Elderly Couple Drawing Stock Illustrations – 1,894 Elderly Couple Drawing Stock Illustrations, Vectors & Clipart - Dreamstime

ஏழாவது தளத்தில் லிஃப்ட் நின்று கதவு திறந்ததும் வெளியே வந்து, வராந்தாவைக் கடந்து, 7-D வீட்டு வாசலுக்கு வந்தார் வீரராகவன். வாசலில் பலர் சிறு சிறு குழுக்களாக கூடி நின்று மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். வாசலின் இரு புறத்திலும் நூறுக்குக் குறையாமல் செருப்புகளும், ஷூக்களும் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. வீரராகவன் தன் செருப்பை பத்திரமாக தனியே ஓரமாக ஒரு இடத்தில் கழட்டிவிட்டு, வாசல் வழியே வீட்டுக்குள் நுழைந்தார்.

உள்ளேயும் பெரிய கூட்டம். சுற்றிப் பார்த்ததில் ஒரு முகமும் தெரிந்த முகமாக இல்லை. சிறிது நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு கூட்டத்தில் தன்னைச் செருகிக் கொண்டு  மெதுவாக முன் நகர்ந்து கூடத்தின் மையப் பகுதியை அடைந்தார். அங்கே நடுவில் ஒரு கண்ணாடிப் பேழையில் அந்த உடல் வைக்கப்பட்டிருந்தது. சுற்றி பலர் அமர்ந்திருந்தார்கள். நடுவில் கருப்புப் புடவை அணிந்த ஒரு ஐம்பது வயது பெண் இருந்தாள். அவள் முடி கலைந்திருந்தது. கண்கள் சிவந்து நீர் தளும்பி நின்றன. நிறைய அழுதிருக்க வேண்டும் என்று தோன்றியது. இவள்தான் இறந்தவரின் மனைவியாக இருக்க வேண்டும் என்று வீரராகவன் நினைத்துக் கொண்டார்.

கண்ணாடிப் பேழையின் மேல் சாற்றப்பட்டிருந்த ஒரு ஆளுயர ரோஜா மாலையை ஒருவர் அகற்றிக் கீழே போட்டார். இப்போதுதான் வீரராகவன் இறந்தவரை முழுதாகப் பார்க்க முடிந்தது. நேற்றுவரை “சுந்தரவதனம்” என்ற பெயரில் இருந்த அவர் இன்று வெளிறிய வதனத்துடன் இருந்தார்.    உடலுக்கு முழுச்சட்டையும் வேட்டியும் அணிவித்திருந்தார்கள். கை, கால்களின் கட்டை விரல்கள் சிறு கிழிந்த துணியால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்தன. நெற்றியிலும் கைகளிலும் பட்டையாக திருநீறு பூசப்பட்டு மூக்கின் இரு துவாரங்களிலும் பஞ்சு வைத்து அடைக்கப்பட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை, மூடிய கண்களுக்கு மேல் ஒரு மூக்குக் கண்ணாடியும் அணிவித்திருந்தார்கள்.

யாரைப் பார்த்து என்ன கேட்பது என்று வீரராகவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக அவருக்குப் பக்கத்தில் இருந்தவர், மாலையை அகற்றியவரைப் பார்த்து, “என்ன ஆச்சு? நேத்து கூட நல்லா இருந்தாரே?’ என்று கேட்க, அவரும்,  “மாஸிவ் ஹார்ட் அட்டாக். நேத்து ராத்திரி பத்து மணிக்கு. ஹாஸ்பிடல் போயும் ஒண்ணும் பிரயாசனமில்லை” என்று பதில் சொன்னார். உடனே கேட்டவரோடு வீரராகவனும் சேர்ந்து “த்ஸு” கொட்டிவிட்டு, தானும் ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக “எப்போ காரியமெல்லாம்?” என்றார்.

“பையன் பெஹ்ரின்லே இருக்காரு. அவரு வந்தப் பிறகுதான் எல்லாம். சாயந்திரத்துக்கு மேலே ஆயிடும்” என்று பதில் வந்தது.

