Happy Indian grandfather and grandson spending quality time Stock Photo |  Adobe Stock 

பதினெட்டு வயதான அமர் வடக்கிந்திய மாநிலத்தில் வசதியான வாழ்வியல்கொண்ட வாரி வழங்கும் ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் ஆகாஷ்-தயா, தம்பி ப்ரேம். அமரின் தவிப்புகளைக் கவனித்தது மருத்தவரான டாக்டர் நித்தின்.

அமர் படித்துக் கொண்டிருந்த  கல்லூரி நகரத்தின் எல்லையிலிருந்தது. அதன் அருகே ஒரு மிகப் பெரிய தொழிற்சாலை. அந்த பகுதியில் மருத்துவ உதவி மிகக் குறைவாக இருந்ததால் இந்த தொழிற்சாலை முதலாளி சிகிச்சையகம் ஒன்றைத் துவக்கினார். அங்கு ஐந்து மருத்துவரில் ஒருவரான டாக்டர் நித்தின் கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்கள் எடுப்பதும் உண்டு.

பல வகுப்புகளுக்கு உடலமைப்பு, அமிலம் எனப் பல பாடத்திட்டம் நடத்தினார். இதனால் மாணவர்களுக்கும் இவருக்கும் நல்ல பரிச்சயமானது. பல பயன் உருவாகியது. எந்த விதமான நலனைப் பற்றியும் மாணவர்கள் இவரிடம் பேசித் தீர்வு அடைய நேர்ந்தது. தன்னிடம் வருவோரின் பிரச்சினையை யாரிடமும் சொல்ல மாட்டார் டாக்டர் நித்தின்.

முந்தின வருடத்திலும் அமரின் வகுப்பிற்குச் சில பாடங்களை நடத்த நேர்ந்தது. மற்ற மாணவர்களைப் போலவே அமரும் தன் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது டாக்டர் நித்தினிடம் வந்தான். இந்த வருட ஆரம்பத்திலும் அதேதான் நேர்ந்தது. இந்த முறை எங்களையும் கலந்தாலோசனையில் சேர்க்க டாக்டர் நித்தின் முடிவுசெய்தார்.

எங்கள் தன்னார்வ அமைப்பு நகரத்தின் நடுவில் அமைந்திருந்தது. நாங்கள் ஐவருமே ஸைக்காட்டிரிக் ஸோஷியல் வர்க் பட்டதாரிகள் அதாவது மனநல பிரிவில் மேல்படிப்புப் பயிற்சி, தேர்ச்சி பெற்றவர்கள். பலதரப்பான வேலைப்பாடுகளுக்காக நாங்கள் தொழிற்சாலை மருத்துவமனையிலும் வாரம் மூன்று முறை வருவதுண்டு. அந்த மாதம் முழுவதும் நான் மட்டுமே போய் வந்ததால் அமர் பற்றிய தன்னுடைய கணிப்பை மருத்துவர் நித்தின் என்னுடன் பகிர்ந்தார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விடுமுறைக்குப் போய் வந்ததிலிருந்தே அமர் மிகச்சோர்வுடன் தெரிகிறான், கேட்டால் மழுப்பி விடுகிறான், அதனால்தான் இதைப் பகிர்வதாகக் கூறினார்.

அடுத்த கட்டமாக, அமர் மறுமுறை அவரை அணுகியதும், எங்களைப் பற்றி விவரித்து, சொல்லப்படும் விவரங்களை அவனுடைய அனுமதியின்றி யாரிடமும் பகிர மாட்டோம் என்றதையும் விளக்கினார். இதைப் புரிந்த பின்பே அமர் எங்களுடன் பகிரத் தொடங்கினான்.

முதல் ஆண்டில் சேர்ந்தபோது கல்லூரி மிகவும் பிடித்திருந்தது. மதிப்பெண்கள் நன்றாக வாங்கியதும், பல நல்ல நண்பர்களின் பழக்கம் கிடைத்தது. வீட்டில் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனது ஏதோ ஒரு பழைய காலத்தில் நடந்ததைப் போலத் தோன்றுவதாக அமர் சொன்னான். இது ஏன் என்று புரியவில்லை என்றும் கூறினான்.

மாற்றத்தைப் புரிந்துகொள்ள, மேலும் விவரிக்கச் சொன்னேன். சேர்ந்த புதிதில் படிப்பில் மட்டுமே மனம் நிலவியது. பாடத்திட்டங்களில் ஆர்வம், மாலையில் கூட பெரும்பாலும் நண்பர்களுடன் நூல்நிலையத்தில்தான் என இருந்தது. படிப்படியாக அரை இறுதியாண்டுக்குப் பிறகு இப்படிச் செய்ய மனதிற்கு லயிக்கவில்லை.

