(ஓர் அடியார் – ஒரு வெண்பா)

12) அரிவாட்டாய நாயனார்
சோழ நாட்டிலுள்ள கணமங்கலம் என்ற ஊரில், வேளாண் குடியில் பிறந்த தாயனார் என்ற அடியார் வாழ்ந்து வந்தார். அவர், நாள்தோறும் சிவபெருமானுக்குச் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைக்கின்ற தொண்டினைச் செய்து வந்தார், அவரது இயல்பினை உலகுக்கு அறிவிக்க எண்ணிய இறைவன், அவர் வறுமை அடையுமாறு செய்தார். தாயனார் கூலிக்கு நெல் அறுத்துக் கிடைத்தவற்றை இறைவனுக்குப் படைத்து வந்தார், வீட்டுக் கொல்லையில் வளர்ந்த கீரையைப் பறித்து மனைவி சமைத்துத் தர அதை உணவாக உண்டார்.
ஒரு நாள், அவர் செந்நெல் அரிசியையும், பசிய மாவடுவையும், மென்மையான கீரையும் ஒரு கூடையில் சுமந்து இறைவனுக்குப் படைக்க எடுத்துச் சென்றார். அவருடைய மனைவியார் ஒரு மட்கலத்தில் பஞ்சகவ்வியத்தை எடுத்துக்கொண்டு அவர் பின்னால் சென்றார்.. அப்போது தாயனார் பசி மயக்கத்தால் தளர்வுற்றுக் கீழே விழப்போனார். மட்கலம் மூடிய கையால் மனைவி அணைத்தும் கூடையில் இருந்தவை கீழே தரையில் விழுந்தன. இறைவனுக்குப் படைக்கக் கொண்டு சென்றவை தரையில் விழுந்ததால் வருந்திய தாயனார் அரிவாள் கொண்டு தன் கழுத்தை அரிய முற்பட்டார்.
அப்போது நிலத்தின் வெடிப்பினின்று வெளிப்பட்ட இறைவனது திருக்கை, கழுத்தை அரியும் தாயனாரின் கையைத் தடுத்து் நிறுத்தியது. இறைவன் மாவடுவை ‘விடேல்’ ‘விடேல்’ என்று கடிக்கும் ஓசையும் எழுந்தது.
நாயனாரின் கழுத்தில் ஏற்பட்ட ஊறும் நீங்கியது.
இடப வாகனத்தில் காட்சி கொடுத்த இறைவன்,”நீ செய்த செயல் நன்று. உன் மனைவியுடன் என்றும் என் உலகில் வாழ்வாயாக”என்று அருளிச் செய்தார்.
அரிவாளால் கழுத்தை அரியத் தொடங்கியதால் தாயனார், அரிவாள் தாயர்( அரிவாட்டாயர்) என்று பெயர் பெற்றார்.
அரிவாட்டாயர் வெண்பா
தரையில் அமுதுவிழத் தாயன் கழுத்தை
அரிய முனைய அதனை- விரைவில்
தடுத்த விடையவன் தான்மகிழ்ந்து காட்சி
கொடுத்தருள் செய்தகதை கூறு!
*******************
13)ஆனாய நாயனார்

மழ நாட்டைச் சேர்ந்த திருமங்கலம் என்ற ஊரில் ஆயர் குளத்தில் தோன்றியவர் ஆனாயர். தம் ஏவலரின் துணை கொண்டு பசுக் கூட்டத்தைக் காட்டுக்குக் கொண்டு சென்று மேய்த்து வந்தார் இவர் குழல் ஒன்றைக் கையில் ஏந்தி இறைவனுடைய ஐந்து எழுத்தை இசையுடன் கலந்து வாசித்து இன்புறுவார். மந்தரம், மத்திமம், தாரம், ஆகிய மூன்று ஒலிநிலைகளிலும் இறைவனுடைய ஐந்து எழுத்தை வாசிக்கும் திறமை பெற்றிருந்தார். இசை வகைகள் பலவற்றில் தாளம் பொருந்த இவர் வாசித்த பண் எல்லாப் புறங்களிலும் பரவும்.
