முப்பது வருடத்திற்குப் பிறகு பள்ளியில் ஒன்றாகப் படித்திருந்த சுதீப், ரந்தீர், ஜமுனா, அமுதா, அஹ்மத், ஜெயலட்சுமி அனைவரும் தற்செயலாக அதே வட்டாரத்தில் வீடு வாங்கி குடியேறினார்கள். சுமார் நாற்பத்து ஐந்து வயதுடையவர்கள். ஜெயலட்சுமியைத் தவிர மற்றவர்கள் நெருங்கிய நண்பர்கள்.
இந்தத் தகவல்களை நான் அஹ்மத் மூலமாக அறிந்தேன். அஹ்மத்தின் எச். ஆர் பிரிவினருக்குப் பல வாரங்களாக மனநலத்தின் பல்வேறு அம்சங்களைக் குறித்து பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன். தன் பள்ளித் தோழி ஜமுனா பற்றிய சஞ்சலத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் கூறி காவல்நிலையத்தில் உள்ள எங்களுடைய மனநல ஆலோசனை அறையில் சுதீப், ரந்தீர், ஜமுனா, அமுதாவுடன் சந்தித்தார் அஹ்மத்.
அழைத்து வந்ததால், தன் பொறுப்பென எடுத்துக் கொண்டு விவரிக்க ஆரம்பித்தார். அடிபட்டிருக்கும் ஜமுனாவின் முழங்கையைக் காட்டி அவளைப் பற்றி நால்வரும் சங்கடப் படுவதாகக் கூறியதும் மற்றவர்கள் ஒப்புதல் தெரிவித்தார்கள். ரந்தீர் சொன்னார், திறமையானவள் ஜமுனா, இப்போதெல்லாம் மந்தமாக ஏதோ இழந்ததைப் போல் தோற்றமளிப்பது மனதை வருடுகிறதென்றார்.
ஜமுனா கண்ணீர் மல்கிய கண்களால் என்னையே பார்த்திருந்தாள். நண்பர்கள் சமாதானம் கூறினார்கள். திடீரென வேரொரு பெண்மணி முறைக்கு மாறாகக் கதவைத் திறந்து அனுமதியின்றி உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்ததுமே ஜமுனா சடெக்கென எழுந்தாள். அஹ்மத் “இவள், ஜெயலட்சுமி, எங்கள் வகுப்பிலிருந்தாள்” என்று சொன்னதும், அவள் ஜமுனாவிடம் அதட்டின குரலில் முறைத்து, “பைலைத் தேடி வந்தேன்” என்று சாக்கு சொன்னாள். கேட்டதுமே ஜமுனா உறைந்தாள். ஜெயலட்சுமி சிரித்தபடி வெளியேறத் தொடங்கினாள்.
ஜெயலட்சுமியைப் பெயரிட்டு அழைத்து, வந்த ஐவரை வெளியே காக்கப் பரிந்துரைத்தேன். ஜெயலட்சுமியை உட்காரச் சொல்லிவிட்டு அவள் செய்வதின் பொருள் புரிகிறதா என்று கேட்டதற்கு, கண்கள் சிவந்து முறைத்தாள்.
ஒருவரைத் துரத்துவதும் மிரட்டுவதும் உணர்வு ரகமான வன்முறையின் அடையாளம் என்று சுட்டிக் காட்டினேன். வன்முறையைத் தடுப்பது எங்களது நிர்வாகத்தின் குறிக்கோள், அதற்காகவே காவல்நிலையத்தில் இருப்பதும் என்றேன். வன்முறைச் செயல்பாட்டை உபயோகித்து அடிமைப் படுத்துவோரை அதிலிருந்து விடுவிப்பதும் அடங்கும் என்றேன். ஜெயலட்சுமி தன்னுடைய இந்த நிலையை மாற்றிக் கொள்ள விரும்பினால் எங்களை அணுகலாம் என்றதுமே விருட்டென்று வெளியேறினாள்.
ஐவரும் உள்ளே வந்தனர், “பேசு ஜெம்” என்று ஊக்குவித்து நண்பர்கள் வெளியேறினார்கள்.