இதற்கு மேல் வீரராகவனுக்கு அங்கே இருக்க முடியவில்லை. அந்த இடமும், சூழ்நிலையும் அவரை என்னமோ வேதனை செய்தன. கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது. சட்டென்று ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பி, வீட்டுக்கு வெளியே வந்து விட்டார். செருப்பை அவசரமாக மாட்டிக் கொண்டு லிஃப்ட்க்குக் கூட நிற்காமல் படியிறங்கத் தொடங்கினார்.

அன்று காலை எழுந்தவுடனே காஃபியைக் கொடுத்துவிட்டு ரேணுகா, “இன்னிக்கு வாக்கிங் போக வேண்டாம். 7D ஃப்ளாட்லே இருக்காரே சுந்தரவதனம், அவர் நேத்து இறந்து போயிட்டாராம். நான் போய் பார்த்துட்டு வந்துட்டேன். நீங்களும் போயிட்டு வந்துடுங்க” என்றாள்.

“ஏன் என்ன ஆச்சு?’

“தெரியலை. ராத்திரி பதினோரு மணிக்கு நெஞ்சை வலிக்கிறதுன்னு சொன்னாராம். ஆம்புலன்ஸ் வந்து ஆஸ்பத்திரி போயும் பிழைக்கலையாம்”

“அடடா! சரி, நீதான் போயிட்டு வந்திட்டியே? நானும் எதுக்கு?’

“ஒரே ஃப்ளாட்லே இருக்கோம். இதுக்குக் கூட போகலைன்னா எப்படி?”

“எனக்கு அவங்க வீட்டிலே யாரையும் தெரியாது”

“தெரியாட்டி என்ன? போய் ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துடுங்க…போங்க”

ரேணுகா விரட்டியதால்தான் வீரராகவன் வேண்டா வெறுப்பாக அங்கே போய் ஒரு கும்பிடும் போட்டுவிட்டு வந்தாயிற்று. நேராகக் குளியல் அறைக்குப் போய் தலைக்கு முழுகிவிட்டு, வெளியே வந்து பூஜை அறையில் நுழைந்தார். மனது ஒரு நிலையில் இல்லை. நினைவுகள் 7D வீட்டையே சுற்றி வந்தன. வழக்கமாகச் சொல்லும் தேவாரமும் சிவபுராணமும் இன்று தப்புத் தப்பாக வாயில் வந்தன. அதை நிறுத்திவிட்டு கீழே விழுந்து கும்பிட்டு விட்டு வெளியே வந்து தன் அறைக்குப் போய் லுங்கி அணிந்து கொண்டார்.

“சாப்பிட வாங்க. டிஃபன் ஆறிப் போகுது” என்ற ரேணுகாவின் உத்தரவுக் குரல் கேட்டு வெளியே வந்தவர் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தார்.

“சாப்பிடவே பிடிக்கலை ரேணுகா. ரொம்பச் சின்னவர் போல இருக்கு”

“ஆமாம். அம்பத்தி மூணு வயசுதானாம். உங்களை விட பதிமூணு வயசு சின்னவர்”

தன்னை விட பதின்மூன்று வயசு சின்னவரா? வீரராகவனுக்கு பக்கென்றது.

“இவ்வளவு சின்ன வயசுன்னா ஏதாவது ஹெல்த் ப்ராப்ளம் இருக்கும் ரேணுகா”

”ம்ஹும். B.P. சுகர் எதுவும் கிடையாதாம். தினம் ஒரு மணி நேரம் ஜிம்லே எக்ஸர்சைஸ் பண்ணுவாராம்”

”அப்போ வேறே கெட்ட பழக்கங்க  இருந்திருக்கும்”

“எல்லாம் விசாரிச்சுட்டேன். குடி, சிகரெட் எதுவும் கிடையாதாம். ம்….ஏதோ தலைவிதி”

’நம்மை விட பதிமூணு வயசு சின்னவர். நோய் நொடி ஒன்றும் இல்லை. கெட்ட பழக்கம் கிடையாது. பிறகு, இவ்வளவு சீக்கிரம் இறப்பு என்றால்?’

