கிருஷ்ணன் மாமா

தழும்பு - சிறுகதைகள்“ உனக்கென்னப்பா ! நீ பைத்தியக்காரன் .. நீ என்ன வேணா பேசலாம்.. நாங்க அப்படியா?” என்று ஓர் அரசியல்வாதி மேடையில் பேசியதை யூடியூபில் பார்த்துச் சிரித்தேன். இது எங்க ஊரு எடக்குப் பேச்சு. அந்தக்காலப்  பிள்ளை வளர்ப்பில் கூடத்  தாய்மார்கள் இயல்பாக பல நகைச்சுவை பேச்சுக்களை உதிர்ப்பார்கள்.

அடம் பிடித்து நான் என் சகோதரனோடு சண்டையிட்டு அழும் போது, என் தாய் என்னை  இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு , “ அழாதே ! நீதான் சமத்து! அவன் மோசம், வழியில போற நாய்க்குக் கூட ஒன் சமத்து வராது” என்று என்னை சமாதானப்படுத்துவாளாம். வயதான பிறகு இதை நினைவுபடுத்தி வீடே சிரிப்பதுண்டு.

நகைச்சுவை உணர்வு என்பது வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. அது மட்டும் இல்லையென்றால் மனித வாழ்வில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த சுவாரஸ்யமான விஷயமும் இருக்காது. காதல், கோபம், வீரம், சோகம், வியப்பு போன்ற எல்லா உணர்வுகளையும் புரட்டிப் போட்டுவிடும் அற்புத உணர்வு நகைச்சுவை.

எந்த வயதில் இந்த நகைச்சுவை உணர்வு தோன்றுகிறது ? எல்லாருக்கும் இது பொதுவா? மூளையோடு தொடர்பு கொண்ட விஷயமல்லவா இது?

நகைச்சுவை உணர்வு என்பது உயிரியல் மற்றும் கலாச்சாரம் இரண்டிலும் தோற்றம் கொண்ட ஒரு சிக்கலான மற்றும் பன்முகப் பண்பாகும். உயிரியல் கண்ணோட்டத்தில், நகைச்சுவையானது ஒரு சமூக பிணைப்பு பொறிமுறையாக உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர், இது ஆரம்பகால மனிதர்கள் தங்கள் குழுக்களுக்குள் சமூக தொடர்புகளை நிறுவவும் பராமரிக்கவும் உதவுயிருக்கலாம் . கூடுதலாக, நகைச்சுவையானது மூளையில் எண்டோர்பின்கள் மற்றும் பிற நலலுணர்வு  இரசாயனங்கள் வெளியிடப்படுவதோடு, நேர்மறையான உணர்ச்சி அனுபவங்களுக்கு வழிவகுக்கும்.

கலாச்சார ரீதியாக, நகைச்சுவை உணர்வின் வளர்ச்சியானது வளர்ப்பு, சமூக தொடர்புகள் மற்றும் பல்வேறு வகையான நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் முன்னோக்குகளின் அடிப்படையில் வெவ்வேறு விஷயங்களை வேடிக்கையாகக் காணலாம். ஒட்டுமொத்தமாக, நகைச்சுவை உணர்வு என்பது உயிரியல் மற்றும் கலாச்சார தாக்கங்களின் கண்கவர் கலவையாகும், இது தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்கு உட்பட்டது.

எனக்குத் தெரிந்து “ஸலப்ஸ்டிக் காமெடி “ என்ற வகைதான் முதலில் நாம் குழந்தைப் பருவத்தில் அறிந்து கொள்ளும் நகைச்சுவை. அப்பா அல்லது அம்மா அருகில் முகத்தைக் கொண்டுவந்து வேகமாக ஆட்டி “கொணஷ்டை” காட்டினால் பொதுவாக குழந்தை சிரிக்கும். இது வளர்ந்து “டாம் அண்ட் ஜெர்ரி” கார்ட்டூன்களை ரசிக்கும் பக்குவம் வந்து விடுகிறது. வளர்ந்த பிறக்கும் ,இது போன்ற கார்ட்டூன்கள் அல்லது சார்லி சாப்ளின் படங்கள் பார்த்தால் மனம் லேசாகி விடுவதை நாம் உணரலாம்.

