–
–இந்த மாதக் கதைகளில் சிறந்ததாக நான் கருதுவது :
வாசகசாலை மார்ச் 2 இதழில் வெளிவந்த அசோக் குமார் அவர்கள் எழுதிய “பதினாறும் பெற்று” என்ற சிறுகதை.
இந்த மாதச் சிறுகதையாக எனது தேர்வு இது.
– D ராமச்சந்திரன்
1. அசோக் குமார் அவர்கள் எழுதிய “பதினாறும் பெற்று” என்ற சிறுகதை
16 குழந்தைகள் பெற்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் வீட்டிற்கு புதுமணத் தம்பதியர் அஞ்சுவும் பத்துவும் உணவு அருந்த வரும் நிகழ்வு தான் கதை. விருந்துக்கு அழைத்தவன் அந்த வீட்டின் 16வது கடைக்குட்டி பத்துவின் நண்பன் பரந்தாமன். அண்ணன்- தங்கை, அக்கா- தம்பிகளின் அன்பான சீண்டல்கள். கிண்டல்கள் கேள்விகள் என நாமும் அந்த வீட்டிலேயே இருப்பது போன்ற உணர்வு கூட்டுக் குடும்பத்தில் பிறந்து அந்த சூழ்நிலையில் வந்த ஒருவரால் தான் இது போல எழுத முடியும் மிக மிக அருமை.
பிடித்த மற்றவை:
2 . தொடுதிரை எஸ் ராஜகுமாரன் (குமுதம் மார்ச் 13)
வயதானவர்கள் தன்னிடம் யாரும் அதிகமாக பேசுவதில்லை என்ற மன இயக்கத்தை பிரதிபலிக்கும் கதை. பல வீடுகளில் தற்போதையநிலை இதுதானே? தனது மூத்த நண்பரைத் தந்தை ஸ்தானத்தில் வைத்து அன்பான வார்த்தைகளைப் பேசி மகிழ்விக்கும் முத்துக்குமரன் போன்றவர்களை நினைத்தால்… கண்கள் குளமாகி மனம் நிறைகிறது
3. மனம் இருந்தால் பறவைக் கூட்டில் கௌசல்யா ரங்கநாதன் – (மார்ச் 2024 அமுதசுரபி)
‘கை கால்களை கூட மீட்டி உட்கார முடியாத இந்த சிறிய வீட்டில் இருந்துகொண்டு, உறவினர்களை வீட்டிற்கு அழைக்கிறானே’ என்கிற கேலி பேசும் ஒரு உறவினர் ஒருவர், வேறு வழியன்றி அந்த வீட்டில் குடும்பத்துடன் தங்க நேரிடுகிறது. அன்பையும் உபசரிப்பையும் கண்டு நெகிழ்ந்துவிடுகிறார். மனம் இருந்தால் பறவைக் கூட்டில் மான்களும் வாழலாம் என்ற பாடலை நினைவு கூறுவதாக சொல்லி மகிழ்கிறார்
4. அன்னபூரணி எஸ் எஸ் அனுசூயா ( குங்குமம் மார்ச் 29)
எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், தன்னை வளர்த்த பெரியம்மாவின் மீது இருந்த பாசத்தை மறக்கவா முடியும்? பல சண்டைகள் முடிவுக்கு வருவது சாவு வீட்டில் என்பது பல குடும்பங்களில் நடப்பதுதான். உறவினர்கள் பலவாறு இழிவு படுத்திய போதும் சாவு வீட்டில் தகராறு செய்வது சரி இல்லை என்று குணாளன் அமைதியாக இருந்து விடுகிறான்.
5. ஊசி மல்லி – எம் ஜி கன்னியப்பன் (குமுதம் மார்ச் 6.)
நாகரிகமான பெண் என்றால் இழுக்க இழுப்புக்கு வருவாள் என்று நினைத்த மடத்தனமான நினைப்பிற்கு சரியான நெத்தியடியாக இடியை இறக்குகிறாள் தீப்தி. பெண்களின் மன ஓட்டத்தை ஆழம் காண யாராலும் முடியாதல்லவா?