வீரராகவனுக்கு வயிற்றில் லேசாகப் புளியைக் கரைத்தது. ’B.P கொஞ்சம் இருக்கு. மாத்திரை சாப்பிட்டு கட்டுப்பாட்டில் இருக்கு. நல்ல வேளை சர்க்கரை வியாதி இல்லை.  தினமும் (சனி, ஞாயிறு தவிர) ஒரு மணி நேரம் வாக்கிங். இருபது வருடத்துக்கு முன்னாலேயே சிகரெட்டை நிறுத்தியாச்சு. மது, எப்போவாவது நண்பர்கள் கூடத்தான். வருடத்துக்கு இரண்டு மூன்று முறை. இது தப்பா? ஆனாலும் இதெல்லாம் இல்லாதவங்களுக்கே விதி இப்படி என்றால்…..?’

“என்ன முழுசா சாப்பிடாம எழுந்துட்டீங்க? நாலுலே இரண்டு இட்லி அப்படியே இருக்கு”

“இறங்கலை ரேணுகா”. எழுந்து கையைக் கழுவிக் கொண்டு சோபாவுக்கு வந்து பேப்பர் படிக்க உட்கார்ந்தார் வீரராகவன். பிரித்தவுடன் முதல் பக்கத்திலேயே, “விக்கிரவாண்டி அருகே பஸ், லாரி மோதி விபத்து. இரண்டு பெண்கள், குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் மரணம்” என்று கொட்டை எழுத்தில் செய்தியைப் பார்த்தவுடன் சட்டென்று பேப்பரை மூடி வைத்து விட்டார்.  மேலே என்ன செய்வதென்று புரியாமல், ரிமோட்டை எடுத்து டி.வியை “ஆன்” செய்தார். பேப்பரில் வந்த அதே செய்தியை இப்போது டி.வி.யில் வண்ணத்திரை காட்சிகளாக காட்டிக் கொண்டிருந்தார்கள். “சே” என்று வாய் தானாக முணுமுணுத்து, கை விரல் ஒரு பொத்தானை அழுத்த டி.வி. ஒளியிழந்து உறங்கப் போயிற்று.

’என்ன இன்னிக்கு நாள் நல்லாவே இல்லையே! எல்லாமே கெட்ட செய்தியாகவே இருக்கு. ஏதாவது அபசகுனமா?’

வீரராகவனுக்கு மனத்தில் இலேசாக கலக்கம் தோன்றியது. மனம் ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது. எதைப் பற்றி யோசிப்பது, எதைச் செய்வது என்று புரியாமல் ஒரே குழப்பம். மௌனமாகத் தன் அறைக்குப் போய் படுக்கையில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.

சிறு வயதிலிருந்தே வீரராகவனுக்கு இறப்பு என்றால் ஒரு வித பயம். இறந்த உடலைப் பார்க்கப் பிடிப்பதில்லை.  சிறுவனாக இருந்த போது சாலையில் ஏதாவது இறுதி ஊர்வலம் வந்தால் கூட வீட்டின் உள்ளே எங்காவது அறையில் ஒளிந்து கொள்வார். அந்த சங்கு சப்தமும், மணியோசையும், பறை வாத்திய ஒலியும் காதில் நுழைந்து விடாமல் இரு காதுகளையும் கைகளால் நன்றாகப் பொத்திக் கொண்டு விடுவார்.

இரண்டு வயதாயிருக்கும் போதே, தந்தை இறந்து போனதால் அவரை அந்தக் கோலத்தில் பார்த்த நினைவில்லை. அம்மா இறந்தது அவரின் நாற்பத்தைந்தாவது வயதில். அப்போது கூட அம்மாவின் உடலை அடிக்கடிப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கிறார். ரேணுகாவின் அம்மா இறந்து போன போது அவர் ஷில்லாங்கில் இருந்து வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டன. மற்றபடி தெரிந்தவர்கள், உறவுக்காரர்கள், நண்பர்கள் இழப்பின் போது கூட அவர் உடனே சென்றதில்லை.  அடுத்த நாளோ, அடுத்த வாரமோ, அடுத்த வருஷமோதான். ஆனால் இன்று…?

 “என்ன காலை வேளையிலே தூங்கறீங்க?” என்றாள் ரேணுகா அறையில் நுழைந்து கொண்டே.