நாங்கள் வளர்ந்த காலத்தில் இது போன்ற படங்கள் பார்ப்பது அரிது. வீட்டில் ரேடியோ கேட்பதற்கே மீன மேஷம் பார்க்கவேண்டும். சிறு வயதில் பார்த்த கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் பொதுவாக ராஜா ராணி கதைகள். இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு , வளைந்த மாடிப் படிகளிலும், பால்கனியிலும் வளைந்து  வளைந்து போடப்படும்  வாள் சண்டைகள் . குதிரையில் துரத்துதல். இருளில் மறைந்து நின்று குறுவாள் வீசுதல்  ஆகியவற்றை இரசிக்கும் பருவம். வீட்டில் காணப்படும் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் போன்ற இதழ்கள் முதலில் படம் பார்க்கவே பயன்பட்டன. பளபளவென்று ஜொலிக்கும் தீபாவளி சிறப்பு இதழ்களைப் புரட்டிப் பார்த்து “ஜோக்குகளைப்” புரிந்து கொள்ளும் வயது எப்பொழுது வந்தது?

யோசித்துப் பார்த்தால் , பார்த்தும் படித்தும் நகைச்சுவையைப் புரிந்து கொள்ளும் முன்பாக, பெரியவர்கள் பேசி சிரித்து அனுபவிப்பதைக் கூட இருந்து கேட்ட போதுகள்தான் இதற்கான அடிப்படை என்று புரிகிறது. அப்படிப் பார்த்தால், கிண்டல் கேலி ஆகியவற்றை நான் இரசிக்கத் தொடங்கியதற்கு முக்கியக் காரண கரத்தாவாக விளங்கியவர் என் மாமா ஒருவர்.

கிருஷ்ணன் மாமா . ஒல்லியான உடல்வாகு; நல்ல உயரம்; மாநிறம்; படிய வாரிவிடப்பட்ட தலைமுடி அலை போல நெளிந்திருக்கும்; சில இழைகளில் வெள்ளி ஓடியிருக்கும். முன் வழுக்கைக்கான அடையாளம் தெரியும். கண்ணாடிக்குள் தெரியும் கண்களில் எப்போதும் ஏகப்பட்ட குறும்பு இருக்கும். வெற்றிலைச் சாயம் ஏறிய உதடுகள் விரிய, வரிசையான பற்கள் தெரிய “ ஹ ஹா “ என்று வசீகரமாகச் சிரிப்பார். என் அன்னையாரின் பெரியப்பா மகன்; அண்ணன் முறை. அதைவிட முக்கியம் என் தந்தையும் அவரும் இளமைக்கால நண்பர்கள். எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். அவருக்கு நாற்பது வயதிருக்கும். ஆபீஸிலிருந்து நேராக வந்தால் பாண்ட் ; விடுமுறை நாட்களில் வந்தால் வெள்ளை வேட்டி , தூவெள்ளை முழுக்கை சட்டை. அவர் திருவல்லிக்கேணியில் இருந்தார்; நாங்கள் தி. நகரில் இருந்தோம். பஸ்ஸில் வந்து போவார். சைக்கிள் ஓட்டிப் பார்த்திருக்கிறேன்.

வீட்டுக்குள் நுழையும் போதே அதிரடிச் சிரிப்பு கேட்கும். “ என்னடா ! வாண்டு! எனக்குக் கொடுக்கறத்துக்குன்னு ஒங்கம்மா போட்டு வச்சிருந்த காப்பி எல்லாம் நீ குடிச்சிட்டயாமே !” என்று காப்பி குடித்துக் கொண்டே  சீண்டுவார். எனக்கு முதலில் எல்லாம் ஒன்றும் புரியாது. “இல்ல இல்ல “ என்று கையை ஆட்டுவேனாம். இப்போவது நினைவு வருகிறது. ஒருநாள் இப்படி அவர் வழக்கம் போல் சீண்டும் போது

“ என்ன மாமா! ஒங்க காப்பி எல்லாம் நான் குடிச்சிருந்தா  நீங்க இப்ப என்ன குடிக்கிறீங்க? காப்பியா? கஷாயமா?” என்று பதில் கேள்வி கேட்டேனாம். எல்லோரும் சொல்லிச் சிரிப்பார்கள் .