ஜமுனா எதுவும் கூறாமல் விசும்பினாள். இதுவும் தேவை எனக் காத்திருந்தேன்!
அவளும் ஜெயலட்சுமியும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதாகக் கூறினாள். ஜெயலட்சுமி ஜமுனாவைப் பார்த்த போதெல்லாம் கோபித்து வந்தாள். அவள் அவதூறாகப் பேசும்போது எதையும் கூற பயப்பட்டாள் ஜமுனா. வர்ணிக்கும் போதே நடுங்கினாள். இது வன்முறையைச் சகித்துக் கொண்டிருப்பதின் பிரதிபலிப்பாகும்.
இது ஒரு விதத்தில் வன்முறைக்கு உடந்தையாகிறது, செய்வோரை ஊக்குவிக்கும் என விளக்கினேன். இங்குப் பகிர்வது எப்படியாவது ஜெயலட்சுமிக்கு தெரிந்து விடுமா என்ற அவலத்திற்கு, இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும் எவையும் எவரிடமும் சொல்லப்படாது என்பது எங்கள் தொழில் தர்மம் என்று விளக்கினேன்.
ஒரு வாரத்திற்குப் பிறகு கணவன் சுனிலுடன் வந்தாள். ஜெயலட்சுமி வேலையைக் காரணம் காட்டி வீட்டிற்கு வந்து சத்தம் போடுவது, துச்சமாகப் பேசுவது, பயமுறுத்தி விடுவது இவை இருவரையும் வெலவெலத்து விடுகிறது என்றார்கள். ஏதேனும் சொன்னால் ஜெயலட்சுமி மேலும் தொந்தரவு தருவாளோ என அஞ்சி அமைதியாக இருந்து விடுவார்களாம். ஸெஷன்களில் ஆராய்ந்த பின்னரே இவ்வகைச் செயல்பாட்டு வன்முறையை வளர்த்தது எனப் புரிந்து கொண்டார்கள்.
வேலையிடத்தில், ஜமுனா ஜெயலட்சுமியின் மேலதிகாரி. ஜமுனா பரிச்சயமானவளே எனக் காண்பிப்பதற்காக ஜெயலட்சுமி எல்லோர் முன்னாலும் இடிப்பாள், சாப்பிடும் போது உணவை எச்சில் செய்வாள். எதற்கெடுத்தாலும், குரலை எழுப்பி, “உன்னை என்ன பண்றேன் பார்” என்று அதட்டுவாள். செய்தே விடுவாள் என நம்பி, துன்புறுத்தலைப் பகிரவோ, புகார் செய்யவோ தயங்கினார்கள்.
ஜமுனா அனுபவங்களை வர்ணிக்க, வன்முறையின் வகைகளை அடையாளம் கண்டாள். ஜெயலட்சுமி முக்கியமான தாள்களை மறைத்து வைத்திருந்தது, மற்றவர்கள் முன் புறக்கணிப்பது இதுவும் வன்முறை எனப் புரிந்துகொண்டாள். புரிதலிருந்தே செயல்பாடு துவங்கும்.
சுனில் தொடர்ந்து விவரித்தார். இங்கு ஜாகை மாறுவதற்கு முன்பு ஜமுனா மிகத் தைரியமாகவும் மனதிடம் உள்ளவளாகவும் இருந்தாள். ஜமுனா ஆமோதித்தாள். இதை மையமாக வைத்து மாற்றத்தின் சரித்திரத்தைக் காலக்கோடாக எடுத்துப் பல ஸெஷன்களுக்கு ஆராய்ந்த பின்னர் விவரங்கள் வெளியானது.
