வளை குலுங்கினாற்போல மழலைமொழி பேசும் … (புதிய பிள்ளைப் பருவங்கள்)

                                             ஆசிரியர் : மீனாக்ஷி பாலகணேஷ்

அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சியிலும் அழகான சுவையான பல பருவங்களும், நிகழ்வுகளும் உண்டு. இந்தத் தொடரில் என் கருத்தில் தோன்றிய, பாடல் பெறாத ஒருசில பருவங்களை நாம் காணப்போகிறோம். பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன. பெண்பாற் புலவர்களால் பாடப்பட்ட ஓரிரு பிள்ளைத்தமிழ் நூல்களும் இன்றுவரை தேடியும் என் கைக்குக் கிட்டவில்லை.

பிள்ளைத்தமிழ் நூல்கள் தொல்காப்பியர் வகுத்த இலக்கணப்படி மூன்றுமாதம் முதல் பெண்மகவானால் அவள் பருவம் அடையும் வரையும், ஆண்மகவானால் அவன் அரசுகட்டில் ஏறும்வரையும் பத்துப் பருவங்களாக (இருபால் பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என ஏழும், பெண்பால் பருவங்களாகக் கடை மூன்று பருவங்களும் அம்மானை, நீராடல், ஊசல் என்றும், ஆண்பால் பருவங்களாக, சிற்றில் (சிதைத்தல்), சிறுபறை (முழக்குதல்), சிறுதேர் (இழுத்தல்) எனவும்  பாடப்பட வேண்டும் என்பது வழக்கு.

இதற்கும் மேல் சில பருவங்களும் இலக்கண நூல்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆக, மொத்தம் 24 பருவங்களைப்பற்றி எனது பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்களும் நானும் எழுதியுள்ள ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ எனும் நூலில் விரிவாகக் காணலாம்.

பெண்களுக்கும் ஆடவருக்கும் குழந்தையின் ஒரு செயலைக் காணும்போழ்தில் தோன்றும் கற்பனைகள் வேறுபடும் அல்லவா? மேலும் தாய்மாரே குழந்தையுடன் பெரும்பொழுதுகளைக் கழிப்பதனால், அவர்கள் தத்தம் குழந்தைகளுடன் செய்து மகிழும் செயல்களும் பாடப்பட வேண்டும் அல்லவா?

ஆகவே இவற்றைப் பதிவுசெய்யலாம் எனும் ஆர்வத்தினால் எழுந்த கட்டுரைகள் இவை.   இப்பாடல்களையும் கட்டுரைகளையும்   பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்.   ஐயா அவர்கள் எனது பிள்ளைத்தமிழ் ஆய்வினைப் பெரிதும் ஊக்குவித்து வழிநடத்தியவர்; எனது பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்குமுரியவர்.) அவர்களுக்கு அனுப்பிவைத்து, அவர்கள் பார்த்தபின்பே பதிப்பிற்கு அனுப்பினேன். பேராசிரியர் ஐயா, இனி இப்பருவங்களையும் பிள்ளைத்தமிழ் பாடுவோர் தமது நூல்களில் சேர்த்துப் பாடப் பரிந்துரைக்கலாம் எனத் தமது கருத்தைக் கூறியுள்ளார்.

இப்பாடல்களை இயற்ற அவ்வத் தெய்வங்களே வழிநடத்தினர் எனல் மிகையன்று. பிள்ளைத்தமிழால் போற்றப்படாத அன்னைத் தெய்வங்கள் மீது பாடல்களை எழுத விரும்பி அவ்வண்ணமே எழுதியுள்ளேன். இத்தெய்வங்கள் மீது பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டு அவை கிடைக்காமலும் போயிருக்கக் கூடும். ஆனால் எனது பேரன்பிற்குரிய மீனாட்சியம்மையையும், சிவகாமித் தாயையும் பாடாமலிருக்க இயலவில்லையே!

இப்பாடல்களைக் கட்டளைக் கலித்துறையாகவோ, (அறு, எழு, எண்சீர்) ஆசிரிய விருத்தமாகவோ அமைக்க முயன்றுள்ளேன். நான் கவிதை புனைவதில் பெரும் புலமை பெற்றவளல்ல. இருப்பினும் பாடவேண்டுமெனும் ஆசையால் புனைந்த பாடல்கள் இவை. சில தமிழ்ச்சான்றோர் பார்த்தும் படித்தும் மெச்சியவை எனும் துணிவில் வெளியிடத் துணிந்தேன்.