“என்னடா! பெரிய மனுஷா? நீதான் கிளாஸ் ஃபர்ஸ்ட் ஆ “ என்று கிண்டலடிப்பார்!. என்ன இப்படி நம்ம “ரேங்க்” பற்றி காலை வாருகிறாரே என்று தலை குனியாமல்  “இல்ல மாமா நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் “ என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்வேன். இது பொய் என்று அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் இந்த வாயாடிப் பேச்சு சூழ்நிலை இறுக்கத்தை தளரச் செய்துவிடும். இப்படி அவரோடு பேசிப்பேசியே நான் “வாயாடலில்” பெரிய மனுஷன் ஆகிவிட்டேன்.  

பிறகு இதுபோன்ற உரையாடல்களைக் கதைகளில் படிக்கும் போது புரிந்து கொண்டு இரசிக்கத் தொடங்கினேன், பொன்னியின் செல்வனில் கல்கி எழுதும் வீரவைஷ்ணவனின் கிண்டல் சொற்களைப் புரிந்து கொள்ளும் வரை வளர்ந்துவிட்டேன்.

மிகச் சிறுவனாக இருந்த போது பார்த்த “மதுரை வீரன்” திரைப்படம்; எம். ஜி. ஆர். பானுமதி, பாலையா ஆகியோர் நடித்தது. பதினைந்து வயதில் மறுபடிப் பார்க்க நேர்ந்த போது அதில் கண்ட “பாலையா ஜோக்” புரிந்தது.

இளவரசி பானுமதியைத் திருட்டுத்தனமாக  அரண்மனைக்குள் நுழைந்து பார்த்துவிட்டுத் தப்பிச்செல்லும் மதுரை வீரனை தளபதி பாலையாவும் நாலு படைவீரர்களும் தூரத்திப் பிடிக்க முயற்சி செய்வர். கதாநாயகன் தப்பிவிடுவான். பாலையா அரசனிடம் சொல்வது

“மன்னா ! அவனை நாங்கள் பிடிக்கப் பின்தொடர்ந்து சென்றோம். ஆனால் அவன் “முன் தொடர்ந்து” சென்று தப்பிவிட்டான்” இதெல்லாம் ரசிக்க ஒரு புரிதல் வேண்டும்.

கிருஷ்ணன் மாமா ஒரு சேதியைச் சொல்லும் விதமே வித்தியாசமாக இருக்கும். அவர் பையன் சைக்கிள் கற்றுக் கொள்ளும் பொழுது ஒரு கோழி குறுக்கே வர பாலன்ஸ் போய் கீழே விழுந்துவிட்டான். “ வேற ஒண்ணும் இல்லடா! இவன் கோழியை அடிக்கணும் என்றுதான் சைக்கிளை ஓட்டினான். கோழிக்கு ஆயுசு கெட்டி. அது தப்பிச்சுடுத்து.”

இப்படி மாமாவோட பழகிப்பழகி , அவர் என்னைக் கிண்டல் அடிப்பதற்கு முன் நானே அவரைக் கிண்டல் செய்யத் தொடங்குவேன். ஆனாலும் கடைசி வெற்றி அவருக்கே!

“ என்ன மாமா நேற்றைக்குக் காணோம் ? பஸ் பிரேக் டவுன் -ஆ ? “

“ இல்லடா மருமகனே உன்னைப் பாக்கக் கிளம்பினேனா ! விஷயம் தெரிஞ்ச ரூட் நம்பர் 13 ( திருவல்லிக்கேணி – தி. நகர்) மொத்தமும் “ஸ்டிரைக்” அப்படின்னு சொல்லிட்டா “

“உன் மருமானை உன்னைப் போலவே ஆக்கிட்டயே “ என்று என் அன்னை அங்கலாய்த்துக் கொண்டே உள்ளே செல்வாள்.  