கார்காலத்தில் ஒரு நாள் பசுக் கூட்டங்களை ஓட்டிக்கொண்டு முல்லை நிலமாகிய காட்டுக்குச் சென்றார். அங்கு, மாலை போல் தொங்குகின்ற அழகிய பூங்கொத்துக்களைக் கொண்ட கொன்றை மரம் ஒன்றைக் கண்டார. தாழ்ந்த சடைகளைக் கொண்ட சிவபெருமானைப் போல் அக்கொன்றை மரம் விளங்கியதால்,ஆனாயர் உள்ளம் உருகினார். சிவபெருமானிடத்தில் ஒன்றுபட்ட உள்ளத்தில் இருந்து எழும் அன்பின் மடையைத் திறந்தார். திருவைந்தெழுத்தைக் குழல் இசையில் இசைத்தார். அந்த இசை, கற்பக மரத்தில் விளைந்த தேனை அமுதத்துடன் கலந்து கேட்போரின் செவிகளில் வார்த்தது. பசுக் கூட்டங்கள், மேய்ந்த புல்லை அசை போடாமல் மெய்ம்மறந்து நின்றன. கன்றுகள் பால் குடிப்பதை விட்டு இசையைக் கேட்டு நின்றன. காட்டு விலங்குகளும் மயிர்க் கூச்செறிந்து, பக்கத்தில் வந்து நின்றன. ஆடும் மயில்கள் ஆடலை மறந்து வந்து கூடின. கோவலர், தம் தொழிலை மறந்தனர். நாகர்கள், தெய்வ மகளிர், விஞ்சையர், கின்னரர் போன்ற தேவகணங்களைச் சேர்ந்தோர் குழல் இசையின் வசப்பட்டு அங்கு வந்து சேர்ந்தனர். பாம்பும் மயிலும், சிங்கமும் யானையும், புலியும் மானும், பகைமை மறந்து ஒன்று சேர்ந்து வந்து அங்குக் கூடின. காற்று இயங்கவில்லை; மரங்கள் அசையவில்லை; அருவிகள் வீழவில்லை; காட்டாறுகள் பாயவில்லை; மேகங்களும் மழையைப் பொழியவில்லை,: ஏழு கடல்களும் துளும்பவில்லை.
ஆனாயரின் குழலிசை வையத்தை நிறைத்து, வானத்தையும் வசமாக்கியது. இறைவனின் திருச்செவியின் அருகில் சென்று பெருகியது. அந்த இசையைக் கேட்ட சிவபெருமான், உமை அம்மையாருடன் காளை ஊர்தியின் மேல் வந்து காட்சியளித்தார்.
“குழல் வாசிக்கும் இந்த நிலையிலேயே நீ என் உலகத்தை வந்து அடைவாயாக” என்று அருளிச் செய்தார்.
ஆனாயர் வெண்பா
தூங்கிணர்க் கொன்றையைத் தூய்சிவன் என்றெண்ணி
வேய்ங்குழல் பண்ணிசைத்த வேளையில் – ஓங்கும்
இனிமையில் ஈடுபட்ட ஏறூர்ந்தான் சொன்னான்
இனியெனைச் சேர்ந்திருப்பாய் என்று!
