விக்கிரமசோழன்- தொடர்ச்சி

 

விக்ரமசோழன் வரலாறு | VikramaChola History | வரலாற்று தோழன் | சோழர்களின்  வரலாற்று பகுதி 23 | - YouTube“இவனது ஒப்பற்ற செங்கோல், எட்டுத்திசையையும் அளக்கிறது. இவனுடைய வெண்கொற்றக்குடை, எட்டுத் திசைகளுக்கும் நிழல் செய்கின்றது. வேற்றரசர்கள், தங்கள் மகுடங்களை இறக்கி வைத்து இவன் பாதங்களைப் பணிகின்றனர்.”

-ஒட்டக்கூத்தர் சொல்கிறார்.

இம்மன்னன் பெருமைக்காக முடி சூட்டிக்கொள்ளவில்லை. இவ்வுலகைக் காக்கவே முடிசூட்டி ஆட்சி புரிந்தான் எனும் கருத்தையும் ஒட்டக்கூட்டர் வைக்கிறார்.

விக்கிரமசோழன் ஆட்சியில், நாட்டு நடப்பைப் பார்ப்போம்:

ஆட்சியின் ஆறாம் ஆண்டு (1125): தொண்டை நாட்டிலும், நடுநாட்டிலும் பெருவெள்ளம் ஏற்பட்டது. அதனால் கொடிய பஞ்சம் விளைந்தது. ஆறு வருடங்கழித்து சோழநாட்டிலும் பெரும் பஞ்சம் வாய்த்தது. வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு கோட்டங்களிற் பெரும்பகுதி ஆற்று வெள்ளத்திற்கு இரையானது. இதனால் சில இடங்களில் ஊர்ப் பொது நிலங்களை விற்று அரசாங்க வரி இறுக்கப்பட்டது. ‘காலம் பொல்லாதாய், நம்மூர் அழிந்து, குடி ஒடிப்போய்க் கிடந்தமையால்’ என்கிறது கல்வெட்டு. அரசன், மற்றும் செல்வம் மிகுந்தவர்கள், தமது பெருங்கொடையால், மக்களை இயன்றவரைக் காத்தனர். கோவிலதிகாரிகள் மக்களுக்கு கடன் கொடுத்து உதவி செய்தனர்.

இந்த நன்னடத்தைக்காக விக்கிரம சோழனை “தியாகசமுத்திரன்” என அன்போடு விருது கொடுத்து அழைத்தனர்.

அவனது பத்தாண்டு ஆட்சி நிறைவு நாள். பிற அரசர்கள் அனுப்பிய திறைப்பொருள் மலை போலக் குவிந்தது. பத்தரை மாற்றுத்தங்கமாக கப்பம் கட்டிக் குவித்தார்கள். தங்க இலையில், நவரத்தினங்களால் பின் வரும் சொற்கள் பொறிக்கப்பட்டிருந்தது. “அரசன் நீண்ட நாள் வாழ்ந்து இந்த மண்ணைப் பாதுகாக்கட்டும்”. விக்கிரம சோழன் தீவிர சிவபக்தனாக விளங்கினான். வந்த திறைப்பணத்தை வைத்து, தில்லையில் அம்பலவாணரது கோவிலுக்கு திருப்பணி செய்தான். கோபுரவாசல், கூடசாலை, பலிபீடம் அனைத்தும் பொன்னால் வேயப்பட்டது. சிதம்பரம் தில்லைநாதன் கோவிலுக்குப் பொற்கூரை வேய்ந்தான். தன்‌ பிறந்த நாளான உத்திரட்டாதி நாளில்‌ நடைபெறும்‌ பெருவிழாவில்‌, இறைவன்‌ எழுந்தருளும்‌ திருத்தேரையும்‌ பொன்‌ வேய்ந்து அதற்கு முத்துவடங்கள்‌ அளித்துத்‌ திருப்பணிகள்‌ செய்தான். ஒரு வருடம் (1128 இல்)  சோழ சாம்ராஜ்யத்தின் வருமானம் முழுவதையும் சிதம்பரம் கோயில் கைங்கர்யத்துக்கும், விரிவாக்கத்துக்கும் கொடுத்து விட்டான்.

‘சிவகாமி அம்மன், அவன் எழுப்பிய கோயிலின் அமைப்பையும் எழிலையும் கண்டு மனம் மகிழ்ந்தாளாம். அதனால், தான் பிறந்த இமயமலைப் பகுதியை இனி நினைப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டாளாம்’ – புலவர் ஒட்டக்கூத்தரின் கற்பனை சற்று ஓவர் தான்!

தில்லையில், விக்கிரமசோழன் செய்த திருப்பணிகளைப் பட்டியலிட்டால், அது எண்ணில் அடங்காது. எழுத்திலும் அடங்காது.

அவன் ஆட்சியில், கங்கைகொண்டசோழபுரம் தலைநகராகத் திகழ்ந்தது. பழையாறை, இரண்டாம் தலைநகராக இருந்தது. தில்லை மாநகர்‌ (சிதம்பரம்‌), காட்டுமன்னார்‌ கோயில்‌ போன்ற இடங்களில்‌ அரண்‌மனைகள்‌ இருந்தன.

முக்கியமான சமாசாரம். இவன் ஆட்சியில் பெரும் போர்கள் இல்லை. போர்களில்லாமல், சரித்திரத்தில் இடம் பெற்ற மன்னர்களில் விக்கிரமசோழன் ஒருவன். தன் தந்தையின் காலத்தில் பல போர்களில் பங்கெடுத்த விக்கிரமன், தனது ஆட்சிக் காலத்தில் மிக குறைந்தப் போர்களிலேயே ஈடுபட்டான். சேரநாடும், பாண்டியநாடும் இவனுக்கு பணிந்தே இருந்தது. அமைதிக்குப் பெயர் தான் விக்கிரமன் போலும். நாடு முழுதும் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து நலம் புரிந்தான். நல்ல அரசியல்வாதி!

