
இந்திய வடநாட்டில் தேவபூமி என்று அழைக்கப்படுவது உத்ரகண்ட் மாநிலம். இதன் இமயமலை சாரலில் கார்வால் பகுதியில் மேற்கொள்ளும் ‘சார்தாம் யாத்ரா’ மிகப் பிரசித்தி பெற்றது. யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் என்கிற இந்த நான்கு தலங்களையும் ஒருசேரத் தரிசிப்பதுதான் இந்த யாத்திரையின் நோக்கமாகும்.
இதன் முதல் கட்டமான யமுனோத்ரி யாத்திரையை அடிவார கிராமமான ஜாங்கி செட்டி என்ற இடத்திலிருந்து துவங்குவார்கள். சுமார் ஆறு கிலோமீட்டர் உயரமான மலை ஏற்றத்தில் பயணித்தால், கடல் மட்டத்திலிருந்து 3290 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும் யமுனா நதி முகத்துவாரத்தை அடையலாம்.
சுற்றிலும் வெள்ளிப் பனிமலைகள் சூழ்ந்திருக்க யமுனோத்ரி தேவியின் கோயிலுக்கு வெகு அருகில் ஒரு அற்புதமான வெந்நீர் குளம். அருகிலுள்ள மலையிலிருந்து வரும் ஊற்றுநீரைக் கலந்து, குளிப்பதற்கு ஏதுவாக சம நிலையில் வைத்திருப்பார்கள். குளிரில் நடந்து வந்த அலுப்பு ஒரு நிமிடத்தில் கரைந்து விடும்!
இந்த சிறிய குளத்தின் ஆனந்தத்தை மீண்டும் பெரிய அளவில் அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்புதான் ஐஸ்லாந்தில் உள்ள ப்ளூலகூன் வெந்நீர் குளம்!
ஐஸ்லாந்தின் எரிசக்தி தேவைகளுக்காக, புவி வெப்பத்தை உபயோகப்படுத்தி (Geo Thermal) மின்சாரம் தயாரிக்கும் Svartsengi Geothermal மின் உற்பத்தி நிலையம் 1976 இல் உருவாக்கப்பட்டது. உற்பத்தி முடிந்து வெளியேறும் நீர், வெளியில் உள்ள லாவா படுகைகளில் வெறுமனே விடப்பட்டது.
ஆங்காங்கே குட்டையாகத் தேங்கி இருந்த இந்த சுடுநீரில் குளித்த சிலர் தங்கள் சுகானுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்ல இந்த இடம் ‘பாப்புலர்’ ஆனது. மேலும் தொடர் குளியலால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதையும் மருத்துவ ரீதியாகக் கண்டறியப்பட்டது. இடம் சீர்திருத்தப்பட்டு, 1987 முதல் பொதுமக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
பெரிய ஏரி போலக் காட்சியளிக்கும் இந்த செயற்கை வெந்நீர் குளம், 1992 இல் இருந்து முழுமையாகச் சுற்றுலாத் தலமாகச் செயல்பட்டு வருகிறது. குளிப்பதற்கு ஏற்ப இதமான தட்பவெப்ப நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
பொதுவாகக் குளம், ஏரிகள் போன்றவற்றைத் தூரத்திலிருந்து பார்த்தால் வானத்தின் நீல நிறத்தைப் பிரதிபலிக்கும், ஆனால் இறங்கிக் குளித்தால் அந்த நிறத்தை காண இயலாது. இந்த ப்ளூ லகூனின் விசேடம், குளிக்கும் பொழுதும் நீல நிறத்தை உணரலாம். காரணம், நீரின் அடியில் பரவியிருக்கும் சிலிக்கா படிமங்கள்! இவை, வெளியிலுள்ள ஒளிக் கதிர்களை உள்வாங்கி நீல நிறமாகப் பிரதிபலிக்கின்றன.
மேலும் இந்த குளத்திலுள்ள சிலிக்கா, உப்பு மற்றும் பாசி போன்றவை நோய் தீர்க்கும் குணம் கொண்டவை. இந்த குளத்தின் அடியில் தங்கும் வெண்ணிற சிலிக்கா மண்ணை கரையில் ஆங்காங்கே குமித்து வைத்திருக்கிறார்கள். அங்குக் குளிப்பவர்கள் இதை முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போல அப்பி, ஊறிக் குளிப்பதைக் காண முடியும்.
தண்ணீர் துல்லியமாகச் சுத்தமாகக் கண்ணாடி போல உள்ளது. சுற்றுப் பகுதிகளில் ஆங்காங்கே வெந்நீர் ஊற்றுகளிலிருந்து கிளம்பும் புகை மண்டலம், மேலே நீல வானம். சுற்றிலும் பழுப்பான குட்டி குட்டி கற்பாறைகள், எவர் முகத்திலும் மகிழ்ச்சி என்று ஒரு சொர்க்க லோகமாகவே இந்த இடம் திகழ்கிறது.