கல்லூரி விடுமுறையில் வீடு சென்றதும் அவர்கள் தன்னை அதிகமாகக் கோபித்துக் கொள்வது, தான் வீட்டினருடன் குதர்க்கமாகப் பேசுவது என்று இருந்தது. அமருக்குத் தன் செயல் எதுவும் பிடிக்கவில்லை, வெறுப்புடன் பார்த்தான். இதுவரையில் கட்டுக்கோப்பாக வைத்திருந்த உடம்பு, சோம்பலானதாக மாற்றம் கண்டது. இந்த மாற்றங்களால் தூக்கம் குறைந்தது.

கல்லூரி திரும்பியதும் மதிப்பெண்கள் குறைந்ததில் ஆசிரியர்கள் வருத்தப் படுவது தனக்கு மேலும் கோபத்தைத் தந்தது என்றான் அமர். இதைத் தன்னுடையச் சுதந்திரத்திற்கு இடையூறாகக் கருதினான். ஆனால் கல்லூரி விடுதியில் எப்போதும் போலிருந்தான், நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் அதே பாசத்துடன் இருந்தான்.

விடுமுறைக்கு வீடு செல்லத் தவிர்ப்புச் சொன்னான் அமர். உடல் சோர்வும், முகச் சவரம்கூடச் செய்யாததும் தன்னாலேயே பொறுத்துக்கொள்ள முடியாமல் அமர் டாக்டர் நித்தினிடம் ஆலோசிக்க வந்தான்.

வீட்டின் விவரங்களை மேலும் வர்ணிக்கச் செய்தேன்.

அமர் தன் குடும்பத்தைப் பற்றிய விவரத்துடன் துவங்கினான். செல்வச்சிறப்புடைய வசதியானவர்கள், காலங்காலமாக ஏழைக் குடும்பங்களுக்குப் படிப்பிற்கு உதவி செய்வார்கள். சிறுவர்களுக்கான ஆரம்பப் பள்ளிக்கூடம் துவக்கினார்கள். போகப் போக மருத்துவத் தேவைக்கு வெகு தூரம் போகவேண்டியதால், தங்களது பண்ணையில் ஓரிரு அறைகளில் ஒரு மருத்துவரை வரவழைத்து நோயாளிகளைப் பார்க்கச் செய்தார்கள். மிகச் சமீபத்தில் ஊர்மக்கள் விளைச்சலையும் தங்கள் விளைச்சலுடன் கூடச் சேர்த்து விற்பனை செய்து வருவதை அமர் பெருமையாகக் கூறினான். இந்தப் பொறுப்புகளை அமர் மற்றும் அவனுடைய தம்பிக்குப் பிரித்துத் தந்திருந்தார் தாத்தா. அவர்கள் வளரும் பருவத்திலிருந்தே இது நடந்துகொண்டு இருந்தது. பிள்ளைகளுக்குப் பொறுப்பு வரத் தாத்தா-பாட்டி இந்த பரோபகாரங்களில் தன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டார்கள். அண்ணன் தம்பி பொறுப்பாகச் செய்து வந்தார்கள்.

அன்று அமரின் தம்பி ப்ரேம் என்னைப் பார்க்க வந்தான். கடந்த இரு விடுமுறைகளிலும் அமர் மூன்று நாட்களிலேயே கல்லூரிக்குத் திரும்பியதாகவும் வீட்டில் விட்டேற்றியாக இருப்பதாகவும் வருத்தத்துடன் விளக்கினான். வீட்டில் நடந்த சம்பவங்களை விவரிக்கச் சொன்னேன்.

அதில் மூலகாரணங்கள் மேலும் புரிந்தது, இல்லத்தில் உள்ள பழங்காலக் கோயில் பணிகளைத் தாத்தா பார்த்துக்கொண்டார். தாத்தாவுடன் அமர் எப்போதும் போய் உதவ, கோயில் காரியங்களில் பரிச்சயம் கூடியது. தாத்தா வெளியூர் சென்றுவிட்டால் அன்றையக் கோயில் வேலை அமரின் மேற்பார்வையில் தான் நடக்குமாம். தெய்வ சம்பந்தப்பட்ட சுலோகம், பூஜை விதிகளைக் காத்து வந்தான் அமர். ஆர்வமாகச் செய்து வந்தான். தாத்தா மறைந்த பிறகு இப்போதெல்லாம் இந்த ஆர்வம் சுருங்கியது.