“கொஞ்சம் தலை வலிக்குது. அதான்….’

“மாத்திரை போட்டுக்கிறீங்களா? இல்லை, டீ தரட்டுமா?”

“இல்லை, வேண்டாம். ”

“சாவுக்கு பயமா? இல்லை சாவை பார்த்ததிலே பயமா? யாரோ செத்துப் போனதுக்கு எல்லாம் இந்த மாதிரி பயப்படாதீங்க”

“பயமெல்லாம் ஒண்ணுமில்லை”

“அதான் முகத்திலே தெரியுதே! ஹும்.. பேருதான் ’வீர’ ராகவன்.  மத்தபடி ’பயந்த’ ராகவன்” என்று  சொல்லி சிரித்து விட்டு ஒரு புடவையை எடுத்துக் கொண்டு வெளியே போனாள் ரேணுகா.

‘ரேணுகா சொன்னது நிஜந்தான். பயந்துதான் போயிருக்கிறேன். அந்த வீட்டு மரணத்தைப் பார்த்து இல்லை. எனக்கு அது வந்தால் என்ன ஆகுமோ என்றுதான். நான் மரணத்துக்குத் தயாராயிருக்கிறேனா?’

வீரராகவன் யோசிக்க ஆரம்பித்தார்

’அறுபத்தாறு வயதாகி விட்டது. மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு இருபது வருஷம். அதுவும் சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். நான் தயார்…. இல்லை… இப்போது போய்விட விருப்பம் இல்லை. செய்ய வேண்டியது இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது. முதலில் மகன் திருமணம்.  அவனுக்கு அமெரிக்காவில் வேலை. ஆனால்  முப்பத்தைந்து வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாமலிருக்கிறான். அது முடியவேண்டும். அப்புறம் பேரன், பேத்தி. அவர்களோடு போய் ஒரு ஆறு மாதம் தங்கிவிட்டு அனுபவித்துவிட்டு வர வேண்டும். அப்புறம் ஒரு முறை ரேணுகாவோடு காஷ்மீர் போய் ஒரு பத்து நாள் சுற்றிப் பார்த்து விட்டு வரவேண்டும். அப்புறம்….”

அதற்கு மேல் எதிர்காலத் திட்டம் எதுவும் போட மனது இணங்கவில்லை.

’எதிர்காலம் என்று ஒன்று உண்டா என்ன? இப்போது நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. எல்லாவற்றிற்கும் உடம்பு நலமாக இருக்க வேண்டும். மனது நிம்மதியாக இருக்க வேண்டும். இருக்குமா?’

அவசரமாக கட்டிலை விட்டு இறங்கி, அலமாரியைத் திறந்து தன் மெடிகல் ரிபோர்ட் ஃபைலை எடுத்து பக்கங்களைப் புரட்டினார்.

’ஆ…இதோ கடைசியாக ஏப்ரலில் எடுத்த சோதனை விவரங்கள். ரத்த அழுத்தம், 150/90.  அதிகம் என்று டாக்டர் அடியில் கோடிட்டிருக்கிறார். ஆனால் மாத்திரை விடாமல் சாப்பிடுகிறேன். பயமில்லை. கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகம். இனி எண்ணை பதார்த்தங்களை தொடவே கூடாது.  ஹோட்டல்? ம்ஹும், கூடவே கூடாது. வேறு பெரிய உபாதை இல்லை. ஆனால் நம் வீட்டிற்கு இரண்டு மாடி படியேறினாலே கொஞ்சம் மூச்சு வாங்குகிறதே? அப்புறம் ராத்திரி படுக்கையில் படுத்த பிறகு மார்பின் இடது மூலையில் லேசால வலிக்கிற மாதிரி இருக்கிறதே? ஒரு வேளை வாய்வுத் தொந்தரவோ? இல்லை, ஏதாவது வால்வ் தொந்தரவா? அடுத்த வாரமே டாக்டரிடம் போய் கேட்டு விட வேண்டும்’