ஆகவே கோலம் வரைதல், மருதோன்றி அணிதல், வளையல் அணிதல், கூந்தல் அலங்காரங்கள் செய்து கொள்ளுதல், பாடல் ஆடல் பயிலுதல், உண்மையாகவே சமையல் கலையைக்  கற்றுக்  கொள்ளுதல், போர்க்கலை பயிலல், கல்வி பயிலல் எனும்  பருவங்களைப் பற்றி, இதுவரை எவருமே பாடாததனால், பாட முயன்றுள்ளேன்.

அன்பிற்குரிய இளம் நண்பர் திருமதி உபாசனா கோவிந்தராஜன் (Illustration Artist, பாஸ்டன், அமெரிக்கா) பிரத்யேகமாக வரைந்தளித்த அட்டைப்படம் மனதிற்குக் களிப்பூட்டி, மீனாட்சியன்னைபால் பேரன்பைப் பெருக்கிடச் செய்யும். இப்படத்தில் சிறுமி மீனாட்சி வளையல்களணிந்து மகிழ்வதனைக் கனிவோடும் களிப்போடும் பார்க்கும் அன்னை காஞ்சனமாலை, காணும் நமக்கும் ஆனந்தத்தைத் தருவாள்.

இனி என்ன சொல்வது? தமிழன்னையாம் மீனாட்சியின் திருவருளும், என் ஆசானின் குருவருளும் கூடியதால்தான் இது சாத்தியமாயிற்றதனால் அவர்கள் திருவடிகளைப் பணிகிறேன்.

உலகத்துக் குழந்தைகளனைவருக்கும் இதனைச் சமர்ப்பணம் செய்கிறேன். முனைவர் வ. வே. சு. அவர்கள் அன்போடு அளித்த அணிந்துரையை உங்கள் பார்வைக்குப் பெருமையுடன் சமர்ப்பிக்கிறேன்.

திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்கள் திறம்பட இதனை வடிவமைத்து pustaka.co.in -ல் வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்குப் பல நலன்களையும் அருள ஆண்டவனை வேண்டுகிறேன். இது மின்னூலாகவும், வேண்டுவோருக்கு அச்சுப் பிரதியாகவும் pustaka.co.in-ல் விலைக்குக் கிடைக்கும்.

                                                                                   

அணிந்துரை

பேராசிரியர் முனைவர் கவிமாமணி வ.வே.சு.

 

இந்நூலுக்கு மிக்க மகிழ்ச்சியோடு அணிந்துரை அளிக்கிறேன். அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம், தமிழ் இலக்கியப் பரப்பிலே சிற்றிலக்கியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றவை. பண்டை இலக்கியத்திற்கும் பின்னால் வந்த பக்தி இலக்கியங்களுக்கும் இடையே தனிச்சிறப்போடு  பரந்து கிடப்பவை; இன்னும் வளர்ந்து வருபவை; அவற்றுள் காணப்படும் யாப்பு வகைகளும் கருப்பொருளும் கற்பனை வீச்சுகளும் அளவற்றவை; தொண்ணூற்றாறு எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் அந்த எண்ணிக்கைக்கும் மேலே இவை உள்ளன என்பது அறிஞர்கள் கருத்தாகும். தமிழின் இரத்தினக் கருவூலங்களுள் ஒன்றான இதனுள் கிடக்கும் ஒப்பற்ற முத்து “பிள்ளைக்கவி” எனப்படும் பிள்ளைத்தமிழ் ஆகும். இதிலுள்ள மொழியழகும், சொல்லழகும், உணர்வு நெகிழ்ச்சியும் தமிழ் படிக்கும் நெஞ்சங்களுள் உடனே பற்றிக்கொள்ளும் திறம் கொண்டவை.

என் பிள்ளைப் பருவத்தில் நான் இரசித்துப் படித்த தமிழ் இலக்கியம் பிள்ளைத் தமிழ். குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழும், பகழிக்கூத்தரின் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழும் என் நெஞ்சில் என்றும் நீங்கா இடம்பெற்றவை.

