
திருப்பாணாழ்வாரின் அருளிச்செயல் ஒன்றே ஒன்று மட்டுமே .
அது, *அமலனாதிபிரான்* என்ற தொகுப்பில் பத்தே பத்து பாசுரங்களை உள்ளடக்கியது.
நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பில் மிகக் குறைந்த அளவு பாசுரங்கள் இயற்றிய ஆழ்வார் திருப்பாணாழ்வார் தான்.
திருப்பாணாழ்வாருக்கும், ஆண்டாளுக்கும் இரண்டு முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன.
முதற்கண், இருவரும் பூமியில் கண்டெடுக்கப்பட்டவர்கள். வில்லிபுத்தூரில் நந்தவனத்தில் துளசிச்செடி அருகே பெரியாழ்வார் கண்டெடுத்த பெண் பிள்ளை நம் கோதை நாச்சியார்.
அதுபோல, ஸ்ரீரங்கத்திற்கு அருகே உள்ள உறையூரில் ஒரு நெல் வயலில் பாணர் குலத்தைச் சேர்ந்த ஒருவரால் கண்டெடுக்கப்பட்டவர் நமது திருப்பாணாழ்வார்.
பண் அமைத்து பாடும் குலத்தை சேர்ந்தவர்கள் பாணர்கள். அவர்கள் தாழ்ந்த குலமாக அறியப்பட்டவர்கள்.
இரண்டாவதாக, ஆண்டாள், திருப்பாணாழ்வார் இருவருமே அரங்கனிடம் அபரிமித பக்தி பூண்டு, ஸ்ரீரங்கத்தில் அரங்கன் சன்னதி முன் நின்று, கருவறைக்குள் சென்று அரங்கனுடன் இரண்டற கலந்தவர்கள்.
திருப்பாணாழ்வார் , தாழ்ந்த குலத்தை சார்ந்தவராக இருந்ததால் அக்கால வழக்கப்படி கோவிலுக்குள் சென்று அரங்கனை சேவிக்க முடியாமல், தென்திருக்காவிரியின் கரையில் நின்று கொண்டு ( அம்மாமண்டப படித்துறையில் நின்று கொண்டு என்று வைத்துக் கொள்ளலாம் ) திருவரங்கன் கோயில் நோக்கி சேவித்தவாறு, கேட்பவர் ஊனும் உள்ளமும் உருக , யாழ் இசைத்து அரங்கன் புகழ் பாடியவர்.
ஒரு நாள் அவர் தன்னை மறந்து படித்துறையில் நின்று பாடிக் கொண்டிருக்கையில், அங்கு காவிரியில் அரங்கன் திருமஞ்சனத்திற்கு நீர் எடுத்துக்கொண்டு அரங்கன் சன்னதிக்கு செல்லவிருந்த லோக சாரங்க முனிவர் என்பவர், தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பாணரின் மேல் பட்டால், சுத்தத்திற்கு குறைவு ஏற்படும் என்று திருப்பாணரை விலகிப் போகச் சொன்னார். அரங்கனை நினைத்து லயித்து பாடிக் கொண்டிருந்த பாணருக்கு அது காதில் விழாததால், அவர் மீது கல்லெறிந்து வழி விலகும்படி சொன்னார் லோக சாரங்க முனிவர். அந்தக் கல்லானது பாணர் நெற்றியில் பட்டு குருதி வழிய செய்தது. அரங்கனை சேவிக்க சென்ற முனிவர் அரங்கன் நெற்றியிலும் குருதி வெளிப்படக் கண்டு பதைத்து போனார். அரங்கன் அவரிடம் பாணரின் பக்தி மேன்மையை சொல்லி , அவரை முனிவரின் தோள்களின் மேல் ஏற்றி கோவிலுக்குள் அழைத்து வர சொன்னார்.
திருப்பாணர் முதல் தடவையாக (கடைசி தடவையாகவும்) அரங்கனின் அழகை அனுபவித்து, அந்த திருமேனி அழகினை பத்து பாசுரங்களில் வருணித்து பாடினார். அவையே அமலனாதிபிரான் பாசுரங்கள்.
*அமலனாதிபிரான்* என்பதை அமலன், ஆதிபிரான் என்று பிரித்துக் கொள்ளலாம்.
*அமலன்* என்றால் அப்பழுக்கில்லாத பரிசுத்தமானவன் என்று பொருள். குறையொன்றுமில்லாத கோவிந்தன் என்று சொல்கிறோமே அப்படி.
அரங்கன் திருவடியிலிருந்து திருமுகம் வரை ஒவ்வொரு பகுதியாக பார்த்து, அனுபவித்து பாசுரம் புனைந்தவர்.
அதில், ஸ்ரீரங்கநாதனை, வாமன / திருவிக்ரமனாக, நரசிம்மனாக, ராமனாக, கிருஷ்ணனாக அனுபவிக்கிறார்.
ஒவ்வொரு பாசுரத்திலும் அரங்கனின் ஒவ்வொரு அவயவத்தில் ( body part ) கண்ணையும் மனதையும் நிறுத்தி பாடுகிறார்..
முதல் பாசுரத்தில் *திருக்கமலப்பாதம்*,
இரண்டில், *இடுப்பில் கட்டிய சிவந்த வஸ்திரம்*,
மூன்றில் *உந்தி* ( தொப்புள் /வயிறு ),
நான்கில் *உதர பந்தம்* எனப்படும் இடுப்பில் கட்டப்படும் ஆபரணம் (யசோதை கண்ணனை கயிற்றினால் கட்டிப்போட்டபோது இடுப்பில் ஏற்பட்ட தழும்பு என்பதாகவும் ‘உதரபந்தத்துக்கு’ வியாக்யானங்கள் உண்டு),
ஐந்தில் *திருமார்பு*
ஆறில் *கழுத்து*
ஏழில் *சிவந்த வாய்*
எட்டில் *செவ்வரிகள் ஓடிய நீண்ட கரிய கண்கள்*
என்று ஒவ்வொன்றாக அனுபவித்து பாடியவர்
ஒன்பதில் , முழுவதுமாக அரங்கனை அனுபவித்து,
*எழில் நீலமேனி ஐயோ, நிறை கொண்டது என் நெஞ்சினையே*
என்று கூறி,
பத்தாம் பாசுரத்தில்,
*அணி அரங்கன்,* *என் அமுதினைக்*
*கண்ட கண்கள்* *மற்றொன்றினைக் காணாவே*
என்று பாடி,
*சொன்னபடியே வேறு ஒன்றையும் காணாமல் , அரங்கனுடன் கலந்துவிட்டார்* .
பத்து பாசுரங்களும் பத்து ரத்தினங்கள். அனைத்தையும் பற்றி எழுத ஆசைதான். நேரமும், விருப்பமும் உள்ளவர்கள் அவற்றை படித்து, பொருளுணர்ந்து, அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்பொழுது ஆழ்வாரின் இரண்டு பாசுரங்களை எடுத்துக் கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். அவற்றை ஒட்டி நீண்ட நேரமாக பொறுமையுடன் காத்திருக்கும் நமது கவிஞர் கண்ணதாசனும் வருவார். கட்டுரை நீளமாவதை தவிர்க்க, அவற்றை அடுத்த பகுதியில் தருகிறேன்.

கண்ணனைக் கண்ட கண்கள் கண்ணதாசனைக் காணப் பொறுமையின்றி இருக்கின்றன. – சிவ சூரியநாராயணன்.
LikeLike