் வண்டியின் பின் டிரங்கைத் திறக்கச் சொல்லி அதில் கூடைகளை ஏற்றினார். நாங்கள் சிரித்துக் கொண்டே “ஐஸ்லாந்தில் பழமண்டி வைக்கும் அபிப்பிராயம் ஒன்றும் எங்களுக்கில்லை” என்றோம்.
“இப்பொழுது தேவைப்படாது நடக்க, நடக்கப் பசிக்கும்” என்றார் அன்போடு.
இயற்கை எழிலை ரசிக்க விடாமல் செய்யும் கான்க்ரீட் கட்டிட மறைப்புகள் இங்கு மிகவும் குறைவு என்பதால் கலங்கரை விளக்கம் தூரத்திலேயே தெளிவாகத் தெரிந்தது. அதன் பக்கத்திலேயே பழைய குட்டி கலங்கரை விளக்கமும் இருப்பதைப் பார்க்க முடிந்தது.
ரேக்கவிக் தீபகற்பத்தின் தென் முனையில் உள்ள இந்த இந்த ஊர், கெஃப்ளவிக் ஏர்போட்டிலிருந்து 12 கிமீ. தொலைவில் உள்ளது. 120 வருடங்கள் பழமையானது. அட்லாண்டிக் பெருங்கடலில் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு வசதியான இடமாக, பல வருடங்களாக இருந்து வருகிறது.
வாகனத்தை விட்டு இறங்கி கடல் ஓரத்தில் நடந்தோம்.
ஸ்படிகம் போன்ற நீலக் கடலின் தெளிவான நீரில் துள்ளித் திரியும் மீன் கூட்டங்கள். கரையோரங்களில் தேங்கி நிற்கும் வெள்ளை பனிப் படலங்கள். பழுப்பு நிறத்தில் மணல். அதற்கு அணி சேர்ப்பது போல் கருப்பு நிறக் கூழாங்கற்கள், ஆங்காங்கே மீன் பிடி படகுகள். அதன் உச்சிக் கொம்புகள் மீது அரட்டையடிக்கும் ஸீகுல் நாரைகள், அவைகளை உற்றுப் பார்த்தபடி வானில் பறக்கும் வெள்ளை வால் கழுகுகள். சிவப்பு, வெள்ளை வர்ணம் அடித்த கலங்கரை விளக்கம், அதன் மீது ஓட்ட வைத்தது போல மஞ்சள் வண்ண சூரியன்!
மொபைல் கேமரா வளையத்தில் தவறி விரல் பட்டாலும் அற்புத ஒளிப்படமாக மாறக்கூடிய ரம்மியமான இடமாக இருந்தது. அழகில் ஜொலித்துக் கொண்டிருந்த இந்த சூழலுடன், உலகின் வட துருவ ஆர்டிக் வட்டத்திற்கு அருகில் இருக்கிறோம் என்கிற அற்புதமான மன உணர்வும் சேர்ந்து கொண்டது. பழைய லைட் ஹவுஸ் அருகில் ஒரு தரை தட்டிய மீன் பிடிக் கப்பல். அதை ஒட்டி ஒரு சிறிய ரெஸ்டாரண்ட். இதமான குளிருக்கு ஷார்ட் பிரட் பிஸ்கெட்டுடன், சூடான காபியும் அருந்தினோம், ஏகாந்தம்!

அங்கிருந்து 35 மைல் தொலைவில் GELDINGADULUR பள்ளத்தாக்கில் உள்ள FAGRADAISFJALL எரிமலையைக் காணச் சென்றோம். 2022 ஆம் ஆண்டு கூட தனது உக்கிரத்தைக் காட்டியுள்ள இந்த எரிமலையைக் காண வானம் தெளிவாக இருப்பது அவசியம். உங்களுக்கு அதிர்ஷ்டம் என்றார் ஓட்டுநர்.
திரும்பும் வழியில் ஒரு வீட்டின் வாசலில் வெள்ளை வெளேர் என்று ராஜகுமாரி போல நின்றிருந்த குட்டி குதிரையைப் பார்த்தோம். அந்த போனியின் (pony) பின்னணியில் ஒரு ஒளிப்படம் வேண்டும், என்றாள் மனைவி. இங்குள்ள குதிரைகள் அளவில் சற்று சிறியவை, ஆனால் அவை போனியல்ல.
குதிரையின் அருகில் போக, சுஜாதாவின் திருச்சி புத்தூர் வண்டி ஸ்டாண்ட் ‘குதிரை’ ஞாபகம் வர, எங்கே கடித்துவிடுமோ? என்று பயம். அதெல்லாம் ஒன்றும் ஆகாது. குதிரை தன் எல்லை தாண்டி வராது. எலக்ட்ரானிக் இன்விசிபில் வேலி இட்டிருப்பார்கள். நீங்கள் தைரியமாகப் படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் ஜோன்.
உங்களுக்குத் தெரியுமா? முதலில் ஐஸ்லாந்தில் நரிகள் மட்டுமே விலங்குகளாக இருந்தன. பிற்காலத்தில் கலைமான் (Reindeer) வந்து சேர்ந்தது. பிறகு வீட்டு விலங்குகள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன என்றார்.
வழியெங்கும் நிலப்பரப்பில் துணி போர்த்தியது போல் மஞ்சள் நிற திட்டுக்களும், இயக்குநர் இமயம் பாரதிராஜா படத்தில் வருவது போல ஆங்காங்கே புகை மண்டலங்களும் காணப்பட்டதைப் பற்றி விசாரித்தோம்.
ஐஸ்லாந்தின் நிலம் கரிம மற்றும் கனிம வளம் நிறைந்தது. அதனால்தான் இந்த மஞ்சள் படுகை. அது மட்டுமல்லாமல் உலகில் சல்ஃபட்டரா (SOLFATARA) எனப்படும் எரிமலையின் நீராவி துளைகள் அதிகம் உள்ள பூமி இது. இந்த துளை வழியாக எரிமலையின் கந்தக வாயு அவ்வப்போது வெளியேறும். அதுதான் இந்த மாயாஜால காட்சிகளுக்குக் காரணம் என்றார்.
அதே போல வெந்நீர் ஊற்றுக்களும், இந்த நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றன. நிலத்தடி ஊற்று நீர், உருகும் எரிமலைப் படிவம் (MAGMA) வழியாக வரும் போது நீர் சூடாக்கப்பட்டு, ஹாட் ஸ்ப்ரிங் ஆக வெளியேறுகிறது. இந்த வெந்நீர் ஊற்றுகள் இந்த நாட்டிற்கு வருபவர்களுக்குப் பெரிய ஒரு அட்ராக்ஷன்!
நாளை காலை நாம் Blue lagoon போகப் போகிறோம் என்றார் ஜோன்.
உடன், 1980களில் வெளிவந்த ‘ப்ளூலகூன்’ திரைப்படம் ஞாபகத்துக்கு வந்து மனைவியிடம் சொல்ல, சமீபத்தில் மாம்பலம் பஜனை மண்டலியில் பாடிய நாமசங்கீர்த்தனம் ஒன்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ளாதீர்கள். நாற்பது வருஷம் ஆனாலும் தேவையில்லாத விஷயங்கள் மட்டும் ஞாபகம் இருக்கு, எனத் தலையில் தட்டினாள்.
இது வேறு Blue lagoon…! அதில் கிடைக்கப் போகும் அனுபவத்தையும் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டீர்கள் என்றார் ஜோன் சிரித்துக் கொண்டே..
(தொடரும்)