நூலை முழுதும் படித்து முடித்துவிட்ட பிறகு பிறந்தது இரண்டாவது காரணம். அதுதான் நூலாசிரியரின் செழுந்தமிழ்ப் பல்லக்கில் பவனிவரும் புதிய பார்வை.

“பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன” என்ற குறிப்புரையோடு, சில புதிய பிள்ளைப் பருவங்களை ஆசிரியர் அறிமுகம் செய்கிறார். நிச்சயம் ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்றங்கள் என வழிமொழிகிறேன்.

நிற்க, பிள்ளைத்தமிழின் மரபு சார்ந்த இலக்கண முறைமைகளோடு சில புதிய அணுகுமுறைகளை அறிமுகம் செய்வது தவறல்ல. ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

பொதுவாகப் பிள்ளைத் தமிழ் நூல்கள் ஆசிரிய விருத்தத்தாலேயே பாடப் பெறுகின்றன. எனினும் பன்னிரு பாட்டியல், ஆசிரிய விருத்தத்தோடு கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், பஃறோடை வெண்பா முதலிய யாப்பு வகைகளையும் பிள்ளைத் தமிழுக்கு உரியவையாகப் பலர் பயன்படுத்தி உள்ளனர்.

பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் முதற்பாடல் திருமாலுக்கு உரியது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ், அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ் இரண்டும் இதற்கு விதிவிலக்கு.

பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில்தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வாறே பாடப்பட்டுள்ளன. ஆயினும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் பதினோரு பருவங்களையும், தில்லை  சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பட்டுள்ளன.

காப்புக்கும் முதலாக “பழிச்சுநர்ப் பரவல்” என்ற பகுதியை ஆண்டாள் பிள்ளைத்தமிழில் காணலாம். இது அடியவர்களை வணங்குவது.

எல்லா இலக்கிய இலக்கண மரபுகளும் அனுபவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டவை. பிள்ளைத்தமிழ் பருவம் குழந்தையின் மூன்றாம் மாதத்திலிருந்தே தொடங்கக் காரணம், தமிழர் பண்பாட்டில் முதல் இரண்டு திங்கள் குழந்தையை வெளியில் கொண்டு வர மாட்டார்கள்.

எனவே நூலாசிரியர் காட்டும் புதிய பிள்ளைப் பருவங்கள் இலக்கிய இலக்கண அமைதிக்கு உட்பட்டு ஏற்றுக்கொள்ளத் தக்கவையே.

இது ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலா, புதிய பிள்ளைத்தமிழ்ப் பாடல் விளக்க நூலா அல்லது ஆய்வுநூலா என்று பிரித்துக் கூற இயலாத வண்ணம் இந்நூல் மும்முனைச் சிறப்பினைப் பெற்றுள்ளது. நூலாசிரியாரின் கற்பனைத் திறம் அவரது பாடல்களிலும், ஆழங்கால் பட்ட இலக்கிய அறிவு அவரது உரைநடையிலும், செழுமையான ஆய்வுப் பின்புலம் அவரது பார்வை நூல் பட்டியல்களிலும் தெளிவாகத் தெரிகின்றது.

கோலம் வரையும் பருவம், வளையல் அணிதல், கூந்தல் அலங்காரங்கள், மருதோன்றி அணிதல், ஆடல் பாடல் பயிலல், சமையல் பழகுதல் ஆகிய ஆறு தலைப்புகளைப் பெண்பாற் பருவங்களாகவும், போர்க் கலைகள் பயிலல், குருகுலவாசம் /கல்வி பயிலல் ஆகிய இரண்டு தலைப்புகளை ஆண்பாற் பருவங்களாகவும், வில், வாள், ஆயுதம் பயிலல் என்ற தலைப்பை இருபாலருக்கும் உள்ள பொதுப் பருவமாகவும் பிரித்து மொத்தம் ஒன்பது தலைப்புகளில் இந்நூல் வடிவம் பெற்றுள்ளது. புதிய பிள்ளைப் பருவங்களாக அமைந்த அத்துணைப் பருவங்களும் அற்புதமாக அமைந்துள்ளன.

எடுத்துக் கொண்ட தலைப்பைப் பற்றிய விளக்கம், அதனைத் தொடர்ந்து தான் எழுதிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள்; நிறைவாகப் பார்வை நூல் பட்டியல் என்று ஒரு கட்டுக்கோப்பில் ஒன்பது பகுதிகளையும் ஆசிரியர் படைத்துள்ளார்.