ஜெயலட்சுமியின் தந்தை சிவா அரசு நிறுவனத்தில் ஜமுனாவின் தந்தை மாதவனின் கீழே பணியாற்றினார். ஜமுனாவின் பெற்றோர் தாராளமாக தானம் தர்மம் செய்வார்கள். யாரைப் பற்றியும் வீண் பேச்சு பேசுவதையும் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும் என்றதால் அவ்வாறே ஜமுனா வளர்ந்தாள். சிவாவிற்கு மாதவனை எல்லோரும் பாராட்டிப் பேசுவது பிடிக்கவில்லை. வீட்டில் சிவாவின் குமுறல்களைக் கேட்கும் ஜெயலட்சுமி, பள்ளியில் ஜமுனா மீது பழி தீர்த்துக் கொள்வாள். சிவாவோ, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஜமுனாவை அதட்டுவார். தன் மகளைப் பற்றி யாரிடமாவது பேசினால் நடப்பது வேறு என்ற சொல்லுக்குப் பயந்து ஜெயலட்சுமி செய்வதைப் பொறுத்துக் கொண்டாள். வகுப்பில், விளையாட்டு மைதானத்தில் தள்ளி விடுவது, காயத்தில் கூழாங்கற்களைத் திணிப்பது, இதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. பெற்றோர் பார்த்துக் கேட்டால் விழுந்துவிட்டேன் என்பாள்.
வருட இறுதியில், ஜெயலட்சுமி ஊர் மாறிச் சென்றாள். மெதுவாகத் தைரியம் கூடிய ஜமுனா, இப்போது தான் ஜெயலட்சுமியை மீண்டும் சந்தித்தாள். வன்முறையை எதிர்கொள்ள வழி கற்றுக்கொள்ளாததில் மீண்டும் பயம், ரணங்கள்.
ஜமுனாவைத் தேடி வந்த ஜெயலட்சுமியிடம் சவாலாக இது, ஏக்கமா, கோபமா, பொறாமையா என விளக்கம் அளிக்க அழைத்தேன்.
சிறுவயதிலிருந்தே எந்தவொரு நிலையிலும் ஜமுனாவின் மென்மையான குணத்தால் எல்லோரும் அவளிடமே தோழமையுடன் இருப்பதை ஜெயலட்சுமி கோழைத்தனம் என்றாள். இப்படி ஒருவருக்குக் குவியும் பாராட்டும் புகழும் தேவையற்றது என நம்பினாள். தன்னுடைய தந்தைக்கு மாதவன் மீது அவமதிப்பு, வெறுப்பு. ஆனாலும் உதவி கேட்டு அங்குதான் ஓடுவார்கள். மேலும், சிவா கையும் களவுமாகப் பிடிபட்டு தண்டனையாகப் பதவி இறக்கமும் ஊர் மாற்றமும் ஏற்பட்டதும் மாதவனால்தான் என்றாள். ஜமுனா, அவளுடைய பெற்றோர் மீது வெறுப்பு பலமடங்கானது என்றாள்.
ஜமுனா கோழை என நிரூபிக்கவே அவளுக்குத் தொல்லைகள் தருவாள். அதைப் பொறுத்துக்கொண்டதால் மறுபடியும் அதே யுக்தியை உபயோகித்து ஜமுனாவைத் தன் கைப்பிடியில் வைத்திருப்பது தந்தைக்காகப் பழி வாங்குவதாகக் கர்வத்துடன் சொல்லிச் சென்றாள்.
இதை, ஐவர் நண்பர்களிடமும் ஜெயலட்சுமி பெருமையாகச் சொன்னாள். கண்டித்தார்கள். நண்பர்களை உதறிவிட்டாள்.
ஜமுனா தன் குறைபாட்டினால் வன்முறைக்கு ஆளாகிறோம் என்பதை உணர்ந்தாள். மாற முடிவு செய்த ஜமுனா, இதிலிருந்து விடுபட, வன்முறை நேரும் போதெல்லாம் ஏன், என்ன என்பதைக் கவனித்து, இரவு தூங்குவதற்கு முன் அன்றைய வன்முறைச் சம்பவத்தில் தாம் என்ன செய்திருக்கலாம், என்ன செய்யவில்லை, ஏன் நேர்ந்தது என்பதை எழுதினாள். ஸெஷன்களில் ஆராய்ந்தோம்.
