
” ராகவா! நேத்து பெண் பார்க்கப் போயிருந்தியே. பெண் பிடிச்சிருக்கா? டெர்ம்ஸ், கண்டிஷன்ஸ் ஓ.கே.யா ?” உணவு இடைவேளையும்போது நண்பன் பாலா கேட்டான். அலுவலக கேண்டீனில் ஓரமாக எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டிருந்தனர் இருவரும்.
” பிடிச்சிருக்கு ..ஆனா பிடிக்கல்லை !” என்று பட்டென்று பதில் சொன்ன ராகவனை
சற்று அசூயையுடன் ஏறிட்டான் பாலா. பிறகு, ” வரும், ஆனால் வராது ‘ ன்னு ஒரு சினிமாவுல வரும் வசனம் மாதிரி இருக்கு உன்னோட பதில். ” என்றான் கொஞ்சம்
கடுப்புடன்.
” யெஸ்…அதாவது என்னன்னா பெண்ணை எங்கப்பா அம்மாவுக்குப் பிடிச்சிருக்கு. எனக்குப் பிடிக்கல்லை.”
” உனக்குப் பிடிக்கல்லைன்னு உங்க அப்பா அம்மாவுக்குத் தெரியுமா ?”
“ இன்னும் நான் சொல்லல்லை . ரெண்டு நாள் கழிச்சு அபிப்ராயம் சொல்றதா பெண் வீட்டாரிடம் பேசியிருக்கோம். “
“ சரி, ஏன் பிடிக்கல்லை ; பெண் அழகா இல்லையா ?”
” சே சே..மாநிறமா இருந்தாலும் மூக்கும் முழியுமா நல்லாவே இருக்கா! ஹைட்டும் அஞ்சே கால் அடிதான்.”
” பெண்ணுக்குப் படிப்பு போதல்லியா ?”
” நீ வேற…எம்.ஏ. ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கா! காலேஜூல மெடல் கூட வாங்கியிருக்காளாம். “
” ஒருவேளை நடை உடை பாவனையில வித்தியாசம் ஏதாவது…ஐ மீன்..நான் கேட்குறது உனக்கு புரியும்னு நினைக்கிறேன். “
” நல்லாவே புரியுது. நீ நினைக்குற மாதிரி இல்ல. நளினமான பெண்மையுடன் கூடிய நடை ! கிளி கொஞ்சும் பேச்சு…அப்புறம் பாட்டுக்கூட பாடினா. குரல் அற்புதமா இருக்கு. “
” சரி. அப்புறம் ஏன் பிடிக்கல்லேங்குறே?”
” என்னவோத் தெரியல்லை…அவளை என் மனைவியா ஏத்துக்க மனசு ஒப்பமாட்டே ங்குறது பாலா !”
” ரெடிகுலஸ் ! முன்ன பின்ன அவளைப் பார்த்திருக்கியா?”
‘ இல்லை ‘ என தலையாட்டினான் ராகவன்.
” முதன் முதலா அவளைப் பார்க்குறே . எல்லாத்திலேயும் தகுதியா இருக்காள்னு வேற சொல்றே. அப்புறம் ஏன் பிடிக்காமல் போச்சு?”
மலங்க மலங்க சிறிது நேரம் விழித்தான். பிறகு ” எனக்கு சொல்லத் தெரியல்லடா.” என்றான்.
” ஓ.கே. உன்னோட விருப்பம்! நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல! ஆனால் நல்லா யோசிச்சு முடிவு எடு. இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்ங்குற மாதிரி நடந்து கொள்ளாதே. அதுவும் ஜாதகம் பொருந்தியிருந்து பெண் அம்சமா இருக்கும் பட்சத்தில் பாஸிடிவான முடிவை எடுக்கறதுதான் உத்தமம் ! அதுக்கப்புறம் உன் இஷ்டம்!”
” அப்போ பெண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொல்லச் சொல்றியா ?”
” இதோ பார் ராகவா ! நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணல்ல. ஏன் மனசுக்கு பிடிக்கல்லேன்னு நல்லா திங்க் பண்ணு….உன் பெற்றோரை கலந்து ஆலோசி. அவங்க அறிவுரைபடி நடந்துக்க. “
‘சரி’ என தலையாட்டிவிட்டு பாலாவுடன் சென்றான் ராகவன். அன்று இரவு பூராகவும் குழப்பத்தில் இருந்தான். பெண்ணிடம் குறை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சீர் சினத்திகள் அவர்கள் இஷ்டத்திற்கு விட்டாகி விட்டது. வரதட்சணையும் வேண்டாமெ ன்று சொல்லியாயிற்று. இப்படி எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போன பிறகு ஏன் மறுக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும் மறுபடியும் மனக் குரங்கு தாவியது.
மறுநாள் அலுவகம் வந்த ராகவன் முகம் தொங்கிப்போயிருந்தது. வழக்கமாக காணப்படும் சுறு சுறுப்பு இல்லை. எதையோப் பறிகொடுத்தவன் போல் காணப்பட்பான்.
” என்னப்பா டல்லடிக்குறே ! என்னாச்சு?” பாலா விசாரித்தான்.
” நேத்து நீ சொன்ன மாதிரி நான் நல்லா திங்க் பண்ணிப் பார்த்தேன். ஒரே குழப்பமாயிருந்தது. திடீர்னு ஒரு யோசனை தோணிச்சு. அந்த யோசனைபடி இன்னிக்கு காலையில் குளிச்சிட்டு பூஜையறையில சீட்டுக் குலுக்கி போட்டுப் பார்த்தேன்… “
” சீட்டுக் குலுக்கிப் போட்டயா ?” என கோபத்துடன் கேட்ட பாலா, “ என்ன வந்தது ?”
‘ நெகடிவ் ‘ என்பது போல் தன் உதட்டைப் பிதுக்கினான் ராகவன்.
ஒரு புழுவைப் பார்ப்பது போல் ராகவனை பார்த்த பாலா, ” சே ! உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா. எக்கேடாவது கெட்டுப் போ ” என வெறுப்புடன் வார்த்தைகளைக் கொட்டி விட்டு விடு விடு வென்று நடையைக் கட்டினான் .
‘ஸாரி பாலா ! இன்னிக்கு காலையில் பெண்ணோட அப்பா எங்கப்பாவுக்கு மொபைல் மூலம் தன் பெண்ணுக்கு என்னைப் பிடிக்கவில்லை, அதனால் வேற இடம்பார்க்கும்படி சொல்லிட்டாரு. நான் மனசுல நினைச்சிக்கிட்டிருந்ததை பெண் வாயைத் திறந்து சொல்லிட்டா. ஆனாலும் நறுக்குன்னு அவ நெகடிவ்வா சொன்னது மனசுக்கு கஷ்ட மாயிருக்கு. தனக்கு வந்தால்தான் தெரியும் தலை வலியும் திருகு வலியும்ங்குறத நல்லா புரிஞ்சுக்கிட்டேன். மற்றபடி சீட்டுக் குலுக்கிப் போட்டதாக நான் சொன்னது அப்பட்டமான பொய் நண்பா ! என்னை மன்னிச்சிடு. ‘ மனதில் வேதனை யுடன் நினைத்துக் கொண்டான் ராகவன்.
……………………………..