6. மகராசியும் மசால்வடையும் – குடந்தை அனிதா (ஆனந்த விகடன் மார்ச் 6)
மசால்வடையில் தன்னையே மறக்கும் மகராசி, அவளுக்கு மசால்வடை கொடுக்கும் ‘சாமிபுள்ள’யின் வெகுளித்தனம், எப்போதும் கிராமத்து பண்ணையின் ‘மேட்டிமைத்தனத்தில்’ வாழும் அம்மா தேவகி … மறக்க முடியாத கதாபாத்திரங்கள். மகராசி அமெரிக்காவில் மசால்வடை சுட்ட கதை/புராணம் வெகு ஜோர்
7. கத்திரிக்காய் வெண்டைக்காய் தீ க நாராயணன் (தினமணி கதிர் 17 /3)
காய்கறி கடையில் இருக்கும் கூட்டத்தைத் தனி ஆளாய் சமாளிக்கிற முருகன். கடகடவென வாயாலேயே கணக்கு போட்டு காசு வாங்குவதில் படுசுட்டி. தான் வாங்கியதில் சேனைக்கிழங்கை முருகன் கணக்கில் சேர்க்கவில்லை என அவனுக்கு பணம் கொடுப்பதற்காக வருகிறார் ஒரு வாடிக்கையாளர். அதையும் கணக்கு பண்ணி விட்டேன் என்று ‘கர்வ பங்கம்’ செய்வது சூப்பர்.
8. தேவதை அண்டனூர் சுரா (ஆனந்த விகடன் 13/3)
‘சொர்க்க ரதம்’ பார்க்கப் பார்க்கப் ப் பிடித்து போய்விடுகிறது கண்ணையாவிற்கு. ஒரு ரதத்தில் ‘விற்பனைக்கு’ என்றிருப்பதைப் பார்த்ததும் அந்த சொர்க்க ரதத்தை வாங்கி உரிமையாளனாகி குடும்ப வறுமையை போக்கலாம் என திட்டமிடுகிறான். தற்போதைய சொந்தக்காரர் விற்பதற்கான காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போகிறான். வங்கியின் கடனை கட்ட ஏதாவது சாவு விழுகிறதா என்று எதிர்பார்ப்புடன் வாழும் உறுத்தல்தான் அது.
‘நீ மெதுவாகச் சென்றால் உன்னை நான் விலகிச் செல்வேன் நீ வேகமாக வேகமாகச் சென்றாள் உன்னை தொடர்ந்து வருவேன்’ என்ற வாசகங்கள் சொர்க்க ரதத்தில் இருந்தது ஓர் வித்தியாசமான கோணம்.
9. பீடப் பூக்கள் பிரிமியா கிராஸ்வின் ( ஆனந்த விகடன் 20/3)
தாமஸ் என்கிற சிறுவனின் மன ஓட்டங்கள்தான் இந்தக் கதை. தேவாலயம், பூசை என ஆர்வத்துடன் பார்த்து தன்னையும் அதில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவன் அவன். அங்கு நடக்கும் ஊழலை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். நடையும் கதையின் போக்கும் அருமை
10. இறுக்கம் தேவி நாதன் (குங்குமம் 01.03)
மிக அருமையான கதைக்கரு. குடும்பத்தில் ஏற்படும் கோபதாபங்களினால் உக்கிரமாக இருகிறான் அண்ணன் சென்னிமலை. தம்பியின் நல்ல முயற்சியையும் அதற்கான காரணமும் என்று தெரிந்ததும் தன் கோப தாபங்களை எல்லாம் விட்டு தன் பங்கு நிலம் , மேலும் பணம் எல்லாம் அளிப்பதாகக் கூறி உயர்ந்துவிடுகிறான். நல்ல முடிவு