வீரராகவன் எண்ண ஓட்டம் அவருக்கே கொஞ்சம் பயமாயிருந்தது. எண்ணத்தை திசை திருப்ப  அருகில் மேஜை மேலிருந்து “புதிய மலர்கள்” புத்தகத்தை எடுத்து நேற்று விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினார். அவர் அதிர்ஷடம் அவர் படிக்க ஆரம்பித்த நாலாவது வரியிலேயே, கதையின் நாயகன் ராஜலிங்கம் இறந்து போனான். வெறுப்புடன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, சும்மா மேலே சுழலும் மின் விசிறியை பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்தார்.  நேரம் மெதுவாக ஊர்ந்து சென்றது. மொபைலை கையில் எடுத்து வாட்ஸ் அப், முகநூல் என்று என்று ஏதோ மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் பார்த்துக் கொண்டிருந்ததே தவிர மனம் எங்கெல்லாமோ சுழன்று சுழன்று சென்று கொண்டிருந்தது.

’வாழ்க்கையின் முடிவு என்பதுதான் என்ன? உடலை விட்டு உயிர் பிரிந்து போவது மட்டும்தானா? உடல் அழிந்தாலும் ஆத்மா அழியாதாமே? அது எங்கே போகும்? எங்கே நிற்கும்? எங்கே வாழும்?’

’மருந்து பாட்டில் மேலே expiry தேதி எழுதி வைத்திருப்பது போல நம் உடம்பிலும் எங்காவது முடிவுத் தேதியை குறித்து வைத்திருந்தால் நல்லதுதானே? ஆனால்… அது நல்லதா? முடிவு தேதி தெரிந்துவிட்டால் அதை எதிர்பார்த்தே வாழும் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்க வேண்டும் இல்லையா? வேண்டாம். அந்தத் தேதி தெரியவே வேண்டாம். ரகசியமாகவே இருக்கட்டும்’

வீரராகவனின் சிந்தனைப் பந்து வெடித்து சிதறல்கள் எங்கெங்கோ போய்க் கொண்டிருந்தன.

மதியம் ஏதோ அரை வயிற்றுக்கு சாப்பிட்டுவிட்டு, படுத்துக் கொண்டார். மூளை அதிகம் வேலை செய்து களைத்துப் போயிருந்தது. வழக்கத்துக்கு மாறாக மாலை நான்கு மணி வரையில் எப்படித் தூங்கினார் என்று அவருக்கே தெரியவில்லை.

மாலையில் எழுந்து டீ குடித்துவிட்டு பால்கனியில் வந்து அமர்ந்த போது வெளியில் ஏதோ பெரிய கூச்சல் சப்தம் கேட்டது. ரேணுகா அவசரமாக வந்து பால்கனிக்கு வெளியே எட்டிப் பார்த்துவிட்டு, தலையைத் திருப்பி, “அவரு பையன் பெஹ்ரின்லேருந்து வந்துட்டார் போலிருக்கு. ஊர்வலம் கிளம்பி கிட்டு இருக்கு. வந்து பாருங்க” என்றாள்.

“இல்லை அதையெல்லாம் நான் பார்க்க வேண்டாம்.”

சற்றுப் பொறுத்து, “சரி… நமக்கு ஏதாவதுன்னா நம்ம ராஜேஷ்  அமெரிக்காவிலிருந்து கிளம்பி வர எவ்வளவு நேரமாகும் ரேணுகா?” என்றார்.

”குறைஞ்சது இருபத்து நாலு மணி ஆகும். ஓ.. அதான் இப்போ கவலையா?”

“இல்லை சும்மா கேட்டேன்”

ரேணுகாவுக்கு வீரராகவனின் மன உளைச்சல் நன்றாகப் புரிந்து போயிற்று.

“அதையெல்லாம் நினைச்சு கவலைப் பட்டுகிட்டு இருந்தா, உசிரோட இருக்கிற ஒவ்வொரு நாளும் செத்துகிட்டு இருக்க வேண்டியதுதான்”

’ரேணுகா சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. ஆனாலும், திடீரென்று நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் ரேணுகாவின் கதி?  ரேணுகாவுக்கு நல்லபடியாக ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டும். பாங்க் டெபாசிட் நிறைய இருக்கிறது. எல்லாவற்றிலும் வாரிசு அவளைத்தான் போட்டிருக்கிறேன்.   குடும்பப் பென்ஷன், நான் வாங்குவதில் பாதியாவது வரும். பாங்க் வட்டி, பென்ஷன் இதுவே போதும்.’

