Orphan Train- Christina Baker Kline (432 பக்கங்கள் )

Orphan Train: A Novel

அநாதை ரயில்வண்டி- கிறிஸ்டினா பேக்கர் க்ளைன்.

சில சமயங்களில் புத்தகக் கடைகளுக்குப்போய் ‘சும்மா’ பார்வையிடுவோம். அப்போது நமது கண்களில் அபூர்வமாகச் சில புத்தகங்கள் தட்டுப்படும். எனக்கோ அப்படிப் பார்க்கும் புத்தகங்களின் தலைப்பு கவர்ச்சிகரமாக, உள்ளத்தை எதாவது வகையில் சுண்டியிழுத்தால் உடனே பின்னட்டையிலுள்ள குறிப்புகளைப் படிப்பேன். அது தொண்ணூற்றொன்பது சதவீதம் ஆர்வத்தை மேலும் வளர்க்கும். பின் என்ன? வாங்கி விடுவேன்; வீடு வந்து படித்தும் விடுவேன்; அவை நீண்ட நாட்களுக்கு உள்ளத்தின் ஒரு மூலையில் இருந்துகொண்டு என்னை என்னவோ செய்து கொண்டிருக்கும். இப்போது எனக்கு ஒரு வடிகால் கிடைத்துவிட்டது; அதைக் குவிகம் மின்னிதழ் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள!

அப்படித்தான் ‘கிருஷ்ணாயண்’ கிடைத்தது.

இப்போது இந்த அநாதை ரயில்வண்டி (Orphan Train). மூன்றாண்டுகளின் முன்பு அமெரிக்கா சென்றபோது, நாங்கள் வழக்கமாகச் செல்லும் பார்ன்ஸ் & நோபிள் (Barnes & Noble) புத்தகக்கடை மூடப்போவதாக அறிந்தோம். கடைசி முறையாகச் சென்றோம். பத்து டாலருக்கு மூன்று புத்தகங்கள். முத்து முத்தானவை; ஆனால் பெயர் தெரியாத ஆசிரியர்கள் / எழுத்தாளர்கள். உண்மைகளைக் கதைகளாக்கி வழங்குவதில் மன்னர்கள் / மன்னிகள்.
இந்தப் புத்தகம் 19-20ம் நூற்றாண்டு அமெரிக்காவின் ஒரு இருண்ட துயரகரமான சகாப்தத்தைக் கண்முன் விரிக்கிறது. தற்போதைய தலைமுறைக்கே தெரியாத ஒரு இருண்ட சகாப்தம்! ஆச்சரியமாக இல்லை?

ஆம். அதைப்பற்றி முதலில் கூறுகிறேன்.

1854-1929 வரை அநாதை ரயில்வண்டி (Orphan Train) எனப்படும் இது, தொடர்ச்சியாக வடஅமெரிக்கக் கண்டத்தின் கிழக்குக் கரையிலிருந்து (நியூயார்க்) மத்திய மேற்கு நகரங்கள் வரை ஆயிரக்கணக்கான கைவிடப்பட்ட அநாதைக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஓடியது. இவர்களுடைய எதிர்காலம் வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. அப்படி என்றால் என்ன?

இக்குழந்தைகள் கருணையுள்ளமும் அன்பும் நிரம்பிய குடும்பங்களால் தத்தெடுத்துக் கொள்ளப் படுவார்களா அல்லது இவர்களது குழந்தைப்பருவமும், இளமையும் கடினமான உழைப்பிலும், அடிமைத்தனத்திலும் கழியுமா என்பது பெரிய கேள்விக்குறி. நியூயார்க்கில் மூன்று கருணை இல்லங்கள் (Charitable Institutions) அமைக்கப்பட்டு, இவற்றின் மூலம், அனாதையான, கைவிடப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, வீடற்ற குழந்தைகள் (இவர்களுள் பலர் மற்ற கண்டங்களிலிருந்து, முக்கியமாக ஐரோப்பா – வந்தவர்கள்) அமெரிக்காவின் மற்ற மாநிலங்களுக்கு இந்த ரயில்வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு, குடும்பங்களால் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டனர். பெரும்பாலான குழந்தைகள் அடிமைச் சேவகத்துக்கும் உட்படுத்தப்பட்டனர். 1930 வாக்கில் இந்தக் குழந்தைகள் இவ்வாறு செல்வது ஒரு முடிவுக்கு வந்தது; ஏனெனில் மற்ற மாநிலங்களில் வயல்வேலைகள் குறைந்தன.

