)
எங்கும் தேர்தல் பற்றிய வாதங்களும் விவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இன்றைய தேர்தல் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் உலக அரங்கில் நமது ஜனநாயக மரபினை சரியான முறையில் காட்டுகின்றனவா என்பது விவாதத்திற்குரியது.
சுதந்திரம் அடைந்த பிறகு முதல் பொதுத் தேர்தல் அக். 25, 1951 – பிப். 21 1952 வரை நடந்தது. மார்ச் 14, 1952 ல் தேர்தல் ஆணையம் முறையாக உருவாக்கப் பட்டது. ஒரு தேர்தல் ஆணையாளர் தலைமையில், மற்றும் இரண்டு ஆணையாளர்களைக் கொண்டது இந்த ஆணையம்.
இரண்டு வகை வாக்குப்பதிவுகள் – மின்னணு வாக்குப்பதிவு (EVM – இதன் கண்டுபிடிப்பில் எழுத்தாளர் சுஜாதாவின் பங்களிப்பு முக்கியமானது) மற்றும் தபால் மூலம் வாக்குப்பதிவு. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
NOTA – கருப்பு சிலுவையுடன் கூடிய வாக்குச்சீட்டு 2015 ல் அறிமுகம். இப்போது மின்னணு மெஷினில் தனியாக ஒரு ஆப்ஷன் பட்டன் இருக்கிறது.
முதன் முதலில் புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் பீகாரில் அறிமுகப் படுத்தப்பட்டது (2015).
இன்றைய ஜனநாயக தேர்தல் முறைகளுக்கு முன்னோடியாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ‘குடவோலை’ தேர்தல் முறை தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அன்றைய தேர்தல் முறைகளிலிருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அன்றைய வேட்பாளர், வாக்காளர் தகுதிகளும், தேர்தல் முறைகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
சங்க காலம் என்பது கிமு 3ஆம் நூற்றாண்டு முதல், கிபி 3 ஆம் நூற்றாண்டுவரையில் ஆன காலம் – சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு போன்றவை சேர சோழ பாண்டியர்களின் ஆட்சிக்கால வாழ்க்கைமுறைகளைச் சொல்கின்றன. அந்தக் கால சமூக வாழ்க்கை, அரசியல் போன்றவை குறித்த செய்திகளும் காணக் கிடைக்கின்றன.
சோழர் காலத்தில் ஊர்தோறும் ஊராட்சி மன்றங்கள் தன்னலமற்ற தொண்டு செய்தன. அறநெறி பிறழாமல் நடுவு நிலைமையுடன் கடமையாற்றின. கிராம சபை, தேவதானத்துச் சபை, ஊர்ச்சபை, நகரசபை என நான்கு சபைகள் இருந்தன. இவற்றின் உறுப்பினர்கள் “குடவோலை” வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குடவோலை முறையில் தலைவர்களையும், உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் “ஜனநாயக”ப் பண்பாடு தமிழகத்தில் இருந்துள்ளது என்பது பெருமைக்குரியது.
(அகம் 77 – மருதன் இளநாகனார்) சங்கப்படலில் குடவோலை முறை ‘குழிசி ஓலை’ முறை எனக் குறிப்பிடப்படுகின்றது.
வேட்பாளர்களுக்கான தகுதிகள், தேர்தல் நடத்தும் முறைகள் பற்றி சோழர்காலக் கல்வெட்டுகளில் – உத்திரமேரூர் குடவோலைக் கல்வெட்டுகள் – கூறப்பட்டுள்ளன. முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கி.பி.920 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டது ‘குடவோலை’ தேர்தல் முறைக் கல்வெட்டு.
ஒவ்வொரு ஊரின் சபைகளின் கடமைகள் அதிகமாகவே, பல்வேறு வாரியங்கள் அமைக்கப்பட்டு அவை மூலம் பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆட்டை வாரியம், ஏரி வாரியம், தோட்ட வாரியம், கலிங்கு வாரியம், பஞ்சவார வாரியம், தடிவழி வாரியம், குடும்பு வாரியம் எனப் பலவகை வாரியங்கள் இயங்கி வந்தன. இவ்வாரியங்களில் பணி புரிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, இருந்த சட்ட விதிகள் சுவாரஸ்யமானவை.
உறுப்பினராவதற்கான தகுதிகள்: சொத்து, கல்வி, ஒழுக்கம் ஆகியவையே முக்கியமான தகுதிகளாகக் கருதப்பட்டன.
சொந்த இடத்தில் வீடுகட்டிக் குடியிருப்போர், கால் வேலிக்கும் மேல் நிலம் வைத்திருப்போர், கல்வி அறிவுடன், அறநெறி தவறாமல் தூய வழியில் பொருள் ஈட்டி வாழ்பவர்கள், காரியங்கள் நிறைவேற்றுவதில் வல்லமை உடையவர்கள், முப்பத்தைந்து வயது முதல் எழுபது வயதிற்கு உட்பட்டவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் வாரிஅத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள், பெரும் கல்வி அறிவுடன் அரைக்கால் வேலி நிலம் உள்ளவர்கள்.