விக்கிரமசோழனுக்கு, முக்கோக்கிழானடி, தியாகபதாகை, நேரியன்மா தேவியார்‌ என மூன்று மனைவியர்‌ இருந்துள்ளனர்‌. அவர்களில்‌ முக்கோக்கிழானடி இறந்தபின்,‌ தியாகபதாகை பெருந்தேவியாக விளங்கினாள்‌.

ஒட்டக்கூத்தர் சொல்கிறார்: ‘சங்கரனின்‌ மனைவியாக உமையைப்போல்‌ முக்கோக்‌கிழானடியும்‌, கங்கை போன்று தெரிவையர்‌ திலகம்‌ தியாக பதாகையும்‌, திருமாலின்‌ மார்பைவிட்டு அகலாத திருமகள்‌ போல புனித குணவனிதை திருபுவன முழுதுடையாளும்‌ (நேரியன்‌ மாதேவி) விளங்கினார்‌’.

இப்படி அரசியாரகளைப்  புகழ்ந்து பாடிய ஒட்டக்கூத்தருக்கு அரசன் பல பரிசுகள் கொடுத்துச் சிறப்பித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

‘விக்கிரம சோழன் உலா’ ஒட்டக்கூத்தர் பாடியது. அதைப்பற்றிச் சற்றேனும் சொல்லாவிட்டால் சரித்திரம் நம்மை மன்னிக்காது.

மன்னவன்,‌ தன்னுடைய வெற்றியைக்‌ கொண்டாடும்‌ முகமாகவோ அல்லது விழாக்‌ காலங்களில்‌ வீதி உலா வருவதைக்‌ காரணமாக வைத்தோ புலவர்களால்‌ பாடப்படும்‌ நூலே உலா எனப்படும்‌. புலவர்‌ பெருமக்கள்‌ தாம் வணங்கும்‌ இறைவனையோ, தங்களை ஆதரித்த மன்னர்கள்‌, சிற்றரசர்கள்‌, செல்வந்தர்கள்‌ ஆகியோரையோ பாட்டுடைத்‌ தலைவனாகக் கொண்டு பாடுவது உலா இலக்கியமாகும்‌.

விக்கிரம சோழனின்‌ அவைக்களப்‌ புலவராகத்‌ திகழ்ந்த ஒட்டக்கூத்தர்,‌ சிற்றிலக்கிய வகைகளில்‌ ஒன்றான உலா இலக்கியத்தினை அம்மன்னனின்‌ பெயரில்‌ விக்கிரமசோழன்‌ உலா என்ற பெயரில்‌ படைத்தார்‌. பாட்டுடைத்‌ தலைவனான விக்கிரம சோழனின்‌ அழகினையும்‌, வீரப்பெருமைகளையும்‌ உணர்ந்த அவனது நாட்டில்‌ உள்ள பெண்கள்‌ அம்மன்னன்‌ உலா வருகின்றபோது, அவனது அழகினைக்‌ கண்டு மகிழ்வதாகவும்‌, அவ்‌ வேளையில்‌ எழுவகையான பருவப்பெண்களும்‌ அவன்‌ மீது காதல்‌ வயப்பட்டு காம மயக்கத்தில்‌ மூழ்குவதாகவும்‌ சொல்லி, இந்த உலா இலக்கியத்தினைப்‌ படைத்துள்ளார்‌.

எழுவகைப்‌ பருவ மங்கைகளும்‌ தங்களது பருவத்துக்‌குரிய வயதில்‌ மன்னன்‌ மீது காதல்‌ வயப்படுவதாக குறிப்பிடுகின்றார்‌. இவ்வகையில்‌ பேசப்படுகின்ற பெண்கள்‌ பற்றிய செய்தி உலா இலக்கியத்தில்‌ “பின்னெழு நிலை” என்று பேசப்படுகின்றது. எழுவகைப்‌ பெண்களான, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்‌ என வகைப்படுத்தி அவர்களின்‌ செயல்‌களால்‌ மன்னன்‌ மீது கொண்டுள்ள ஈடுபாட்டினை‌ எடுத்து இயம்புகின்றனர்‌. இலக்கிய ஆர்வலர்கள், இந்த உலாவைப் படித்து இன்புறவேண்டும்.

விக்கிரமன், கி.பி.1118ஆம்‌ ஆண்டு, இளவரசுப்‌ பட்டமேற்று சுமார்‌ 17 ஆண்டுகள்‌ சிறப்புடன்‌ ஆட்சி செய்தான். கி.பி.1133 இல்‌ தம்‌ புதல்வனான இரண்டாம்‌ குலோத்துங்கசோழனுக்கு இராஜகேசரி என்ற பட்டத்துடன்‌ சோழநாட்டின்‌ பேரரசன்‌ ஆக்கினான்‌. சிதம்பரம் அருகே தனக்கு ஒரு மாளிகையும் கட்டிக் கொண்டு அங்கே தன் ஆட்சியின் இறுதி ஆண்டுகளைக் கழித்தான்.

சரி, விக்கிரமசோழன் கதையை முடித்து விட்டு, அடுத்த சோழனைப் பற்றிக் கதைக்கலாம்.

அவை விரைவில்..

குறிப்பு: ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ஓட்டக்கூத்தராமே ! இதில் எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை !  படியுங்கள்  லிங்க் கீழே : 

https://senguntharmudaliarhistory.blogspot.com/2020/10/Ottakoothar%20mudaliyar%20kaikolar.html