திருக்குறளில் நகைச்சுவை.

திருக்குறளில் நகைச்சுவை - YouTube

1. முட்டாள்களோடு நட்புக்கொள்ளுதல் மிகவும் இனிமையானதாம். ஏனென்றால் அந்த முட்டாள்கள்  நம்மை விட்டுப்  பிரிந்து சென்றால் நமக்கு வருத்தம் ஏற்படாததல்லவா?

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில். (குறள்: 839)

2. கயவரும் தேவரும் ஒத்தவராம். தேவர்களைப்போல கயவரும் மனம் போன போக்கில் தாம் விரும்பினதை செய்வதால்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான். (குறள்: 1073)

3. அறிஞரை விட கயவர் திருவுடையவராம். அறிஞருக்கு கவலை இருக்க வாய்ப்பு உண்டு. கயவருக்குத்தான் நெஞ்சத்தில் கவலையில்லையே!

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்து அவலம் இலர்.  (குறள் 1072)

4. ஒருத்தி சொன்னாளாம் நான் கண்ணுக்கு மை தீட்டமாட்டேனென்று; கண்ணிலே இருக்கின்ற காதலனுக்கு உறுத்தி துன்பம் தந்துவிடுமாம்!

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து. (குறள்: 1127)

5. மற்றொருத்தி கூறினாளாம் சூடா எதையும் குடிக்க மாட்டேன்னு; நெஞ்சத்திலே இருக்கிற காதலரை அது சுட்டுடுமாம்.

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. (குறள்: 1128)

6. பூவை தலையிலே வச்சாளாம் ஒருத்தி. அதன் கனம் தாங்க முடியாம இடுப்பு ஒடிஞ்சு செத்துட்டாளாம். பூவைக் கட்டிய பாவி பூவின் காம்பை எடுக்காம தொடுட்டுட்டாளாம். 

 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

 நல்ல படாஅ பறை.  (குறள்: 1115)

7. நட்சத்திரங்கள்  எல்லாம் தலை கால் புரியாமல் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரு நிலையில் இல்லாமல் கலங்கினவாம். தலைவியின் முகத்திற்கும் சந்திரனுக்கும் வித்தியாசம் புரியாமல் தான்!

மதியும் மடந்தை முகனும் அறியாப்

பதியிற் கலங்கிய மீன்.  (குறள்: 1116)

8. தலைவியை பார்த்துவிட்டு குவளை பூ படக்குன்னு தலையை தொங்கப்போட்டுச்சாம்; அவளுடைய கண்ணுக்கு இணையாக மாட்டோம் என்று வெக்கத்தினால் !.

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.  (குறள்: 1114)

9. ஒருத்தன் தன் கண்ணின் பாவையை போகச்சொன்னானாம்; அவன் காதலியை அமரவைக்க இடம் வேணும்ல!

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

திருநுதற்கு இல்லை இடம்.  (குறள்: 1123)

10. உன்னை நினைச்சேன் என்றானாம்; மறந்தியான்னு அழுதாளாம்.

உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.  (குறள்: 1316)

11. இந்தப்பிறவியில் பிரியமாட்டேன் என்றானாம். அடுத்து பிறப்பில் பிரிவு நேருமோன்னு கண் கலங்கினாளாம்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள்.  (குறள்: 1315) . 

12. பக்கத்தில் இருந்த காதலன் தும்மினான். அவ்வளவுதான். அவள் ஆழ ஆரம்பித்துவிட்டாளாம்.

நான்தான் பக்கத்தில் இருக்கேனே !  எந்தச்  செருக்கி நினைச்சு நீ தும்முறே ? என்று   

வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.  (குறள்: 1317)       

13. கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். 

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. ( 1313)

14. நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்) 

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. ( 1312)

15.   தும்மினா கோவிச்சுக்கிறாளேன்னு தும்மலை அடக்கினான் நம்ம ஆளு. அதுக்கும் ரகளை !

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. ( 1318)

16. காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள். 

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. ( 1314)

17.  வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ? – அப்படி வருத்தப்படரா ஒருத்தி 

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். ( 1203)

18. கல்லாதவரும் மிகவும் நல்லவர்.  எதுவரை? கற்றறிந்தர்  முன்னிலையில் பேசாது அமைதியாக இருக்கும்வரையாம்.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின். (குறள்: 403)