ஒவ்வொரு முறையும் தன் சுய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஜெயலட்சுமியின் சொல், செயலுக்குத் தான் முக்கியத்துவம் தருவதால் மனம் புண்படுவதும், தன்னுடைய தன்மை மாறி வருவதும் உணர்ந்தாள். மாறி எப்படி நடந்து கொள்வது என்பதைப் பயின்றோம், செயலிட்டாள்.
நண்பர்கள் வந்தார்கள். பழைய ஜமுனா தென்படுவதாகக் கூறினார்கள். இந்த நிலையில் ஜமுனாவிடம் பார்ப்பதை வர்ணிக்கச் சொன்னேன். சுதீப், ஜமுனாவின் வித்தியாசமாகச் சிந்தனை செய்யும் திறன் திரும்புவதை, ரந்தீர் அவளுடைய உடல் மொழி நல்ல மாற்றங்கள் காட்டுவதை, அமுதா ஜமுனா முன் போல் பாட்டு முணுமுணுப்பதைச் சொன்னார்கள். அடுத்த சில ஸெஷன்களுக்கு ஜமுனா இந்த ஐவருடன் செஷனை அமைத்தேன். ஏனெனில் குழு அமைப்பில் பலம் உண்டு!
இதிலிருந்து பல நுணுக்கங்கள் வெளிப்பட்டன. உதாரணத்திற்கு,
ஜெயலட்சுமியின் தந்தையின் வார்த்தைகள் இன்றும் தடுப்பதை நினைவு கூறினாள். அஹ்மத், ஜெயலட்சுமியின் சொல், செயலால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினார். பலர் உள்ளனரே, அதிகாரியான ஜமுனா இதை இவ்வாறு விடலாமா என்ற கேள்வியைக் குழு எழுப்பியது.
நீண்ட கால தூக்கத்திலிருந்து எழுந்தது போல ஜமுனா தென்பட்டாள். வன்முறையை வளர்த்து விடாமல் அப்போதே இதுபோன்ற உதவி எடுத்துக் கொள்ளாததைச் சொல்லி வருந்தினாள். இரு வாரத்திற்குப் பிறகு சுனிலுடன் ஜமுனா வந்தாள். ஜமுனா முன் போல இருப்பதாகக் கூறினார்.
ஜெயலட்சுமியின் அட்டூழியங்கள் பற்றிய தகவல்கள் பலர் சேகரித்திருந்தார்கள். தனக்கு மட்டுமின்றி இவர்களுக்கும் பயன்பட ஜமுனா சிந்திக்க ஆரம்பித்தாள். அஹ்மதுடன் கலந்து உரையாடியதில் செயல்முறைகளைப் புரிந்து கொண்டாள். எங்களின் வன்முறையை எதிர்கொள்ளும் பயிற்சியில் பங்கேற்றுத் தெளிவானாள்.
மேலதிகாரிகளிடம் வன்முறையைப் பற்றிய புகார்களைத் தந்தாள். மற்றவர்களையும் ஜெயலட்சுமியால் சந்திக்கும் வன்முறைப் புகார்கள் தருவதற்கு ஊக்குவித்தாள். இவற்றை ஆராய்ந்த மேலதிகாரிகள் ஜெயலட்சுமி உடலளவில், உணர்வளவில், சமூக வன்முறையைச் செய்துவிட்டு, சிறிதும் வருந்தாததால் அபராதத் தொகை, ஒரு வருடத்திற்குச் சமூக சேவை என்று தண்டனை விதித்தார்கள். மேலும் புகார்கள் வந்தால் வேலையிலிருந்து நீக்கி விடுவோம் என்றார்கள். ஜெயலட்சுமி வருந்தவில்லை. அவள் சார்பில் அவளுடைய கணவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தன்னைத் திடப்படுத்த ஜமுனா தன் குறைபாடுகளைச் சுதாரித்துக் கொள்வதைத் தொடர்ந்தாள். வன்முறையால் அழுந்தி இருக்கும் மற்ற ஊழியருக்கும் எங்கள் நிர்வாகம் உதவ முன் வந்தோம்!
******************************************