(தூங்கிணர்- தொங்கும் கொத்து)
**********************
14)மூர்த்தி நாயனார்

பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில், வணிகர் குலத்தில் தோன்றியவர் மூர்த்தி நாயனார். சிவபெருமான் திருவடிகள் மீது பற்று வைத்த இவர், ஏனைய பற்றுகளை முற்றிலும் அறுத்தவர். திருவாலவாயில் உறைகின்ற சொக்கலிங்கப் பெருமான் திருமேனி மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தவறாமல் செய்து வந்தார்
இப்படி அவர் திருப்பணி செய்து வந்த நாளில், வடுகக் கருநாடக அரசன் ஒருவன் பெரும் படையுடன் வந்து பாண்டியனோடு போர் செய்து பாண்டிய நாட்டின் அரசாட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்
அவன் சமண சமயத்தைச் சார்ந்தவனாக இருந்ததால் சைவ சமயத்தைச் சேர்ந்த சிவனடியார்களுக்குத் துன்பங்கள் இழைத்து வந்தான். சமணத்திற்கு உட்படுத்த எண்ணி மூர்த்தியாருக்குப் பல கொடுமைகளைச் செய்தான். மூர்த்தி நாயனார் தமது வழக்கமான திருப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார் கொடியவனான அரசன், மூர்த்தி நாயனார்க்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான்.
மனம் வருந்திய மூர்த்தி நாயனார் ,”இக் கொடிய மன்னன் இறந்து, சைவ சமயம் தழைக்கச் செய்யும் மன்னன், நாட்டை அற வழியில் ஆளும் நாள் எந்நாளோ?” என்று ஏங்கினார்
ஒரு நாள், பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் அவருக்குக் கிடைக்கவில்லை. “இன்று சந்தனக் கட்டைக்கு முட்டு உண்டாயிற்று, ஆனால் என் கை மூட்டுக்குத் தடை வராது” என்று சந்தனக் கல்லில் முழங்கையைத் தேய்த்தார். தோல் தேய்ந்து, நரம்பும் தேய்ந்து, எலும்பு தெரிந்தது.இதைக் கண்ட இறைவன் அவர் கனவில் தோன்றி, “இனி இச்செயலைச் செய்யாதே. நாட்டின் அரசன் இறப்பான். பின் நீயே அரசன் ஆவாய்.அதன் பிறகு உன் எண்ணப்படித் திருத்தொண்டு செய்து, என் உலகத்தை அடைவாயாக!” என்று அருள் செய்தார்.
அன்று இரவே அந்தக் கொடிய மன்னன் இறந்தான். அமைச்சர்கள் கூடி அவனுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன்களைச் செய்தனர். அவனுக்கு மைந்தன் இல்லாததால், யானை ஒன்றின் கண்ணைக் கட்டி விடுவதென்றும் அது யாரைத் தன் மீது ஏற்றிக் கொள்கிறதோ அவரே அரசன் என்று முடிவு செய்தனர். யானையின் கண்ணைக் கட்டி அவர்கள் விட்டபோது அந்த யானை கோயிலின் முன்பு நின்று கொண்டிருந்த மூர்த்தியார் முன் பணிந்து, அவரை எடுத்துத் தன் பிடரி மேல் வைத்துக் கொண்டது
மூர்த்தியாரை அரசனாக்க எண்ணிய அமைச்சர்களிடம், “சமண சமயம் நீங்கிச் சைவ சமயம் ஓங்குமானால் நான் இந்நாட்டை ஆள்வேன்,” என்று கூறினார். அமைச்சர்கள் அதற்கு இசைந்தனர்
திருவெண்ணிறே முடிசூட்டாகவும், , உருத்திராட்சமே அணிகலனாகவும், சடை முடியே அரச முடியாகவும் கொண்டு மூர்த்தியார் சைவ நெறி தழைக்க நாட்டை ஆண்டு பின்னர்ச் சிவபதம் அடைந்தார்.
மூர்த்தியார் வெண்பா
சந்தனம் தானரைத்துச் சாத்தியவர் மன்னவன்
தந்தத் தடைகளால் தன்முழங்கை – முந்தியே
தேய்க்க இறைதடுக்கச் சீர்களிறு தேர்ந்தெடுக்க
ஆக்கினார் சைவ அரசு!
*******************
15)முருக நாயனார்!