எவ்வாறு இக்குழந்தைகள் அநாதைகளானார்கள்? டைபாயிட், மஞ்சள் சுரம், ஃப்ளூ (Typhoid, Yellow Fever, Flu) ஆகிய தொற்றுகளால் பெற்றோர்கள் இறந்துவிடும்போது குழந்தைகள் அநாதைகளாயினர். (நம்மூரில் இப்படிப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் உறவினர் குடும்பங்களால் அரவணைத்துக் கொள்ளப்பட்டு வளர்ந்தனர்.) இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, தெருக்களில் பத்திரிகைகள் விற்றும், இன்னபிற சில்லறை வேலைகள் செய்தும் வாழ்ந்தனர். தங்களுக்குள்ளே குழுக்களை தற்காப்புக்காக அமைத்தும் கொண்டனர்.
இந்தப் புத்தகம், எவ்வாறு ஒரு ஐரிஷ் குடும்பம் பெரும் கனவுகளுடன் அமெரிக்கா வந்து நியூயார்க்கில் வாழ்ந்து என்னென்ன சோகங்களைச் சந்திக்கின்றனர் என்றும், அவர்களில் உயிர் பிழைத்த ஒரு சிறு பெண்குழந்தையின் வாழ்க்கை அனுபவங்களைச் சுற்றியும் படரும் கதை, கடைசிவரை நம்மை நாற்காலியின் விளிம்பில் இருத்திப் படிக்க வைக்கும் வலிமை வாய்ந்தது.

ஓரு ஏழை ஐரிஷ் குடும்பம் அயர்லாந்திலிருந்து பசுமையான வளமான வாழ்க்கை பற்றிய கனவுகளுடன் அமெரிக்கா நோக்கிக் கிளம்புகிறது. ஆறு வயது விவியன் தனது ஆறுமாத தங்கைப்பாப்பா மெய்ஸியை அவளுடைய ஒன்றாம் மாதத்திலிருந்து பார்த்துக் கொள்கிறாள்; அவர்களுடைய அம்மா, மெய்ஸி பிறந்தபின் மிகவும் நோய்வாய்ப்படுகிறாள். நியூயார்க்கில் இருண்ட, ஜன்னல்கள் இல்லாத ஒரு அறையில் இரு தம்பிகளுடன் இச்சிறு பெண் தங்கைப்பாப்பாவுடன் உறங்குகிறாள். இரவின் கும்மிருட்டில் ‘குருடு’ என்றால் இப்படித்தான் இருக்கும் போல என எண்ணிக் கொள்கிறாள். குளிரைத் தவிர்க்க சிறுவர்கள் ஒருவரையொருவர் நெருக்கி அணைத்தபடி உறங்குகின்றனர்.

பரிதாபகரமான ஒரு தீ விபத்தில் தந்தை, இரு சகோதரர்கள் இறக்க, தாயும், குட்டித் தங்கைப் பாப்பாவும் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடும் நிலையில் விவியன் மட்டும் தப்பிப் பிழைக்கிறாள். அவர்களும் இறக்க அவள் ஏழெட்டு வயதில் அநாதையாகிறாள்.
‘அக்கரைப்பச்சைக்’ கனவுகளுடன் அவர்கள் குடும்பம் அமெரிக்கா வந்தது. ஆனால்…. ‘வேலைக்குப் பஞ்சமேயில்லை,’ ‘ஆப்பிள் மரத்தில் குலுங்கும் பழங்களைப்போல் வேலை கொட்டிக் கிடக்கிறது,’ இவ்வாறெல்லாம் அமெரிக்கா பற்றிக் கூறப்பட்டது. ஆனால் வேறொன்று அல்லவோ உண்மை!

