கடைசிப்பக்கம் – தேவன் விருது! – டாக்டர் ஜெ பாஸ்கரன் .

 

மறைந்த தேவன் அவர்கள் நினைவாக, சாருகேசி குடும்பத்தினர் ஏற்படுத்திய அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர்கள், ஓவியர்களைக் கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கி வருகின்றனர். திரு சாருகேசி மறைவுக்குப் பிறகு, அவருடைய சகோதரி திருமதி சாந்தி லக்‌ஷ்மணன் தேவன் அறக்கட்டளையை நிர்வகித்தும், விருதுகளைத் தொடர்ந்து வழங்கியும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்  தொண்டாற்றி வருகிறார். கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர், பதிப்பாளர் திரு ராஜன் ஆகியோர் இந்த அறக்கட்டளையின் செயல்பட்டிற்கு உறுதுணையாக இருந்து, ஆண்டு தோறும் அமரர் தேவன் அறக்கட்டளை விருது வழங்கும் விழாவினைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆண்டு (2024) விருது பெற்றவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்குப் பெருமையே (மற்ற இருவர் எழுத்தாளர் திருமதி காந்தலட்சுமி சந்திரமெளலி, திரு நாவலர் நாராயணன்). விழாவில் தேவன் படைப்புலகம் பற்றி திரு ஜெயராமன் ரகுநாதன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். தேவனின் நினைவலைகளில் சில தெறிப்புகள்:

கல்கி அவர்களால் ஆனந்த விகடனில் அறிமுகப் படுத்தப் பட்டவர் தேவன். கல்கி, எஸ்விவி, நாடோடி போன்ற நகைச்சுவை எழுத்தாளர்கள் காலத்திலேயே, தனக்கென ஒரு தனி ‘பாணி’யில் எழுதியவர். ‘கல்கி’க்குப் பிறகு, ஆனந்த விகடன் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்று (1942 – 1957), பத்திரிக்கையின் தரம் குறையாமல் திறமையாகப் பனியாற்றியவர்.

“எழுதி எழுதித்தான் கை பண்பட வேண்டும். மனதில் அற்புதமான ‘ஐடியா’

உருவாகும். அதையே எழுத்தில் பார்க்கும்போது ஜீவன் இல்லாமல் போய்விடும்..

மூளையும் கையும் ஒத்துழைக்க வேண்டும். பாஷை அனுகுணமாக வேலை

செய்ய வேண்டும். மூன்றும் ஒத்துக் கொண்டால்தான் ‘மார்க்’ வாங்கலாம்.

எழுத்து என்பது சாமான்யம் இல்லை.

ஒரு மனிதனைக் கவனித்து, குணாதிசயங்களை உணர்ந்து, பேனா முனையில்

அதைக் கொணர்ந்து பிறர் அந்த மனிதரை மனக்கண் முன் பார்க்கும்படி

செய்வது எத்தனை கடினமான காரியம்! அதற்கு எத்தனையோ சாமர்த்தியம்

வேண்டும். வார்த்தைக்கட்டு வேண்டும்.”.

                                                                      -தேவன்.

“ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் மட்டுமல்ல, வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன்’ – கல்கி .

“என் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் தேவன் இருந்திருக்கிறார். அவரை இன்று படித்தாலும் புதிதாகவே இருக்கும். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான்”  ‘நகைச்சுவை வறண்டுவிட்ட நாட்களில்  வுட்ஹவுசுக்கு  ஈடாக தமிழில் நகைச்சுவை எழுதியவர் என்கிற தகுதியில் இலக்கிய வரலாற்றில் அவருக்கு இடம் நிச்சயம் உண்டு’.  என்கிறார் சுஜாதா.

ஆங்கிலக் கதைகள் மட்டுமே படித்தவர்களைக்கூட தன் இயல்பான, நகைச்சுவை கலந்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் என்று போற்றப்பட்டார். ‘வாசகர்களால் அடுத்த தலைமுறை எழுத்தாளராக பார்க்கப்பட்டவர். தமிழ் எழுத்துலகின் சார்லஸ் டிக்கன்ஸ்’ என்று அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார்.

“தேவனுடைய படைப்புகளில் விசேஷமாக நம்மை கவரக் கூடியது அவருடைய தத்ரூபமான பாத்திரப் படைப்புகள்” –  கவிஞர் வைதீஸ்வரன்.      

                                                                          000

“ஒரு சமயம் ஒரு கிராமவாசி மனைவியின் சிகிச்சைக்காக டாக்டர் ஒருவரை அழைத்து வருகிறார். டாக்டர் அவள் வாயில் தெர்மாமீட்டர் வைத்து, பத்து நிமிஷத்துக்குப் பிறகு எடுத்தார். அவள் புருஷன், இதுவரை சேர்ந்தார்போல் இவ்வளவு காலம் தன் மனைவி பேசாமல் இருந்ததைப் பார்த்ததில்லையாதலால், டாக்டரிடம் சென்று, காதோடு,”ஸார்! இப்போது ஒரு ஆயுதத்தை என் மனைவியின் வாயில் வைத்தீர்களே! அது என்ன விலை? எங்கே கிடைக்கும்? என்று கேட்டானாம்! (தேவன் அவர்களின் படைப்பிலிருந்து).