சோழ நாட்டைச் சேர்ந்த திருப்பூம்புகலூர், பூஞ்சோலைகளும் நீர் நிலைகளும் நிறைந்த அழகிய ஊராகும். அவ்வூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். அவர் நாள்தோறும் வைகறையில் எழுந்து நீராடி, இறைவனுக்குச் சூட்டுதற்குப் பல் வகையான மலர்களைப் பறிக்கக் கூடைகளுடன் செல்வார்.
கொம்பிலே பூக்கும் கோட்டுப்பூ, குளிர்ந்த நீரில் மலரும் நீர்ப்பூ, கொடிகளில் குவிந்திருக்கும் கொடிப்பூ, நிலத்தில் நிறைந்திருக்கும் நிலப்பூ ஆகிய நால்வகை மலர்களைப் பறித்துக் கோவை, இண்டை, மாலை, கண்ணி, பிணையல், தொடையல் போன்ற பல்வகை மாலைகளை முறையாகத் தொடுப்பார். அவற்றை அன்புடன் புகலூர் ஈசனுக்குச் சாத்தி, ஐந்தெழுத்தை ஓதி மகிழ்வார்.
உமையம்மையின் ஞானப்பாலை உண்ட ஞானசம்பந்தருக்கு இவர் பெருமை உடைய நண்பராகத் திகழ்ந்தார்.
முன்பு செய்த பூசையின் பயனாக ஞானசம்பந்தரின் திருமணத்தில் கலந்து கொள்ளும் பேறு பெற்றார்.
சிவபெருமானின் திருவருளால் அவன் திருவடி நீழலில் நிலைபெற்ற தன்மையை அடைந்தார்.
முருக நாயனார் வெண்பா
கோட்டுப்பூ, நீர்ப்பூ, கொடிப்பூ, நிலத்தின்பூ
வாட்டமின்றிப் போய்ப்பறித்து வைகறையில்- சூட்டிப்
புகலூரான் தாள்பணிந்து போற்றுவார், அன்பு
மிகலுண்டு சம்பந்தர் மேல்!
*******************
16) உருத்திர பசுபதி நாயனார்

பொன்னி நதி பாய்ந்து வளம் பெருக்கும் சோழநாட்டில் திருத்தலையூர் என்ற ஊரில் வேதியர் குடியில் பிறந்தவர் பசுபதியார். அவர், சிவபெருமான் திருவடிகளில் வைத்த அன்பினையே பெரும் செல்வம் ஆகக் கொண்டவர்.பசுபதியார், பறவைகளின் ஒலியும், வண்டுகளின் ஓசையும் கேட்கின்ற அழகிய செந்தாமரை மலர்களை உடைய குளிர்ந்த பொய்கையில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு, இரண்டு கைகளையும் தலைமீது குவித்து, வேதத்தின் பயனான உருத்திர மந்திரத்தை ஓதுவார். இவர் இவ்வாறு இரவு பகலாக ஒன்றுபட்ட உணர்வுடன் உருத்திர மந்திரத்தை ஓதி வந்த போது, உமையம்மையை இடப்பக்கம் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து அவருக்குச் சிவலோக வாழ்வினை அளித்தருளினார்.
உருத்திரத்தை ஓதியதால் “உருத்திர பசுபதி நாயனார்” என்று அவர் வழங்கப்பெற்றார்.
உருத்திர பசுபதியார் வெண்பா
புள்ளொலிக்கும் தாமரைப் பொய்கை புகுந்ததன்
வெள்ளம் கழுத்தளவு மேவுகையில் -உள்ளம்
மகிழ உருத்திரம் வாய்மொழிய ஈசன்
நெகிழ்ந்தளித்தான் மேலாம் நிலை!
(புள்- பறவை)
***********”***********”
17)திருநாளைப் போவார் நாயனார்.