அந்தச் சிறுபெண்ணின் எண்ண ஓட்டம் நம் இதயத்தைப் பிழிகிறது: ‘அட்லான்டிக் கடலின் இப்பக்கம் எனக்கான ஒரு பெரியவளோ/னோ இல்லை, என்னைப் பற்றிக் கவலைப்படுவதற்கு. யாரும் ஒரு கப்பலுக்கும் எனக்கு வழிகாட்ட மாட்டார்கள் அல்லது எனது பயணத்திற்குச் செலவு செய்ய மாட்டார்கள். நான் இந்த சமுதாயத்திற்கு ஒரு சுமை, எவருக்கும் என்மீதான பொறுப்பு இல்லை.” துயரம் பொங்கும் சிந்தனை.

இருபது குழந்தைகளுடன் ரயிலில் ஏறும் நியாமுக்கு (ஆம், நியாம் தான் அவள் உண்மைப்பெயர்) பதினான்கு மாதங்களேயான ஒரு ஆண்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் அளிக்கப்படுகிறது. அவளிடமும் மற்ற குழந்தைகளிடமும் கூறப்படும் சொற்கள்: “இதுதான் அநாதை ரயில்வண்டி, குழந்தைகளே, இதில் ஏறும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் அறியாமை, ஏழ்மை, கொடுமை ஆகியவை நிறைந்த ஒரு கொடிய இடத்திலிருந்து நல்ல மனிதர்கள் வாழும் நாட்டுப்புறத்திற்குச் செல்கிறீர்கள்.” என்று மேலும் நீண்ட ஒரு சொற்பொழிவு.

ரயில் நிற்கும் வெவ்வேறு இடங்களில் தம்பதிகளால் குழந்தைகள் தத்தெடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். பெண்குழந்தைகள் வீட்டுவேலை செய்யவும், சமையலில் உதவவும், சிறு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும் வேலைக்கு வைத்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆண்குழந்தைகளும், சிறுவர்களும், மாடு, குதிரை லாயங்களைப் பராமரிக்க, வயல்களில் வேலைசெய்ய எனப் பயன்படுத்திக் கொள்ளப் படுகிறார்கள்.

பள்ளிக்கூடம் என்று ஒன்றுமில்லை. வெகுசில குழந்தைகளே இந்த நல்வாய்ப்பைப் பெறுகிறார்கள். மனைவிகள் குழந்தைகளைப் பராமரிப்பதால், தனிமையில் உழலும் குடிகார ஆண்கள் சிலர் தத்தெடுத்த சின்னஞ்சிறுமிகளைப் பாலியல் கொடுமைக்கும் ஆளாக்குகின்றனர். இதனால் சிறுமிகளும் சிறுவர்களும் வீடுகளை விட்டு ஓடவும் செய்கின்றனர்.

இவ்வாறு பல வீடுகளுக்கு மாற்றப்பட்ட விவியன் கடைசியில் எவ்வாறு வளர்ந்து, என்ன செய்கிறாள், தன் காதலனைக் கண்டடைகிறாள், யார் அவளுக்கு உதவுகின்றனர் என்றெல்லாம் கதையில் விறுவிறுப்பான திருப்பங்கள்.

கதை உண்மையாக நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை விவரிக்கிறது. அந்த உண்மைத்தனம் நம்மை உறுத்துகிறது. வருத்துகிறது. இப்படிப்பட்ட கொடுமைகள் நம் பாரத தேசத்தில் நடந்திருக்குமா? கூடுமா என எண்ணுகிறோம். சமீபத்தில் திருமதி கௌரி கிருபானந்தனால் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு அருமையான கதையைப் படித்தேன். பணம்கொடுத்துப் பெண்ணை வாங்கித் திருமணம் செய்து கொள்வதென்பது அக்காலத்து ஒரு வழக்கமாம். ஆனாலும் திருமணம் செய்துகொண்டு ஒரு அந்தஸ்தைக் கொடுக்கிறார்களே அதுவரை எத்தனையோ பரவாயில்லை என எண்ணத் தோன்றியது.