’ஆனால்.. ஆனால் அவள் தனியே வாழ்வது எப்படி? போய் மகனோடு அமெரிக்காவில் வாழப் பிடிக்குமா அவளுக்கு? கேட்டு விட வேண்டும்’

சமையல் அறையில் இருந்த ரேணுகா அருகில் போய்,  “பேசாம நீயும் நானும் ஒரு சீனியர் சிடிஸன் ஹோம்லே போய் தங்கிடலாம்னு தோணுது. கோயம்புத்தூர்லே நிறைய இருக்காம். என்ன சொல்றே?”

“இப்போ ஏன் இந்தக் கேள்வி?”

“இல்லை…. நீயோ நானோ அமெரிக்காவுக்குப் போய் அவனோட இருக்கப் போறதில்லை. வயசாயிடுச்சுன்னா ஒருத்தரை ஒருத்தர் கவனிச்சுக்கிறதே கஷ்டமாயிடும். அதிலும் நாம இரண்டு பேர் ஒருத்தர் ஆயிட்டா இன்னும் கஷ்டம். அந்த மாதிரி ஹோமுக்கு போயிட்டா நமக்கு இப்போலேருந்தே பழகிப் போயிடும் இல்லையா?”

ரேணுகா அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.  கணவனின் எண்ண ஓட்டம் அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது.

“இங்கே பாருங்க! இப்போ உங்களுக்கு ஒண்ணும் வயசாயிடலை. ஆரோக்கியமாத்தான் இருக்கீங்க. எனக்கும் உடம்பிலே தெம்பிருக்கு. ராஜேஷ் கல்யாணம் முடிஞ்சு அப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சு அதைப் பத்தி யோசிக்கலாம். இப்போ வேண்டாம்”

வீரராகவன் மௌனமாக அங்கிருந்து வெளியேறினார். மாலையும் முன்னிரவும் ஏதோ நினைவுகளில் கடந்தன.

இரவு சாப்பிடும் போதும் இருவரும் ஒன்றும் பேசவில்லை. சாப்பிட்டு முடிந்து, ரேணுகா வழக்கம் போல் டி.வி.யில் நெடுந்தொடரில் ஆழ்ந்தாள். கதையில் மருமகள் மாமியாரின் தம்பியை குடும்பத்தோடு வேரறுப்பதாக முப்பத்து நாலாவது வாரத்தில் நாற்பதாவது தடவையாகச் சூளுரைத்தாள். வெறுத்துப் போய் அவள் டி.வி.யை அணைத்து விட்டு படுக்கையறைக்கு வந்த போது, தன் கணவன் ஏற்கனவே விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு, தானும் அருகில் படுத்துக் கொண்டாள். உடனே தூங்கியும் போனாள்.

இரவில் ஏதோ தூக்கம் கலைந்து பார்த்த போது, வீரராகவன் அருகில் இல்லை. எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு, கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்த போது வீரராகவன் சோபாவில் அமர்ந்து ஏதோ பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தார்.

”என்ன தூங்கலையா? நடு ராத்திரியிலே எழுந்து என்ன படிச்சுகிட்டு இருக்கீங்க?”

“உயில்”

“உயிலா?”

“ஆமாம். எப்பவோ எழுதி வைச்சேன். எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துகிட்டு இருக்கேன்”

ரேணுகாவுக்கு இப்போது உண்மையாகவே பயம் தொற்றிக் கொண்டது.

“ஏங்க….. என்ன ஆச்சு உங்களுக்கு? இப்போ இதுக்கு என்ன அவசரம், அவசியம்?”

“இல்லை… ஏதாவது ஆச்சுன்னா தேவைப்படுமே”

“யாருக்கு?’

“உனக்குத்தான்”

ரேணுகாவுக்கு எப்படி தன் கணவனைத் தேற்றுவது என்று புரியவில்லை.

