இசை கேட்டால் புவி அசைந்தாடும்

ஆமாம் மயிலாப்பூரையே அசைத்துப் பார்த்த ஒரு சங்கீத நிகழ்ச்சி 30.03.24 அன்று மயிலாப்பூர் கிளப் ஹாலில் ஆரவாரமாக அரங்கேறியது .

இது ஒரு மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சி. முகம் தெரியாமல் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமல் , இசை புதிது என்னும் வாட்ஸ் அப் குழுவில் பாடிக் கொண்டிருந்த அதன் உறுப்பினர்களின் ஆண்டு விழா நிகழ்ச்சி தான் இது .

இலக்கிய உலகம் நன்கறிந்த எழுத்தாளர், கவிஞர் ,பத்திரிகையாளர் பதிப்பாளர் திரு அழகிய சிங்கர் இலக்கிய அன்பர்களுக்காக நான்கு வாட்ஸ் அப் குழுக்களை ஆரம்பித்து நடத்தி வருகிறார் . கவிதைக்காக சொல் புதிது , கதைக்காக கதை புதிது, இசைக்காக இசை புதிது , இதர கலைகளுக்காக கலை புதிது என்று.

இதில் இசை புதிது குழு கொஞ்சம் வித்தியாசமான சுவாரஸ்யமான உறுப்பினர்களை உள்ளடக்கியது. இதில் அநேகமாக பணி ஓய்வு பெற்றவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து தங்களுக்கு பிடித்த இசையை , அது தேவாரமோ, திருவாசகமோ, திருப்புகழோ அல்லது கர்நாடக சங்கீத கீர்த்தனைகளோ ,சினிமா பாடல்களோ தினமும் பாடி பதிவு செய்து குழுவில் போடுகிறார்கள்.

தினமும் உறுப்பினர்களுக்காக ராகம் கண்டுபிடிக்கும் குவிஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது
கர்நாடக சங்கீதம் பற்றி சந்தேகங்களை குழுவில் இருக்கும் சங்கீத ஞானம் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்.
தினம் ஒரு ராகம் என்று வைத்துக்கொண்டு பாடிக்கொண்டிருக்கும் இவர்கள் மாதா மாதம் ஒரு தீம் , நாட்டுப்புற பாடல்கள் , தாலாட்டு, நாம சங்கீர்த்தனம் ,டிசம்பர் மாதம் இசை கச்சேரி என்று எடுத்துக்கொண்டு ஜூமில் சந்தித்து பாடுகிறார்கள்.

இவர்களுடைய ஆண்டு விழா நிகழ்ச்சி மிகக் கோலாகலமாக மயிலாப்பூரில் நடைபெற்றது .
தாங்கள் இதுவரை வாட்ஸப்பில் மட்டுமே சந்தித்த சக குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து அளவளாவியபோது அவர்கள் சொல்லவொண்ணா மகிழ்ச்சி அடைந்தார்கள். கர்நாடக இசை பாடல்கள் சினிமா இசை பாடல்கள் எனக்கு இரு பகுதிகளாக முழுப்பக்க வாத்தியங்களுடன் இந்த இசை புதிது குழுவின் நிர்வாகிகள் திரு நாகேந்திர பாரதி திருமதி சாந்தி ரசவாதி இந்த நிகழ்ச்சியை திறம்பட நடத்தினார்கள். இவர்களுடன் கூடவே இருந்து முழு ஒத்துழைப்பு நல்கி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர் திருமதி இந்திரா ராமநாதன்

இசை புதிது என்ற குழு ஆரம்பித்து தங்களுக்கு இந்த வயதில் பாட களம் அமைத்து கொடுத்த திரு அழகிய சிங்கருக்கு தங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவிக்கும் வகையில் அன்னாரின் பிறந்தநாளையும் இந்த நிகழ்ச்சியில் கொண்டாடி அவருக்கும் அவர் துணைவியார் திருமதி மைதிலிக்கும் சந்தன மாலை ,புடவை வேஷ்டி, பருப்பு தேங்காய் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கி சிறப்பு செய்து மகிழ்ந்தார்கள். இசை புதிது குழு உறுப்பினர் திரு வானவில் கே ரவி அவர்கள் ஒரு அருமையான ஆங்கிலப் பாட்டை பாடி மகிழ்வித்ததோடு தன் துணைவியார் ஷோபனா ரவியோடு சேர்ந்து அழகியசிங்கர் தம்பதிக்கு பொன்னாடை போர்த்தி குழு சார்பில் கௌரவம் செய்தார். பன்முக வித்தகி திருமதி கிரிஜா ராகவன், லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் தன்னுடைய எத்தனையோ அலுவல்களுக்கு மத்தியில் இங்கே வந்திருந்து கர்நாடக இசையில் ஒரு பாட்டையும் பாடி அவையோரை மகிழ்வித்து பிறகு அழகிய சிங்கர் தம்பதியர் பற்றி ஒரு சில நிமிடங்கள் பாராட்டி பேசினார். இந்த இரண்டு நிகழ்வுகளும் இசை புதிது குழுவினருக்கு கிடைத்த கூடுதல் கௌரவமாக எண்ணி அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்.

ஒருவரை ஒருவர் முன்பின் அறியாமல், இசை என்னும் ஒரே அம்சத்தினாலேயே கவரப்பட்டு ஒன்று பட்ட இசை புதிது குழு உறுப்பினர்கள் தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி கொடுத்த இந்த நாளை என்றும் மறக்க மாட்டார்கள்.