இந்தக் கதையில் சில சிறுசிறு நிகழ்வுகள் உள்ளத்தைக் குடைகின்றன. மனிதாபிமானமே இல்லாத மனிதர்கள். ‘தங்கள் குழந்தைகள் உயர்வு; இந்தக் குழந்தைகள் ஆடுமாடுபோல நடத்தப்பட வேண்டியவர்கள்’ என எண்ணியிருப்பவர்களே இவ்வுலகில் ஏராளமானோர் போலும்! ஓர் தம்பதியரிடையே ஆன சம்பாஷணை:

டச்சி எனவொரு பெரிய பையன். விவியனுடன் அநாதை ரயில்வண்டியில் சிநேகிதமாகிறான். அவனை வேலைக்காக எடுத்துக்கொள்ள வரும் தம்பதியர். கணவன் டச்சியின் வாயில் விரலை விட்டுப் பார்க்கிறான். டச்சிக்கு அது பிடிக்கவில்லை. “முரடனாக இருக்கிறானே” எனக் கணவன் சொல்ல, மனைவி, “நாம் குதிரைகளைப் பழக்கவில்லையா? இந்தப் பையன் எம்மாத்திரம்?” என்கிறாள்.

இவ்வாறு நகரும் கதையோட்டத்தில் பல இடங்கள் மாறி, பலவிதமான மக்களைச் சந்தித்து, உலகை எடைபோடப் பழகிக் கொள்கிறாள் விவியன். கடைசியாக ஒரு தயாள குணமுள்ள தம்பதியின் வீட்டில் தன் கன்னிப்பருவத்தைக் கழிக்கிறாள். அவர்களுக்குப் பலவிதத்திலும் மகளாகவே இருக்கிறாள். இங்கு ஒரு காதலன் கிடைக்கிறான். அவன் யார்? இதையெல்லாம் படித்தேதான் அறிந்துகொள்ள வேண்டும். இக்கதையும் விவியன் வாயிலாகவும், விவியனுடைய முதுமையில் அவளுக்கு உதவ வந்துசேரும் மாலி (Molly) எனும் இளம் பெண்ணாலுமே நகர்ந்து செல்கிறது.

என்னை ஏன் இந்தப் புத்தகம் பிரமிக்க வைத்ததெனச் சொல்லவில்லையே! ஒரு சமுதாயத்தில் பொருளாதார, கால, தேச சந்தர்ப்பங்களால் நிகழும் சில அநியாயங்கள் நியாயப் படுத்தப்பட வேண்டியவையா? இன்று இளைஞர்கள் பலரும் போக வேண்டும் எனத் துடிக்கும் அமெரிக்காவில் இப்படியுமொரு இருண்ட காலம் இருந்தது எனும்போது உள்ளம் துணுக்குறுகிறது. அதனைப் பற்றி ஒரு நிகழ்வாக சரித்திரம் பதிவுசெய்து வைத்திருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை இவற்றைக்கொண்டு புனையப்பட்ட உண்மைத்தனம் நிரம்பிய இக்கதை போன்ற தோலையுரித்துக்காட்டும் பதிவுகள் உள்ளத்தைக் கொந்தளிக்கச் செய்கின்றன. துயரத்தில், பச்சாதாபத்தில் விளைந்த பிரமிப்பு இது. இதனை எழுதிய ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி.

இப்போது பல சட்டங்கள் இயற்றப்பட்டு இப்படிப்பட்ட நிலைமை யாருக்கும் வராமல் தடை செய்யப்பட்டிருக்கலாம். இதனை நிறையப்பேர் படிக்க வேண்டும். சரித்திர ஆதாரங்களை அடித்தளமாகக் கொண்டு புனையப்பட்ட புதினங்கள் சரித்திரத்தை நமக்கு அழுத்தமாக உள்ளத்தில் பதிய வைக்கின்றன என்பது என் கருத்து.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சோழர் ஆட்சியின் வல்லமை வாய்ந்த மன்னனின் பெருமையை நமக்குக் கூறவில்லையா? அப்புதினம் இல்லாவிடில் எத்தனைபேர் ராஜராஜனைக் கொண்டாடிப் பெருமைப் படுவோம்? அது போன்றதே இதுவும்.

மீண்டும் சந்திப்போம்.