முத்திறம் படைத்த இந்நூலில் ஆசிரியர் முத்திரை பதித்த பகுதிகளில் ஒரு சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கோலம்வரையும் பருவம் மிக அழகாக எடுத்தாளப்பட்டுள்ளது. பெண் பிள்ளைகள் வரையும் கோலம் எத்தனை செய்திகளைக் கூறுகின்றது! இணைக்கப்படும் வரை அவை வெற்றுப் புள்ளிகள்தாம். இணைந்தால் தான் கோலம். கோலத்தின் எழிலோ புள்ளிகளின் வரிசையைப் பொறுத்தே அமைகின்றது. இதிலே கணக்கு இருக்கிறது. தத்துவம் இருக்கிறது. அழகியல் இருக்கிறது. அறிவியலும் இருக்கிறது. கோலம் வரையும் செய்கை மூளைக்கும் உடல் இயக்கத்திற்கும் உள்ள ஒருங்கிணைப்பிற்குப் பயிற்சியாகின்றது என இன்றைய மருத்துவமும் சொல்கின்றது. பிள்ளை வளர்ப்பில் நமது பண்பாட்டின் சிறப்பினை எடுத்துக் கூற “கோலம் வரைதல்” ஒன்று போதாதா?

“எங்கு நோக்கினும் தெருவெங்கும் கோலங்கள்! விதவிதமான கற்பனைகள்! ஓரிடத்தில் ஒரு மங்கை அவளுடைய இல்லத்தின் முன்பு நீராழி மண்டபம் கோலம் வரைகின்றாள். புள்ளிகளைக் கணக்கிட்டு வைத்து, இரு விரல்களிடையே அள்ளிய வெண்மையான கோலமாவை அழகான இழைகளாக்கி அப்புள்ளிகளை இணைத்தும் வளைத்தும் அவளிடும் கோலம் கண்ணுக்கு விருந்தாகிறது.” என்கிறார் ஆசிரியர். மேலும் இதற்கான அகச்சான்றை “’தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள் ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து” என்ற நாச்சியார் திருமொழியால் விளக்குகிறார்.

சிறு பெண்ணான அறம்வளர்த்த நாயகி கோலமிடும் அழகை

“காந்தள் போதனைய கையால் கோலப்பொ டியதனை யள்ளிப்புள்ளி களிட்டு” என்று பாடுகிறார். அம்மை குனிந்து அமர்ந்து கோலமிடும் போது கையின் அசைவும், விரல்களின் அசைவும் எழிலோடு இருப்பதை “காந்தள் மலர் அரும்பாக” வருணித்திருப்பது அருமை.

கோலமிடும் பெண் அறம் வளர்த்த நாயகியல்லவா! அவளிடும் கோலம் மண்ணில் மாடக்குள சித்திரமாய் பரந்து வளர்வதைப் போல அவளருளால் முப்பத்திரண்டு அறங்களும் அன்றோ வளர்கின்றன! இதனை “வாழிவளமுட னெண்னான்கு அறமியற்றி வழுவாதுவர மருளுந்தேவி” என அழகாய் எடுத்துரைக்கிறார். (எனது துணைவியார் பிறந்து வளர்ந்த ஊரான செங்கோட்டையில் அருள் பாலிக்கும் தேவி “அறம்வளர்த்தநாயகி” என்பதால் இந்தப் பாடலைக் கொஞ்சம் அதிகமாகவே இரசித்தேன்)

வளையல் அணிதல் பகுதியில், இன்றைய “மால் நாகரீகத்தில்” காணாமல் போய்விட்ட  வளையல் வியாபரியை நினைவுகூரும் ஆசிரியர் “வாரும் வளைச்செட்டியாரே! வந்திறங்கும் திண்ணையிலே! கொச்சிட்ட திண்ணையிலே! கோலமிட்ட வாசலிலே!” என்ற பழைய பாடலை முழுதும் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில இசைப்பாடல்களில் தலைப்பின் கீழ் “வாரும் வளைச்செட்டியாரே மெட்டு” என்று போட்டிருப்பதை நான் படித்திருக்கிறேன். பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து நேற்றைய எம். ஜி. ஆர். திரைப்படம் வரை ஆட்சி செய்த வளையல் செட்டியை அவ்வளவு எளிதாக மறக்கலாமா? கூடாது எனப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

கூந்தல் அலங்காரப் பகுதியில் “பின்னி எடுத்து” விடுகிறார் ஆசிரியர். அடடா! பைப் பின்னல், அகத்திக்கட்டு என்று பல தகவல்கள். கூந்தல் என்றாலே தருமியின் கதை நினைவுக்குவரும். அதையும் சுட்டுகிறார்.