உறுப்பினராகத் தகுதியற்றவர்கள்:
உறுப்பினராயிருந்து கணக்குக் காட்டாதவர்கள், உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்கள, பெரிய குற்றங்கள் புரிந்தவர்கள், தீயோர் சேர்க்கையால் கெட்டுப்போனவர்கள், பிறர் பொருளைக் கவர்ந்தோர், கையூட்டு வாங்கியவர்கள், ஊருக்குத் துரோகம் செய்தவர்கள், குற்றம் புரிந்து கழுதை மேல் ஏறியவர்கள், கள்ளக் கையெழுத்துப் போட்டவர்கள். கிராமக் கண்டகராய் – கண்டகன் என்றால் முள் போன்றவன், இன்றைய பேட்டை ரவுடி – இருப்பவர்கள் தேர்தலில் நிற்க முடியாது.
‘குடவோலை’ முறை:
பெரும்பாலும் பகல் நேரத்தில் முரசு அடித்து சபை கூட்டப்பட்டு. மரத்தடிகள், ஏரி, குளக்கரைகள், கோயில் மண்டபங்கள் போன்ற இடங்களில் கூட்டம் நடத்தப்படும். உறுப்பினர்களுக்குச் சம்பளம் கிடையாது. பதவிக் காலம் ஓராண்டு!
ஒவ்வொரு ஊரும் பல ‘குடும்பு’களாகப் – இன்றைய வார்டுகள் போல – பிரிக்கப்பட்டிருந்தன. குடும்புகளில் உள்ளவர்களே, தங்கள் உறுப்பினரைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றவர்கள்! தகுதியும் விருப்பமும் உடையவர்கள் பெயர்களை ஓலைகளில் எழுதிக் குடத்தில் இட்டு, கட்டி சீல் வைத்துவிடுவர். எல்லாக் குடும்புகளிலிருந்தும் குடங்களை, ஊர்ப் பொது சபைக்குக் கொண்டு வந்து, கட்டைப் பிரித்து, சிறு குழந்தையை விட்டு ஓலையை எடுக்கச் சொல்வர். அதை ஊர்ப் பெரியவர் ஒருவர், இரண்டு கைகளாலும் எடுத்துப் படிப்பார். பின்னர் அனைவரும் பார்க்க, ஓலையில் உள்ளவர் பெயர் உறுப்பினராக எழுதப்படும். ‘கயிறு பிணிக்குழிசி ஓலை கொண்மார் பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்கள்’ என்கிறது சங்க இலக்கியம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கு நிற்பவன் தனது சொத்துக்கணக்கு காட்டவேண்டும். காட்டாதவன் தேர்தலில் நிற்க முடியாது என்ற விதி உத்திரமேரூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலத்தில் செய்த பணிகள் குறித்தும், சேர்த்த சொத்துக்கள் குறித்தும் பொது மக்களுக்குக் கணக்கு காட்டவேண்டும். இல்லையேல் மீண்டும் அவர் தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர் என்கிறது உத்திரமேரூர் கல்வெட்டு.
இப்படிப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாலேயே, கல்வி, வேளாண்மை, கலை, பொருளாதாரம் எல்லாம் சிறந்து விளங்கின. எவ்வளவு ஆற்றல் உடைவர் என்றாலும், குறிப்பிட்ட கால கெடுவிற்குப் பிறகு, மற்றவர்க்கு இடம் கொடுத்து விலக வேண்டும் என்று நம் மக்கள் விரும்பினர். அதன்படியே, ஒரு முறை உறுப்பினர் ஆனவரோ, அவரது நெருங்கிய உறவினரோ அடுத்த மூன்று வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆங்கிலேயரே வியந்து போற்றிய மரபு இது.
பாண்டியர்கள், சோழர்களுக்கு முன்பே குடவோலை முறைத் தேர்தலை நடத்தினார்கள் என்பதற்கான ஆதாரக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. உத்திரமேரூர் கல்வெட்டுகளுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே திருநெல்வேலியில் உள்ள மானூர் கிராமத்தில் பாண்டிய மன்னன் மாறன் சடையன் காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. மானூர் கிராமத்து அம்பலவாணர் கோவில் மண்டபத் தூணில் உள்ளது இந்தக் கல்வெட்டு. இதில் கிராம சபையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முறை, உறுப்பினர்களாவதற்கான தகுதிகள் பற்றி எல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் இக்கல்வெட்டில் உள்ளன.
மேற்கூறிய இரண்டு கல்வெட்டுகளுக்கும் இடையில் 123 ஆண்டுக் கால இடைவெளி உள்ளது. மானூர் கல்வெட்டு வட்டெழுத்திலும், உத்திரமேரூர் கல்வெட்டு தமிழ் எழுத்திலும் காணப்படுகின்றன. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், மானூர் கல்வெட்டுப் பழமையானது என்கின்றனர். இருந்தாலும், வேட்பாளர்கள் தேர்வு, சட்ட திட்டங்கள் ஆகியவை ஒன்றாகவே இருந்திருக்கின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், உலகின் பிற நாடுகளில் தேர்தல் என்பது அரிதாகவே இருந்திருக்கின்றது. வாக்காளர்கள், வேட்பாளர்களின் தகுதி குறித்து பேசும் மானூர் மற்றும் உத்திரமேரூர் கல்வெட்டுகள் தமிழகத்தின் குடியாட்சி முறையின் தொன்மையினைக் காட்டுகின்றன!
இன்றைய வெட்டுத் தேர்தல்களுக்கும், அன்றைய கல்வெட்டுத் தேர்தல்களுக்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை!