                                                                             000

“சிசுருஷை செய்யுங்கள்” கட்டுரையிலிருந்து சில தெறிப்புகள்:

“பேனாவுக்கு மசி போட்டான். நிப்பை உடைத்து வைத்தான்.”

“ரேடியோவை நன்றாக வைப்பதாகச் சொல்லி, ஒரு ‘வால்வை’ பைசல் செய்துவிட்டான்.”

“பத்து ரூபாய் நோட்டுக்கு சில்லறை மாற்றி வரப் போய், நோட்டையே தொலைத்து விட்டான்”.

                                                                              000

துப்பறியும் சாம்பு – இன்றும் உயிர்ப்புடன் தனது ‘முட்டாள்தனமான’ செய்கைகளால், தன்னையே அறியாமல் பல திருட்டுகளைத் துப்பறிந்து நம்மைச் சிரிக்க வைக்கும் ‘சாம்பு’, தேவனின் மிகச் சிறந்த படைப்பு. அவர்  மனைவி வேம்பு, இன்ஸ்பெக்டர் கோபாலன் என நிரந்தரமான கேரக்டர்கள். ‘சுந்து’ என்ற மகன் வேறு !  கோபாலன், சாம்புவின் மீது அபாரமான நம்பிக்கையுடன் கேஸ்களை ஒப்படைக்க, சாம்பு தன் அசட்டுத்தனம் மாறாமல், சந்தர்ப்பங்களினால் வெளி வரும் உண்மைகள், திருடர்கள் பயத்தில் வெகுண்டு தாங்களாகவே சிக்கிக்கொள்வது என தேவன் எழுதியிருக்கும் கதைகள் சாகா வரம் பெற்றவை! பெரிய ஜமீந்தார்கள் தங்கள் எதிரிகளை சாம்புவின் துணையுடன் அழிக்கிறார்கள். சாம்புவை எதிர்த்து வீசப்படும் ஆயுதங்கள், வீசியவர்கள் மீதே திரும்ப, அவர்கள் மண்ணைக் கவ்வுகிறார்கள்! துப்பறியும் சாம்புவுக்குத் தெரியாத கலை – துப்பறிவதுதான்!

சாம்புவை தேவன் விவரிப்பதே சிரிப்புதான்: கதாநாயகனை அறிமுகம் செய்கிறார் – சற்று படியுங்களேன்.

‘நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்’ என்று யாரோ -முட்டாள்தனமாக அல்ல- சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் ‘முட்டாள்’ என்றார்கள்.

கோபுலு | குவிகம் குழுமம் - குவிகம் மின்னிதழ்‘விளாம்பழம்’ பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரி காதுகள்… கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிகொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை.. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளை சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சிமாகிவிட்டான்..” 

(சாம்புவின் தோற்றமும், செயல்களும் நமக்கு மறக்க முடியாமல் செய்ததில் கோபுலு அவர்களின் கோட்டோவியங்களின் பங்கு அளவிடமுடியாதது).

 எழுத்தாளர் தேவன் மறைந்த செய்தி பாக்கியம் ராமசாமி அவர்களை வெகுவாகப் பாதித்தது – ‘வாழ்வு மாயம், இளமை அநித்யம், மரணமே நிச்சயம்’ என்று நினைத்து, முழுநேரத் தேடுபவனாக – துறவியாக – ஆவதற்குக் குருவாயூர் க்‌ஷேத்திரத்தை அடைகிறார். எப்படி மனம் மாறி வீடு திரும்பிவிடுகிறார் என்பதை, ஆன்மீகச் சிந்தனைகளுடன், ‘தேடினால் தெரியும்’ என்ற புத்தகமாக எழுதியிருப்பார். (அவரது ஆன்மீக அனுபவங்களை அவரே சொல்லக் கேட்கும் ‘பாக்கியம்’ எனக்குக் கிடைத்தது – சிரிப்புடன் சிந்தனைக்கும் ஆன விருந்து அது!). சக எழுத்தாளர்களிடையே தேவன் அவர்களுக்கிருந்த மரியாதையும், அன்பும் அவ்வளவு சிறப்பானது.

இவ்வளவு சிறப்பான படைப்பாளியாக இருந்தும், அவர் வாழும் நாளில் அவரது புத்தகம் ஒன்று கூட வெளியிடப் படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். பின்னர் திரு சாருகேசி மற்றும் கனடா பாஸ் பசுபதி அவர்கள் முயற்சியில் அவரது படைப்புகள் அச்சேறுகின்றன. 

“வாசகர்கள் எல்லோரும் நல்லவர்கள். அவர்களுக்கு யாரிடத்திலும் மனதில் எள்ளளவும் துவேஷம் கிடையாது. நன்றாக இருகிறதை உடனே தயங்காமல் குறைக்காமல் சொல்லுவார்கள். அதில் நம்பிக்கையுடன் எழுதிவிட்டால் யாரும் அசைக்க முடியாது.”  என்கிறார் தேவன்.

உண்மைதான்!