“முகமதியூடெழு நகைநிலவாட, முடிச்சூழியமாட” என்ற மீனாட்சிப் பிள்ளைத்தமிழ் அடிகளில் இருந்து, இது பற்றிப் பாடும் பழந்தமிழ் இலக்கியங்களின் பட்டியல் வரை தொட்டுக்காட்டுகிறார்.

நீராடி, கூந்தலை உலர்த்தி, புகைகூட்டி, காலெடுத்துப்  பின்னி, கொண்டையிட்டு, மலர் சூட்டி, அணிகலன்கள் பூட்டி என்றெல்லாம் விவரமாகப் பாடலில்  எழுதியுள்ளதைப் படிக்கும்போது, மகாகவி பாரதி கலைமகளை வருணிக்கும் இடத்தில் “சிந்தனையே குழல் என்றுடையாள்“ என எழுதியதை மீண்டும் அசை போட்டு இரசித்தேன். சிந்தனைக்கும் கூந்தலுக்கும்தான் எத்துணை ஒற்றுமை!

பெண்களின் எழிலுக்கும் நளினத்திற்கும் விரல்களில் வைக்கும் மருதாணிக்கு இணையுண்டோ! ”மருதோன்றி அணிதல் பகுதி“ செம்மை பூண்டு சிறக்கின்றது.

“நல்ல நிறம் வருவதற்காக இலைகளைப் பறித்து அரைக்கும்போதே உடன், மஞ்சள்கிழங்கு, செப்புக்காசு, சுண்ணாம்பு முதலியவற்றையும் சேர்த்து வைத்தரைப்பர். அந்தப்பூச்சு சிலமணி நேரங்களில் தானே உலர்ந்து உதிர ஆரம்பிக்கும். நன்கு நீரால் கழுவிவிட்டு எண்ணையைப் பூசுவர் சிலர். ஆக மொத்தம், ‘கைக்கு அழகு, கண்ணுக்குக் குளிர்ச்சி, மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு, விளையாட்டு; வேறென்ன வேண்டும்?” என்று செய்முறையையே விளக்குகிறார் ஆசிரியர்.

“தன்மையுடன் தண்ணளிசெய் கைக்கு மருதாணி” என்று கற்பகவல்லித் தாயாருக்கு மருதாணி இட்டுப் பாடும் போது நம் நெஞ்சமெல்லாம் குழைகிறது.

தமிழிசை கர்நாடக இசை இரண்டிலும் பயிற்சி பெற்ற பாடகியான நூலாசிரியர் “ஆடல் பாடல் பயிலல்” பகுதியில் படைத்துள்ள ஒரு பாடலில் பண்ணிசைக் கூறுகளையும் இராகங்களையும் இனிமையாகப் பொருத்தியுள்ளார். ஏழிசையாய் இசைப்பயனாய் என்று தேவார மணத்துடன் தொடங்கும் இப்பாடலில் உள்ள இசைக் கூறுகளை நீங்களே கண்டுபிடித்து மகிழுங்கள்.

ஏழிசையா யிசைப்பயனாய் இலங்கிடு மீசன்பங்கில்

ஏந்திழையே நீயுறைந்தாய்

எழிலோங்கும் உன்நாவில் குரலொடு துத்தம்கைக்

கிளையுழை இளிவிளரிதாரமெனு

மேழிசையாற் பண்ணனைத் தும்பாங்கா கப்பாடுவாய்!