இந்த குளத்தில் நீச்சல் அடிக்கலாம், குளிக்கலாம் ஆழம் எவ்வளவு? என்று ஆங்காங்கே அளவுகள் குறிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு என்று தனியான குளங்களும் உண்டு. லாக்கர் வசதிகள் உள்ளன. முக்கியமாக டவல் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சுத்தமான வெண்ணிற துவாலைகளை அங்கேயே கொடுத்து விடுகிறார்கள். ஆயினும் அனைவரும் ஸ்விம் சூட் உடுப்பது அவசியம். வெளியிலுள்ள ஷவரில் குளித்து விட்டு குளத்தில் இறங்க வேண்டும். வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என எல்லோரும் ஒன்றாக லூட்டி அடித்துக் கொண்டு குளிப்பதால், வெட்கப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
நாங்கள் நிச்சயம் குளிப்பதாக இல்லை, வெறும் வேடிக்கை பார்ப்பதற்காக மட்டும் வந்திருக்கிறோம் என்று சொல்பவர்களின் விரதம் வெறும் ஐந்து நிமிடத்தில் மாயமாக மறைந்து போவதை இங்குக் காணலாம்.
உள்ளே நுழைந்தால் வெளியே வர மனமே இருக்காது. நாள் முழுவதும் குளிப்பவர்கள் உண்டு. அவ்வப்போது குளத்தை விட்டு வெளியில் வந்து ஏதாவது சாப்பிட்டு விட்டு மீண்டும் தண்ணீருக்குள் குதித்து விடுவார்கள்.
வெளியே வர விரும்பாதவர்களுக்கு குளத்தின் மூலைகளில் உள்ள கடைகளில் ஸ்னாக்ஸ், குளிர் பானங்கள் கிடைக்கின்றன. குளத்திற்குள்ளே ஒரு ஃப்ளோட்டிங் பார் உள்ளது. பலர்,
‘தாலாட்டுதே வானம், தள்ளாடுதே தேகம்’ என் இருப்பதைக் காணலாம்.
குழந்தைகளைக் குளத்தை விட்டு வெளியே கொண்டு வருவது என்பது மிக அசாத்தியமான காரியம். அடம் பிடித்து குளத்திலேயே இருப்பேன் என்று சொல்லும் பல குழந்தைகளை இங்கே பார்க்கலாம்.
காதலர்களுக்கும், ஹனிமூன் ஜோடிகளுக்கும் இது ஒரு சொர்க்க புரி!
‘வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே..
வாடும் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே..’
– என்று பாடாத குறைதான்..!
இதைத் தவிர ரெஸ்டாரெண்ட், கஃபே, ஸ்பா, மசாஜ் பார்லர், ஸ்டீம் ரூம் எனப் பல வசதிகள் உண்டு.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பகல் நேரம் அதிகமாக இருக்கும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை கடும் குளிர் காலம். குளத்தைச் சுற்றி ஆங்காங்கே பனிக்கட்டிகள் குவிந்திருப்பதைப் பார்க்கலாம். இருப்பினும் குளம் அதே சூட்டுடன், குளிப்பதற்குச் சுகமாக, ஏதுவானதாக இருக்கும்.
பகல் நேரம், அதாவது வெளிச்ச நேரம் மிகக் குறைவு. அதனால் நார்த்தன் லைட் (NORTHERN LIGHTS) எனப்படும் ‘வடக்கிலிருந்து வரும் ஒளி’ சிதறல்களைக் காணும் வாய்ப்புகள் அதிகம். இப்படி வெந்நீரில் குளித்துக் கொண்டு இந்த நார்தன் லைட்ஸ் கண்டவர்கள் உலகிலேயே பெரிய பாக்கியசாலிகள் ஆவார்.
அது என்ன நார்தன் லைட்ஸ்..? அதைப் பற்றி தனியாகப் பார்க்கலாம்.
வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திறன் கொண்ட இந்த இடம். ஐஸ்லாந்தின் மிக முக்கியமான ஒரு சுற்றுலா ஈர்ப்பு தலமாகும். ஐஸ்லாந்து பயணத்திட்டம் தயாரிக்கும் பொழுதே புளூ லக்கூன் அட்வான்ஸ் புக்கிங் செய்வது மிக முக்கியம். அங்குப் போய் பார்த்துக் கொள்ளலாம் என்றால் பல சமயங்களில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் காத்திருக்கும்.
ஐஸ்லாந்தின் கெப்ளாவிக் ஏர்போர்டிலிருந்து நேரடியாக ப்ளூ லகூன் செல்ல பஸ் வசதிகள் உண்டு. ஜஸ்ட் 20 நிமிட பயணம்! ஐரோப்பா நகரிலிருந்து ஐஸ்லாந்து வழியாக அமெரிக்கா வரும் விவரம் தெரிந்தவர்கள், நான்கு மணிநேரம் இடைவெளி கிடைத்தால் வெளியே வந்து ஒரு குளியல் போட்டு விட்டு போவதைப் பார்க்கலாம். ப்ளூ லகூனிலிருந்து தலைநகர் ரேக்கவிக் டவுன் செல்ல பஸ் வசதி உண்டு. ஐம்பது நிமிடங்களில் சென்று அடையலாம்.
