நன்றி: விகடகவி  (https://www.vikatakavi.in/magazines/102/3657/)

 

 

1987 ல் ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வெளியான ஜோக் ஒன்றைக் காரணம் காட்டி விகடன் ஆசிரியரைச் சிறைவாசம் அனுபவிக்க வைத்த சம்பவம் தமிழகத்தையே கொந்தளிக்கச் செய்துவிட்டது!..

29-3-1987 விகடன் அட்டைப்பட ஜோக் அது.

இரண்டு அரசியல்வாதிகள் பொதுக்கூட்ட மேடையின் முன்வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். பார்வையாளர்களான பொது ஜனங்களில் ஒருவர், ‘‘மேடையில் இருக்கிற இரண்டு பேர்ல, யாரு எம்.எல்.ஏ., யாரு மந்திரி?’’ என்று கேட்க, மற்றவர், ‘‘ஜேப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி இருக்கறவர்தான் மந்திரி..!’’

என்று பதில் கூறுவதாக ஜோக் பிரசுரமாகியிருந்தது.

ஜோக்கை படுதலம் சுகுமாரன் என்பவர் எழுதி அனுப்பியிருந்தார்.

தமிழக அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் கீழ்த்தரமாகச் சித்திரிக்கிறது இந்த வார விகடன் அட்டை!’’ என்று என்.எஸ்.வி. சித்தன் கேள்வி எழுப்ப, சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஆனந்த விகடனுக்கு விளக்கம் தரக்கூட ஒரு சந்தர்ப்பம் அளிக்காமல், விகடனைக் குற்றவாளி என்று தீர்மானித்து தீர்ப்பு அளித்து விட்டார். அதாவது, ‘‘இப்படிப்பட்ட செய்கை சட்டமன்ற உரிமையை மீறுகிறது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்காக அடுத்த வார ஆனந்த விகடனின் முதல் பக்கத்திலேயே வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் உரிமைக் கமிட்டி விசாரணை இல்லாமலேயே, இந்தச் சபை தண்டனையைத் தீர்மானிக்கும்’’ என்று கூறினார் சபாநாயகர்.

அதற்கு 5-4-87 இதழ் தலையங்கம் மூலம் ஆசிரியர் பதில் சொன்னார். ‘‘… உரிமை மீறல் பிரச்னையில் மக்கள் சபைதான் தீர்ப்பளிக்க வேண்டும்! அதாவது, அவை முன்னவர் குற்றம் சாட்டி, அது சபை அங்கத்தினர்களால் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அதன்மீது சபாநாயகர் தீர்ப்பு அளிக்க வேண்டும்! சபாநாயகர் தன்னிச்சையாக தீர்ப்பு வழங்கக் கூடாது…

அது ஒரு சாதாரண, குற்றமற்ற ஜோக்! எந்த ஒருவரையும் மனத்தில் கொண்டோ, புண்படுத்தும் எண்ணத்தைக் கொண்டோ வரையப்பட்ட ஜோக் அல்ல. அதைத் தமாஷாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஜோக்கில் இடம் பெற்ற மந்திரியும் எம்.எல்.ஏ.வும் தமிழ்நாட்டை மட்டுமல்ல – எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ‘வக்கீல் ஜோக்… டாக்டர் ஜோக்… நடிகை ஜோக்’ – என்பதைப் போல இது அரசியல்வாதி ஜோக்! உலகிலுள்ள எந்த நாட்டுக்கும் பொருந்தக்கூடிய, இந்த நகைச்சுவைத் துணுக்கு, ஜனநாயகத்தை பயன்படுத்தி பதவிக்கு வந்து மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கும் அரசியல்வாதியைப் பற்றியது.’’

விகடன் அட்டைப்பட ஜோக் தொடர்பாக, தமிழக சட்டசபை 4-4-87 மதியம் 12 மணிக்கு விகடன் ஆசிரியருக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனை அறிவித்தது. அன்று மாலை 5-30 மணிக்கு ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திங்கட்கிழமையன்று சட்டசபை கூடியவுடன், ‘விகடன் ஆசிரியருக்குத் தண்டனை வழங்கிய தீர்மானத்தை மறு பரிசீலனை செய்து சபை தந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று சபாநாயகர் மூலம் முதல்வர் எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். இதையடுத்து விகடன் ஆசிரியரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுவதாக சபாநாயகர் அறிவித்தார். திங்கட்கிழமை பிற்பகல் 12-45 மணிக்கு ஆசிரியர் விடுதலை ஆனார்.

திங்களன்று சட்டசபை நிகழ்ச்சிகளை பத்திரிகை நிருபர்கள் புறக்கணித்தார்கள். ஆசிரியரின் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை குறித்துப் பத்திரிகைகள் கொதித்தெழுந்து கண்டனக் குரல் கொடுத்தன. ‘உலகில் வேறு எங்கும் இப்படி நடந்ததேயில்லை!’ என்று இங்கிலாந்து பி.பி.சி. அறிவித்தது.

மூன்று மாதக் கடுங்காவல் விதிக்கப்பட்டு இரண்டே நாளில் விடுவிக்கப்பட்டாலும் ‘‘என்னைச் சிறையில் தள்ளிய விதம் முறையற்றது. எனவே, அரசு எனக்கு ஒரு அடையாள நஷ்ட ஈடு அளிக்க வேண்டும்!’’என்று கோரி விகடன் ஆசிரியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஏழு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. “பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்பாமல், விளக்கம் அளிக்க ஆசிரியருக்கு வாய்ப்பும் தராமல், சபாநாயகர் தண்டனையை அறிவித்தது சட்டவிரோதமானது. தனிமனித அடிப்படை உரிமையைப் பாதித்துள்ள இந்தப் பிரச்னையில் இயற்கை நியதி, கொள்கைகளும், சட்டங்களும், கடுமையாக மீறப்பட்டுள்ளன. சபையின் முழு நடவடிக்கையுமே எதேச்சாதிகாரத்தின் வெளிப்பாடுகளாகவும் ஒடுக்குமுறைகளாகவுமே உள்ளன!’’ – இப்படித் தெளிவாகத் தங்கள் தீர்ப்பில் கருத்து கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், விகடன் ஆசிரியருக்கு அடையாள நஷ்ட ஈடாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.

இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள் பிரேம் செய்யப்பட்டு ஜூ.வி. நிறுவனத் தலைவர் எஸ். பாலசுப்ரமணியன் அவர்களின் அலுவலக அறையில் பத்திரிகை அடக்குமுறைக்கு எதிரான வெற்றியைப் பறைசாற்றியபடி இன்றும் காட்சியளிக்கின்றன.