மேகராகக்கு றிஞ்சியினுமேற்செம்

பாலைப்பண் ணினிலும் மூண்டெழுந்த புகழ்மாலை

பெருமான்மேற் சாற்றிடுவா

யாழிசூழ னைத்துலகு முன்னருளிலு மிசையிலும்

ஆரபியெனகௌரி மனோகரியெனவ

சந்தபைரவி யெனவகுளா பரணமென சுந்தரத்

தோடியென நிறைக்குமுன்றன்

தாளிணை தான்பணிந்து தரணியெ லாஞ்செழிக்க

தவங்கள் தானியற்றும்

தாபதருக் கருளுநல் தர்மவதி சிவகாமீ

தீங்குரற்றே னிசைபொழிகவே!8

வில் வாள் ஆயுதம் பயிலல் பகுதியில் குமரகுருபரரின் அற்புதமான அடிகளைத் தொட்டுக் காட்டுகிறார்.

“அன்னையின் போர்க்கோலமே அவளுக்குத் திருமணக் கோலமும்’ ஆகின்றது. இருப்பினும் கண்களால் காதற்கணைகளைத் தொடுத்தபடி நிற்கிறாள் தடாதகை!

கட்கணைதுரக்கும் கரும்புருவ வில்லொடொரு

கைவிற்குனித்துநின்ற

போர்க்கோலமேதிரு மணக்கோல மானபெண்

பொன்னூசல்ஆடியருளே6!”

சமையல் பழகுதல் பகுதியில் பொருத்தமாக காசி நகர் வாழும் தேவி அன்னபூரணியை முன்நிறுத்துகிறார் ஆசிரியர். “முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்” என்ற சிறப்பான சங்கப் பாடலை மேற்கோள் காட்டி ஓர் அற்புதமான இல்லறக் காட்சியை நமக்கு நினைவுபடுத்துகிறார். (இன்றைய சூழலில் இந்த சமையல் பழகுதல் பருவத்தை ஆண் பெண் இருவருக்கும் பொதுவாக்கலாமே!)

“நானொரு பாவையெனை நன்றாகச் சீராட்டி

நானிலத்தே நலம்பலவு மளித்து

நாளும் பொழுதும் நம்பிக்கை யொளிதந்து

நல்லெண் ணங்கூட்டி வைத்து”

என்ற பாடல் வரிகள் “நானொரு விளையாட்டு பொம்மையா” என்ற பாபநாசம் சிவன் பாடலை நெஞ்சில் சுருதி கூட்டியது.

`இவை போல இன்னும் பல சுவையான இடங்களைக் குறிப்பிட எண்ணம் இருந்தாலும், விரிவஞ்சியும், வாசகர்கள் அவரே படித்து இன்புற இடம்கொடுத்து நகரவேண்டும் என்பதாலும் நிறைவு செய்கிறேன்.

நூலாசிரியர் மீனாட்சி பாலகணேஷ் அவர்களை நேரில் சந்தித்தது இல்லை எனினும் எங்கள் “குவிகம் இலக்கிய அமைப்பு” மூலமாக இணையதளத்தில் சந்தித்துள்ளோம். அறிவியல், தமிழ் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்ப் புலமையும் இசை ஞானமும் மிக்கவர். இந்நூலின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அவரது செழுந்தமிழை சந்திக்கலாம்.

இவரது பிள்ளைப் பாடலில் “பொன்மயிலாக மயிலையம் பதியினில் வந்து” என்ற பாடலை திருமதி காயத்ரி வெங்கடராகவன் பாடக் கேட்டு அந்த பெஹாக் – சிந்துபைரவி சுவையில் எனை மறந்தேன். இதிலிருந்து ஒன்று திண்ணமாகப் புரிந்தது. இப்பிள்ளைப் பாடல்களை இசையமைத்து அரங்கேற்றினால் தமிழும் இசையும் அறிந்த அன்பர்கள் மகிழ்ச்சி அடைவது உறுதி.

மரபில் காலூன்றி புதுமை படைப்பது எப்படி என்பதை இவர் காட்டும் புதிய பிள்ளைப் பருவங்களைக் கொண்டு அறியலாம். இவரது பாடல்களில் நிலவும் யாப்பமைதியும், சொல் தேர்வும் பண்டை இலக்கியத்தின் பசுந்தமிழை மீண்டும் பார்வைக்கு அளிக்கின்றது. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள  புதிய பருவங்களையும் இணைத்து ஒரு முழுமையான பிள்ளைத் தமிழை, தமிழன்னைக்கு இவரே சூட்டவேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

பேராசிரியர் முனைவர் கவிமாமணி வ.வே.சு.