ஒருமுறை என் மாமாவும் அவரது நண்பரும் மதியம் ஒரு மணி வாக்கில் ஒரு கல்யாண சத்திரத்தைக் கடக்கின்றனர். அன்று முகூர்த்த நாள். வெளியே இருந்த கூட்டம் சாப்பாட்டுக்கு உள்ளே செல்ல ஆரம்பித்தது. யார் வீட்டுக் கலியாணமோ அது! என் மாமா ஒரு சாப்பாட்டு இரசிகர் . அவரை கலாட்டா செய்வதற்காக அவரது நண்பர்

“ கிருஷ்ணா ! பழக்க தோஷத்துல சாப்பாட்டுக்கு நீயும் உள்ள நுழையப் போற “ என்று கிண்டல் அடித்தார்.

மாமா அவரை ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்து “ ஆமடா ! சாப்பிடணும்னா நாங்க உள்ளதான் நுழையணும். உனக்கு அப்படி இல்ல. கொஞ்ச நேரத்துல அவர்களே வெளியில கொண்டு வந்து போடுவார்கள்” என்றார். அன்று அவர் நண்பர் முகம் போன போக்கு வரலாற்றில் இடம் பெற வேண்டிய ஒன்று.

மிகைப் படுத்திப் பேசுவதில் மாமா வல்லவர். ஆபீஸ் விட்டு வரும் வழியில் ஆக்சிடென்ட்டில் இரண்டு சைக்கிள் கீழே விழுந்திருக்கும் . “ வர வழியில் ஒரு ஆக்சிடென்ட். நூறு சைக்கிள் அவுட் “ என்பார்.

ஒருமுறை எங்கள் வீட்டு ஃபங்சனில் செய்த பால் பாயசத்தை மாமாவின் அலுவலகத்திற்கு அம்மா ஒரு கூஜாவில் அனுப்பி வைத்திருந்தார், எல்லோரும் குடிக்கட்டும் என்று கொஞ்சம் நிறையவே அனுப்பியிருந்தார். “ எப்படி இருந்தது ?” என்று கேட்டதற்கு மாமாவின் பதில் “ அடடா ! அமிர்தம். பாயசம் குடிச்சு முடித்த பிறகு ஆபீஸ் மொத்தமும் தூங்கிடுத்து . எழுந்து பாத்தா விடிஞ்சாச்சு “ என்றார்.

மாமா கருணையும் அக்கறையும் கொண்டவர். கலாட்டா செய்த போதும் யாரும் வருத்தப்பட விடமாட்டார். வேலைகளைத் தானே முன்விழுந்து ஏற்றுக் கொள்வார். ஒருமுறை நாங்கள் போயிருந்த  எக்சிபிஷன் கூட்டத்தில் ஒரு சிறுவன் கோன் ஐஸ்கிரீம் கையில் வாங்கும் போது அதைத் தவற விட்டுவிட்டு அழத் தொடங்கிவிட்டான். சிறுவன் யாரென்று எங்களுக்குத் தெரியாது. எனினும்  “ போனால் போகட்டும் போடா” என்ற பாடலை உரக்கப் பாடிக் கொண்டே அந்த சிறுவனுக்கு ஒரு புது கோன் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துவிட்டு அவனது அழுகையை நிறுத்தி விட்டு வந்தவர் மாமா. அதுதான் அவர் கேரக்டர்.

அவர் தனது இறுதிக் காலத்தில் நங்கநல்லூர் பகுதியில் வாழ்ந்துவந்தார். இறுதிச் சடங்கிற்குச் சென்றிருந்தேன். வாய்க்கரிசி போட்டு முகத்தை மூடும் போது கூட, சிரித்துக் கொண்டு இருப்பது போலவே அவர் முகம் இருந்தது.

இன்றும் ஏதாவது உறவினர் நண்பர் குழுவில் யாரேனும் உரக்கச் சிரித்து ஜோக் அடித்துக் கொண்டு இருந்தால் “கிருஷ்ணன் மாமா” நினைவு மனத்தில் மெல்லிய இழையாக ஓடி மறையும்.