கொள்ளிட நதி பாய்ந்து வளம் பெருக்கும் வயல்களை உடைய மேற்கா நாட்டைச் சேர்ந்த ஊர் ஆதனூர். அவ்வூரில், புலையர் குலத்தில் தோன்றிய சிவபக்தர் நந்தனார். உணர்வு தோன்றிய நாளிலிருந்து சிவபெருமானிடம் மிகுந்த அன்புடையவராக இருந்தார். கோவிலில் இருந்த பேரிகைகளுக்காகப் போர்வைத்தோல், விசிவார் போன்றவற்றைக் கொடுப்பார். வீணை, யாழ் முதலிய கருவிகளுக்கு நரம்புகள் தந்து வந்தார்.

ஒரு நாள், அருகிலுள்ள திருப்புன்கூருக்குச் சென்று, அக்கோவிலில் உறையும் சிவலோகநாதனை வழிபட விரும்பினார். வழியை மறைத்திருந்த நந்தியை விலகச் செய்த இறைவன், தரிசனம் அளித்தான்.
மிகவும் மகிழ்ந்த நந்தனார் கோவிலின் அருகில் இருந்த ஒரு பள்ளத்தைக் குளமாக வெட்டினார். இப்படிப் பல திருக்கோவில்கள் சென்று சிவனை வணங்கினார்.
தில்லையில் உள்ள கூத்தப் பெருமானை வணங்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் அது தம் குலத்துக்குப் பொருந்தாது என்று ஆசையைக் கைவிடுவார். பிறகு அவருக்குத் தில்லைக்குப் போக வேண்டும் என்ற ஆசை மீண்டும் எழும்.
“நாளைப்போவேன்”, “நாளைப்போவேன்” என்று கூறியவாறு நாள்களைக் கழித்தார். இதனால் அவர் “திருநாளைப் போவார்” என்று அழைக்கப்பட்டார்.
நாள்கள் கழிதல் பொறாதவராய், ஒருநாள் தில்லைத் திருத்தலத்துக்குச் சென்று அதன் எல்லையில் நின்று வணங்கினார். உள்ளே நுழைவதற்குத் தயங்கிய நந்தனார், அத்தில்லையை இரவு பகலாகப் பலமுறை வலம் வந்தார். அவரது வருத்தத்தை நீக்கத் திருவுளம் கொண்டான் தில்லைக் கூத்தன். நந்தனாரின் கனவில் தோன்றி, “இப்பிறவி நீங்க, எரியிடை மூழ்கி, முப்புரி நூல் மார்புடன் முன் வந்து என்னை அணைவாய்!” என்று மொழிந்தார். அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும்படித் தில்லைவாழ் அந்தணருக்கும் கனவில் தோன்றி ஆணையிட்டார். அந்தணர்கள் நந்தனாரை வரவேற்று, இறைவன் ஆணைப்படி வேள்வித்தீ அமைத்துத் தந்தனர். வேள்வித்தீயை வலம் வந்து, அதனுள் புகுந்த நந்தனார், புண்ணிய மாமுனி போன்ற பொலிவான தோற்றத்தோடு வெளிவந்தார். வானவர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்து மலர் மாரி பொழிந்தனர். தில்லைவாழ் அந்தணர்களும் உடன் வரச் சென்ற நந்தனார், திருக்கோபுரத்தைத் தொழுது வணங்கி விரைவாக உள்ளே புகுந்தார். இறைவன் அருள்நடனம் ஆடுகின்ற எல்லையை அடைந்து உள்ளே போனார். அதன் பின்பு அவரை எவரும் பார்க்கவில்லை.
தன்னை அவர் என்றும் வணங்கித் தொழுத வண்ணம் அருகிலேயே இருக்குமாறு ஆனந்தக் கூத்தன் அவருக்குத் திருவருள் செய்தான்.
திருநாளைப் போவார் வெண்பா
நந்தனார், தில்லை நடமாடும் ஈசனருள்
முந்தவெரி மூழ்கி முனிவரென- வந்து
புகுந்தார் பொலன்மன்றுள் போயுட் கலந்தார்
தகுந்தபுகழ் பெற்றடைந்தார் தாள்!
(பொலன்மன்று- பொற்சபை,)
(தொடரும்)