திருவிளையாடலில், மதுரைக்கு வந்த சோதனை போலக் கடந்த 2023 வருட இறுதி மாதங்கள் முதல், ப்ளூ லக்கூனுக்கு அருகில் உள்ள GRINDAVIK பகுதியின் எரிமலை அடுத்தடுத்த நான்கு முறை உறுமி வெடிப்பு ஏற்பட, இந்த குளியல் பகுதியைப் பாதுகாப்பு காரணமாக அடிக்கடி மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சில சமயங்களில் நிலநடுக்க அறிவிப்புகளின் காரணமாகவும் இந்தப் பகுதி மூடப்படும். ஆகவே ஐஸ்லாந்து சுற்றுலாவின் முக்கிய இனிமைப் பகுதியான இந்த ப்ளூ லக்கூன் அனுபவத்தைத் தவறவிடாமல் இருக்க, ஐஸ்லாந்து பயணம் திட்டமிடும் போதே இணைய தளத்தில் நடப்பு தகவல்கள் அறிந்து உறுதி செய்து கொண்டு புக் செய்வது நல்லது.
இந்த இடத்தின் சுற்று வட்டாரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் பல;
GUNNUHVER:
ப்ளூ லக்கூனிருந்து 20 நிமிட நேரத்தில் ஐஸ்லாந்தின் மிகப்பெரிய மண்குளம் (Mudpool) உள்ளது. சிறு துளைகள் வழியே ஆங்காங்கே புஸு புஸு என நிலம் மூச்சுவிட்டுக்கொண்டு நீராவியை வெளியேறிக் கொண்டிருக்கும். இதுபோன்று அதிசயத்தக்க நிலப்பரப்பு உலகில் அரிதாகத்தான் காண இயலும்.
BRINKETILL:
இங்கிருந்து 15 நிமிட பயணம் வட அட்லாண்டிக் கடலின் அலைகள் பாறைகளில் மோதுவதைப் பார்க்கலாம். அழகான நீல வானம் / கடல்.
KLEIFARVATN ஏரியை 35 நிமிட வாக்கில் அடையலாம். மிக அழகான ஏரி. நீர்வரத்து எங்கிருந்து வருகிறது என்பதைக் காண இயலாது. ஏரிக்கு வரும் நீர் அடிப்பக்கத்திலிருந்து வருகிறது, அடிப்பரப்பிலேயே வடிந்தும் விடுகிறது என்கிறார்கள். இதன் அருகில் உள்ள மலை, சுலபத்தில் ஏறக் கூடியதாக உள்ளது. அங்கிருந்து சுமார் 2000 வருட பழமையான ‘லாவா’ வயல்களைப் பார்க்கலாம்.
மலையேற்றப் பிரியர்களுக்கு ஏதுவான ட்ரக்கிங் பகுதிகள் இங்கு ஏராளம் 1.5 கி.மீ முதல் 12.5 கி.மீ வரை உயரம் ஏறுபவர்களுக்கான பிரமிப்பூட்டும் இடங்கள் உள்ளன. இதைத் தவிர GRINDAVIK என்கிற இடத்தில் ATV வாகனம் ஓட்டும் வசதி உள்ளது, குதிரை சவாரி, ROCK & ROLL இசைக்கான ஸ்பெஷல் ஆக உள்ள மியூசியம் என பார்க்க, பல இடங்கள் உள்ளன.
“நாளை தலைநகர் ரேக்கவிக் போகப் போகிறோம்” என்றார் ஜோன்.
“ஆஹா, நாளை இந்திய உணவகத்தில் ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்..” அதை சட்டை செய்யாமல்,
“ஒரு நாட்
டிலிருந்து மற்ற நாட்டுக்குப் பாலம் மூலம் கடந்திருக்கிறீர்களா?” என்றார் ஜோன் என்னைப் பார்த்து,
“ஐரோப்பாவில் இது சகஜம், சில நாட்டு எல்லைகளைக் கடப்பது கூடத் தெரியாமல் கடந்திருக்கிறோம்”
“அமெரிக்கா, நியூயார்க் மாகாணத்தின் வடபகுதியில் உள்ள உள்ள ஆயிரம் தீவுகள் (Thousand Islands) பகுதியைச் சுற்றுலா போகும் போது
இரண்டு கு
ட்டியூண்டு தீவுகளை ஒரு மிகச் சிறிய பாலம் யூ.எஸ் மற்றும் கனடாவைப் பிரிப்பதைப் பார்த்தோமே” என்றாள் மனைவி.
ZAVIKON பகுதியில் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் குறுக்கே வெறும் 32 அடி பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலம் கனடாவையும் அமெரிக்காவையும் பிரிக்கிறது என்கிற தகவலை நினைவு படுத்தினாள்.
“ஏன், நம் நாட்டில் கூட இரு மாவட்டங்களிடையே அல்லது அல்லது மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் குறுக்கே பாலங்கள் பிரிக்குமே” என்றேன்
ஜோன் மிக கேஷுவலாக, அதெல்லாம் சரி ‘ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்தை’ ஒரு சிறிய நடை பாலத்தின் மூலம் கடந்திருக்கிறீர்களா?
(தொடரும்..)