அமரிடம் இதை எடுத்துக் கொண்டேன். விவரங்களில், சம்பவங்களில் கவனம் தராமல் அமரைக் கடந்த வருடங்களை நினைவுகூர மாற்றிக் கொண்டதும், தாக்கத்தையும் உறவுகளைப் பற்றியும் பகிரச் செய்தேன்.

சில ஸெஷன்களுக்கு பின் இறந்து போன தாத்தாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். தனக்கு ஒரு பக்கம் துயரம் தாக்கியதாகக் கூறினான். அவருடைய திடீர் மரணம் மிகப் பெரிய இடியாக இருந்ததாகக் கூறினான். சமாளிக்கத் தெரியாமல் தத்தளித்ததாக அமர் விவரித்தான்.

அந்தச் சம்பவ நாளிலிருந்து நடந்ததை நினைவூட்டி விவரிக்கச் செய்தேன். கூடவே அவற்றை எதிர்கொண்ட விதத்தையும். இவை வீட்டிலிருந்த போதும், கல்லூரியில் வந்த பின்பும்.

பல ஸெஷன்களுக்குப் பிறகே தன் செயல்பாட்டை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக, தாத்தா மரண படுக்கையில் இருக்கும் போது தான் பக்கத்தில் இல்லாததைப் பழி உணர்ச்சியாக எடுத்துக் கொண்டதால் உள்ளூரத் தத்தளிப்பு.

கடந்த மாதங்களில் உணர்வை அலசி ஆராய்ந்து பார்க்கையில், விட்டுச் சென்று விட்டாரே என்று அவர் மீதான கோபம் என்பதை அமர் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதாவது வெளிப்படையாகத் துயரத்தைக் காட்ட மறுத்த நிலையில், வீடு சென்றதும் துக்கம் பீரிட்டது. அதைத் தடுக்க அங்குச் செல்ல மறுத்தான்.

ஸெஷன் இதை மையமாக வைத்துச் செல்ல, விரிவின் பல்வேறு தாக்கம் இருந்ததை உணர ஆரம்பித்தான். தன் பல மாற்றங்களை இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அமர்  புரிந்து கொண்டான். துயரம், அதிலிருந்து பிறந்த கோபத்தினால் கோவில் காரியங்களில் ஈடுபாடு குறைந்தது.

சிறுவயதிலிருந்தே தாத்தாவுடன் கோவில் செல்வதும் அதன் தேவைகளைக் கவனிப்பதும் இணைந்து இருந்தன. அவர் இல்லையேல் இவை இல்லை என்றதற்குக் காரணத்தைப் புரிந்து கொண்டான். அந்தப் பிரிவைத் தாள முடியாமல் அந்த உறவுக்குச் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தான் தூரத்தில் தள்ளப் பார்க்கிறோம் என்று அடையாளம் கண்டான்.

இவை யாவும் தன் இயல்பான நிலை இல்லாததால் தன்னை வேதனை வாட்டியதைப் பார்க்க முடிந்தது. அமர் தன் நடத்தையைச் சுதாரித்துக் கொள்ளத் தயாராக இருந்தான். முன்பைப்போல காலை வேளையில் ஆறு கிலோமீட்டர் ஓடுவது, பூஜை செய்து, மாலையில் படிப்பது என எப்போதும் போன்ற வழக்கத்தைச் செய்யத் தொடங்கினான்.

தன்னிடம் மாற்றங்களை அமர் கவனிக்கத் தொடங்கினான். இந்த நிலை அடுத்த கட்டமான வளர்ச்சிப் பாதையில் கூட்டிச் சென்றது. ஆகக் கோவில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க முன் வந்தான். தாத்தா தன்னைக் கோவில் பொறுப்பிற்கு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடிந்தது. இதை ஆராய, புரிந்தது, கோவிலுக்கும் தாத்தாவுக்கும் தொடர்பும்,  அவர் மேலான பாசம் பக்தி சிறுவயதிலிருந்தே ஈடுபாடும் இவ்வாறு முடிவு செய்ய உதவியது என.

இதனால் வந்த மனோதைரியத்தை வைத்து, வீட்டினரைப் புறக்கணித்ததைச் சரி செய்ய ஸெஷன் மேற்கொண்டோம்

எதேச்சையாக டாக்டர் நித்தினைச் சந்தித்ததில், அமர் வகுப்பில் பழைய ஆர்வத்தைக் காட்டுவதாகவும் முழு மனதோடு படிப்பதையும் விவரித்தார்.

                                                        ************************************