“இதுக்கெல்லாம் இப்போ தேவைப்படாது. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. பயப்படாம உள்ளே வந்து படுங்க”

“இல்லை ரேணுகா இதை இன்னும் ரெஜிஸ்டர் பண்ணலை”

“அதையெல்லாம் காலையிலே பேசிக்கலாம். இப்போ எழுந்து வாங்க”

ரேணுகா அவர் கையைப் பிடித்து எழுப்பி, மெதுவாக அவரை நடத்தி, படுக்கை வரை கொண்டு வந்து படுக்க வைத்தாள். விளக்கை அணைத்தாள். சிறிது நேரத்தில் அவர் பலமாக மூச்சு விடும் சப்தம் கேட்டது. அவளுத்தான் தூக்கம் வரவில்லை.

மறுநாள் காலையில் வீரராகவன் பத்து மணிக்குத்தான் எழுந்தார். காஃபி குடிக்கும் போது, அவர் எதிரே அமர்ந்து ரேணுகா, “நான் 7C, வீட்டு அம்மாகிட்டே விசாரிச்சேன். சுந்தரவதனத்துக்கு லாரி பிஸினெஸாம். கொரோனா சமயத்திலே வண்டியெல்லாம் ஓடாம ரொம்ப பெரிய நஷ்டமாம். அம்பது லட்சமாம். அதிலே ரொம்ப பெரிய கடனாம். அப்புறம் அவங்களுக்கு பொண்ணு ஒண்ணு இருக்காம். அதுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிகிட்டு இருந்தாங்களாம். ஆனா அது லண்டன்லே படிக்கும் போது வீட்டுக்குச் சொல்லாம ஒரு சைனாக்காரனை  கட்டிகிடுச்சாம். அதுலேருந்து அது பேசறதே இல்லையாம். அவர் அதிலேயே மனசு உடைஞ்சு போயிட்டாராம். ஒரு வருஷமாவே டிப்ரெஷன்லே இருந்தாராம். அதான் சட்டுன்னு ஹார்ட் அட்டாக் வந்து செத்து போயிட்டாரான்னு அந்த அம்மா சொல்றாங்க”

“அதான்  நான் சொன்னேல்லே ரேணு… சட்டுன்னு செத்துப் போறதுக்கு ஏதாவது காரணம் இருக்கணும்ன்னு”

 “ஆமாங்க.. காரணம் இருக்குங்க. இந்தக் காரணமெல்லாம் உங்களுக்கு கிடையவே கிடையாது. ஆனா நீங்கதான் ஏதோ இன்னிக்கே செத்துப் போயிடற மாதிரி பயந்துகிட்டு இருந்தீங்க”

கிட்டத்தட்ட இருபத்து நான்கு மணிக்குப் பிறகு, கணவனின் முகத்தில் மலர்ச்சியைக் கண்டாள் ரேணுகா.

“ஆமாம் ரேணு! தப்புதான். நான் கலவரப்பட்டதோடு நிக்காம உன்னையும் சேர்த்து கலவரப்படுத்திட்டேன்”

‘சரி, காலையிலே மாதவன் ஃபோன் பண்றாரு. இன்னிக்கு உங்க ஃப்ரெண்ட் பாலச்சந்திரன் பிறந்த நாளாமே. அதுக்கு உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போறதா ப்ளானாம். ராத்திரி பார்ட்டி இருக்காம். நீங்க வரீங்களான்னு கேட்டாரு. நீங்களே ஃபோன் பண்ணி பேசுங்க”

வீரராகவன் மொபைலை எடுத்து டயல் செய்து, ”மாது! நீ ஃபோன் பண்ணினியாம். சாரி…நான் தூங்கிட்டேன்..… ஆ.. வரேன்.. நிச்சயமா வரேன். பார்ட்டிலே எல்லாம் உண்டுல்லே?”

கணவன் சந்தோஷமாகப் பேசுவதைக் கேட்டுக் கொண்டே ரேணுகா மகிழ்ச்சியாக சமையல் அறைக்குள் நுழைந்தாள்.  அவள் காலையில் அவரிடம் சொன்னதில் எவ்வளவு தூரம் உண்மை கலந்திருந்தது என்பது அவளுக்கு மட்டும்தானே தெரியும்.